Monday, September 13, 2010

உடல் தத்துவம் 6

வயது முதிர்ந்தவர்க்கு மட்டும்!

அப்பாவிடம் இருந்து எனக்குப பற்றிக் கொண்ட வியாதிகளில் இந்த புத்தக வியாதி முக்கியமானது.ஒவ்வொரு மனிதனும் அவனது சிறு வயதில்  தனது தந்தையைப் போல இல்லாமல் இருக்க மிகுந்த முயற்சி செய்கிறான்.ஆனால் மெல்ல மெல்ல அவன் தன் தந்தையைப்  போலவே ஆகிறான் என்று எங்கோ படித்தேன்.நம் ரத்தத்தில் இருந்து நமது மூதாதையர்களைத் தொலைத்துவிடுவது அவ்வளவு எளிதல்ல.உண்மையில் ஹிந்துக்கள் இறந்தவர்க்கு கொடுக்கும் திதிச் சடங்கின் மூல நோக்கம் இதுவே என்று காசிச் சாமியார் ஒருதடவை சொன்னார்.உன் அப்பனின் கோபம், தாத்தனின் காமம், பாட்டியின் அச்சம்,அவள் அம்மையின் கஞ்சத்தனம்,குரூரம் எல்லாம் அவர்களோடு  மண்ணுக்குள் போய்விடவில்லை.உன்னுள் துடித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

 உண்மை என்று சில நேரம் தோன்றியிருக்கிறது.எல்லா நேரங்களிலும் நான் செய்வது என் கட்டுப்  பாட்டில் இல்லை என்று உணர்ந்திருக்கிறேன்.என்னை மீறி எதுவோ என்னைச் செலுத்துகிறது.என்னிலும் பெரிய சக்திகள்.என் சூழலில் நிறைய புத்தகங்கள் இருந்தன.ஆகவே எனக்கும் அந்த கிருமித் தொற்றிக் கொண்டதில் வியப்பு இல்லை.ஆனால் என் புத்தகங்கள் அப்பாவின் புத்தகங்கள் இல்லை.அப்பாவுக்கு புனைவென்பதே பிடிக்காது.கதைப் புத்தகங்கள்  வெள்ளைச் சீனி போல என்பார்..சாப்பிட இனிப்பாக இருக்கும்.ஆனால் உன் புத்தியை அரித்துவிடும் என்பார்.வானத்தில் கட்டிய வீட்டுக்கு வாடகைக்கு வருபவர் யார் என்று கேலியாக சிரிப்பார்.ஒருநாள் நான் அவரது தடித்த விபூதி வாசம் அடிக்கும் கம்பராமாயணத்தை எடுத்து இதையே சிலர் புனைவுதான் என்கிறார்களே என்றதற்கு சிலகாலம் என்னுடன் பேசாது இருந்தார்.
உண்மையில் புத்தகங்களுடன் எனது பரிச்சயம் நாஞ்சிலில்  அவருடன் இருக்கையில் நிகழவில்லை.சில குடும்பக் காரணங்களுக்காக நான் மட்டும் நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் என்ற ஊரில் அப்பாவழிப் பாட்டியுடன்  சிலவருடங்கள் இருக்கநேர்ந்தது.உடன் சித்தப்பாவும் இருந்தார்.சித்தப்பாவுக்கு மணம் ஆயிருக்கவில்லை.பஞ்சாயத்து ஆபிசில் வேலை பார்த்தார்.எனவே க்வார்ட்டர்ஸ் கொடுத்திருந்தார்கள்.
அந்தக் காலத்தில் அரசுக் க்வார்ட்டர்ஸ் எல்லாம் ஒரே மாதிரி மஞ்சள் சாயத்துடன் ஒட்டுக் கூரையுடன் இருக்கும்.எல்லா அரசு அலுவலகங்கலுமே மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும்.இப்போது கலர் கோட் மாறிவிட்டது போல.எல்லா ஆபிஸ்களிலும் மூன்று பேர் படுக்கக் கூடிய மேசைகள் பழுப்பேறிய கோப்புகள் பிள்ளைத்தாச்சிப் பெண் வயிறு போன்ற தலையுடன் மிகத் தயக்கமாய் சுற்றும் மின்விசிறி,தடித்த மரப் பேனாக்கள்,நீல மைக் கூடுகள்,தலையைச் சொரியும் பியூன்கள்,அவர்களது துருப்பிடித்த ஹெர்குலிஸ் சைக்கிள்கள்,மேல் அதிகாரிகளுக்கு அவன் காப்பி வாங்கும் துர்நாற்றம் அடிக்கும் சரியாக கழுவாத ப்ளாஸ்க்குகள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும்.இன்று இவை அத்தனையும்  கால வெள்ளத்தில் யாரோ செட்டைக் கழற்றிப் போய்விட்டது போல் மாறிவிட்டன.

சித்தப்பா இளையவர்,திருமணம் ஆகாதவர் என்பதால் இருப்பதிலேயே மோசமான க்வார்ட்டர்ஸ் கொடுக்கப் பட்டிருந்தது.வீட்டின் முன் வாசலில் ஒரு பெரிய நாவல்மரம் நின்றிருந்தது.சிறுபிள்ளைகள் நாவல் பழத்துக்கு ஏங்கி விட்டெறிந்த கற்கள் எல்லாம் வீட்டுக் கூரை  ஓடுகளைப் பதம் பார்த்திருந்தன.வெயில் காலத்தில் பெரிய பிரச்சினை இல்லை.இடைவெளிகள் வழியே வீட்டுக்குள்ளேயே நுழையும் சூரியன் பல்வேறு கற்பனைகளைக் கொடுத்தது.ஆனால் மழை என்று வந்து விட்டால் வீடே வெள்ளத்தில் மிதந்தது.முழங்கால் அளவு வீட்டுக்குள் ஏறிய தண்ணீரில் மேலிருந்தும்  சலசலவென்ற சத்தத்துடன் ஒழுகும் நீருக்கு தப்பிய ஒரே ஒரு இடத்தில் அந்தக் கால கேம்ப் கட்டிலில் குளிரில் நடுங்கியபடி சித்தப்பாவுடன் ஓட்டிப் படுத்துக் கிடந்தது நினைவிருக்கிறது.

க்வார்ட்டர்சில் என் வயதொத்த சிறுவர் சிறுமியர் நிறைய பேர் இருந்தனர்.எதிர்வீட்டில் சற்று மன வளர்ச்சி குறைந்த அஞ்சு என்ற ஒரு பெண் இருந்தாள்.பதினாலு வயசிலும் என் கூட அஞ்சாங்  கிளாசுக்கு வந்து கொன்டிருந்தாள்.அவள் மனம்தான் வளரவில்லையே தவிர உடல் அந்த வயதுக்கு தக்கவே இருந்தது.ஒருநாள் எட்டாங்கிளாஸ் பசங்கள் அவளைப் பள்ளிக் கழிவறைக்குக் கூட்டிப் போய் பாவாடையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆசிரியை ஒருவர் பார்த்து வீட்டுக்கு சொல்லி அனுப்பி பிரச்சினையாகி அன்றோடு அவள் பள்ளி வாழ்க்கை முடிந்தது.அஞ்சுவுக்கு அம்மா இல்லை.கல்யாணம் ஆன அக்காவுடன் இருந்தாள்.அக்காவின் கணவரை எஞ்சினீயர் என்று சொல்வார்கள்.அந்த க்வார்ட்டர்சின் மன்மதன்.எப்போது ஏற்றிக் கட்டிய கைலியுடன் கரடி மாதிரி மயிர் பொங்கும் மார்பைக் காட்டியபடி தான் வெளியே நிற்பார்.'மாமா'வுக்கு அஞ்சு ரொம்பப் பயப் படுவாள்.'மாமா ரொம்ப மோசம்'என்று அடிக்கடி  சொன்னதின் அர்த்தம் இப்போது புரிகிறது.அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.எனக்கும் அவளைப் பிடிக்கும் என்றாலும் அவள் கொஞ்சுகிறேன் பேர்வழி என்று அடிக்கடி என் தலையைப் பிடித்து அவள் தொடைகளுக்குள் அழுத்திக் கொள்வது பிடிக்காது.''மூச்சு முட்டுதுடி''என்று சத்தம் போட்டால் அழுவாள்.

வலது பக்க வீட்டில் விநாயகம் என்று சற்று பெரிய பையன் இருந்தான்.பேருக்கு ஏற்றவாறு பெரிய்ய பையனே.ஒரு இடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் போது யானை ஒன்று போவது போலவே நகர்வான்.எனக்கு சதுரங்கம்,கேரம்போர்ட் எல்லாம் கற்றுக் கொடுத்தான்.ஆனால் நடப்பது போலவே எல்லாவற்றிலும் பயங்கர ஸ்லோ.நானோ எல்லாவற்றிலும் மிகு வேகம்.அவனுடன் செஸ் விளையாடுவது ஒரு துன்பியல் அனுபவம்.முதல் மூவுக்கே அரை மணிநேரம் யோசிப்பவனுடன் எப்படி விளையாடுவது..நான் ''அண்ணே..விளையாடு அண்ணே''என்று கெஞ்சிக் கொண்டே இருப்பேன்.அவன் ''இருடா..''என்று கொண்டே இருப்பான்.பெரும்பாலும் எங்கள் விளையாட்டுகள் முடிவுக்கு வந்ததே இல்லை.சுமார் ஐந்து மூவ் அவன் யோசிப்பதற்குள் அவன் அப்பா வந்துவிடுவார்.''ஏலே படிக்கலியா''என்றவுடன் 'நாளைக்கு விளையாடுவோம்''என்று போய் விடுவான்.நாளைக்கும் அதே கதைதான்.அவன் வீட்டில்தான் எனது புதின வாசிப்பு தொடங்கியது.இரத்தினபாலா என்ற புத்தகம் அவர்கள் வீட்டில் மாதாமாதம் வாங்குவார்கள்.மாதத்தில் முதல் தேதி வரும் அது.ஆனால் முந்தினமாதம் பத்தாம் தேதியில் இருந்தே வந்துடுச்சா வந்திடுச்சா என்று நச்சரித்து அவர்கள் என்னைக் கண்டாலே பீதி கொள்ள ஆரம்பித்தார்கள்.

இடது பக்க்கவீட்டில் சுஜா சுதா என்று சற்று பெரிய பெண்கள் இருந்தார்கள்.இவர்களே  முதன் முதலாக என்னை நூலகம் அழைத்துச் சென்றவர்கள்.சற்று தொலைவில் இருந்த நூலகத்திற்குப் போவதற்கு நான் ஒரு ஆண்பிள்ளை என்று என்னை துணைக்கு அழைத்துப் போவார்கள்.சுஜாவுக்கும் சுதாவுக்கும் அடிக்கடி சண்டை வரும்.என்னை யார் அழைத்துச் செல்வதென்று தகராறு வரும்.இருவரும் ஒன்று சேர்ந்து எங்கும் போக மாட்டார்கள்.சுஜாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவள் எப்போதும் கிசுகிசுப்பாகவே பேசுவாள்.அவளுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள்.நாங்கள் எப்போது வெளியே போனாலும் நடுவழியில் சேர்ந்து கொண்டு என்னுடன் பேசுவது போல சுஜாவுடன் பேசிக் கொண்டே வருவார்கள்.சுஜா பேசவே மாட்டாள்.ஆனால்  அப்போது அவள் முகத்தில் தெரியும் அந்த சிகப்பை கண்களின் ஜொலிப்பை வேறெப்போதும் காணவே முடியாது.இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று ஒவ்வொரு தடவையும் சொல்வாள்.சுதாவை எனக்குப் பிடிக்காது.ஏன் எனில் அவள் பாவாடையில்  எப்போதும் லேசாக ஒரு மூத்திரவாடை வீசிக் கொண்டே இருக்கும்.ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளமாட்டேன்.காரணம் அவள் ஏதாவது எனக்கு சாப்பிடத் தந்துகொண்டே இருப்பாள்.என் வாழ்க்கையில் முட்டையை அறிமுகப் படுத்தியவள் அவள்தான்.என் ஆச்சி தீவிர சைவமானதால் அதை கத்திரிப் பழம் என்று சொல்லிவிட்டாள் .எனக்கு அந்தப் பழத்தின் ருசி ரொம்ப பிடித்துப் போய் ஆச்சியிடம் வாங்கித்தர சொல்லி அடிக்கடி அடம் பிடித்தேன்.

இவர்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுக்குத்தான் மேகி அத்தை குடி  வந்தார்.நான் பார்த்த முதல் பெண் உடல்.ஒரு வேளை என் முதல் காதலாக கூட இருக்கலாம்.

7 comments:

 1. ஏ கிளாஸ் ... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அப்பாதுரை சார் உங்களைப் பற்றி வெகுவாக சிலாகித்து எழுதியிருந்தார்; அது உண்மை தான் தோழர் போகன்! ... சங்கப் பாடல் ஒன்று காம செயல்பாடுகளை புற்களை நக்கி நக்கி உண்ண முயலும் பல்லில்லா பசுவிற்கு உவமையாக கூறியது ஏனோ ஞாபகத்திற்கு வருகின்றது ... தத்துவங்கள் தொடரட்டும்!

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. இம்மாதிரி தருணங்களை கடந்து செல்லாதவர்கள் சிலரே ..
  மிக அழகாய் வார்த்தையில் வடிக்கத் தெரிந்தவர்களோ மிகச் சிலரே..
  nostalgic நினைவலைகள்.

  ReplyDelete
 5. உடலைக் கூறு போடும் தத்துவங்கள். போகன் அந்த ம.வ.குன்றிய குழந்தை அஞ்சு மனதை பிடித்து உலுக்குகிறது. ஏ கிளாஸ் நடை. வாழ்த்துக்கள்.

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  ReplyDelete
 6. போகன்ஜி! பிடியுங்கள் மோகன்ஜியின் வாழ்த்துக்களை! சரளமான நடையில் சுகமான எழுத்து. பரிந்துரைத்த நண்பர் அப்பாதுரை சாருக்கு நன்றி.

  ReplyDelete
 7. நன்றி சரவணன் சார்.நியோ ஆர் வி எஸ், மோகன் ஜி ..இது உண்மையில் நடைப் பயிற்சியே..

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails