Monday, January 16, 2012

புணர் நிமித்தம்


ஆடும் ரயில் பெட்டியின்
கழிவறையில்
சிறுநீர் கழிக்கும்
புழையை வெறித்துக் கொண்டிருந்தேன்
அது ஏன்
நிதம்ப வடிவில் இருக்கிறது
என்று கேட்டுக் கொண்டேன்
நீளக் குழாயின் மறுபுறம்
பூமி ஓடிக கொண்டே இருந்தது
இந்தக் கழிவறையில்
புணர்ச்சி நடந்திருக்குமா
என்று யோசித்தேன்
இருக்கலாம்
பூமியில் புணர்ச்சி நடை பெறாத இடம் எது ?
மயானத்தில் கூட நடந்து கொண்டே இருக்கிறது

புணர்ச்சி ஒரு நதி போல
பூமி மீது ஓடிக கொண்டே இருக்கிறது
மழைத் துளிகள் போல்
யோனி நிலம் மீது
விந்துத் துளிகள் வீழ்ந்து கொண்டே இருக்கின்றன
நல்ல நிலத்தில் வீழ்ந்த விதைகள் மட்டுமல்ல
முட்செடிகள் நடுவிலும்
சில முளைக்கின்றன
நெருக்குண்டு மடிகின்றன
ஆனால் விதைத்தல் பொருட்டல்ல புணர்ச்சி

''நான் கடவுளை
உறவு உச்சத்தின் கடைசி நொடியில் மட்டுமே
பார்க்கிறேன் ''
என்று உடன் பிரயாணித்த
வெள்ளைக் காரி சொன்னாள்
அவள் கடவுளின் விலாசத்தைத் தேடித்
திருவண்ணாமலைக்குப் போய்க் கொண்டிருந்தாள்
''சில சமயம்
ராம கிருஷ்ணரைப் போல
பச்சை வயல்களின்
மீது
வெள்ளைக் கொக்குகள் எழும்புவதைக்
காணும் போதும்
அது நிகழ்வதுண்டு ''என்று சொன்னாள்.
எனக்கு ராம கிருஷணர் மேல்
ஆர்வமில்லை
ஆனால்
அவளது நீர்த்த
டீ சர்ட்டின் மேலே
விறைக்கும் முலைகள்
அந்தக் கொக்குகளை நினைவுபடுத்துகின்றன
என்ற போது சிரித்தாள்
எனக்கு அவளைப் பிடித்திருந்தது
என்னைப் போலவே
கண் தெரியாத தம்பதிகளின்
கண்தெரியும் குழந்தை
அழுவதை
பதற்றத்துடன்
கண்ணீருடன் கவனித்தாள்
அப்போது அவள் கண்களில்
கடவுள் நம்பிக்கை இல்லை.
என்பதைக் கவனித்தேன்.
''புணர்ச்சி எனக்கு
இந்த இடத்தில் விலகு
என்று சொல்லும்
ஒரு அறிவிப்புப் பலகை
இரு தொழு நோயாளிகள்
புணர்ந்ததைப் பார்த்த கணத்திலிருந்து
எனக்கு இவ்விதம் தோன்றி வருகிறது
சீழ் பழுத்த யோனிகளிலும்
புழுத்த குறிகள்
கண நேரக் கடவுளைத் தேடித்
துழாவுகின்றன ''
என்று நான் அவளிடம் சொன்னேன்
''பூமியில் புணர்ச்சி நிகழாத மனம் எது?''
என்று அவள் கேட்டாள்.
அப்போது அவள் கண்கள்
மிக தூரத்திலிருந்தன.
நான் அவற்றை வரைய முயன்று தோற்றேன்
ஒப்பிட
எனக்கு
அவள் முலைகளை வரைவது
எளிதாக இருந்தது
தோய்த்த பால் பனீர் போலிருந்த
அந்த வெள்ளைக்காரச்சியின்
முலைகள்
உடைந்த கொப்புளம் போல சிவந்திருக்குமா 
இல்லை
நான் பார்த்த
சுதேசியக் கருப்பு நாவல் பழங்கள் போலிருக்குமா
என்று மட்டும் யூகிக்க முடியாமல்
ஒரு கேள்விக் குறியை இட்டு வைத்தேன்.
கருப்பே ருசி...எனினும்
அது எனது மூளையை
அந்துப்பூச்சி போல் துளைத்துக் கொண்டே இருந்தது
திருச்சியில்
அவள் இறங்கும் முன்பு
அந்தக் கேள்வியை கேட்டே விட்டேன் 
அவள் புன்னகையுடன்
போன மாதம் தான்
அவளுக்கு முற்றிய நிலை மார்புப் புற்று நோய்
கண்டறியப் பட்டதாகச் சொன்னாள்
அவள் ஏன் என்னிடம் அதைச் சொன்னாள்
என்பதை நான் அறியேன்
ஆனால்
இக்கவிதையில்
எந்த நீதியும் இல்லை
என்று மட்டும்
உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் 
போகும் முன்பு
கடைசியாக...
அவை வெடித்த கொப்புளங்கள் போல்தான் இருந்தன.
குறிப்பு-பண்புடன் இணைய இதழில் வந்தது 

21 comments:

 1. மனம் ஒரு சந்தோஷ நிலையில் இருக்கும் தருணத்தில் உம்ம கதையவோ, கவிதையையவோ படிப்பதில்லை. படிச்சா ஒரு விதமான எரிச்சல் கலந்த மனோநிலை நிகழும். இருந்தாலும் படிக்காமல் இருந்ததில்லை.

  காலையில் இருந்து நல்ல இருந்திச்சு. எளவு, இப்ப இந்த கவிதையை படிச்சிட்டேன்

  ReplyDelete
 2. பின்னூட்டமிட வந்தவன், ராஜகோபால் எழுதியதைப் படித்து விட்டு சிரிக்கத் தொடங்கினேன். சிரித்துக் கொண்டே இருக்கிறேன். நின்றபின் வருகிறேன்..

  ReplyDelete
 3. எப்படி பட்ட மனநிலை இருந்தால் இப்படி எல்லாம் எழுத வரும்! யோசித்து யோசித்து......இன்னும் யோசித்து கொண்டிருக்கிறேன். பிணத்தையே புணரும்
  மனிதர்கள் இருக்கிறார்களே!
  //இக்கவிதையில் எந்த நீதியும் இல்லை
  என்று மட்டும்
  உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்// :)

  ReplyDelete
 4. மீனாக்ஷி ..இதில் வரும் ஆண் சாதாரணன்.லோகாயதன்.உடலை வாழ்வின் மையமாக வைத்திருக்கிற மனிதன்.ஆனால் பெண் அப்படி அல்ல.அவள் நோயின் மூலமாகவோ உள் உணர்வு காரணமாகவோ உடலை மீறி பிரயாணிக்கிற ஆத்மா.அவளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.அதனால்தான் அவளது கண்களை அவனால் வரையவே முடியவில்லை.அவை அவன் அறியா தூரத்தில் தொலைவில் நிலைத்திருக்கின்றன.படம் இக்கவிதையை மேலும் உங்களுக்குப் புரிய வைக்கக் கூடும்.அவன் இன்னமும் நிர்வாணப் பெண்ணின் உடலை உற்றுப் பார்க்கும் விலங்குதான்.அவளது கண்களோ முடிவின்மையை நோக்கித் தொழுகின்றன.

  ReplyDelete
 5. நன்றி போகன்! யோசனையை முடித்து வைத்தீர்கள். :)

  ReplyDelete
 6. புணர்ச்சி நீடிக்கும்.. (மினிமம் 1-2 hrs) கணங்களில்... வார்த்தைகள் தன் தகுதியை இழக்கிறது

  ReplyDelete
 7. சத்தியமா அப்படி ஒரு பார்வை தோணவேயில்லை போகன். உங்க விளக்கத்தைப் படிச்சபிறகு கொஞ்சம் வெக்கமாயிடுச்சு என்னோட விகாரங்களை நெனச்சு.. still, ராஜகோபால் கருத்து is explosive laughter.. உங்க பதிவுகளைப் படிக்குறப்ப எனக்கும் இது போலத் தோணும். this man has two sides: dark and darker.

  ReplyDelete
 8. ''this man has two sides: dark and darker.''

  அப்பாதுரை சார்...இதைப் படிக்கும்போது எனக்கு ஏனோ இதைக் கேட்கத் தோன்றியது.நீங்கள் ஆங்கிலத்தில் எதுவும் எழுதி இருக்கிறீர்களா..அல்லது எழுத முயற்சித்திருக்கிறீர்களா?ஒரு hunch,,, உங்கள் ஆங்கில நடை நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது ...

  ReplyDelete
 9. படத்தையும், பின்னூட்டத்தில் உங்கள் கருத்தையும் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன், படிக்கிறேன்.
  Brilliant!

  ReplyDelete
 10. நன்றி போகன். அஞ்சு வருசமா தமிழ்ல மட்டுமே. டக்குனு இங்லிஷ்ல வந்துரும்.. சில சமயம் அப்படியே விட்டுறுவேன். நெனச்சதைச் சொல்றதுக்கு இங்லிஷ் தமிழைவிட சுலபமான வளமான மொழினு நினைக்கறேன்.. :)

  ReplyDelete
 11. நான் பெண்ணாக இருப்பதாலும், தெளிவோடு இருப்பதாலும் போகனின் கவிதைகள் வாசிப்பின்பம் தருபவையாகவும், நான் முன்பே சொன்னதுபோல், சற்றே கர்வம் கொள்ளவும் வைக்கின்றன.
  பெண்மையை புரிந்தும், அத்தோடு அதை ஆராதிக்கவும் இயல்கிற தன்மைகொண்ட உங்களுக்கு நன்றி போகன்.

  ReplyDelete
 12. புணர்ச்சியின் மீதிருந்த பாழ்ய சிந்தனைகளுக்கு மீட்டு சென்றது.

  எனது மூன்றாவது அம்மா மார்பக புற்றுநோயால் தான் இறந்தார்.

  புணர்ச்சிக்காக கட்டவில்லைவில்லை என சப்பை கட்டிய அப்பா கடைசி வரை அடுத்த ஆணிடம் உன் மார்பகத்தை காட்டுவதா என மருத்துவமனை அழைத்து செல்லவில்லை!

  மனம் கனத்து விடை பெறுகிறேன்!

  ReplyDelete
 13. Santhini.. போகனின் கவிதைத் தளம் பற்றிய கருத்து உங்களதென்று நினைக்கிறேன். அந்தத் தளத்திலே அவர் கட்டும் வீடுகள் சிலவற்றைப் பற்றிய கருத்து எங்களது(!) என்று நினைக்கிறேன். 'கண நேரக் கடவுளைத் தேடும் புழுத்த குறி'யில் பெண்மையின் ஆராதனை? புரியவில்லை.

  ReplyDelete
 14. ஆம் ...சாந்தினி என்னை உயரத்தில் கொண்டு வைக்காதீர்கள் தயவு செய்து...உயரத்துக்குப் போனாலேஅங்கிருந்து எனக்கு குதிக்க வேண்டும் என்ற இச்சையைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடிவதில்லை.நாளைக்கே மிக இரக்கமற்ற ஒரு பெண்வெறுப்புக் கவிதையை நான் எழுதலாம்.அந்த சுதந்திரம் எனக்கு வேண்டும்

  வால் பையன் உங்கள் பின்னூட்டம் என்னை ஒரு நாள் முழுக்க இம்சை செய்து கொண்டே இருந்தது .மனிதர்களில் எத்தனை வகைகள்!

  ReplyDelete
 15. வால் பையன் உங்கள் பின்னூட்டம் என்னை ஒரு நாள் முழுக்க இம்சை செய்து கொண்டே இருந்தது .மனிதர்களில் எத்தனை வகைகள்! //


  விதை ஒன்று தான்.

  விழையும் மண்ணும், விவசாயியின் பண்ணூம்(கலாச்சாரம்) நம்மை பொம்மைகளாக்குகிறது!

  ReplyDelete
 16. @ அப்பாதுரை--- புழுத்த குறி என்ற வார்த்தை இருப்பதனாலேயே, இந்த கவிதையில் ஆராதனை இல்லாமலாகிறது என்று அர்த்தமில்லை.
  பெண்மை - உடலை தாண்டிய தேடல் கொண்டது என்பதே இந்த கவிதையின் சாரம். வாழ்வானாலும், கவிதையானாலும் சாரம் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். வார்த்தைகளில் மட்டும் வாழ்வதில்லை கவிதை. புழுத்த குறியோ, சீழ்த்த யோனியோ எல்லாம் இயற்கையின் இயல்பே. அசிங்கம் என்பதும், அழகு என்பதும், இருத்தலின் பன்மையில் மட்டுமே. ஒருமையில் எதை காண்பீர்கள்?
  @ போகன் - --- இன்று உங்கள் கவிதையை நான் பாராட்டுவதால் உங்களுக்கு எந்த தளையும் உண்டாவதில்லை போகன். எழுத்து என்பதே சுதந்திரத்தின் ஒரு வடிவம் தானே. உயரத்தில் வைப்பது உங்கள் புரிதலை. பெண்மை என்பது பேருச்சிக்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஆண்மையும், பொருண்மையும் அது போலவே.....எங்கும் இருப்பவையே. கர்வப்படும் தருணங்களும், வெட்கப்படும் தருணங்களும் எல்லோர்க்கும் வாய்க்கும். கிடைக்கும்போது - அது அனுபவம். உங்கள் கவிதை என்னால் அனுபவிக்கப்படுகிறது ---அவ்வளவே.

  ReplyDelete
 17. அழகாச் சொல்லியிருக்கீங்க Santhini. புரிதலைத் தொட்டது உணர்வு, true.
  எனக்கென்னவோ சட்டுனு அதான் தோணிச்சு..:)
  still.. போகன் சைடு வாங்குறார் பாருங்க.. the point is.. we love our spots.

  ReplyDelete
 18. சாந்தினியின் விமர்சனமே கவிதை போல் உள்ளதே!

  பெண்மை - உடலை தாண்டிய தேடல் கொண்டது//

  முழுக்க முழுக்க ஒப்புக்கொள்கிறேன், அனுபத்தாலேயே!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails