Friday, August 27, 2010

உடல் தத்துவம் 5

எச்சரிக்கை!வயது வந்தவர்க்கு மட்டும்!
 அப்பா நாகர்கோயிலில் ஒரு தனியார்வங்கியில் குமாஸ்தாவாக இருந்தார்.அதனால் அவருக்கு தனி மரியாதை இருந்தது.ஊரில் நிறைய பெருக்கு நிலத்தையோ நகையையோ அடகு வைக்க வேண்டி இருந்தது.பின்னால் இந்திராகாந்தி வந்து வங்கிகளை அரசுடமை ஆக்கியபிறகு இன்னும் மரியாதை கூடியது.அப்பா சாதியைத் தோள் மீது தூக்கித் திரிந்தவர் அல்ல.ஆனால் சருமத்துக்கு அடியில் இருக்கும் இன்னொரு தோல் போல அது நுட்பமாக  துடித்துக் கொண்டிருந்தது.ஆனால் வீட்டுப் பெண்டுகளைப் போல அவரால் குழப்பம் அற்று தெளிவாக இருக்க முடியவில்லை.காரணம் அன்றைய சூழ்நிலை.அரசியல்.அவருக்குள் தெரியாமல் வந்து படிந்துவிட்ட புத்தகம் வாசிக்கிற பழக்கம்.பெரியார் பிள்ளையாரை செருப்பால் அடித்த செய்தி கேட்டு இரண்டு நாட்கள் உடம்புக்கு சரியில்லாமல் ஆகிவிட்டது என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.அம்மா பெரியாரை 'நீக்க்கம்புல போறவன் என்ன பண்ணின்னா இவருக்கு என்ன .பிள்ளளையார செருப்பால அடிச்சா பிள்ளையாரு பாத்துக்குவாரு.இவரு என்னத்துக்கு இந்த துடி துடி துடிக்காரு''என்று எளிதாக கடந்துபோயவிட்டார்.அப்பாவால் அப்படி இருக்க முடியவில்ல்லை.'அது அப்படி நிசாரமா சொல்ல முடியாதுல்லா..'என்று புலம்பிக் கொண்டிருந்தார்.அம்மா சொன்னது போல பெரியாருக்கு  பிள்ளையார் ஏதாவது ரியாக்ட் செய்வார் என்று காத்திருந்தார்.அப்படி ஏதும் நிகழாததால் தானே பிள்ளையாரின் சார்பாக எதிர்வினை புரிய தீர்மானித்தார்.திருநெல்வேலி போய் பெரியாரின் புத்தகங்கள் ஒவ்வொன்றாய் வாங்கி வந்து இரவெல்லாம் விளக்கெரித்து படித்தார்.அம்மா நடு இரவுகளில் புறவாசலுக்குப் போகும்போதெல்லாம் பெரியாருடன் யுத்தம் செய்துகொண்டிருந்த அப்பாவைப் பார்த்து 'காந்திமதி அம்மா..இந்த மனுஷனுக்கு எப்ப எங்கே இளகும்னு தெரியலியே.பொம்பளைக் கிறுக்கு போயி இப்ப புஸ்தகக் கிறுக்குல்லா பிடிச்சிருக்கு''

பிரச்சினை சற்று தீவிரமானது என்று அது ஆச்சியின் செவிட்டுக் காதுகள் வரை போன பின்பே  உறைத்தது.அவள் தனது வெற்றிலை அரையலை  நிறுத்திவிட்டு பூ உலகுக்கு தன் பார்வையை திருப்பிய அரிதான சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று.ஒருநாள் ''ஏலே..உடம்புக்கு எதுவும் குறைவு உண்டுமா''என்று ஆரம்பித்தாள்.அப்பா பதில் சொல்லவில்லை.அவர் என்றைக்கும் அவளுக்கு பதில் சொன்னதே இல்லை.ஆனால் அவள் சொல்வதை  தீவிரமாக பரிசீலிக்கத் தவறுவதும் இல்லை.
''உனக்கு வல்லநாட்டு அய்யரைத் தெரியுமா''
''......''
''நல்ல மனுஷன் பார்த்துக்க. வெள்ளைக்காரன் சர்க்காரில கரம் [வரி]பிரிக்கிற சோளில இருந்தாரு.சொர்ணம் மாதிரி ஒரு பொண்டாட்டி.இரண்டு பொட்டப் புள்ளைங்க வேற.உண்டும் பார்த்துக்க.அதுல ஒருத்தி மூணாங்கிளாஸ் வரைக்கு ஏன் கூட படிச்சா..கொலுசுன்னு ஒன்னை நாங்க எல்லாம் அப்பத்தான்பாத்தோம்.அதே மாதிரி ஒண்னு வேணுமின்னு அடம் பிடிச்சு அடி வாங்கினேன்.அப்பா அதெல்லாம் குடும்பத்தில உள்ளவங்க போடக் கூடாதுன்னு சொல்லிட்டார்.இரண்டு மூணு தடவை வீட்டுக்கு போய் இருக்கேன் பார்த்துக்க. வீடுன்னா ஆள் இருக்கறதே தெரியாது பார்த்துக்க.சத்தமே தெரியாது.ஆனா யார் என்ன பண்ணா தெரியாது.அவர் வேலைக்குப் போகாம வீட்டிலய உட்காந்து என்னென்னவோ புத்தகம் படிக்க ஆரம்பிச்சுடாரு.வெள்ளைக்காரன் கிட்டே இருந்து நோட்டிஸ் மேல நோட்டிஸ் வருது.வேலைக்கு வரியா இல்லையான்னு.அய்யரு அசையலை.பொண்டாட்டிக்காரி யான ஒரே அழுகை.அப்பாக்கிட்ட வந்து நீங்க கொஞ்சம் கேளுங்கன்னு சொல்றா..அப்பாவுக்கு கொஞ்சம் வைத்தியமும் தெரியும் பார்த்துக்க.வீட்டுக்கு போறப்ப அய்யரு மாடி ஏறி நட்சத்திரத்தோட பேசிட்டு இருந்தது பார்த்தாரா.. மூஞ்சி பாத்ததுமே சட்டுன்னு சொல்லிட்டாரு..இது வெள்ளைக்கார வியாதிம்மா..யாரோ ஒரு பரங்கி கிட்டே இருந்து ஒட்டியிருக்கு..நம்ம கைக்கு நிக்காது..தின்னவேலிக்கு கூட்டிட்டுப் போயிருங்க ன்னு சொல்லிட்டாரு..அப்போரம் அங்கெல்லாம் போய்ப் பார்த்ததும் தீரலே...அந்தக் குடும்பமே செரழிஞ்சு போச்சு..''எனறாள்.''எங்க அப்பா எப்பவும் சொல்வாரு.எல்ல்லா பண்டமும் எல்லாருக்கும் சீரணிக்காது.சீரணிக்காதது தின்னு கழியறதவிட பட்டினியாக் கிடந்துடலாம்.என்ன சொல்றே''
அப்பா எதுவும் சொல்லவில்லை.ஆனால் அம்மாவும்ஆச்சியும் செய்யமுடியாத அந்த  காரியத்தை ஒரு அய்யர் ஆத்து மாமி செய்தாள்.
பெரியார் அப்பாவின் மண்டைக்குள் புகுந்துகொண்டு அப்பாவை ஏறக்குறைய ஒரு காதலி போல அலைக் கழித்தார்.அப்பா எப்போதும் அவர் புத்தகங்களுடனே திரிந்தார்.கூடவே ஒரு கோடு போட்ட நோட்டுப் புத்தகமும் ...அது முழுக்க பெரியாருக்கான பதில்களைத் தோன்றத் தோன்ற எழுதிவந்தார்.எப்போதும் சவர சுத்தமான முகத்தில் இப்போது முடிமுட்கள் அவ்வப்போது தலைகாட்ட ஆரம்பித்தன.நடு இரவுகளில் திடீர் திடீர் என்று அவர் எழுப்பும் ஆஹா என்ற கொலம்பஸ் ஒலிகள் திகிலை ஊட்டின.சரியாக தூக்கம் இல்லாததால் எப்போதும் அவர் முகத்தில் ஒரு பித்துக் களை இருந்தது. தெரிந்த ஆட்களை தெரியாதது போல் பார்க்கவும் தெரியாத ஆட்களை சௌக்கியமா இருக்கிகளா என்று குசலம் விசாரிக்கவும் செய்தார்.ஒரு நாள் வழக்கம் போல சவரித்துத்  தலை முழுகி பட்டை அடித்து  நாகர்கோயிலுக்கு ஆபிசுக்குப் போய்விட்டு 'இன்னைக்கு ஞாயித்துக் கிழமையாம்லே'என்று திரும்பிவந்தார்.
பெரியாருக்கான தனது பதில்க் கேள்விகளை எல்லாம் அவர் அன்று நாகர்கோயிலில் இருந்து வந்த நாஞ்சில்நேசன் என்ற பத்திரிக்கைக்கு அனுப்பிவைத்தார்.மொத்தம் நூறு பேரே படிக்கக் கூடிய [அதில் பாதி  பேர் இலவசப் பிரதி] அந்தப் பத்திரிகையில் அதற்கு முப்பத்தி ஏழு எதிர்வினைகள் வந்தன. அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் திக்கித்துப் போனார்.முப்பத்தி ஏழில் குளச்சல் தேவராஜ் என்பவர் அப்பாவைக் கடுமையாக மறுத்து எழுதி இருந்தார்.அவருக்கும் அப்பாவுக்கும் ஒரு ஆறுமாதம் மாபெரும் சொற்போர் பத்திரிக்கை மூலமாக நடந்தது.பத்திரிக்கையின் சுற்று நூற்றி ஐம்பதாக உயர்ந்தது.

அப்பாவைப் பெரியாரை முழுதாக எதிர்ப்பதில் ஒரு சிரமம் இருந்தது.அப்பாவுக்கும் பார்ப்பனர்கள் மீது ஒரு வெறுப்பு உள்ளூர இருந்தது.ஆனால் பெரியாருக்கு அந்த இடத்தை விட்டுக் கொடுத்தால் அடுத்து நமது மடியில்தான் கைவைப்பார் என்ற அச்சமும் இருந்தது. இன்னுமொரு விஷயம் அவருக்கு கவலை அளித்தது.நாகர்கோயில்  மெல்ல மெல்ல கிறித்துவர்களின் நகரமாக மாறுவதை அவர் கவனித்துவந்தார்.அவரது நெற்றியில் போடும் திருநீற்றுப் பட்டை அதன் மரியாதையை இழந்து  ஒரு கேலிப்பொருளாய் மாறுவதை அவர் உணர்ந்தார்.'என்னடே நெத்திக்கு வெள்ளை அடிச்சுகிட்டு திரியுதாரு.வட்டா'என்ற வசனங்கள் அவர் காதில் விழுந்தன.ஆவிக்குரிய நற்செய்தியாளர்கள் அவர் பால் வெகுவாய் ஈர்க்கப் பட்டனர்.ஒவ்வொரு நாளும் அவர் கையில் திணிக்கப் பட்ட இலவச விவிலியங்களும் பாவிகள் மனம் திரும்புவதற்கான வழிகாட்டிக் கையேடுகளும் பெருகின.'இதையெல்லாம் ஏன் வாங்குறாரு இவரு.வட்டா''என்று அம்மையாலும் வசை பாடப்பெற்றார்.இதற்கும் பெரியாரின் கருத்துக்களின் எழுச்சிக்கும் ஏதோ ஒரு தொடர்பை அவர் உணர்ந்தார்.
அப்பாவிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது.ஒருவேளை அவரது குமாஸ்தா புத்தியாக அது இருக்கலாம்.எழுத்தில் வந்த எதையும் அவரால் புறக்கணிக்க முடியாது.எவ்வளவு பெரிய பொய் ஆனாலும் புத்தகத்தில் வந்தால் அது சத்தியமாக மாறிவிடுகிறது என்று அவர் உள்ளூர நம்பினார்.அது சரஸ்வதி சொருபம்லா என்பார்.ஆகவே அவரிடம் வந்துசேர்ந்த அத்தனை சுவிஷேச இலக்கியத்தையும் ஒரு தடவையாவது படிக்க முயற்சித்தார்.நீங்கள் பிசாசை வணங்குகிறீர்களா என்ற துண்டுப் பிரசுரம் படித்துவிட்டு முத்தாரம்மன் கோயிலுக்கு நடு இரவில் கிளம்பிப் போய்  அம்மனையே ரொம்ப நேரம் வெறித்துக் கொண்டிருந்தார்.'உங்கப்பனுக்கு நிச்சயம் வட்டுதாம்லே''எனறாள் அம்மை.
மெல்ல ஊரினுள் அவரைப் போல படிக்கும் கூட்டம் ஒன்று அவரைச் சுற்றி உருவாகியது.பெரியாரைப் பற்றியும் நாஞ்சில் நேசனில் அப்பாவின் கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகள் பற்றியும் முத்தாரம்மன் கோயில் திண்டில் வட்டமாய்  அமர்ந்து விவாதிக்கப் பட்டது.ரொம்ப நாள் காரசார விவாதத்தின் பின்பு குழு இரண்டு முடிவுகளை எடுத்தது.ஒன்று பெரியார் சொல்வது போல ஹிந்து மதம் மூடநம்பிக்கைகளின் மூட்டை அல்ல.ஆனால் அவர் பார்ப்பனனைப் பற்றி சொல்வதெல்லாம் சரிதான்.அவன்தான் ஹிந்துமதத்தை இந்த தீன நிலைக்கு தள்ளியவன்.ஆகவே அவனை எதிர்க்கவேண்டும்.

இந்த முடிவின் உடனடி விளைவாக கோயிலில் பத்து வருசமாக பூசை பண்ணிக் கொண்டிருந்த ஐயரை நீக்கி விட்டு பழையபடி ஓதுவார் வகையராவையே வைத்து பூசை பண்ணுவது என்று தீர்மானம் பண்ணப் பட்டது.இரவு பூசையை முடித்துவிட்டு சாவகாசமாக ஏதோ  பொழுதுபோக்கு என்ற மட்டிலே அறிந்திருந்த அய்யர் அதை எதிர்பார்க்கவில்லை.தெரிந்திருந்தாலும் அவர் பக்க நியாயத்தை  வாதாடும் திறமை அவருக்கில்லை.உண்மையில் அவருக்கு அம்மே நமசிவாயா நாராயணா என்ற பதங்களைத் தவிர வேறு மந்திரங்கள் எதுவும் தெரியாது என்ற புரளி உண்டு.''அதுதான் நம்ம ஊர் .....னுக்கு  தெரியுமே''என்று அப்பாவிடம் ஒரு பெரும்தலை சொன்னார்.உண்மையில் அப்பாவே அதை எதிர் பார்க்கவில்லை.ஆனால் சரித்திரத்தை எப்படி திருப்பமுடியும்?
அய்யர் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்.அப்பா சரித்திரம் என்ற தேர் நகர்வதை தான் ஒருவனால்  நிறுத்தமுடியாது என்றும் சில வரலாற்றுப் பிழைகள் சரிசெய்யப் பட்டே ஆகவேண்டும் என்றும் இதில் தனிப்பட்ட ஆசைகளுக்கு இடமில்லை என்று சொன்ன எதுவும் அய்யருக்கு புரியவில்லை.''சரியாச் சொன்னேள்.கோயில்னா ஒரு தேர் வேணாமோ''என்ற ரீதியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.அப்பா அவருக்குப் பதிலாய் பணகுடியில் இருந்து ஒரு ஓதுவாரையும் தேடிக் கண்டுபிடித்துவிட்ட செய்தி தெரிந்ததில் இருந்து அவர் முகம் பார்க்க முடியவில்லை.
இப்போது அப்பாவின் குழுவில் இருந்த சிலருக்கே அய்யர் மேல் பரிதாபம் தோன்றிவிட்டது.'இருக்கட்டும் விடறே..அவருக்கு இத விட்ட வேற ஒரு எழவும் தெரியாது'தினம் அதிகாலையில்  பெண்டுகள் சொம்புடன் ஒதுங்கும் நேரத்திலேயே வீட்டுத் திண்ணையில் வந்து காத்திருக்கும் ஐயரால் சங்கடம் அடைந்து அம்மாவே ''இருக்கட்டுமே எளவு..ஒதுவார்தான் வேணும்னு ஆத்தாள் கேட்டாளா..புள்ளகுட்டி வேற இருக்கு..எங்கியாவது கடல்ல பாஞ்சிரப் போறாரு''என்று சொல்லிப் பார்த்தாள்.
அப்பா அசையவில்ல்லை.அவரைப் பொறுத்தவரை அந்த செய்கைதான் பெரியாருக்கான அவரது பதில்.இல்லாவிடில் அவர் வேறு ஒரு பதில் தேட வேண்டும்.
மெல்ல ஊரெங்கும் அவ்விசயம் ஒரு பேச்சலையை உருவாக்கியது.ஊர் இரண்டாய்ப் பிரிந்து அப்பாவிடம் தனது கருத்தை தெரிவிக்க வந்துகொண்டே இருந்தது.அய்யர் பூசையை எல்லாம் விட்டுவிட்டு ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினார்.கடைசியில் ஓதுவாரும் தன் குடும்பத்துடன் வந்து இறங்கிவிட்டார்.அவருக்கு ஒரு வீடும் ஒதுக்கப் பட்டது.அன்றிரவு அப்பா வெகுநேரம் கழித்தே வீடு திரும்பினார்.அய்யர் கடைசி முயற்சியாக நெடுநேரம் காத்திருந்துவிட்டு போனார்.போகும்போது அவர் நடையைக் காணச் சகியாது அம்மா ''ஏன் இந்த பாவத்த வாங்கிச் சேக்காறு உன் அப்பன்''என்று கசந்துகொண்டாள்
அப்பா அன்று சாப்பிடவில்லை.அவரால் சாப்பிடமுடியாத படி ஒரு தத்தளிப்பில் இருந்தார்.அவரது நோட்டுப் புத்தகத்தில் தீவிரமாக ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார்.அப்போது கதவு தட்டப் பட்டது.நான் போய் கதவு திறக்கப் போனேன்.அப்பா தடுத்து 'அய்யரா இருந்தா தூங்கியாச்சுன்னு சொல்லு''என்றார்.
அய்யர் இல்லை.முப்பது வயது மிக்க ஒரு பெண் தலையில் முக்காடிட்டிருந்தாள்.நான் அதுவரை அவளைப் பார்த்ததில்லை.ஆனால் அவளது சிவந்த முகமும் மூக்குத்தியும்  காதோரமும் முடியை ஒதுக்கையில் முழங்கையிலும் ஓடியிருந்த மென்ரோம வரிசையும் இன்றும் நினைவில் இருக்கிறது.நான் வந்து சொன்னேன்.அப்பா வேட்டியை இருக்கக் கட்டிக் கொண்டு வெளியே போனார்.திண்ணையின் இருட்டில் அவர்கள் வெகுநேரம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.அம்மா கிசுகிசுப்பாய் ''அய்யரோட சம்சாரம்''எனறாள்.
மறுநாள் ஓதுவார் திருப்ப பணகுடிக்கே அனுப்பப் பட்டார்.அப்பாவை அதற்குப் பிறகு பெரியார் தொந்திரவு செய்யவில்லை.
அப்படி என்ன அந்த மாமி சொன்னாள் என்று  வீட்டில் வெகுகாலம் பேச்சாய் இருந்தது.அம்மா ஒரு நாள் நொடிப்பாய் ''வேறென்ன சொல்லிருப்பா..தெரியாதா..'.......'விரிச்சாதான் ஆச்சு..பாப்பாத்தி சிரிச்சாலே போச்சு''எனறாள்.
'விரிச்சுன்னா' என்ன ?என்று கேட்டு நான் அம்மாவிடம் அடிவாங்கினேன்.

2 comments:

 1. Hi Bohan,

  Intha Periyar ennai yum padaatha paadu paduthi vittaar,,,,,

  Anyway ur presentation is excellent,

  my wishes for ur wonderful job.

  Nallathambi

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails