Sunday, November 20, 2011

பிளாஸ்டிக் புன்னகைகள்

1.அவளது 
சாக்கரின் புன்னகை
மிதக்கும் 
பிளாஸ்டிக் கண்களைத் தாண்டி 
எப்படி 
அவளை நேசிப்பது 
என்பதுதான் 
எனக்கு 
இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை


2.எங்கிருந்தோ பறந்துவந்து 
ஜன்னல் விளிம்பில்
அமர்ந்துகொண்ட 
பட்டாம்பூச்சியை 
குறைந்தது 
பத்துப் பேராவது
கவிதை செய்திருக்கக் கூடும் 
என்று நினைத்துக் கொண்டேன் 
களங்கமின்மையின் பாவனைகளோடு 
புகைப்படத்துக்கு 
போஸ் தரும் 
குழந்தை நடிகை போல 
இது 
ஒரு தொழில்முறைப் பட்டாம்பூச்சியாகவும் இருக்கக் கூடும் தானே?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

3.எப்படி இருக்கிறாய்
என்றவள் கேட்டதில் 
இருக்கிறாயா 
என்ற 
கேள்வியும் இருந்ததா?

4நான் இல்லாவிட்டால் 
இறந்துவிடுவேன் 
என்றவளை 
நேற்று தெருவில் பார்த்தேன் 
கையில் சாத்திய குழந்தையோடு..

இறந்தபிறகு 
பிறந்ததா இது?

5.நெடுநாட்களாய் 
உன் குகையில் நீ இருந்தாய் 
என் குகையில் நான் இருந்தேன் 
ஒரு சலிப்பான காலையில் 
ஒரே நேரத்தில் 
தற்செயலாய் வெளியே வந்தோம் 
காலைக் கதிரின
பொன் வெயில்
இருவர் மீதும் படர்ந்தது 

அந்த 
இனிப்புவெளிச்சம் 
மற்றவரிடமிருந்தே வருகிறது 
என்று தவறுதலாக நினைத்துக் கொண்டோம்... 
காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் ...


5 comments:

  1. பட்டாம்பூச்சி கவிதை வித்தியாசப் பார்வை. குழந்தை நடிகை பாவனை செய்வதாகப் பார்ப்பதன் வக்கிரம் பாதிக்கிறது போகன்.

    ReplyDelete
  2. நாலாவது நல்ல சிரிப்பு.

    ReplyDelete
  3. நாலாவது கவிதை நறுக் கவிதை...

    ReplyDelete
  4. மூன்றாவது நறுக்குன்னு இருக்கு.

    ஐந்தாவது - காதலிக்க காரணங்கள் அவசியமேயில்லை.

    ReplyDelete
  5. "எப்படி
    அவளை நேசிப்பது "

    " தொழில்முறைப் பட்டாம்பூச்சியாகவும்"
    "இறந்தபிறகு
    பிறந்ததா இது?"
    "இருக்கிறாயா "
    "இனிப்புவெளிச்சம்"

    "தொழில் முறை நக்கலும் நையாண்டியும் " But very nice ones.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails