Sunday, February 20, 2011

கோடை கால காற்றே ...

மலேசியா வாசுதேவன் இன்று இறந்துவிட்டதாக செய்தி வந்தது.நான் அதிர்ச்சியுறவில்லை.இப்படித்தானே இனி நடக்கும் என்ற ஸ்டாயிக் மனநிலைக்கு கொஞ்ச நாளுக்கு முன்பே வந்திருக்கிறேன்.மீசையும் ஆசையும்  நரைக்கத் துவங்கும் சந்தியில் நிற்கிறேன்.என் பால்யத்தை தங்கள் கவிதைகளாலும் கதைகளாலும் இசையாலும் நடிப்பாலும் நிரப்பியவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராக விசை தீர்ந்த பொம்மைகள் போல களைத்து நின்றுவிடுவதைக் காண்கிறேன்.

சிறுவயதில் நான் என்றும் வீட்டுக்குள் தூங்கியதே இல்லை.பெரும்பாலும் வானம் பார்த்த படுக்கைதான்.உறங்கியதைவிட நட்சத்திரங்கள் மெல்லத் துலங்கி வருவதை பிரகாசம் கூடி ஒளிர்வதை மெல்ல மீண்டும் தளர்ந்து மங்குவதை முடிவில் பார்வையின் விளிம்பிலிருந்து தவறி  உதிர்வதை எல்லாம் கவனித்துக் கொண்டு விழித்திருந்த இரவுகளே அதிகம்.


என் பால்யம் முழுவதும்  நெல்லையைச் சுற்றியிருக்கும் சிறு கிராமங்களில் கழிந்தது.வானொலி  என்ற கருவியையே  ஒரு அலாவுதீன்  விளக்கைப் போல பார்த்த காலம்.பாளையங்கோட்டையில் எனது உறவினர் வீடு ஒன்று ரேடியோ வீடு என்றே என்னால் அழைக்கப் பட்டது.ஒரு பெரிய பானசோனிக் கடத்தல் ரேடியோ  அங்கு இருந்தது.ரேடியோ கேட்பதற்கென்றே ஒரு தல யாத்திரை செல்வது போல விடுமுறைகளில் அவர்கள் வீட்டுக்கு ஆச்சியுடன் போவேன்.பெரும்பாலும் இந்தியிலோ தமிழிலோ செய்திகளை மட்டுமே மொனமொன வென்று பேசிக் கொண்டிருக்கும் அந்த ரேடியோ திடீரென்று சிலிர்த்துக் கொண்டு தேனருவி கொட்டத் துவங்கும் அந்த நிமிசத்திற்காய் என் மொத்த நாளையும் வடிவமைத்துக் கொண்டு காத்திருப்பேன்.அப்போது கேட்டதுதான் மலேசியாவின் மந்திரக் குரல்.நான் டி எம் எஸ் போன்றோரின் காலத்து ஆள் இல்லை.எஸ் பி பி போன்றோரை ரசித்தேன் எனினும் [சுஜாதாவின் கதை நாயகர்களைப் போலவே] அவர்கள் என்னைப் போன்ற அரைக் கிராமத்தானின் அனுபவ வளையத்துக்குள் பொருந்தி வராதவர்கள். என் கனவுகளையும் காதலையும் அவர்கள் குரலில் நிச்சயமாகப் பாட முடியாது என உணர்ந்தேன்.அதனால்தானோ என்னவோ நான் வாசுதேவனுடன் மிக நெருக்கமாய் உணர்ந்தேன்.ஆட்டுக் குட்டி போட்ட முட்டையிலிருந்து கோடை காலம் வீசிய காற்று வரை அவர் என் உணர்வின் குரலாய் இருந்தார்.


பிறகு நான் எவ்விதமோ அவரை மறந்து போனேன்.நெல்லையை சுற்றிக் கிடந்த கிராமங்களில் இருந்து நாங்கள் நெல்லைக்கு வந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.நகரப் படுத்தல் அன்னியப் படுத்தலாகவும் ஆகியது. இங்கு மலேசியாதான் எனக்குப் பிடித்த பாடகர் என்று சொல்வது நான் ஒரு காட்டுவாசி மனிதன் என்று சொல்வதற்கு இணை என்று அறிந்ததும் ஒரு புண் போல எனது பிரேமையை மறைத்துவிட்டேன்.ஷாஜியின் இந்த http://musicshaji.blogspot.com/2010/08/blog-post_16.htmlஉயிர்மைக்  கட்டுரை வரும்வரை இந்த அக மறைப்பு தொடர்ந்தது.அந்தக் கட்டுரையின் பின்னரே நான் அப்படி ஒன்றும் பட்டிக் காட்டான் அல்ல என்று உணர்ந்தேன்.



மலேசியா வாசுதேவன் தனது பாடல்களால் எனது இளமையை நிரப்பியவர்.எத்தனையோ கிராமங்களில் சிள் வண்டுகளின் ரீங்காரத்துக்கு நடுவில் எப்போதோ கடந்து போகும் பேருந்து வீசிப் போகும் வெளிச்ச வரிகளைத் தவிர கும்மிருட்டில் குளிர்ந்து கிடக்கும் ஊர்களில்  கயிற்றுக் கட்டில்களில் அவர் குரல் விதைத்த கனவுகளோடு உறங்கப் போய் இருக்கிறேன்.நீர்க் கோல வாழ்வின் நிலையற்ற உறவுகளின் நடுவே கேட்கும்தோறும் என்னை என் அற்ப வாழ்வின் பிடியிலிருந்து கொஞ்ச நேரமேனும் விடுவித்து வானேற்ற மறக்காத மறுக்காத குரல் அவரது .


நான் சரியான அஞ்சலி எழுத்தாளன் அல்ல என்பதை நானறிவேன்.எனினும் சமீப காலபமாக எனது வானிலிருந்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.நாகேஷ்,ஸ்ரீவித்யா,ரகுவரன்.லோகிதாஸ் ,முரளி[இரண்டு முரளிகளும்]]ஹனீபா, சுஜாதா,சொர்ணலதா  என்று பட்டியல் நீள்கிறது ,இது இன்னமும் நீளும் என அறிவேன்.இவர்கள் இறக்கையில் எல்லாம் என்னுள்ளும் ஒரு சிறு பகுதி இறந்து போய்விட்டது என உணர முடிகிறது.இறத்தல் ஒரு நாள் நிகழ்வல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது உதிர்ந்தவைகளுக்குப்  பதிலாய் புதிய நட்சத்திரங்கள் முளைக்க மறுக்கின்றன.அல்லது என் வானம் அவற்றிற்கு இடம் தர மறுக்கிறது.விதைக்கும் காலம் முடிந்துவிட்டது.இனி அறுக்கும் காலம் 


என் இளமையில் பல கனவுகளை விதைத்தவனுக்கு நன்றிகளும் அஞ்சலிகளும் 

8 comments:

  1. அருமையான அஞ்சலிக் கட்டுரை

    அவர் பாடிய ஆயிரம் பாடல்களோடு கூடவே எனக்கு கைதியின் டைரி படத்தில் காருக்குள் டிரைவர் மச்சான் மாட்டிக்கிட்டாரு பாடல் காட்சி ஞாபகம் வந்து விடும்.

    ReplyDelete
  2. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்...

    ReplyDelete
  3. நானும் அவர் குரலை சில பாடல்களில் மிகவும் ரசித்திருக்கிறேன். கரும்பு வில் படத்தில் வரும் 'மலர்களிலே ஆராதனை', கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் 'மலர்களே நாதஸ்வரங்கள்', 'கோவில் மணி ஓசை', அந்த ஏழு நாட்களில் வரும் 'எண்ணி இருந்தது ஈடேற' என்று இன்னும் சில பாடல்கள்.

    'வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் எது', சரிதானே!

    ReplyDelete
  4. அஞ்சலி எழுத்தாளன் இல்லை என்று எவ்வளவு அட்டகாசமான ஒரு அஞ்சலிப் பதிவு. அந்தக் காலகட்டத்தில் ஏதோ ஒரு வித்தியாசமான குரல் மலேஷியா வாசுதேவனுடையது. கொஞ்சம் கட்டை, கொஞ்சம் மிருது, கொஞ்சம் முரடு என்று எல்லாம் உண்டு அவர் குரலில்...
    பிறப்புக்கு இறப்பு உண்டு எனினும்.....

    ReplyDelete
  5. கோடை காலக் காற்று அவன்!

    அற்புதமான அஞ்சலிப் பதிவு இது!

    ReplyDelete
  6. //இங்கு மலேசியாதான் எனக்குப் பிடித்த பாடகர் என்று சொல்வது நான் ஒரு காட்டுவாசி மனிதன்//
    கிட்டத்தட்ட நானும் அதுபோலவே வழர்ந்திருக்கிறேன். நல்ல நினைவஞ்சலி, நன்றி.

    ReplyDelete
  7. நெஞ்சைத் தொடும் அஞ்சலி.

    'செவ்வந்தி பூ முடித்த சின்னக்கா' பாட்டைத் தான் இவருடன் தொடர்பு படுத்தியிருந்தேன் நீண்ட நாள். சமீபத்தில் அறிந்து கொண்ட 'ஏ குருவி' பாடல் பிரமிக்க வைத்தது. நேற்று தெரிந்து கொண்ட 'மலையோரம் மயிலே' இன்னும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

    மலேசியா வாசுதேவனை அதிகம் அறியவில்லை. வருத்தப்படுகிறேன்.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'அனுபவ வளைவு' ரசிக்க வைத்தது; புதைந்திருக்கும் உண்மை முகத்திலடித்தது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails