Friday, June 15, 2012

உடல் தத்துவம் 21

இருவரும் சற்று நேரம் அமைதியாக மெழுகுப்  பொம்மைகள் போல அங்கேயே உட்கார்ந்திருந்தோம்.அவள் விடும் மெலிந்த பெண் சிகரெட்டின் புகை மட்டும் அறையில் ஒரு ஈ போல சுற்றி சுற்றி வந்தது.அந்த ஈ தனது சிறகுகளை அடித்துக் கொள்ளும் சப்தம் கூட எனக்குக் கேட்டது போல இருந்தது.அது மெல்ல ஒரு புகைப்பந்து போல அல்லது பெருங்காற்றில் சுருண்டுகொண்டுவரும் தூசுக் கோளம் போல உருண்டு என்னருகே வந்தது.

ரூபி அதை ஊடுருவி திடீரென்று ''நாம் உடல் உறவு கொள்ளலாமா?''என்றாள்.
நன் திடுக்கிட்டு ''வேண்டாம்''என  மறுத்தேன்.
அவள் புருவத்தைச் சுளித்தபடி ''ஏன் ?இந்த நாள் வேறு எப்படியும்  முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது.எனக்குள் இருக்கும் ஒரு பெரிய சீழ்ப்பந்து இன்று உடைந்திருக்கிறது.நீ வந்து அதை உடைத்திருக்கிறாய்.அதன் வலி யை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.மீண்டும் என்னை ஒரு நீண்ட காலத்துக்கு நீ தூங்காமல் அடித்திருக்கிறாய்.எனது அம்மா இன்னமும் பிரபஞ்சத்தில் எதோ ஒரு இடத்தில் அமைதியற்ற ஆத்மாவாக  சுற்றிக் கொண்டிருக்கக் கூடும் என்ற செய்தி எனக்கு அச்சத்தையும் துக்கத்தையும் தருகிறது.வா.வந்து எனக்குள் பொங்கும் கடலைச் சமாதானப் படுத்து'' என்றாள்

''யார் கண்டது.உனக்குள் இருக்கும் முடிச்சுகளையும் அது விடுவிக்கலாம்.நீ எனது அம்மாவைக் காதலித்தாய் அல்லவா?கால தேச வர்த்தமானங்கள் சரியாக இருந்தால் அவளுடன் உறவும் கொண்டிருப்பாய் அப்படித்தானே?''
நான் ''ச்சீ''என்றேன்.,அந்த சொல்லின் உக்கிரம் தாங்காமல்
''பொய் சொல்லாதே.உனது பகல் ஸ்கலிதக்  கனவுகளில் அவள் வந்ததே இல்லையா என்ன?""
நான் முகத்தில் குத்தப் பட்டாற்  போல பின்னால் சாய்ந்தேன்.அவள் சொன்னது சரியே.எத்தனையோ தடவை அகத்தில் மேகி அத்தையுடன் நான் கூடி முயங்கி இருக்கிறேன்.அந்த பாழ் இரவில் இஞ்சியநீருக்குப் பதிலாக நான் மட்டும் இருந்திருந்தால் .....என்றெல்லாம் நடவாத நிகழ்வுகளை நீட்சியாக்கி சுகித்திருக்கிறேன்
ரூபி எனது அகத்தை வாசித்தவர் போல ''ஆ ராத்திரி மாஞ்சு போயி ..ஒரு ரத்த சோகமாய்...''என்று பாடினாள்  ''ஆயிரம் கினாக்களும் கூடி மறைஞ்சு''ஒரு புகழ் பெற்ற மலையாளத் திரைப்பாடல்

நான் கண்களை மூடிக் கொண்டேன்.நான் ஒரு தடவை தென்னகத்தில் புகழ்பெற்ற ஒரு தேவி ஆலயத்துக்குப் போயிருந்தேன்.போன அன்று கூட்டமே இல்லை.போன பொழுது அந்தி.அதுவும் மழை இறங்கிக் கொண்டிருந்த அந்தி.பிரகாரத் தாழ்வாரங்கள் எல்லாம் மழை ஈரம் சதசதத்துக் கொண்டிருந்தது.சந்தியா பூஜையின் சமயம்.திரை இழுத்து அவளைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.மின்சாரம் இல்லை.வெறும் எண்ணெய்   விளக்குகளின் மெல்லிய மஞ்சள் சல்லாத் துணி வெளிச்சம் ஆயிரமாண்டு பழமையான கருங்கல் சிலைகளின் மீது ஒரு குழந்தையைப் போல ஏறி ஏறி விளையாடிக் கொண்டிருந்தது.கல் விளக்குகளில் திரி கருகும், எண்ணெய்  மட்கும் நாற்றம்.தூரத்தில் கல் மண்டபப் புதிர்களில் குழிந்து  குவிந்து குழைந்து குவிந்து பிறகு சிதறும் குரல்கள்திரைக்குப் பின்னே சிந்தும் சிறு மணிச் சப்தங்கள்

நான் அங்கேயே அமர்ந்து கண் மூடி உள்ளே நிற்கும் அம்பாளை கற்பனிக்க முயன்றேன்.

முதலில் அது கூடவில்லை.எத்தனையோ படங்களில் பார்த்த சித்திரமே அது.ஏனோ எனது புரத மலர் சலித்து சலித்து விலகியது.நான் திரும்பத் திரும்ப ஒரு ஓவியத்தை கூட வைக்க முயன்றவன் போல முயன்றேன்.சித்திரத் தூரிகையின் நுனி ஒரு சட்டோரி கணத்தில் சட்டென்று கூர்மை பெற்றது.நன் துல்லியமாக அவளைக் கண்டேன்.நேரில் பார்ப்பது போல துல்லியமாய்.இல்லை நேரில் நாம் அவ்வளவு துல்லியமாக பார்க்கிறோமா  என்ன?மிகு வேகமாய் ஓடி விடுகிறது நிகழ்காலம்.அதை அதன் நிகழும் கூர்மையுடன் பிடித்துக் கொள்ள நமது போதத்தின் மழுங்கிய ஆடியினால் ஆவதில்லை.எப்போதாவது ஒரு ஜன்னல் திறப்பது போல சிலருக்கு அது கூடுகிறது.அப்போது அவன் கவி ஆகவோ ஞானி ஆகவோ ஆகிறான்.மற்றபடிக்கு அது ஆசீர்வதிக்கப் படாதவர்களுக்கு எனக்கு நிகழ்ந்தது போன்ற அகக் கண் திறக்கும் தருணங்கள் எப்போதாவது தான் கிட்டும் என்று ஒரு சாமியார் பின்னால் சொன்னார்.அதுவும் கருணையினால்.

நான் எத்தனையோ சித்திரங்களில் பார்த்த அதே முகம்தான்.அதே கிளிச் சுண்டன்  மாவின் நிறத்தோடு அப்போது கறந்த பாலில் பொங்கும் நுரை போன்று பொங்கி வழியும் சிரிப்போடு ஆனால் முழு நிர்வாணியாய் .

கேரளத்தில் திறந்த முலைகள் மேல் தொங்கும் வட ஆரங்களோடு   மார்பளவு பகவதி சிலைகளைப் பார்த்திருக்கிறேன்.இது ஸ்டார்க் நேகட்  என்பார்களே அப்படியொரு மிருக நிர்வாணம்.அவளது முலைகளைச் சுற்றி தாமரை இலைகளைப் போல படர்ந்திருக்கும் முலை  வட்டங்களை அவற்றின் நுண்ணிய துளைகளைக்  கூட என்னால்  காண முடிந்தது.மெல்ல மூச்சு ஏறி ஏறி இறங்கும் அவளது உதரக் குழியையும் மலைச் சரிவு போல மடிந்து இறங்கும் நாபி நாணயத்தையும்  யோனிச் சக்கரத்தையும் கூட காண முடிந்தது.நான் சட்டென்று ஸ்ரீ சக்ரம் என்றால் என்னவென்று உணர்ந்தேன்.ஸ்ரீ சக்ரம் மெல்ல அதன் இதழ்களைப் பிரித்து பிரித்து மணிகளை வீசிக் கொண்டிருந்தது.அவை ரத்தத் துளிகள் போல சுற்றிலும் தெறித்தன.அவை பெருகி நிறைந்து அவளது காலடியில் பெருகி ஒரு தடாகம் போல தேங்கி நின்றது.அந்த ரத்தக் குளத்துக்குள் அவளது தொடை வழியாக நீண்ட கரிய பாம்பு ஒன்று இறங்கி வந்தது நான் அச்சத்துடன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தேன்.இப்போது மாமை ததும்பும் இந்திய முகமாய் இல்லை.அது ஆலிவ் எண்ணெய்  மினுங்கும் சருமத்துடன் பளபளக்கும் கூந்தலுடன் சோகத்துடன் என்னை நோக்கி இரக்கத்துடன் பார்க்கும் இத்தாலிய முகம்.இல்லை தூய கன்னி அன்னையின் முகம்.அந்த முகம் என்னை நோக்கி சோகத்துடன் ததும்பியது.நான் எனது செவி மடல்களுக்குள்ரத்தம் பரவுவதை உஷ்ணமாய் உணர்ந்தேன்.பாய்ந்த ரத்தம் உள்ளக்குள் கடல் அலை போல ஆர்ப்பரித்தது.பின்னர் தணிந்து குழறியது.இப்போது மேரி அன்னை மேகி அத்தையாக மாறிக் கொண்டிருந்தாள்.சட்டென்று  அவள் முலைகள் பூரித்துத் தாழ்வதைப் பார்த்தேன்.ஒரு கமல மொட்டு விரிவதைப் போல அவை பூத்தன.அதிலிருந்து அருவியாய் பால் சொரிந்து வயிற்றில்  என்னை நோக்கி இறங்கியது.நான் கூப்பிய உதடுகளுடன் அதை நோக்கிப் பாய்ந்தேன்.யாரோ என் அடி முதுகில் அடித்தார்கள்.''இன்னிக்கு இவன்''என்ற குரல் கேட்டது.விபூதிப் பச்சையின் வாசனை முகத்தில் அடித்தது.நான் மேலிருந்து  ஒரு அலை விழுவது போலக் கீழே விழுந்தேன்.இப்போது மேகி அத்தை முகம் அதன் வரிகளில் கசிந்து உடைந்து மாறியது.மெல்ல அது முன்னம்பல் நீண்ட ஒரு வெள்ளாள முகமாய் மாறியது .அம்மா!அது அம்மா.வேறு யாருமல்ல.அம்மா..அவளது யோனிக் குழியிலிருந்து இறங்கி வந்த சர்ப்பம் வேறு யாருமல்ல.நான்தான்.நான் சட்டென்று என்னைப் பிடித்துக் கொண்டிருந்த கைகளில் இருந்து ஒரு சர்ப்பத்தின் நெளிவோடு  உதறி மேல் நோக்கி திமிறினேன். .யாரோ பிடி பிடி என்றார்கள்.நான்  இப்போது ஒரு பறவையைப் போல மாறி அந்த முகத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தேன்.பெரிய முலைப் பாறைகள்  நடுவே பால் அருவி போல கொட்டுவதைக் கண்டேன்.கிழே  கிடக்கும் ரத்தத் தடாகத்தைப் பார்த்தேன்.போ போ சீக்கிரம் என்று எனது சிறகுகளை மேலும் வன்மையாய் அடித்துக் கொண்டேன் .அம்மாவின் முகம் கரைந்துபோகும் முன்பு சீக்கிரம் போ என்றார் யாரோ.ஆனால் அம்மாவின் முகம் அதற்குள் மாறத் துவங்கி விட்டது.அம்மையின் முன்னம் பற்கள் வளைந்து கூராகத் தொடங்கின.அவள் முகம் மழை மேகம் போல கருக்கத் தொடங்கியது.கண்கள் கருணையை இழந்து வெறித் தனம் கொண்டன.விழி ஓரங்கள் சிவந்து சட்டென்று ஒரு ஓங்காரக் கூச்சலுடன் வாய் பிளந்து உதிரக் கொடி  போல நாக்கு  வெளியே வந்து விழுந்தது.அம்மை தாய்மை தீர்ந்து  காளி  ஆகி இருந்தாள் .பறவை அந்த அகன்ற வாயின் அந்தகார இருட்டுக்குள் சென்று மறைந்தது
நான் மயங்கி விழுந்தேன்

அன்றிலிருந்துதான் எனது மன நலப்  பிரச்சினைகள் ஆரம்பித்தன.



Sunday, June 3, 2012

பொருக்கு

நீண்ட நாட்களுக்குப் பிறகு 
மாட்டுத் தாவணி பேருந்து நிறுத்தத்தில் 
பாசந்தி சாப்பிட்டுக் கொண்டிருந்த 
அவளைக் 
கண்டுகொண்டேன் 
கன்னத்தில் 
இறங்கியிருந்த 
மெலிய கோடுகளைத் தவிர 
வயது 
அவளைப் பெரிதாக 
மாற்றியிருக்கவில்லை 
மார் கூட 
இருபது வயதின் 
அதே கூரோடு
இருப்பதாக தோன்றிற்று 

இன்னமும் 
பாசந்தி தானா 
என்று சிரித்தேன் 
நானும் அவளும் 
சாப்பிட்ட 
அத்தனை பாசந்திகளையும் 
நினைவு கூர்ந்து ..

அவள் 
எனது புத்தகக் கனம்
இறக்கிய ஒற்றைத் தோளையும்
அழுக்குச் சட்டையையும் 
வரட்டுத் தாடியையும் 
செருப்புக்குள் பொருந்தாது 
துருத்தி நிற்கும் 
கால் நகங்களையும் 
கவனித்து 
இன்னமும் ஜோல்னாப் பைதானா 
என்று சிரிப்புடன் கேட்டாள்

வர்மப் புள்ளிகளில் 
உளிப்புள்ளி வைத்து 
திருகும் வித்தையை 
அவள் இன்னமும் 
பயிற்சி செய்கிறாள் 
என்று அறிந்து கொண்டேன்..

Saturday, June 2, 2012

கயம்

என்னால் உன்னைக் காதலிக்க முடியாது 
என்று நீ சொன்னாய் 
நீ அழகற்றவன் 
என்ற சொல் 
அதனுள் புதைந்திருக்கிறது 
திருப்பிய வேல் போல 
உன் கண்களில் 
மினுங்கும் கர்வத்தை நான் காண்கிறேன் 

நரம்புகளில் 
துருப் பிடிக்கும் ஓசை கேட்கிறது எனக்கு 
கண்களை மூடிக் கொள்கிறேன் 
காலம் பழுத்து நீள்கிறது 

குழித்துறை ஆற்றின் கரையில் 
சிவன் கோயில் துறையில் அமர்ந்து 
சுருங்கிய கண்களுடன் 
நடுங்கும் விரல்களால் 
நான் ஏதோ 
உற்றுப் பார்த்து எழுதிக் கொண்டிருக்கிறேன் 
எனது நரைமயிரை 
வெயில் பொன்னாக்கி வெள்ளியாக்கி 
மீண்டும் மயிராக்கி
விளையாடிக் கொண்டிருக்கிறது 


பூசை முடிந்து 
வெளுத்த பாதங்களுடன் 
நீ அருகே வந்து நிற்கிறாய் 
கசங்கிய இலை போல் இருக்கிறது அது 

கோபமா என்கிறாய் 
யுகங்கள் கடந்த கேள்வியைக் கேட்டு 
தவளை ஒன்று 
படியில் தயங்கி நிற்கிறது 
அதன் முதுகில் 
படர்ந்திருக்கும் பச்சைப் பாசியைச் 
சுரண்ட எனது விரல்கள் நம நமக்கின்றன  '

கோபமா என்கிறாய் மறுபடியும் 
தவளை பாசிக் கண்களில் மிதக்கும் ஆர்வத்தோடு காத்திருக்கிறது 

பின்பு பொறுமை இழந்து 
கண் அணைத்து
நதி நீரில் 
மெலிய ஒலியுடன் குதிக்கிறது 
ஒரு ஓவியம் அசங்கியது போல 
அதிர்ந்த அலைகள் 
ஒரு யோனி விரிவது போல 
ஒரு கணம் விரிந்து 
தவளையை விழுங்கி விட்டு 
மீண்டும் 
அமைதியாகின 


நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் 
அவள் நின்றுகொண்டிருக்கிறாள் 
நதி ஓடிக் கொண்டிருக்கிறது 
தவளை போய் விட்டது

LinkWithin

Related Posts with Thumbnails