Monday, September 13, 2010

உடல் தத்துவம் 6

வயது முதிர்ந்தவர்க்கு மட்டும்!

அப்பாவிடம் இருந்து எனக்குப பற்றிக் கொண்ட வியாதிகளில் இந்த புத்தக வியாதி முக்கியமானது.ஒவ்வொரு மனிதனும் அவனது சிறு வயதில்  தனது தந்தையைப் போல இல்லாமல் இருக்க மிகுந்த முயற்சி செய்கிறான்.ஆனால் மெல்ல மெல்ல அவன் தன் தந்தையைப்  போலவே ஆகிறான் என்று எங்கோ படித்தேன்.நம் ரத்தத்தில் இருந்து நமது மூதாதையர்களைத் தொலைத்துவிடுவது அவ்வளவு எளிதல்ல.உண்மையில் ஹிந்துக்கள் இறந்தவர்க்கு கொடுக்கும் திதிச் சடங்கின் மூல நோக்கம் இதுவே என்று காசிச் சாமியார் ஒருதடவை சொன்னார்.உன் அப்பனின் கோபம், தாத்தனின் காமம், பாட்டியின் அச்சம்,அவள் அம்மையின் கஞ்சத்தனம்,குரூரம் எல்லாம் அவர்களோடு  மண்ணுக்குள் போய்விடவில்லை.உன்னுள் துடித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

 உண்மை என்று சில நேரம் தோன்றியிருக்கிறது.எல்லா நேரங்களிலும் நான் செய்வது என் கட்டுப்  பாட்டில் இல்லை என்று உணர்ந்திருக்கிறேன்.என்னை மீறி எதுவோ என்னைச் செலுத்துகிறது.என்னிலும் பெரிய சக்திகள்.என் சூழலில் நிறைய புத்தகங்கள் இருந்தன.ஆகவே எனக்கும் அந்த கிருமித் தொற்றிக் கொண்டதில் வியப்பு இல்லை.ஆனால் என் புத்தகங்கள் அப்பாவின் புத்தகங்கள் இல்லை.அப்பாவுக்கு புனைவென்பதே பிடிக்காது.கதைப் புத்தகங்கள்  வெள்ளைச் சீனி போல என்பார்..சாப்பிட இனிப்பாக இருக்கும்.ஆனால் உன் புத்தியை அரித்துவிடும் என்பார்.வானத்தில் கட்டிய வீட்டுக்கு வாடகைக்கு வருபவர் யார் என்று கேலியாக சிரிப்பார்.ஒருநாள் நான் அவரது தடித்த விபூதி வாசம் அடிக்கும் கம்பராமாயணத்தை எடுத்து இதையே சிலர் புனைவுதான் என்கிறார்களே என்றதற்கு சிலகாலம் என்னுடன் பேசாது இருந்தார்.
உண்மையில் புத்தகங்களுடன் எனது பரிச்சயம் நாஞ்சிலில்  அவருடன் இருக்கையில் நிகழவில்லை.சில குடும்பக் காரணங்களுக்காக நான் மட்டும் நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் என்ற ஊரில் அப்பாவழிப் பாட்டியுடன்  சிலவருடங்கள் இருக்கநேர்ந்தது.உடன் சித்தப்பாவும் இருந்தார்.சித்தப்பாவுக்கு மணம் ஆயிருக்கவில்லை.பஞ்சாயத்து ஆபிசில் வேலை பார்த்தார்.எனவே க்வார்ட்டர்ஸ் கொடுத்திருந்தார்கள்.
அந்தக் காலத்தில் அரசுக் க்வார்ட்டர்ஸ் எல்லாம் ஒரே மாதிரி மஞ்சள் சாயத்துடன் ஒட்டுக் கூரையுடன் இருக்கும்.எல்லா அரசு அலுவலகங்கலுமே மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும்.இப்போது கலர் கோட் மாறிவிட்டது போல.எல்லா ஆபிஸ்களிலும் மூன்று பேர் படுக்கக் கூடிய மேசைகள் பழுப்பேறிய கோப்புகள் பிள்ளைத்தாச்சிப் பெண் வயிறு போன்ற தலையுடன் மிகத் தயக்கமாய் சுற்றும் மின்விசிறி,தடித்த மரப் பேனாக்கள்,நீல மைக் கூடுகள்,தலையைச் சொரியும் பியூன்கள்,அவர்களது துருப்பிடித்த ஹெர்குலிஸ் சைக்கிள்கள்,மேல் அதிகாரிகளுக்கு அவன் காப்பி வாங்கும் துர்நாற்றம் அடிக்கும் சரியாக கழுவாத ப்ளாஸ்க்குகள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும்.இன்று இவை அத்தனையும்  கால வெள்ளத்தில் யாரோ செட்டைக் கழற்றிப் போய்விட்டது போல் மாறிவிட்டன.

சித்தப்பா இளையவர்,திருமணம் ஆகாதவர் என்பதால் இருப்பதிலேயே மோசமான க்வார்ட்டர்ஸ் கொடுக்கப் பட்டிருந்தது.வீட்டின் முன் வாசலில் ஒரு பெரிய நாவல்மரம் நின்றிருந்தது.சிறுபிள்ளைகள் நாவல் பழத்துக்கு ஏங்கி விட்டெறிந்த கற்கள் எல்லாம் வீட்டுக் கூரை  ஓடுகளைப் பதம் பார்த்திருந்தன.வெயில் காலத்தில் பெரிய பிரச்சினை இல்லை.இடைவெளிகள் வழியே வீட்டுக்குள்ளேயே நுழையும் சூரியன் பல்வேறு கற்பனைகளைக் கொடுத்தது.ஆனால் மழை என்று வந்து விட்டால் வீடே வெள்ளத்தில் மிதந்தது.முழங்கால் அளவு வீட்டுக்குள் ஏறிய தண்ணீரில் மேலிருந்தும்  சலசலவென்ற சத்தத்துடன் ஒழுகும் நீருக்கு தப்பிய ஒரே ஒரு இடத்தில் அந்தக் கால கேம்ப் கட்டிலில் குளிரில் நடுங்கியபடி சித்தப்பாவுடன் ஓட்டிப் படுத்துக் கிடந்தது நினைவிருக்கிறது.

க்வார்ட்டர்சில் என் வயதொத்த சிறுவர் சிறுமியர் நிறைய பேர் இருந்தனர்.எதிர்வீட்டில் சற்று மன வளர்ச்சி குறைந்த அஞ்சு என்ற ஒரு பெண் இருந்தாள்.பதினாலு வயசிலும் என் கூட அஞ்சாங்  கிளாசுக்கு வந்து கொன்டிருந்தாள்.அவள் மனம்தான் வளரவில்லையே தவிர உடல் அந்த வயதுக்கு தக்கவே இருந்தது.ஒருநாள் எட்டாங்கிளாஸ் பசங்கள் அவளைப் பள்ளிக் கழிவறைக்குக் கூட்டிப் போய் பாவாடையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆசிரியை ஒருவர் பார்த்து வீட்டுக்கு சொல்லி அனுப்பி பிரச்சினையாகி அன்றோடு அவள் பள்ளி வாழ்க்கை முடிந்தது.அஞ்சுவுக்கு அம்மா இல்லை.கல்யாணம் ஆன அக்காவுடன் இருந்தாள்.அக்காவின் கணவரை எஞ்சினீயர் என்று சொல்வார்கள்.அந்த க்வார்ட்டர்சின் மன்மதன்.எப்போது ஏற்றிக் கட்டிய கைலியுடன் கரடி மாதிரி மயிர் பொங்கும் மார்பைக் காட்டியபடி தான் வெளியே நிற்பார்.'மாமா'வுக்கு அஞ்சு ரொம்பப் பயப் படுவாள்.'மாமா ரொம்ப மோசம்'என்று அடிக்கடி  சொன்னதின் அர்த்தம் இப்போது புரிகிறது.அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.எனக்கும் அவளைப் பிடிக்கும் என்றாலும் அவள் கொஞ்சுகிறேன் பேர்வழி என்று அடிக்கடி என் தலையைப் பிடித்து அவள் தொடைகளுக்குள் அழுத்திக் கொள்வது பிடிக்காது.''மூச்சு முட்டுதுடி''என்று சத்தம் போட்டால் அழுவாள்.

வலது பக்க வீட்டில் விநாயகம் என்று சற்று பெரிய பையன் இருந்தான்.பேருக்கு ஏற்றவாறு பெரிய்ய பையனே.ஒரு இடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் போது யானை ஒன்று போவது போலவே நகர்வான்.எனக்கு சதுரங்கம்,கேரம்போர்ட் எல்லாம் கற்றுக் கொடுத்தான்.ஆனால் நடப்பது போலவே எல்லாவற்றிலும் பயங்கர ஸ்லோ.நானோ எல்லாவற்றிலும் மிகு வேகம்.அவனுடன் செஸ் விளையாடுவது ஒரு துன்பியல் அனுபவம்.முதல் மூவுக்கே அரை மணிநேரம் யோசிப்பவனுடன் எப்படி விளையாடுவது..நான் ''அண்ணே..விளையாடு அண்ணே''என்று கெஞ்சிக் கொண்டே இருப்பேன்.அவன் ''இருடா..''என்று கொண்டே இருப்பான்.பெரும்பாலும் எங்கள் விளையாட்டுகள் முடிவுக்கு வந்ததே இல்லை.சுமார் ஐந்து மூவ் அவன் யோசிப்பதற்குள் அவன் அப்பா வந்துவிடுவார்.''ஏலே படிக்கலியா''என்றவுடன் 'நாளைக்கு விளையாடுவோம்''என்று போய் விடுவான்.நாளைக்கும் அதே கதைதான்.அவன் வீட்டில்தான் எனது புதின வாசிப்பு தொடங்கியது.இரத்தினபாலா என்ற புத்தகம் அவர்கள் வீட்டில் மாதாமாதம் வாங்குவார்கள்.மாதத்தில் முதல் தேதி வரும் அது.ஆனால் முந்தினமாதம் பத்தாம் தேதியில் இருந்தே வந்துடுச்சா வந்திடுச்சா என்று நச்சரித்து அவர்கள் என்னைக் கண்டாலே பீதி கொள்ள ஆரம்பித்தார்கள்.

இடது பக்க்கவீட்டில் சுஜா சுதா என்று சற்று பெரிய பெண்கள் இருந்தார்கள்.இவர்களே  முதன் முதலாக என்னை நூலகம் அழைத்துச் சென்றவர்கள்.சற்று தொலைவில் இருந்த நூலகத்திற்குப் போவதற்கு நான் ஒரு ஆண்பிள்ளை என்று என்னை துணைக்கு அழைத்துப் போவார்கள்.சுஜாவுக்கும் சுதாவுக்கும் அடிக்கடி சண்டை வரும்.என்னை யார் அழைத்துச் செல்வதென்று தகராறு வரும்.இருவரும் ஒன்று சேர்ந்து எங்கும் போக மாட்டார்கள்.சுஜாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவள் எப்போதும் கிசுகிசுப்பாகவே பேசுவாள்.அவளுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள்.நாங்கள் எப்போது வெளியே போனாலும் நடுவழியில் சேர்ந்து கொண்டு என்னுடன் பேசுவது போல சுஜாவுடன் பேசிக் கொண்டே வருவார்கள்.சுஜா பேசவே மாட்டாள்.ஆனால்  அப்போது அவள் முகத்தில் தெரியும் அந்த சிகப்பை கண்களின் ஜொலிப்பை வேறெப்போதும் காணவே முடியாது.இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று ஒவ்வொரு தடவையும் சொல்வாள்.சுதாவை எனக்குப் பிடிக்காது.ஏன் எனில் அவள் பாவாடையில்  எப்போதும் லேசாக ஒரு மூத்திரவாடை வீசிக் கொண்டே இருக்கும்.ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளமாட்டேன்.காரணம் அவள் ஏதாவது எனக்கு சாப்பிடத் தந்துகொண்டே இருப்பாள்.என் வாழ்க்கையில் முட்டையை அறிமுகப் படுத்தியவள் அவள்தான்.என் ஆச்சி தீவிர சைவமானதால் அதை கத்திரிப் பழம் என்று சொல்லிவிட்டாள் .எனக்கு அந்தப் பழத்தின் ருசி ரொம்ப பிடித்துப் போய் ஆச்சியிடம் வாங்கித்தர சொல்லி அடிக்கடி அடம் பிடித்தேன்.

இவர்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுக்குத்தான் மேகி அத்தை குடி  வந்தார்.நான் பார்த்த முதல் பெண் உடல்.ஒரு வேளை என் முதல் காதலாக கூட இருக்கலாம்.

Sunday, September 12, 2010

அரவப் படம்

வேண்டுமென்றே
கொல்லவில்லை அதை
புதியவீடு கட்டும்பொருட்டு
பழைய கற்களைப் புரட்டுகையில்
சட்டென்று வெளிவந்து
சீறியது அது
அனிச்சையாய்
கையிலிருந்த தடியால்
அடித்துக் கொன்றேன்
கற்களின் கீழ்
மேலும் சில இருந்தன
அதன் குழந்தைகள் போலும்
தமிழ் சினிமா போல
வளர்ந்தெழுந்து
பழிவாங்க வரும் என்று சொன்னதால்
தீயூற்றி எல்லாம் அழித்தோம்
பின்
பாலூற்றிப் புதைத்தோம்
பின்பு
புதுமனை கட்டிப்
புகுநாள்  வரை
அதைப் பார்க்க்கவில்லை .
ஆனால் அன்றிரவே
ஜன்னல் கம்பிகளில்
முறுகிக் கொண்டிருந்த
அதைப் பார்த்தேன்
 அதிர்ந்து விளக்கேற்றியதும்
அது துணிகட்டும் கயிறாய்
மாறி மாயம் கட்டியது
அதன் பிறகு
ஒவ்வொரு கணமும்
வீட்டின்  ஒவ்வொரு மூலையிலும்
அதன் மூச்சொலி கேட்டேன்
இரவுகளில்
அது சுவர்களிலிருந்து
யாரும் அறியாமல் 
இறங்கி வந்து
என்னிடம் பேசிக் கொண்டே இருந்தது
எரிந்து போன
அதன் குழந்தைகளைப் பற்றி ...
அதன் வீட்டில் உறங்கும்
என் குழந்தைகள் பற்றி...
மெல்ல மெல்ல
அது பேசிப் பேசியே
என்னுள் புகுந்தது
கண் மூடி
தெய்வத்தை தியானித்தாலும்
அங்கும்
ஆயிரம் தலைகளுடன் வந்து
ஆயிரம் நாவுகளில் கதைத்தது
முதுகந்தண்டுக்கும்
மூளைக்கும்
நடுவே இங்குமங்கும்
அமைதியற்று
ஓடிக் கொண்டே இருந்தது
சில சமயம்
துக்கத்தில்
வெளுத்துக் கிடந்தது
மற்ற நேரம் ரவுத்திரத்தில்
சிவந்துபாய்ந்தது
எங்கு போனாலு
அது என் பின்னால் வந்தது
மருத்துவரிடம் பேசும் போது கூட
பக்கத்து நாற்காலியில்
சுருண்டு காத்திருந்தது
குளிகைகள் தந்த
உறக்கத்திலும் பாதியில் ஊடுருவி
பேச அழைத்தது
அலறி எழுந்த
என்னை  இடுப்போடு இறுக்கி அணைத்த
துணையின்
தசைச் சுருள்களில் இருந்தும்
படம்  எடுத்து வந்தது
நான் முழுதாய்க் கொல்ல மறந்த அரவம்...

Saturday, September 11, 2010

எழுதிச் செல்லும்....

ஒரு
அஜாக்கிரதையான கணத்தில்
அது என்னைப் பீடித்தது
காலை நடையின் போது 
பின்னாலேயே வந்துவிடும்
நாய்க்குட்டி போல பின்தொடர்ந்தது
நள்ளிரவில் நாற்சந்தியில்
பிடித்துக்  கொண்ட பிசாசு போல்
என்னைத் துன்புறுத்திக் கொண்டே இருந்தது
அதன் இருப்பைப்
புறக்கணிக்க
நான் என்னென்னவோ செய்தேன்
எனக்குப்
பழககமில்லாதவற்றைக் கூட..

விடிகாலைப் பனியில் எழுந்து
மூச்சிரைக்க ஓடினேன்
குழந்தைகளுடன் விளையாடினேன்
நீள வரிசையில் நின்று
மூளை வேண்டா திரைப்படங்கள்
நிறைய பார்த்தேன்
தெருவோரம்
டீக்கடை பெஞ்சில் அமர்ந்து
அந்நியர்களோடு
வெகுநேரம் அர்த்தமற்று
பேசிக் கொண்டிருந்தேன்
வெயில் வளர்ந்து தேய்வதை
வேடிக்கை பார்த்தேன்..

ஆனாலும் அது
பின் மண்டையில்
ஒரு புழு போல
நெளிந்து கொண்டே  இருப்பதை உணர்ந்தேன்
அல்லது மன வயிற்றிலிருந்து
வெளியேறத் துடிக்கும்
நிறை சிசுவாக..
ரத்தத்தில் ஊறி  விட்ட விஷமாக
எலும்பு வரை
ஏறி விட்ட தொற்றாக
அது
என்னைத் துரத்திக் கொண்டேதான்  இருந்தது

மருத்துவரிடம் கேட்டதற்கு
எழுதித்தான் துரத்தவேண்டும்
உன் தலைக்குள் கேட்கும் குரல்களை என்றார்.
ஏனெனில் அவை யாவும்
நீ படித்த புத்தகங்களில் இருந்து
புறப்பட்டு வந்தவை..
அவை சொற்களில் பிறந்து
சொற்களை உண்டு வாழ்பவை
சொற்களுக்கே வசப்படும்  நோய் இது என்றார் ..

ஆகவே  தான்
நான் எழுதுகிறேன்..
ஒரு விடுதலையாக..
ஒரு சிகிச்சையாக ....
 வேறொன்றும் அல்ல .

Friday, September 10, 2010

மழையின் முகங்கள்

வானிலிருந்து வழியும் மது போல
இரவு முழுதும்
அடித்து
ஊற்றிக் கொண்டிருந்தது மழை.
அவசரமாய்
 உள்ளே வரவிரும்பும்
 பொறுமையற்ற சிறுவன்போல
கூரையை ஆவேசமாய்த்
தட்டிக் கொண்டே இருந்தது.

சமயங்களில்
ஒரு காமம் முற்றிய ஆண் போல
பூமிப் பெண்ணின்
அத்தனை மறைவிடங்களையும்
 தன் விரல்களால்
தேடிக் கண்டுகொண்டே இருந்தது
கணத்த கம்பளிக்குள்
புதைந்திருந்தாலும்
அறைகளின்
எல்லா மூலைகளிலும் இருந்து
ஈரமாய் இருட்டாய்
கைகளை
நீட்டிக்கொண்டே வந்தது.
தூக்கத்தின் திரை விலக்கி
கனவு வரையும் வந்து
எச்சில் செய்தது
மூளையின் இடுக்குகளில்
உறைந்து கிடந்த
பழைய மழைகளின்
முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்த்து
வெளிக் கொண்டுவந்தது

வேறெங்கும் விலகாது
தன்னை மட்டுமே
யோசிக்கக் கோரும்
சிறுபெண் போலவும்
சில சமயம் அடம் பிடித்தது..

விடிகாலை வெயில்வந்து
விரட்டிய பிறகும்
வெகுநேரம்
உள்ளுக்குள்
சடசடத்துக் கொண்டேதான்
இருந்தது
மழை

Wednesday, September 8, 2010

பெண் அடையாளம்

இவையெல்லாம்
உன் அடையாளங்கள்
எனறார்கள் அவர்கள்.
இவையெல்லாம்
என் உறுப்புகள்
அடையாளங்கள் அல்ல
என்று எத்தனை முறை
சொல்லியும்
அவர்கள் கேட்கவில்லை.
என் அத்தனை தகுதிகளையும்
அழித்துவிட்டு
நண்பர்களின் கண்களில் கூட
எப்போதும்
என் அடையாளமாய்
நடித்துக் கொண்டிருக்கும்
இந்த முலைகளையும்
யோனியையும்
மறைத்துவைக்கும்
வித்தைக்காய் ஏங்குகிறேன்.
அவ்வை போல.

Tuesday, September 7, 2010

தசை வணிகம்

எச்சிலைப் பரிமாறி முடித்ததும்
இருவரும்
உதடுகளை
சுத்தமாய்த்
துடைத்துக் கொண்டனர்.

அவன்
ஆணுறை அணிந்திருந்தானா
என அவள்
நிச்சயப் படுத்திக் கொண்டாள்
முன் திறப்பு இரவுடை பார்த்து
அவன்
அவள் பாலூட்டியா
என வினவினான் ஆசையுடன்.
அவள்
அதிக காசு ஆகும் எனறாள்.
பிறகு
அவன்
கம்மலைப் பார்த்துவிட்டு
நீ
பின் நவீனத்துவனா எனறாள்
சந்தேகமாய்.
அதற்கும் அதிக காசு ஆகும் எனறாள்
அவன்
ஆனாலில்
துணை  எழுத்து இல்லாதவன்
என்பதை
அப்புறம் சொல்லிக் கொள்ளலாம்
என நினைத்தான்,
ஏனெனில்
அவன் கையில்
அரைக் காமத்துக்கே
காசு இருந்தது
அவளுக்கோ
சீக்கு  குழந்தையை
டாக்டரிடம்
காண்பிக்க வேண்டியிருந்தது.
பேசி முடிந்ததும்
இருவரும்
மூட்டைப் பூச்சி மெத்தையில்
மூத்திர நெடி அறையில்
புணர்ந்தபோது
எந்த பூவும்
பூக்கவில்லை.
குழல் விளக்கிலிருந்து
சில
பூச்சிகள் உதிர்ந்திருந்தன
அவ்வளவே.

Sunday, September 5, 2010

மதுரை புத்தகத் திருவிழா

இந்த தடவையும் மதுரை புத்தக விழாவுக்கு செல்வதற்கு  எப்படியோ நேரத்தையும் காசையும் கண்டுபிடித்து சென்றுவந்துவிட்டேன்.ஏறக்குறைய ஆறு மணிநேர பயணம்.நான் இருக்கும் இடத்தில் இருந்து திருவனந்தபுரம் ஒரு மணி நேரம்தான்.குறைந்தது முப்பது சதவீதம் தமிழர்களே.ஆனால் இதுவரை ஒரு தமிழ்ப் புத்தகக் கண்காட்சி கூட நடந்ததாக நினைவில்லை.பாவம்.அவர்களது  கலாச்சார சக்தியெல்லாம் விஜய் படத்துக்கு கட் அவுட் வைப்பதிலேயே செலவழிந்து விடுகிறது.என்ன செய்வது.நாகர்கோயிலில் காலச்சுவடு கடையில் கொஞ்சம் கிடைக்கும்.நெல்லை பரவாயில்லை.சென்னை ரொம்பதூரம்.ஏறக்குறைய அடுத்த மாநிலம்.ஆகவே என்னைப் போன்றவர்க்கு மதுரைப் புத்தகக் கண்காட்சி ஒரு வரம்தான்.

ஆனால் இந்த தடவை விளம்பரம் சரியில்லை என்று தோன்றுகிறது.நுழைவுக் கட்டணம் கிடையாது.ஆனாலும் நான் போன சனிக் கிழமை மாலையில் கூட்டம் குறைவே.கடைகளின் எண்ணிக்கையும் போனதடவையை விட குறைவு எனறார்கள்.ஆங்கிலப் பதிப்பாளர்கள் நிறைய பேரைக் காணோம்.ஏனோ?

ஆனாலும் இந்த புத்தக விழாவில் நான் நெடுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்த புத்தகங்கள் சிலவற்றை வாங்க முடிந்தது.இன்னொன்று எதிர்பாராது நிகழ்ந்தது.நான் பெரும்பாலும் புத்தகம் படிப்பதோடு சரி.அதை எழுதுபவர்களைத் தேடிப் போகும் அபாயகரமான  காரியத்தை பண்ணுவதில்லை. நண்பர்கள் சிலரின் அனுபவங்கள் அத்தனை உவப்பானதாய் இல்லை.நேரில் பார்த்தால் கூட விலகி வந்துவிடுவேன்.இந்த தடவை அ மார்க்சை இசகு பிசகாய் சந்திக்க நேர்ந்தது.தமிழினியில் வாசலில் அமர்ந்திருந்தார்.நான் அவரை முதலிலேயே பார்த்துவிட்டேன்.ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகங்களை அங்கு மட்டும் வாங்கியிருந்தேன்.மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அரசியல் என்ற அவரது புத்தகமும் ஒன்று,என்னுடைய பட்ஜெட் ஏறக்குறைய  காலியாகி விட்டிருந்தது.பில் போடும் போது அங்கிருந்த பணியாளர் மார்க்சின் புதிய புத்தகம் ஒன்றைக் காண்பித்தார்.கையில் காசில்லை.ஆகவே ஏற்கனவே படித்துவிட்டேன் என்று சமாளித்து பார்த்தேன்.இன்றுதான் வெளியிடுகிறோம் சார் என்றார் அவர் விடாக் கண்டனாக.நான் கொஞ்ச நேரம் அசட்டுத் தனமாக நின்று கொண்டிருந்தேன்.ஒரு எழுத்தாளனின் முன்னாலேயே அவர் புத்தகத்தை மறுப்பது என்னும் தர்மசங்கடத்துக்கு ஆளானேன்.பிறகு நானே அத் தருணத்தை உடைத்தேன்.அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.அவரது புத்தகத்தில் கையெழுத்தும் போட்டுத் தந்தார்.

இந்த கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்
தாந்தேயின் சிறுத்தை -சாரு நிவேதிதா -உயிர்மை -ரூ 230

 கொஞ்சம் புரட்டியதில் தெரிந்தது.பாதி உலக இலக்கியம் .மீதி ஜெயமோக[னைத் திட்டும் ]இலக்கியம் .பின்னது இல்லாமல் இருந்தால் நல்லாய் இருந்திருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்.இலக்கிய பூசல்களோடு சேர்த்துதான் இலக்கியம் வருகிறது.It comes with the package.

சாந்தாமணியும் இன்ன  பிற காதல் காதல் கதைகளும்-வா.மு.கோமு-உயிர்மை-ரூ 220
 கச்சு அற்ற மன்னிக்கவும் கட்டு அற்ற பாலியல் இலக்கியம் எனறார்கள்.என்ன அற்றது என்று பார்க்கலாமே என்று வாங்கினேன் .[இந்த இடத்தில் ஒரு ஹி ஹி போடவேண்டுமோ]
உறங்கா நகரம் .சென்னையின் இரவு வாழ்க்கை -வே.நீலகண்டன்-சந்தியா-ரூ 80
 சற்று சந்தேகத்துடன்தான் இந்த புத்தகத்தை வாங்கினேன்.ஆனால்..என்னைக் கலங்கடித்து விட்டது இந்த புத்தகம்.நூலின் பல பகுதிகளில் இயல்பாக கண்ணீர் பொங்குவதை தவிர்க்க முடியவில்லை.ஊரெல்லாம்உறங்கும் நேரத்தில் நமது பகல்கள் சிக்கலின்றி  அமைவதற்காக தங்கள் இரவுகளைத்  தொலைத்து விட்டவர்களை பற்றிய நேரடி  கள ஆய்வின் அனுபவத் தொகுப்பு இது.கள ஆய்வு என்றவுடன் அலறி ஓட வேண்டாம்.குங்குமத்தில் தொடராக வந்ததாம்.மிகுந்த முதிர்ச்சியான கவித்துவத்துடன் ஒரு சொல் கூட மிகாமல் எழுதி இருக்கிறார் நீலகண்டன்.அதிரடியாக ஒரு  ஆண் பாலியல் தொழிலாளியின் பேட்டியுடன் ஆரம்பிக்கிறது புத்தகம்.கானா பாடகர்கள்,மருத்துவமனை ஊழியர்கள்,கோயம்பேடு மார்க்கட் கூலித் தொழிலாளிகள்,துப்புரவாளார்கள்,மீனவர்கள்,போஸ்டர் ஓட்டுபவர்கள் துறைமுக ஊழியர்கள்,போக்குவரத்து தொழிலாளர்கள்,காவலர்கள்,என்று பல்வேறு இரவுத் தொழிலாளர்களின்  வாழ்வியல் அனுபவங்களே இந்நூல்.குழந்தையை தனியாக வீட்டில் உறங்கப் பண்ணிவிட்டு இரவு சாலைவேலைக்கு வந்த தாய் சொல்கிறாள்.''இரண்டு வயசில ஒரு பொண்ணு இருக்கா.வழக்கமா  அஞ்சு மணிக்கு எழுந்த்திருச்சு அம்மா அம்மான்னு அழுவா .அவ முழிக்கறதுக்குள்ள வீட்டுக்கு போகணும்'.தயக்கமே இல்லாது இந்நூலை பரிந்துரை செய்வேன்.'

தென்னிந்திய கிராம தெய்வங்கள்-ஹென்றி ஒயிட் ஹெட் -சந்தியா-ரூ 100
 நாட்டார் இயலில் ரொம்ப நாள் தேடிக் கொண்டிருந்த புத்தகம் .இப்போது தமிழில்.
ஆழி சூழ் உலகு-ஜோ டி க்ரூஸ் -தமிழினி-ரூ 320
 நிறைய மதிப்புரைகள் இந்நூல் பற்றி வந்துவிட்டன.இது போல் மீனவர் வாழ்வைப் பேசும் நூல் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள்.எனது இன்றைய பணி சூழலில் நிறைய மீனவர்களைச் சந்திக்க நேரிடுகிறது.பொதுப் புத்தியில் அவர்களைப் பற்றி உள்ள நிறைய எதிர்மறைப் பிம்பங்கள் உள்ளன.அவர்களது வாழ்வியல் சிரமங்களை அறியாமல் அவற்றை அழிக்க இயலாது.அவ்வகையில் இந்நூல் உதவும்.இந்நூலில் திருச்சபை பற்றி வரும் சில சித்தரிப்புகளுக்காக க்ரூஸின் குடும்பம் ஊரிலிருந்து விலக்கிவைக்கப் பட்டது என்கிறார்கள்.ஒவ்வொரு நூலும் அதை எழுதுபவனை ஏதோ ஒருவகையில் பலிகொண்டே எழுகிறது என்று தோன்றுகிறது.

ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்-அ .கா.பெருமாள்-தமிழினி-ரூ 120
 சரித்திர ஆய்வுகளை புனைவின் ருசியோடு இவரால்தான் தரமுடியும் எனத் தோன்றுகிறது.ஏற்கனவே இவரது தென் குமரியின் கதை,தாணுமாலயன் ஆலய வரலாறு ஆகிய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.நான் தற்போது குமரி மாவட்டத்தில் இருப்பதால் இந்நூலுடன் தனி அணுக்கம் வந்துவிட்டிருக்கிறது.இப்புத்தகத்தை ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலேயே கொண்டு சென்று வாசிப்பது என ஒரு மெலிய கனவு வைத்திருக்கிறேன்.
அறிவுநிலைகள் பத்து-இரா.குப்புசாமி-தமிழினி-ரூ 100
தமிழில் எளிமையான தத்துவ நூல்கள் குறைவு.தாடையை உடைக்கும் சைவ சித்தாந்த நூல்களை விட்டால் வேறு வழியே இல்லை.பிரேமா பிரசுரத்தில் மலர்மன்னன் எழுதி சில எளிய அறிமுகநூல்கள் மலிவு விலையில் வந்துள்ளன.ஆனால் அவை யாவும் மேற்கத்திய சிந்தனையாளர்களைப் பற்றியவை.அவ்வகையில் மிக முக்கியமான நூல்களே அவை. இந்நூல் இந்திய தத்துவத்தைப் பேசுகிறது.ஜெயமோகனின் சிபாரிசு வேறு இந்நூலுக்கு உண்டு.
முறிந்த பனை-பயணி-ராஜனி திராணகம-பயணி-ரூ 450
 தமிழ் விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு ஆவணம் இது.எழுதியவர் ஒரு மருத்துவர்.பெண்.இப்புத்தகம் எழுதியதற்காக கொல்லப்பட்டவர் .
மக்கள் தொகைஎடுப்பின் அரசியல்-பயணி-அ.மார்க்ஸ்-ரூ 25
 இந்த புத்தகத்தை மதுரையிலிருந்து திரும்புகையில் பேருந்திலேயே படித்து முடித்து விட்டேன்.சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி மார்க்ஸ் எழுப்பும் கேள்விகள் அவரின் கோணம் விவாதத்துக்கு உரியது.அவர் இந்தியாவில் மதத்தை விட சாதியே முக்கிய இயங்கு சக்தி என்கிறார்.இந்தியாவில் முழுமையாக கிறித்துவமும் ஓரளவு இஸ்லாமும் சாதியத்திலிருந்து தப்பவில்லை என்கிறார்.ஆகவே அம்மதத்தைச் சேர்ந்தவருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்.இப்புத்தகத்தை நான் படித்து முடித்ததும் பக்கத்தில் உள்ளவர் 'சார் படிச்சுட்டு தரேன் சார்''என்றார்.நான''கதைப்புத்தகம்இல்லீங்க.''என்றேன்''இல்லீங்க.படிப்பேன்''என்று வாங்கிப் படித்தார்.படித்து முடித்ததும் கோவில் பட்டியிலிருந்து நெல்லை வரை என்னைக் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டார்.அவர் கேட்டதின் முக்கிய சாராம்சம் ஒரு இந்து தலித்தும்  அதே சாதியைச் சேர்ந்த கிறித்துவ தலித்தும் சமூகத்தில் ஒரே தளத்தில்தான் இருக்கிறார்களா என்பதே.எனக்கு சரியாக பதில் சொல்லமுடிய வில்லை.இது சம்பந்தமாக இன்னும் நிறைய படிக்கவேண்டும் எனத் தெரிகிறது.
கொடுங்கோளூர் கண்ணகி-வி.ஆர்.சந்திரன்-தமிழில் ஜெயமோகன்-united writers-ரூ 50
 ஜெயமோகனின் கொற்றவையைப் படிக்கும் முன்பு இதைப் படிப்பது நல்லது.கண்ணகி என்ற தொன்மம் நம் ஆழ்மனதில் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பு மிகப் பெரியது.மேலும் தமிழகத்தின் பண்பாட்டு வேர்களை முழுவதுமாக புரிந்து கொள்ள கேரள வரலாற்றைப் புரிந்து கொள்வதும் அவசியம்.சங்க இலக்கியத்தின் பல கூறுகள் இன்றும் கேரளத்தில் உயிருடன் உள்ளன .துரதிஷ்டவசமாக நாம் இன்று வேறு வேறு திசைகளில் பேசி கொண்டிருக்கிறோம்.இந்நூல் நமக்கு சரியான பார்வையை அளிக்கும்.
சங்கர்லால் துப்பறியும் நாவல்கள்-பாகம் ஒன்று-தமிழ்வாணன்-மணிமேகலை-ரூ 250
 தமிழ்வாணனிடம் இருந்தே எனது வாசிப்பு பழக்கம் தொடங்கியது.நல்ல தமிழில் துப்பறியும் கதைகளை விறுவிறுப்புடன் எழுத முடியும் என நிரூபித்தவர்.ஒரு காலத்தில் இவர் புத்தகங்களுக்கு நூலகங்களில் கடும் கிராக்கி இருக்கும்.இன்று வாசிக்கையிலும் வியப்பை அளிக்கும் நடை.
ஸ்ரீரங்கம் to  சிவாஜி -ரஞ்சன்-குமுதம்-ரூ 80
 சுஜாதாவைப் பற்றி சில சுவையான நினைவுகள்.சில அரிதான புகைப்படங்கள் உண்டு.அவற்றில் ரொம்ப ஸ்டைலான ஒரு சுஜாதாவைப் பார்க்க முடிந்தது.மனைவியின் விருப்பம்.
வாங்க விரும்பி முடியாமல் போன சில நூல்கள் 
கொற்றவை -ஜெயமோகன் 
புயலிலே ஒரு தோணி-ப.சிங்காரம் 
ஆரோக்கிய நிகேதன்
பொழுதுபோக்கு பௌதீகம் [சுஜாதாவின் அறிவியல் நூல்களை விட நல்ல  புத்தகம் என்று ஜெயமோகன் மெச்சியது.ஆனால் விலை சற்று அதிகம் எனத் தோன்றிற்று.நியூ செஞ்சுரியின் புத்தகங்கள் முன்பெல்லாம் மலிவாக இருக்கும்]
கருநாகம்,பேய் பேய்தான் -தமிழ்வாணன் [ஹாலிவுட் படங்களுக்கு இணையான த்ரில்லர் கதைகள் இவை.மணிமேகலையிலேயே கிடைக்க வில்லை]
தெய்வங்கள் முளைக்கும் நிலம்-அ.கா.பெருமாள்  
எழுத்தாளர் மகரிஷியின் கதைகள் [தமிழில் அதிகம் படமாக்கப் பட்ட  கதைகள் இவருடையதாக தான் இருக்கும்.புவனா ஒரு கேள்விக்குறி,நண்டு முதலியவை குறிப்பிடத் தக்கவை]
இந்த புத்தகங்களில் சிலவற்றை விரிவாக பேச விருப்பம்.பார்க்கலாம்.
நான் வழக்கமாக புத்தக காட்சிகளுக்கு செல்கையில் பெண்கள் என்ன புத்தகங்கள் வாங்குகிறார்கள் என்று கவனிப்பேன்.அல்லது புத்தகங்கள் வாங்கும் பெண்களைக் கவனிப்பேன்.இந்த முறை நான் அவ்விதம் செய்யவில்லை என்பதை பின்பே மெலிய அதிர்ச்சியுடன் உணர்ந்தேன்.எனக்கு வயதாகி விட்டதா என்ன?

LinkWithin

Related Posts with Thumbnails