Saturday, February 5, 2011

ஜெயமோகன் அறம் வளர்த்த கதை

சமீபத்தில் ஜெயமோகன் தனது தளத்தில் அறம் என்ற ஒரு சிறு கதையை எழுதினார்.அதைத் தொடர்ந்து சோற்றுக் கணக்கு என்று இன்னும் ஒரு நல்ல  கதை.கதைகள் என்னுள் சில கேள்விகளை எழுப்பின  [நல்ல இலக்கியம் அதைத்தானே செய்யும்?]சிறுகதையோ நாவலோ கவிதையோ அவை அளிக்கும் நேரடி வாசிப்பனுபவம் தவிர்த்து அவை வைக்கும் வாழ்க்கைப் பார்வை,அரசியல் போன்றவற்றின் அடிப்படையிலும் யோசிப்பது எனது கெட்ட பழக்கங்களில் ஒன்று.[சிலருக்கு இது வியாதியாகவே மாறிவிட்டிருப்பதை இணையத்தில் காண்கிறேன்]இதைத்தான் கட்டுடைப்பு செய்கிறேன் கட்டுடைப்பு செய்கிறேன் என்று சொல்கிறார்கள் என்று தெரிவதற்கு முன்பே நான் இதை பண்ணிக் கொண்டிருந்தேன்.கட்டை ஏன்யா உடைக்கிறே என்று சிலர் கேட்டார்கள்.கட்டுறதுதான்யா பெருசு உடைக்கிறது லேசு என்ற ரீதியில் பேசினார்கள்.என்ன செய்வது எனக்குத் தெரிந்ததுதானே பண்ண முடியும்?ஜெ சி பி  ஒட்டுகிரவனிடம் போய் ஏன்யா எல்லாத்தையும் உடைக்கிறே என்று நான் கேட்க மாட்டேன்.ஏனெனில் அது அவனது 'அறம்' அல்லவா

இங்கு அறம் என்ற சொல்லை  மேலதிக அர்த்தங்கள் வரும் தொனியில் ஜெமோ பயன்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.அல்லது எனக்கு அப்படித் தோன்றுகிறது உனக்கு மஞ்சக் காமாலைக் கண்.எல்லாம் மஞ்சளாகத்தான் தோணும் என்று மனைவி சொல்கிறாள்.[சிலருக்கு காவிக் காமாலை இருக்கிறது இணையத்தில் என்பதைக் காண்கிறேன்.எல்லாமே காவியாகத் தெரிகிறது அவர்களுக்கு]நான் அப்படியெல்லாம் நினைச்சு எழுதலே என்று எழுத்தாளர் சொல்லக் கூடும்.அவர் யார் அதைச் சொல்வதற்கு என்று எனக்குப் புரியவில்லை.பிரதி வெளிவந்தவுடன் அது எழுத்தாளனை விட்டு விலகிவிடுகிறது என்ற  கோஷத்தைக் கேட்டதில்லையா அவர் ?..அவருக்குத் தோன்றியதை அவர் எழுதலாம் அதற்கான உரிமை ஜனநாயக முறைப்படி அவருக்கு இருக்கிறது [மதுரைல போய் அழகிரியைப் பத்தி எழுதும் உரிமை இதில் வருமா என்று இடக்கர் அடக்கல்கள் இங்கு வேண்டாம்.இது ரொம்ப சீரியசான இலக்கியக் கட்டுரை தோழர்களே நினைவில் வையுங்கள்]அதை எனக்குப் பிடித்த வகையில் வாசித்துக் கொள்ளும் உரிமையும் அதேசமயம் எனக்கு இருக்கிறது இல்லையா?[இரும்புக் கை மாயாவி கதைகளில் இருத்தலியம் என்று அடுத்த கட்டுரை தயாராய் இருக்கிறது ]கிடக்கட்டு..


இந்த அறம்னா என்ன ..அறம்னு ஒரு பாவகை இருக்கிறது ஒருத்தரைப் பிடிக்கலைன்னா அவர் மீது பாடினா அந்த ஆள் காலியாயிடுவான்னு சொல்றாங்க யாரோ ஒரு பல்லவன் மேல ஒரு வல்லவன் புலவன் பாடி ஆள் கபர்ச்தானுக்குள்ளே  போய்ட்டார்னு சொல்றாங்க.எனக்குத் தெரியாது.யாராவது பேராசிரியர்கள் விளக்குவாங்க.முக நூலில் பின் நவீனத்துவக் கவிதை என்று சிலர் எழுதுவது அறம் தானோ என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது.ஒவ்வொரு கவிதையும் படிப்பவர்  வாழ்நாளில் குறைந்தது ஒரு நாளையாவது குறைக்கிறது

நான் அறம் என்ற பாவகையைச் சொல்லவில்லை.அறம் என்றால் நீதி ,தர்மம் என்ற ரீதியில் புரிந்து கொள்கிறேன்.எது நீதி எது தர்மம் என்பதில் கருத்து வேறுபாடுகளும் கொலைவெறிச் சண்டைகளும் உண்டு.ஒவ்வொரு வர்ணத்துக்கொரு தர்மம். காபிருக்கும்  புறஜாதியாருக்கும் வேறு  தர்மம் அல்லது அறம் நம்மளவாக்கு  வேறு  அறம் என்ற அரசியலிலும் நான் குதிக்கவில்லை [நாளை குதிக்கமாட்டேன் என்று  உறுதி சொல்லமுடியாது.விஜய் குதிக்கும்போது நான் குதிக்கக் கூடாதா]

ஜெமோ ஒரு கதையில் அல்லது கட்டுரையில் [பலசமயம் இரண்டும் ஒரே நடைல இருக்கு.]எழுதி இருந்தார்.நான் முதல் முதலாக  அப்பாவின் சட்டையிலிருந்து திருடியபோது பிரபஞ்சமே  என்னை விழித்துப்  பார்ப்பது போல் உணர்ந்தேன் என்று ..அவர் கதைகளின் அடிநாதமாக ஓடுவதாக இந்த கூற்றை நான் காண்கிறேன் .ஜெமோ பிரபஞ்சத்தின் அடிப்படையிலேயே அறம் பொதிந்திருக்கிறது  என்று நம்புகிறார் [என்று சந்தேகிக்கிறேன் ]முன்ன பின்ன இப்ப இருந்தாலும் மனுசனை பிரபஞ்சம் க்ளைமாக்ஸ்ல அறம் அருகே கொண்டு சேர்த்துவிடும் என்று நம்புகிறார் [என்று நம்புகிறேன்]சாரு கூட அவரின் இந்த நோக்கு பற்றி ஒருதடவை  எழுதி இருந்தார்.அவர் பைபாஸ் பண்ணி படுக்கையில்  கிடக்கும்போது ஜெமோ அனுப்பிய குறுஞ்செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதிய பத்தி அது என்று நினைவு[அவர் ஒரு நல்ல பத்தி எழுத்தாளர்!]இந்த நம்பிக்கைதான் அவரை கண்ணகி காந்தி போன்ற திசைகளுக்கு கொண்டு போய்ச் சேர்த்தது  எனத் தோன்றுகிறது .உண்மையில் அவர் காந்திக்கு வந்து சேர்வார் என்று எனக்கு முன்கூட்டியே ஒரு கணிப்பு இருந்தது.ஆர் எஸ் எஸ் இலிருந்து  காந்திக்கு![காமத்திலிருந்து கடவுளுக்குப் போல்]இப்போது நீங்கள் ஜெமோவை மட்டும் மறுக்க முடியாது காந்தியையும் சேர்த்தே மறுக்க வேண்டும்!என்னா ஒரு வில்லத்தனம்?!

'இப்ப கஷ்டப் படறேன்னு தளர்ந்துடாதே மக்கா பரலோக ராஜ்யம் சமீபத்தில்தான் இருக்கு,அப்ப உன் துக்கமெல்லாம் சந்தோசமா மாறும் ' என்று சமீபத்தில் மருத்துவமனையில் படுத்திருக்கையில் எனக்காக ஜபம் பண்ண வந்த வெள்ளை ஜிப்பா வெள்ளை வேட்டி சுவிசேசி சொன்னதன் மேல்  சந்தேகம் ஏற்பட்டு  'சார்வாள் உங்களுக்கு ஜெயமோகனைத் தெரியுமா' என்று கேட்டேன்.அவர் ''யாரு நம்ம மேரிக்க மவனா ''என்றார்நான் 'அது ஏசு நாதருல்லா .இது வேற.கடைசியா வந்த அபோச்தலர் கேள்விப்பட்டதில்லே?''என்றதை நம்பாமல் என்னை ஆர் எஸ் எஸ் காரன்  என்று சந்தேகித்து ''அப்பாலே போ சாத்தானே என்பது போல் பார்த்து ''விசுவாசம் வேணும் மக்களே.இல்லாட்டி ஜீவிதம் துயரமாக்கும்'என்று விலகிப்  போனார்.

பிரபஞ்சம் அறத்தின் அடிப்படையில்தான் கட்டப் பட்டிருக்கிறது என்ற 'விசுவாசம்' எனக்கும் கொஞ்சநாள் இருந்தது.பலருக்கும் இருக்கிறது 'கடவுள் இருக்கான் குமாரு 'என்றோ 'என்ன இருந்தாலும் நியாயம்னு ஒண்னு இருக்குல்லாடே' என்றோ 'எல்லாம் என் கர்மாடி கர்மா' என்று புலம்பலாகவோ நம் தினப் படி கேட்கும் சம்பாசனைகளின் அடியில் எல்லாம் இந்த அறம் பற்றிய நம்பிக்கை ஒளிந்திருக்கிறது.கொஞ்சம் பழைய நம்பிக்கைதான்.சத்யமேவ ஜெயதே .நல்லவன் [நடுவில் கஷ்டப் பட்டாலும்]வாழ்வான்.நீதி நிலைக்கும் ....பிற பிற...

அதே சமயம் அப்படியெல்லாம் இல்லை.இந்த உலகே அநீதியால் கட்டப் பட்டிருக்கிறது அநீதியின் மீது கட்டப் பட்டிருக்கிறது என்ற கருத்தும் ஓங்கி ஒலிக்கிறது நல்லது ஜெயிக்கும் என்று யாராவது இளைஞர்களுக்கு திடீர் உபதேசியாகி நான் போதிக்கும் நேரத்தில் 'புடுங்கும் போங்க சார்.ஜோலியைப் பார்த்துட்டு ..இங்கே வல்லதுதான் நல்லது ..பேசத் தெரிஞ்சவந்தான் நல்லவன்.பிடுங்கத் தெரிஞ்சவந்தான் தர்மப் பிறப்பு.அடிக்கத் தெரிஞ்சவந்தான்  ஆண்டவன்''னு எதிர் உபதேசமும் செய்கிறார்கள்.அதற்கு ஏராளமான உதாரணங்களை நேர்வாழ்விலிருந்து சமகால வாழ்விலிருந்து காட்டுகிறார்கள்.பதிலாக நான் காண்பிக்கிற உதாரணங்கள் எல்லாம் புராணங்களில் இருந்தோ சரித்திரம் என்று சொல்லப் படும் நவீன புராணங்களில் இருந்தோ தான் வருவதை அவர்கள் சுட்டிக் காட்டும்போது  கொஞ்சம் தர்மசங்கடமாகி 'காலத்தைக் கடந்து பார்க்கக் கத்துக்கணும் தம்பி.பருந்து பார்வை வேணும்'என்று தப்பித்துவருவதற்குள் பெரும்பாடாகிவிடுகிறது

இலங்கைப் பிரச்சினை போன்ற  சமயங்களில் சிலர் என்னிடம் இவை எல்லாம் எந்த அறத்தின் அடிப்படையில் நிகழ்கிறது என்று கேட்கும்போது என்னால் இதுபோல் தப்பிக்க முடிவதில்லை.இப்போதெல்லாம் அறம் என்று ஒன்று இருக்கிறதா சார் என்று யாராவது கேட்டால் ''இருக்கிறது .ஜெயமோகன் கதைகளில்''என்று  சொல்லி விடுகிறேன் 4 comments:

 1. ஜெயமோகனை படிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது, படிக்காலிருப்பது அறமில்லை போல் தெரிகிறது!

  ReplyDelete
 2. இலக்கில்லாத கட்டுரை என்று படுகிறது bogan. ஆனாலும் இழைந்தோடிய நகைச்சுவை அருமையாக இருக்கிறது. கட்டுரையில் என்ன சொல்ல வருகிறீர்கள்?

  ஜெயமோகனின் கதையைப் படித்தேன். இது தான் அவர் எழுத்தை முதல் முறையாக ஒரு பத்திக்கு மேலாக முழுதும் படித்த அனுபவம். உண்மைச் சம்பவத்தை ஒட்டி எழுதியது என்று தெரியாமல் படித்தேன் - மிகவும் லயித்துப் படித்தேன். message என்று எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை; உண்மைச் சம்பவம் என்பது தெரிந்தே படித்திருந்தால் சில உரிமைகளை மீறியிருக்கிறாரோ என்று தோன்றலாம். இதுதான் அறம் என்று அவர் சொன்னதாக நான் எண்ணவில்லை.

  உண்மையைச் சொல்ல வேண்டுமானால், கொஞ்சம் ஆழமான வாசிப்புக்கு என்னைத் தயார்படுத்திய கதை. (எனக்கே பயமாக இருக்கிறது இப்படிச் சொல்கிறேனே என்று - பாருங்கள் சுஜாதா எழுத்தின் தாக்கத்தை!)

  ReplyDelete
 3. நல்லா எழுதி இருக்கீங்க. ரொம்ப ரசிச்சேன். நானும் அறம் என்றால் முதலில் நீங்கள் சொன்னது போலத்தான் எண்ணி இருந்தேன். நந்தி கலம்பகம் பற்றி தெரிந்த பிறகுதான் இந்த அறத்தை பற்றியும் தெரிந்தது. அறம் பாடி அழிக்கற மாதிரி இவன் பேசி பேசியே கழுத்தறானப்பா அப்படின்னு பேச்சு வழக்குல சிலர் சொல்றதை நான் கேட்டிருக்கேன். ஜெயமோகன் 'அறம்' கதைல ஒரு உயிரோட்டம் இருந்தது உண்மை. மிகவும் ரசித்தேன்.
  நல்லவன் வாழ்வான் அப்படிங்கற நம்பிக்கை என்னை விட்டுபோய் ரொம்ப வருஷமாச்சு. இதுக்கு எங்க அப்பாவோட வாழ்க்கையே ஒரு உதாரணம். வாழறது அப்படின்னா புல், பூண்டு கூட தான் வாழறது. மனசு விரும்பற சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட நிறைவேறாத வாழ்கை வாழ்ந்து என்ன பயன்?
  //இப்போதெல்லாம் அறம் என்று ஒன்று இருக்கிறதா சார் என்று யாராவது கேட்டால் ''இருக்கிறது .ஜெயமோகன் கதைகளில்''என்று சொல்லி விடுகிறேன்//
  வாய்விட்டு சிரித்தேன். :)

  ReplyDelete
 4. போகன் சார்! ஒரு சம்பவத்தின் தாகம் பதிவாகும் போது ஏனையோருக்கு அதில் ஏதும் சேதி வேண்டுமா என்ன? ஜே.மோ. வின் 'அறம்'தந்த ரசானுபவம் உங்களின் இந்தப் பதிவிலும் எனக்கு ஏற்பட்டது. மென்மையான எள்ளலும் நகைச்சுவையும் இழையோடிய எழுத்து. வாழ்த்துக்கள் போகன் சார்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails