Tuesday, June 15, 2010

ஓர் இரவு

''நோ ரவி''எனறாள் ராதிகா. ''இப்படியே ஆரம்பிச்சு எங்கேயோ போய்டும்''
ரவி சட்டென்று அவள்  கைகளை விடுவித்தான். ''நீ என்னை நம்பவே இல்லை இல்லே ?''என்றான் முகம் சிவக்க.''உனக்கு என் உணர்ச்சிகள் முக்கியமே இல்லை''
''லூசுத்தனமா பேசாதிங்க''
''உன் பின்னால இரண்டு வருசமா சுத்தறேன் பாரு .நான் லூசுதான்.''
''நான் வரேன்.இன்னைக்கு உங்க மூட் சரியில்லை.''
''கெட் லாஸ்ட்''
அவள் முறைத்துவிட்டு போனபிறகு கொஞ்ச நேரம் அலைகளையே பார்த்துக் கொண்டு அபத்தமாய்  அமர்ந்திருந்தான்.அவனுக்கே அவமானமாய் இருந்தது.ஏன் அப்படி பட்டிக்காட்டுத் தனமாய் நடந்துகொண்டேன்?எங்கே போய்விடப் போகிறாள் ராதிகா?
ஆனால் பிரச்சினை ராதிகா இல்லை.செக்ஸ்.முப்பத்தி ஒரு வயசு  வரை  பெண் உடல்  என்னவென்றே அறியாது இருப்பது எவ்வளவு கொடுமை என்று நினைத்தான்.

மாலை மெதுவாய் இறங்கிக் கொண்டிருக்க சற்றுத் தள்ளி மணலில் உட்கார்ந்திருந்த ஜோடி  இருட்டு வர வர துணிச்சல் பெற்று அந்தரங்க சேட்டைகளில் இறங்கியிருந்தது.அவன் அவள் மார்பை அழுத்த முயற்சிக்க அவள் தடுக்க முயற்சிப்பது போல் நடித்தாள்.அந்தப் பெண் ஒரு கணம் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.போயேன் என்பது போல்...ரவி எழுந்து நடந்தான்.பஸ் ஏறி திருவல்லிக்கேணி வந்தான் முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் வேர்வை மின்னும் இடுப்பு மடிப்பு உறுத்தியது.

என்னைச் சுற்றி எங்கும் செக்ஸ் இருக்கிறது.பீச்சில் அலுவலகத்தில் பஸ்ஸில் செய்தித்தாளில் டிவியில் சினிமாவில் இணையத்த்தில் இலக்கியத்தில் ....செல்போனில் கூட ..ஆனால் என் வாழ்வில் மட்டும் இல்லை என்று நினைத்தான்.ராதிகா கல்யாணத்துக்கு முன்னால் தொட அனுமதிக்க மாட்டாள்.ரொம்ப ஜாக்கிரதை.கல்யாணம் இப்போது இல்லை.இவன் தங்கை கல்யாணம் அவள் அக்கா கல்யாணம் எல்லாம் முடிந்து இவன் பிள்ளை அவள் வன்னியர் என்ற  மலை எல்லாம் தாண்டினாலும் குறைந்தது மூன்று வருடம் ஆகும் .ரொம்ப அவசரம் எனில் ஊருக்குப் போய் மூலக்கரைப் பட்டி முன்பல் தூக்கின அத்தை பெண் தன லட்சுமியைத்தான் பண்ணிக் கொள்ளவேண்டும்.சென்னை மாதிரி நகரத்தில் உலவும் தேவதைகளைப் பார்த்துவிட்டு ...அது சாத்தியமே இல்லை.மூச்சு முட்டும்.

ராதிகாவும் அவனும் மூன்று வருடங்களாக காதலிக்கிறார்கள்.ஏன் என்று அவர்களுக்கே தெரியாது.எளிதான காரணம் வேறு யாரும் காதலிக்க கிடைக்க வில்லை என்பதுதான்.அவளுக்கும் வயது முப்பதை நெருங்குகிறது.இப்போதே அவளது மார்புகள் தொய்ந்து கன்னச் சதைகள் வற்ற ஆரம்பித்துவிட்டன.அவனுக்கும் தொப்பை விழத் துவங்கிவிட்டது.தினம் காலையில் ஜாக்கிங் எல்லாம் செய்தாலும் அது ரிப்பேர் வேலைதான் என அவனுக்கு தெரிந்திருந்தது.முன்புபோல் கரமைதுனமும் அதிகம் பண்ண முடிவதில்லை.மறுநாள் ரொம்ப டயர்ட் ஆகி ஆபிஸ் போக முடியவில்லை.தவிர அதில் ஆண்மைக் குறைவு வந்துவிடுமாமே.விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று அவன் படித்த புத்தகத்தில் போட்டிருந்தது.முன்பு கோயிலுக்கு போவான்.ஆனால் கோயிலில் தான் மிக அழகான பெண்களெல்லாம் வருகிறார்கள்.மனத்தைக் கட்டுப் படுத்த கோயிலுக்குப் போவது சிறந்த வழி அல்ல என்று கண்டுகொண்ட பிறகு நிறுத்திவிட்டான்.யாரோ சொன்னார்கள் என்று தியானம் கற்றுக் கொண்டு பயிற்சி செய்ய முன்பை விட கட்டுப் பாடு இல்லாமல் மனம் அலைவது கண்டு சொல்லிக் கொடுத்தவரிடம் செல்ல அவர் உங்களுக்கு குண்டலினி எழும்புகிறது என்றார்.அவனது நோக்கம் குண்டலினியை எழுப்புவது அல்லவே?சென்னை போன்ற ஒரு பெரு நகரத்தில் அவனைப் போன்ற மிடில் கிளாஸ் ஆத்மாக்களின் ஏக்கங்களை  சங்கடங்களை யாரும் புரிந்து கொள்வதில்லை.சென்னை ஒன்று மேல்தட்டு மக்களுக்கானது.அல்லது அடித்தள மக்களுக்கானது.மத்திய வர்க்கமக்களுக்கான சென்னை எங்கே இருக்கிறது?
 
மெஸ்ஸில் புது  ரூம்மேட் மணியைப் பார்த்தான்.
''எங்கே சார் போயிட்டீங்க சினிமாவா''என்றதற்கு பதில் சொல்லவில்லை.
சாப்பிட்டுவிட்டு மணி ஒரு சிகரெட் பற்றவைத்து ஆழமாய் இழுத்தான்.''சார் சிகரெட்?''
''இல்லே .பிடிக்கறது இல்லை.''
அவன் ஆச்சர்யமாய் பார்த்து''ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத மனிதன் ரொம்ப ஆபத்தானவன்னு குஸ்வந்த்சிங் சொல்லியிருக்கார் சார்''

மறுநாள் ஆபிசில் இருப்பு கொள்ளவில்லை.டைப்பிஸ்ட் மஞ்சுவிடம் காரணம் இல்லாமல் எரிந்து விழுந்தான்.[அவள் அழகாய் இருக்க மாட்டாள்]ராதிகா  போன் செய்யவில்லை.டாம் இட்!ஒரு மணிநேரம் அனுமதியுடன் வெளியே வந்தான்.மஞ்சள் வெயில் கூசியது.பஸ் ஸ்டாண்டில் காலேஜ் பெண்கள் மார்பின் மேல் புத்தகங்களுடன் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருக்க அருகில் ஒரு பைக் வந்து நின்று நின்றிருந்த ஒரு பெண் அதில் ஏராள சிரிப்புடன்  அவன் முதுகில் நெஞ்சை அழுத்தியவாறு ஏறிப் போனாள்.ஒரு பைக் வாங்கவேண்டும் என நினைத்துக்  கொண்டான்.

விலகி நடந்தான்.நடந்தே போகலாம்.உடற்பயிற்சி மாதிரியும் ஆயிற்று.போகிற வழியில் இருந்த தியேட்டரில் பெரும் கூட்டம் கண்டு நின்றான்.'மஞ்சத்தில் கிளிகள்''போஸ்டரில் வழியும் மலையாள முலைகள்.தயக்கமாய் நின்று எதிரில் இருந்த டீக் கடையில் ஒரு காபி வாங்கிக் கொண்டு எதிரே கூட்டம்  பெருகுவதையே  பார்த்தான்.


ரூமுக்குப் போன போது மணி வரவில்லை.மெஸ்ஸில் கூட  காணோம்.கொஞ்ச நேரம் போரும் சமாதானமும் படிக்க ஏழாவது முறை முயன்றபோதுதான் மணியின் கட்டிலின் கீழ் அந்த புத்தகங்களைப் பார்த்தான்.ஹச்லர் என்ற அந்த ஜப்பானிய புத்தகத்தில்...
 காய்ச்சல் வருவது போல் இருந்தது.கண்மூடி உறங்க முயற்சிக்க ராதிகா குளிப்பது போல மஞ்சுவை புணர்வது போல அவனுக்குப் பிடித்த ஏழாங்கிளாஸ் டீச்சருடன்  ...
மணி சட்டென்று கதவு திறந்து வந்து ''சார் தூங்கியாச்சா''
ரவி கண்கூசி ''இல்லை''என்றான்.அவன் அந்நேரம் முகம் கழுவிக் கொள்வது பார்த்து ''வெளியே போறிங்களா''
''ஆமா சார்.சினிமா.ஜெயபாரதி அரை மணி நேரம் குளிக்கிறா ..வரீங்களா''
ரவி மொத்த தூக்கமும் கலைந்து''செகன்ட் ஷோவா'' என்றதற்கு ''நீங்க எங்க வரப் போறிங்க .இதென்ன புஸ்தகம்.டால்ஸ்டாய் .படிச்சிட்டு இருங்க''என்று சிரித்ததில் சீண்டப் பட்டு ''வரேன்''என்றான்.

''எப்படி சார்  படம்''என்றான் மணி.''நான் நினைச்சதை விட ரொம்ப ஹாட்.பிடிச்சதா''
ரவி பேசாது வந்தான்.மனம் முழுக்க ஜெயபாரதியின் அரை நிர்வாண குளியல் மிதக்க மணி சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு ''சார் .ஒண்னு சொல்லட்டா.காமம்தான் உலகத்தின் உப்பு.''
கூவத்தின் நீரில் சோடியம் வேப்பர்கள் கரைந்துவிட முயன்று கொண்டிருக்க நடைபாதைகளில் படுத்திருந்தவர்களை மிதித்துவிடாமல் நடந்தார்கள்.கூதற் காற்று  காதில்  உரச உடல் கணகணவென்று இருந்தது.ரவி கனவில் நடப்பது போல் உணர்ந்தான்.கீழே சுருண்டு தூங்குபவர்களை ஆச்சர்யமாக பார்த்தான்.இவர்களுக்கு எல்லாம் எங்கு கல்யாணம்?எங்கு சரசம்?எங்கு கர்ப்பம்?
மணி அவன் பார்ப்பது பார்த்துவிட்டு ''இதிலேயும் சிலசமயம் நல்ல கட்டைங்க கிடைக்கும் சார்''
ரவி திடுக்கிட்டு ''சேச்சே''என்றான்.ஒரு பெண்ணின் ஆடைகள் தொடை வரை ஏறியிருப்பது பார்த்து கண்களை விலக்கிக் கொண்டான்.
மணி உரக்க சிரித்து ''பணத்தி  போகம் பெரிதோ பரத்தி போகம் பெரிதோ''
ரவி சற்று வியப்புடன் மணியைப் பார்த்தான்.சற்று நேரம் இருவரும் மௌனமாய் நடந்தார்கள்.''நான் ஒரு ஹெடானிஸ்ட்.''என்றான் மணி.''அப்படின்னா..''
''இன்பத்தை ஆராதிப்பவன்''என்றான் ரவி''படிச்சிருக்கேன்''
''உண்.குடி.கூடு.இதுதான் எனது தத்துவம்.இன்றைய உலகில் காலாவதியாகாத ஒரே தத்துவமும் இதுதான்''
மணி நின்றான்.''பால் சாப்பிடலாமா.பருத்திப் பால்.உடம்புச் சூட்டுக்கு ரொம்ப நல்லது.''
ரவி தயங்கி நின்றான்.
''வா சார்''என்ற தள்ளுவண்டி முண்டாசுக்காரனுக்கு மணி நிரந்தர கஸ்டமராக இருக்கலாம்.பெட்ரோமாக்ஸ் ஒளியில் மஞ்சளாய்ச் சிரித்தான்.மணியும் பதிலுக்கு சிரித்து''இரண்டு பால்''என்றான்.
''சார் யாரு புதுசா''
''நம்ம ரூம்தான்.எல் ஐ சி ல ஆபிசர்'''
கிளார்க்குதான் என்று சொல்ல நினைத்தான்.
''எனக்கும் ஒரு பால் சொல்லு சார்''என்றது ஒரு பெண் குரல்.
ரவி சட்டென்று கலைந்தான்.வெற்றிலை சிகப்பேறிய உதடுகளும் தழையக் கட்டின புடவையும் இந்த ராத்திரியிலும் பவுடருமாய் ..
அவள் இருவரையும் கண்களால் ஒரு வெட்டு வெட்டி ரவியைப் பார்த்துச் சிரித்தாள்.''மணி எத்தனை சார்''
பருத்திப் பால்காரன்''இந்தா அலமேலு .சார் ஆபிசரு.அவர்கிட்ட இதெல்லாம் வேணாம்''
''அட!நான் மணி தானே கேட்டேன்.''என்றபோது மார்புகள் குலுங்கின.நன்கு விளைந்த நுங்குகள் போன்று கெட்டி மார்புகள்.
மணி அருகே நெருங்கி ''என்ன சார்.ஒரு கேம் ஆடறியா''
அவள் இன்னொரு தடவை சிரித்து''ஏன்னா சார்.மணி என்னா''
மணி இன்னும் நெருங்கி ''சொல்லு சார்.''
ரவி சேச்சே என்று சொல்ல நினைத்து ''சரி''என்றான்.

  அதேநேரம் அண்ணா நகரில் ஒரு வீட்டில் டிவிடியில் பிலடெல்பியா படம் பார்த்துக் கொண்டிருந்த முகேஷ் போன் ஒலிக்க எடுத்து''ஹலோ முகேஷ்''
''ராம்டா.தூங்கிட்டியா''
''இல்லே.படம் டிவிடி.''
''என்ன படம்''
சொன்னான்.
''அவார்ட் படமா .ஆளவிடு. உன் பத்தினி எப்படி இருக்கா''
''இன்னும் கோபம்தான்.ஆனா சரியாய்டும்''
''பின்னே.நீ நர்சை தடவினா சிரிக்கணுமா''
''அட.நான் ஒன்னும் பண்ணலை.பின்னால லேசா ஒரு தட்டு தட்டும் போது சரியா வந்து தொலைச்சுட்டா.உண்மையிலஅந்த அளவு துணிச்சல் எல்லாம் கிடையாது.அதுவும் இந்த சின்றோம்லாம் வந்த பிறகு''
''சரி.விடு.ஒரு கேஸ் அனுப்பினேனே. அலமேலு.என்ன ஆச்சு''
''எல்லாம் ஆச்சு''
''பாசிடிவ்?''
''ஆமா.சொல்லிடு''
''வந்தா சொல்றேன் ஆனா திரும்ப வருமான்னு சந்தேகம்.பெரும்பாலும் அதுங்களுக்கே தெரிஞ்சிரும்''
''ஓகே.குட் நைட்''
ஏறக் குறைய அதே நேரம் ரவி தன் முதல் பெண்  உடலை அறிந்திருந்தான். உச்சக் கட்டத்தில் தன் மார்பு மீது தளர்ந்து விழுந்து  அழும் மனிதனை அலர்மேலு''அட.என்னா இது''என்று வியப்புடன் அணைத்துக் கொண்டாள்.

8 comments:

  1. நல்ல நடை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. உணர்வுகள் கதையாய் ...அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி பனித்துளி ,சரவணன்.பத்து வருடத்துக்கு முன்பு எழுதியது.கடைசிப் பகுதியை இன்னும் செவ்வனே எழுதியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  4. ஆமாம் என்று தோன்றியது போகன்.. அதுமட்டுமில்லாமல் அந்த ஷிப்ட் போகஸ் போன் கால் மேட்டர் கொஞ்சம் டைவர்ட் ஆகுது..

    ReplyDelete
  5. குருதிப் புனலில் அஜய் ரத்தினம் சொல்வது போல் 'இன்னும் ப்ராக்டிஸ் பத்தலை'உண்மையில் ஒரு ஒ ஹென்றி திருப்பம் கொடுக்க நினைத்தேன்.மிஸ் ஆகிவிட்டதோ? மருத்துவப் பின்புலம் இல்லாத என் நண்பர்க்கு இது எய்ட்ஸ் பற்றிய கதை என்பதே சொல்லவேண்டி இருந்தது.ஆனால் ரொம்ப அழுத்திச் சொன்னால் பிரச்சார நாற்றம் அடிக்குமே என்று விட்டு விட்டேன்.காதல் என்ற சொல்லே வராமல் ஒரு காதல் கதை எழுத முடிந்தால் மட்டுமே மொழி நம்வசம் வந்துவிட்டதாக கருதவேண்டும் என்று ஓரிடத்தில் படித்தேன்.நன்றி

    ReplyDelete
  6. இவ்வளவும் பிலடெல்பியா, சிண்ட்ரோம் என்று குறிப்புகள் கொடுத்திருந்தேன்

    ReplyDelete
  7. :) good .

    பல விஷயம் மிகவும் சரி
    ...இதே மாதிரி ஒரு முதிர் கன்னியின் உணர்வுகளை பேச நிறைய பேர் முன் வருவதில்லையே ?ஏன்?

    ReplyDelete
  8. பாலகுமாரன் அதைத் தானே செய்தார் .இல்லையா

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails