Monday, September 20, 2010

உடல் தத்துவம் 8

என் மனநிலை பெரிதும் பாதிக்கப் பட்டது.அடுத்த ஒருவாரம் முழுக்க கடுமையான காய்ச்சலில் விழுந்து கிடந்தேன்.தூக்கத்திலும் விடாது பேசிக் கொண்டே இருந்ததாக சொன்னார்கள்.சில சமயம் நான் கட்டுப்பாடின்றி பிதற்றுவதை நானே உணர்ந்தேன்.பெரும்பாலும் சங்குவை ஓடாதே ஓடாதே என்று எச்சரித்துக் கொண்டிருந்தேன்.சில தருணங்களில் பின்னால் சிரி என்று எழுதிய அந்த மஞ்சள் ராட்சசன் திரும்பி எங்களை நோக்கி வரும்போது ஓடு ஓடு என்று கத்தினேன்.க்வார்ட்டர்சில் உள்ள சிறுவர்கள் என்னை வந்து பார்த்தவண்ணம் இருந்தார்கள்.சங்குவைப் பற்றி என்னுடன் பேசக் கூடாது என்று ஆச்சி சொல்லியிருந்தாலும் சிறுவர்களுக்கே உரிய குரூரத்துடன் அவர்கள் அவனைப் பற்றிதான் பேசினர்.விநாயகம் மட்டுமே சங்குவின் உடலை அவன் வயது காரணமாக பார்க்க அனுமதிக்கப் பட்டிருந்தான்.உண்மையில் அங்கு உடலே இல்லை என்பது போல் சொன்னான்.அவனுடைய கால்களில் ஒன்றை நாய் ஒன்று தூக்கிக் கொண்டு ஓடினதை தானே பார்த்ததாய் சொன்னான்.நான் அபத்தமாய் ''சடையா'' என்றேன்.நாங்கள் பொன்வண்டுகளை தீப்பெட்டியில் அடைத்துவைத்திருந்த பாவம்தான் சங்குவைப் பழிவாங்கிவிட்டது என்றார்கள்.நான் நினைவு வந்து தள்ளாடி எழுந்து என் தீப்பெட்டியைத் திறந்து பார்த்தேன்.அது எப்போதோ இறந்து உலர்ந்திருந்தது.

மெல்ல சங்கு அவர்கள் வாழ்வில் இல்லாமல்  ஆனான்.ஆனால் எனது பின் மண்டையில் அவன் இருந்துகொண்டேதான் இருந்தான்.ஒருவாரம் கழித்து சித்தப்பாவின் சைக்கிளில் பள்ளி போக ஆரம்பித்தேன்.இப்போது அது அவமானமாக இருக்கவில்லை.சங்குவின் டீக்க்கடை வெறிச்சோடிக் கிடந்தது.அதன் ஓலைக் கூரை புழுதிக் காற்றில் ஊளையிட்டுக் கொண்டிருக்க கோணலாய்க் கிடந்த பெஞ்சில் டீக்காக யாரும் காத்திருக்கவில்லை.எங்கோ போய்விட்டார்கள் என்று சித்தப்பா சொன்னார்.உண்மையில் அது எனக்கு சிறிது ஆசுவாசத்தை அளித்தது.சங்குவின் அம்மாவை எதிர்கொள்ளும் சங்கடத்திலிருந்து என்னை அது விடுவித்தது.இப்போது என் நினைவில் அவள் மார்புகள் நினைவில் உள்ள அளவு அவள் முகம் தெளிவாய் நினைவு இல்லை.வழியெங்கும் என் கண்கள் அனிச்சையாய் எதையோ தேடிக் கொண்டே இருந்தன.''என்னடா தேடறே''என்றார் சித்தப்பா.எனக்கு சொல்ல்லத் தெரியவில்லை.இப்போது  புரிகிறது .நான் தேடியது சங்குவின் காணாமல் போன காலை.

சடையைக் கொஞ்ச நாட்கள் தேடிக் கொண்டிருந்தேன்.அதுவும் அவர்களுடன் போய் விட்டதா என்ன..கண்டுபிடிக்கவே முடியவில்லை.பல மாதங்கள் கழித்து ஒருநாள் ரோட்டில்ஆக்ரோசமாய்  சண்டை இட்டுக் கொண்டிருந்த நாய்க் கும்பலில் ஒரு நாயாய் அதைப் பார்த்தேன்.வளர்ந்திருந்தது.ஆனால் உடம்பெல்லாம் அழுக்குடன்  கருப்பு சொறி படர்ந்து வேறு மாதிரி இருந்தது.நான் தள்ளி நின்று ''சடை''என்று மெல்லிய குரலில் அழைத்தேன்.அது ஒரு நொடி திரும்பிப் பார்த்தது.ஒரே ஒரு முறை அதன் கண்களில் என்னைக் கண்டு கொண்டது போல் ஒரு பார்வை வந்தது.அவ்வளவுதான்.மீண்டும் தன் சண்டைக்குத் திரும்பி விட்டது.

சங்குவை நான் மேலோட்டமாய் மறந்துவிட்டேன் என்றாலும் அந்த விபத்து என் ஆழ்மனதில் எங்கோ ஒரு புழுபோல குடைந்து கொண்டேதான் இருந்திருக்கவேண்டும்.அதன்பிறகு எனக்கு அடிக்கடி உடல்நலம் குறைய ஆரம்பித்தது.சில உணவு வகைகள் சாப்பிடவே முடியவில்லை.முக்கியமாக பால் சம்பத்தப் பட்ட எந்த பொருளைப் பார்த்தாலே குமட்டி வாந்தி எடுத்தேன்.இரவுகள் கெட்ட கனவுகள் நிரம்பியவையாய் மாறின.நள்ளிரவில் என்னைத் துரத்தும் பல்வேறு விசயங்களிலிருந்து மயிர் இழையில் தப்பி உடம்பெல்லாம் வியர்வையுடன் தொப்பலாய்  நனைந்து நெஞ்சு அதிர விட்டத்தைப் பார்த்துக் கொண்டே கிடந்தேன்.ஆச்சி திருநெல்வேலி அழைத்துப் போய் புட்டாரத்தி அம்மன்  கோயிலில் பூசாரியிடம் மந்திரித்து நீர்வாங்கி முகத்தில் எறிந்தாள் .அம்மா வந்து சேர்மாதேவி கூட்டிப் போய் தர்க்காவில் ஓதி திருநீறு வாங்கி பூசினாள்.[அந்த ஊர் தர்காவில் திருநீறு கொடுப்பார்கள்]ஆனாலும் அது முழுதாக குணமாக வில்லை.மேகி அத்தை வந்து தான் அதை மாற்றினாள்

இதற்கு நடுவில்தான் மேகி அத்தை வந்தாள்.அவள் வந்த அன்று யாருமே அவளைக் கண்டுகொள்ளவில்லை.ஏன் எனில் அன்றுதான் சுதா பெரிய பெண் ஆகிவிட்டாள்.க்வர்ட்டர்சே அமளிப் பட்டது.சுதாவின் அம்மா வந்து ஆச்சியிடம் 'அத்தே உங்க பேத்தி சமஞ்சுட்டா''என்றாள்.'நாளைக்கு மறுநாள் சடங்கு.''எனறாள்.ஆனால் வா என்று கூப்பிடவில்லை.ஆச்சியிடம் கேட்டதற்கு ''தாலி அறுத்தா கூப்பிட மாட்டா. போகக் கூடாதுலே''என்றாள்.சடங்குன்னா என்ன அதுல என்ன பண்ணுவாங்க என்று கேட்டதற்கு குத்தவைச்சு மஞ்சத்தண்ணீ ஊத்துவாங்க.என்று இரண்டாம் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள்.மறுநாள் காலையில் சித்தப்பாவைப் போகச் சொன்னதற்கு மறுத்துவிட்டார்.''ச்சீ அந்த கும்பல்ல ...''என்றார்.''உன் பேரனை அனுப்பு''என்றார்.நான் போகத் தயாராக இருந்தும் ஆச்சி போலே லூசுப்பையலே எனறாள்.கடைசியில் சித்தப்பாதான் ஒரு சீப்பு செவ்வாழைத் தாரும் தென்காசியில் மணி அய்யர் கடை மிட்டாயுமாய்ப் போய்வந்தார்.போய் வந்து முகம்சிவக்க ''இனிமே இந்த இழவுக்கெலாம் நான் போகவே மாட்டேன்''என்று கத்திக் கொண்டிருந்தார்.யாரோ கிண்டல் செய்திருக்க வேண்டும்..

எங்களை உள்ளே அனுமதிக்கவில்லையே தவிர வெளியே பந்தலில் விளையாடிக் கொண்டிருந்தோம்.ஊரிலிருந்து அவர்கள் உறவினர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.சுதாவைக் காணவே இல்லை.உள்ளேயே இருந்தாள்.'இனிமே உங்க கூட எல்லாம் விளையாட வரமாட்டா''எனறார்கள்.சுஜாவோ எதற்கோ யாருடனோ கோபித்துக் கொண்டு உம்மென்று வெளியிலேயே ஒரு உடைந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.நாங்கள் பேச முயற்சித்ததற்கும் முகம் கொடாமல் போடா பன்னி எனறாள்.ஏன் என்று புரியவில்லை.வழக்கமாய் வினாயகத்திடம் தான் இதற்கெல்லாம் பதில்கள் இருக்கும்.''அது ஒன்னுமில்லேடே.அவளுக்கு முன்னால சுதா பெரிய மனுசி ஆயிட்டா இல்லே.'ஆனால் அவனுக்கும் பெரிய மனுசியாவது என்றாள் அரை குறையாகத்தான் தெரிந்திருந்தது.எங்களுக்கு அவ்வப்போது யாராவது வந்து ஏதாவது தின்னக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.திருச்செந்தூர் சுக்குக் கருப்பட்டி,மனோகரம் எல்லாம் அன்றுதான் சாப்பிட்டேன்.


திடீரென்று எங்களுக்கு சுதாவைப் பார்த்தே ஆகவேண்டும் என்று தோன்றிவிட்டது.பெரிய மனுசி ஆதல் பற்றி பெரிய மனுசி ஆன சுதாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்துவிட்டோம்.''விட மாட்டாங்கடே' என்று விநாயகம் சொல்லிப் பார்த்தான்.''பின்வாசல்ல உக்கார வைச்சிருக்காங்க'' என்று ஒரு பையன் தகவல் சொன்னான்.பின்னால் பாத்ரூம், துவைகல், தாழ்வாரம் அதை ஒட்டி  ஒரு உயரமான  சுற்றுச்  சுவரும் இருந்தது.சுவற்றை ஒட்டியே ஒரு கொடுக்காப்புளி மரம் இருந்தது.அதில் ஏறினால் அவளைப் பார்க்கலாம்.ஆனால் அந்த மரம் அத்தனை வலுவான மரம் அல்ல.'நாம ஏறினா மரம் ஓடிஞ்சுடும்''என்றான் விநாயகம்.உண்மைதான்.அவன் ஏறினால் மரம் மூட்டோடு பிடுங்கிக் கொண்டு வந்தாலும் வந்துவிடும்.ஆகவே இருப்பதிலேயே நோஞ்சானான நான் ஏறி சுதாவுக்கு தகவல் தெரிவிப்பது என்று முடிவு செய்யப் பட்டது.

சுதாவின் வீடு க்வார்ட்டர்சின் கடைசி வீடு.அவள் வீட்டுக்குப் பின்னால் ஒரு க்வார்ட்டர்ஸ் இருந்தது.ஆனால் நெடுநாளாய் அதில் ஆள் இல்லை.அங்கு ஐந்து தலை பாம்பு இருப்பதாக விநாயகம் சொல்லிய கதையில் பயந்து நாங்கள் அங்கு போவதே இல்லை.இதில் வேடிக்கை என்னவெனில் இந்தக் கதையை உற்பத்தி செய்த விநாயகமே கடைசியில் தன் கதையை நம்ப ஆரம்பித்துவிட்டதுதான்..அந்த பாம்பு தினமும் இரவில் வந்து சுதா வீட்டில் வளர்த்த கோழி இடும் முட்டைகளைக் குடித்து விடுவதாக ஒரு பேச்சு உண்டு.நாங்கள் பின்னால் போகும் போது அந்த தகவலை அறிந்திராத அப்பாவிக் கோழிகள் உற்சாகமாக மேய்ந்து கொண்டிருந்தன.எங்களைப் பார்த்ததும் கொக் கொக் என்று கதறிய படியே சிதறி ஓடின.''சத்தம்  போடாதீங்கடா''என்று விநாயகம் கடிந்து கொண்டான்.''பிறகு பாம்பு வந்திடும்''என்று திரும்பி அச்சத்துடன் பார்த்துக் கொண்டான்.''நாங்க இல்லே.கோழில்லா சத்தம் போடுது''என்று ஒருவன் விளக்கம் அளித்தான்.விநாயகம் தூக்கிவிட நான் மரத்தில் ஏறினேன்.

பின் வராண்டாவில் சுதா தனியாய் முழங்காலைக் கட்டியபடி  உட்கார்ந்திருந்தாள்.அவள் முன்னால் ஒரு தண்ணீர் சொம்பும் தட்டும் இருந்தது.அதில் வாழைப் பழங்கள் இருந்தன.கூடவே வெற்றிலை பாக்கு.. அவள் கன்னத்தில் மஞ்சள் பூசியிருந்தது.அவ்வளவுதான்.வேறு வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.எனக்கு சப்பென்று ஆகிவிட்டது.இவ்வளவுதானா..

''ஸ்ஸ்ஸ் ''என்று அவளை அழைத்தேன்.அவள் கண்களைச் சுருக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.
''ஏய்ய் .விழுந்திராத.''
நான் ''இங்கே என்ன பண்றே''என்றேன் ரகசியமாய்.
அவள் சிரித்து ''புல்லு புடுங்கறேன்.போடா.இங்கே எதுக்கு வந்தே''
''நீ பெரிய மனுசி ஆயிட்டியாமே .என்னன்னு பார்க்க வந்தேன்''
அவள் முகம் சிவந்து''போடா''எனறாள்.
நான் இன்னும் கிசுகிசுப்பாய் ''எப்ப விளாட வருவே''
அவள் உதடு பிதுக்கி ''தெரில.இனிமே பாய்ஸ் கூட விளாடக் கூடாதாம்''எனறாள் .''போய்டு.யாரும் வரப் போறாங்க''
''அதெல்லாம் யாரும் வரமாட்டாங்க.''என்று சொல்லிக்  கொண்டிருக்கும் போதே ''சுதா ....''என்று அழைத்துக் கொண்டே யாரோ உள்ளிருந்து வர நான் பதறி கீழ் இறங்கையில் கொப்பு முறிந்து தடேல் என்று கீழே விழுந்தேன்.பசங்கள் எல்லாம் சிதறி ஓடி விட யாரோ ஒருவர் ''ஐயோ''என்று ஓடி வந்து என்னைத் தூக்கி விட்டார்கள்.அதுதான் மேகி என்ற மேக்தலின் அத்தையை நான் முதல் முதலாய்ப் பார்த்தது.

5 comments:

  1. கொஞ்ச கொஞ்சமாய் படிக்க பொறுமை இல்லை ..பெரிய பதிப்பாய் எல்லாவற்றையும் எழுதிவிடுங்கள் :) ....நல்லா இருக்கு

    ReplyDelete
  2. //வேடிக்கை என்னவெனில் இந்தக் கதையை உற்பத்தி செய்த விநாயகமே கடைசியில் தன் கதையை நம்ப ஆரம்பித்துவிட்டதுதான்//

    //அந்த தகவலை அறிந்திராத அப்பாவிக் கோழிகள் உற்சாகமாக மேய்ந்து கொண்டிருந்தன//

    இதான் சின்னச் சின்ன வரிகளில் சொக்குப் பொடி வெக்கிறதுங்குறதா!

    ReplyDelete
  3. தொடர்ந்து வாசிச்சிட்டே வாரேன்... தொடருங்க.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails