Thursday, August 26, 2010

உடல் தத்துவம் 4

எச்சரிக்கை! வயது வந்தவர்க்கு மட்டும்!

 நாங்கள் பரம்பரையாக சைவக் குடும்பம்.பூண்டு வெங்காயம் கூட முக்கிய நாட்களில் விலக்கப் பட்டிருந்தது.சோம்பு,[இலவங்கப் ]பட்டை போன்றவற்றை நான் காலேஜ் போகும்வரை அறிந்ததே இல்லை.முதன் முறையாக சோம்பு போட்ட பிரியாணி சாப்பிட்டுவிட்டு கடும் தலைவலியில் அவதிப் பட்டேன்.அந்த ஊரில் இருந்த சொற்ப சைவ  வேளாளரில் எங்கள் குடும்பமும் ஒன்று.ராஜராஜ சோழன்  குமரிக்கும் கேரளத்துக்கும் வந்தபோது சைவத்தையும் அதை பாதுகாப்பதற்காக சைவ வேளாளரான எங்களையும் கொண்டுவந்தான் என்பார் அப்பா.சுற்றிலும் இருக்கும் மக்கவழி மருமக்கவழி வெள்ளாளர்களுடன் ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு உறவு இருந்தது.அவர்களுக்கு எங்களைப் பற்றியும் எங்களுக்கு அவர்களைப் பற்றியும் பரஸ்பரம் ஒரு எள்ளல் இருந்தது.அவர்கள் வீட்டு விசேடங்கள் அனைத்துக்கும் போவோம்.மொய் வைப்போம்.பந்தி வேளையில் இதோ வரேன் மக்கா என்று ஒழுகி வந்துவிடுவோம்.போகும் போதே சொல்லி அனுப்புவார்கள்.'லே போறது சரி சாப்பாட்டுக்கு உட்காந்திராதே..'அவர்கள்வருவார்கள். சாப்பிடுவார்கள் ஆனால் 'என்னடே ஆணைக்கு அருகம்புல்லில  சொரிஞ்சாப்பில அவைய்ன்களோட ஒரு சாப்பாடு...'என்று சலித்துக்  கொள்வார்கள்.

ஆனால் உடல் மாற மாற ருசி மாறியது.முதல் முதலாக நாகர்கோயிலில் மணிக் கூண்டருகில் ஒரு புரோட்டாக்கடையில் புரோட்டா சால்னா சாப்பிட்டு விக்கித்துப் போய் அமர்ந்திருந்தேன்.இப்படி ஒரு சுவையான பொருளை ஏன் தடை பண்ணி வைத்திருக்கிறார்கள்!என்று பேசிக் கொண்டே சுசீந்திரம் சாலையில் நடந்தே வீட்டுக்குப் போனோம்.பஸ் காசைத் தான் புரோட்டாவில் விட்டுவிட்டோமே.'லே அதில ரசவடை கணக்கா ஒண்னு கிடந்ததே அது என்னடே'என்றேன் புரோட்டாவை அறிமுகப் படுத்திய நண்பனிடம்.அவன் சற்று தயங்கி 'உங்க வீட்டுல சொல்லிறாதே.ஆட்டுக் குடல் 'என்றான்.நான் கொஞ்ச நேரம் கடவுள் என்னை வானத்திலிருந்து இடி கொண்டு தாக்கக் காத்திருந்தேன். ஆனால் அவ்விதம் எதுவும் நிகழவில்லை.அன்று வானம் மிகத் துல்லியமாக இருந்தது.பழையாற்றின் கரையிலிருந்து குளிர்ந்த காற்று வீசியது.ஏனோ ரொம்ப சந்தோசமாக இருந்தது.ஆட்டின் குடலுக்கு  உள்ள குணம் அது என்று ரொம்ப நாளே முடிச்சுப் போட்டு நம்பிக் கொண்டிருந்தேன்.அதன் பிறகு எப்போது மனக் கிலேசமாக இருந்தாலும் நாகர்கோயில் போய் ஆட்டுக் குடல் சாப்பிடுவேன்.

நாங்கள் ஊருக்கு நடந்து போவதற்குள் நான் புரோட்டாக் கடையில் ஒரு நாடார் பையனுடன் 'தென்பட்ட' செய்தி பஸ் ஏறி வீட்டுக்குப் போய்விட்டது.போகும்போது வீடே மயான அமைதியாய் இருந்தது.வழக்கமாய் வந்த உடனே ஏதாவது குடிக்கறியா என்று கேட்கும் அம்மா கிணற்றடியில் மிகத் தீவிரமாய் ஒரு வெண்கல உருளியை விளக்கோ விளக்கென்று விளக்கிக் கொண்டிருந்தாள்.என்னை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை.அப்பா சாய்வுநாற்காலியில் அமர்ந்தபடி  கண்களை இடுக்கி எதையோ படித்துக் கொண்டிருந்தார்.நான் ஏதோ அந்நிய வீட்டுக்குள் நுழைபவன் போலதான் புகுந்தேன்.ஆச்சி கேடராக்ட் கண்ணாடி வழியே பெரிதாகத் தெரியும் கண்களால் என்னை வாய் பிளந்து பார்த்தாள்.நான்  சிரிக்க முயன்று 'என்ன ஆச்சி'என்றேன்.அவள் 'ஏலே.குடியைக் கெடுத்தியே' என்றாள்.எனக்கு புரிந்துவிட்டது.
அதற்குள் புறவாசலில் அம்மா பாத்திரங்களை எறியும் சத்தம் கேட்டது.'எளவு மனுஷன் சொன்னா கேட்கறாரா.நம்ம ஊர்ப் பக்கம் போலாம்னு.இந்த வெருவாகெட்ட ஊரில எந்த சிறுக்கி இருக்காளோ தெரியலியே.இங்கேயே மோப்பம் பிடிச்சு சாவுதாரு.இப்ப பயலும் நாசமாப் போக ஆரம்பிச்சாச்சு.காந்திமதி அம்மா.கேட்க ஆள் இல்லியே''
அம்மாவின் ஊர் பாண்டிநாட்டில் சேரன்மாதேவி.இங்கு அப்பாவுக்கு தலை வணங்கி வந்த நாளில் இருந்து சின்ன சண்டை வந்தாலும் ஊருக்குப் போவோம் என்ற பல்லவியை ஆரம்பித்துவிடுவாள்.சேரன்மாதேவி தாமிரபரணிக் கரையில் உள்ள நல்ல ஊர்தான்.வயலும் வரப்புமாய் நாஞ்சில் நாடு மாதிரிதான் இருக்கும்.சோழர்காலத்துப் பழங்கோயில்கள் நிறைய உண்டு. பாண்டியின்  காஞ்சிபுரம் என்று சொல்வார்கள். ஒருநாள் ஏதோ ஒரு விசேடத்துக்கு  போனபோது 'அம்மை சொன்னத கேட்டா என்ன ..ஊரு நல்ல ஊரு 'என்றதற்கு 'ஊரு நல்ல ஊருதான் ஆனா உன் அம்மைக்க ஊருல்லா..அதான் பயமாருக்கு..இங்க வந்தா என்னைத் துவைச்சி தொங்கல்ல போட்டிறமட்டாளா' என்றார்.
அம்மா அப்பாவுடன் எங்கள் பார்வையில் நேரடியாக பேசவே மாட்டாள்.கோபம் வந்தால் கூட.அப்பாவுக்கு கோபம்வந்தால் கைகால் எல்லாம் வலிப்பு வந்தவன் போல உதறும்.ஒன்று யாரையாவது அடிப்பார்.அல்லது சாய்வு நாற்காலியில் சாய்ந்து இப்போது இருப்பது போல ஏதோ ஒரு புத்தகத்தில் ஏதோ ஒரு எழுத்தை தேடிக் கொண்டிருப்பார்.அம்மாவுக்கு கோபம் வந்தால் வீடே சுத்தமாகிவிடும்.உத்திரத்தில் மக்கிப் போய்விட்ட பாத்திரம் வரைக்கும் எடுத்து துலக்குவாள்.ஏற்கனவே பெருக்கியவீட்டை மறுபடி மறுபடி பெருக்குவாள்.அவள் பாத்திரத்தை விட்டுவிட்டு இப்போது  விளக்குமாறுடன் வீட்டுக்குள் வந்து 'தள்ளு .பெருக்கணும்.'என்றாள்.நான் கடைசி முயற்சியாக 'எனக்கு பசிக்குது.சோறு போடறியா'என்றேன்.அம்மா சட்டென்று திரும்பி 'ஏன் ஆடு தின்னு அடங்கலியா''என்றாள்.நான் அப்படியே சாய்ந்து தரையில் உட்கார்ந்தேன்.அப்பா எழுந்து உள்ளே வந்தார்.கையிலிருந்த புத்தகத்தை ஏன் அருகில்  மடித்து வைத்து 'இதைப் படி'
நான் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்.காந்தியின் சத்தியசோதனை. அவர் ஆடு தின்று வயிற்றுக்குள் சத்தம் போடுவதுபோல் உணர்ந்த கட்டத்தில் மடித்து வைத்திருந்தார்.

மறுநாள் கல்லூரி விட்டு வரும்போது அதே நண்பன் 'என்னடே .இன்னைக்கு குடல் வேணாமா''என்றான்.நான் ''நா வரலை''என்றேன்.அவன்  பெரிதும் ஏமாற்றம் அடைந்தது தெரிந்தது.ஏன் எனில் அவனிடம் காசு கிடையாது.''நான் வெய்ட் பண்றேன்.நீ போய் பார்சல் வாங்கிட்டுவா''என்றேன்.

இன்று அந்த இடத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டேன்.சாதாரணமாக ஊன் சாப்பிடுபவர் கூட சாப்பிடாத மிருகங்களைப் புசித்திருக்கிறேன்.ஆண்மைக்கு நல்லது என்று ஒரு தடவை வாழை இலையில் சுற்றி காளையின் விதைகளைக் கொடுத்தார்கள்.அதைக் கூட சாப்பிட்டிருக்கிறேன்.நாடோடி வாழ்வில் மரக்கறி உணவாளனாய் இருப்பது எளிதல்ல.

கொஞ்சம் கொஞ்சமாக நான் மாமிசத்தின் ருசிக்கு அடிமை ஆனேன்.விதம் விதமாய் புலால் உணவுகளை தேடித் தேடி சாப்பிட ஆரம்பித்தேன்.மாமிசம் சாப்பிட சாப்பிட என் உடல் மனம் புத்தி எல்லாம் மாறுவது உணர்ந்தேன்.ஆனால் மாட்டுமாமிசம் மட்டும் ரொம்ப நாள் சாப்பிடவில்லை.அந்த எல்லைக் கோட்டைத் தாண்ட ஏனோ ஒரு தயக்கம் இருந்தது.அப்பா  காந்தி வேலைக்கு ஆகவில்லை என்று உணர்ந்து சிவனாந்தா விவேகானந்தா சிவசைலம் சாமியாரின் மரக்கறியின் உன்னதம் என்று புதிது புதிதாக புத்தகங்கள் கொடுத்துப் பார்த்தார்.நான் அதெல்லாம் படித்துவிட்டு தான் இவற்றை எல்லாம் சாபஈட்டுக் கொண்டிருந்தேன்.மாமிசம் கொடுக்கிற தினவு எனக்குப் பிடித்திருந்தது.அந்த தினவு கொடுக்கிற காமம்..அதுவும் பிடித்திருந்தது.
உண்மையில் மாமிசத்தின் மீதுள்ள ஏன் ருசியை வைத்துதான் முருகேஸ்வரி அத்தை என்னை மடக்கினாள்
'என்னடே.கறி திங்க ஆரம்பிச்சிட்டியாமே''என்றாள் ஒருநாள்.''உங்க அம்மை சொல்லி ஆத்தாமைப் படறா''.பிறகு என்னை சாய்வாய்ப் பார்த்துக் கொண்டே ''நாளைக்கு வீட்டுக்கு வா.உனக்கு நீ பார்க்காத கறி ஒண்னு காமிக்கேன்.''என்றாள்.
நான் கேலியாய்  ''அதென்ன கறி அது.ஆனைக் கறியைத்தவிர எல்லா கறியும் சாப்பிட்டாச்சு''
அவள் என்னை ஊடுருவிப் பார்த்து ஏறக் குறைய இந்த சாமியார் சொன்னது போல தான் சொன்னாள்.''இது மனுசக் கறி பார்த்துக்க.ஒருதடவை தின்னா விடவே மாட்டே''

2 comments:

  1. உடலும் அறிவும் வளர வளர சற்று வட்டத்துக்கு வெளியே சிந்திக்கவும் சந்திக்கவும் தோன்றுவது இயற்கை தான். சில கோடுகள் தாண்டப்படவே இடப்படுகின்றன என்பது என் கருத்து.

    ReplyDelete
  2. அருமை. யதார்த்தமான கூற்று

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails