அவர்களிடம் இந்த இயந்திரம் இருந்தது.உண்மையில் இரண்டு இயந்திரங்கள்.ஒன்று உள்ளுக்குள் தூர்ந்துபோன பழைய கிணற்றுக்குள் தேங்கிக் கிடக்கும் பாசி படிந்த நீரையும் காலத்தையும் தேடி இறங்கும் நாகம் போல உடலுக்குள் இறங்கியது.அது அங்கே மிதக்கும் அத்தனை பாசியையும் அங்கிருக்கும் இருட்டையும் காலகாலமாக அங்கே சேர்ந்து கிடக்கும் நச்சையும் விழுங்கியதா? இயந்திரம் சத்தமே போடாமல் மௌனமாய் எல்லாவற்றையும் விழுங்கியது.அதற்கொரு கண் இருந்தது .அதை இயக்கிக் கொண்டிருந்தவன், விசேடமாகத் தயாரிக்கப் பட்ட லென்சுடன் கூடிய தலைக் கவசத்தை அணிந்துகொள்வதன் மூலமாகத் தான் யாரைத் தோண்டிக் கொண்டிருக்கிறானோ அவர்களது ஆன்மாவின் ஆழம் வரைப் பார்க்கமுடிந்தது.அந்தக் கண் என்ன பார்த்தது?அவன் சொல்லவில்லை.அந்தக் லென்ஸ் மூலமாக அவன் பார்த்தான்.ஆனால் பார்க்கவில்லை.மொத்த விவகாரமும் ஒருவர் தன்வீட்டின் பின்புறம் ஒரு அகழி தோண்டுவதைப் போலத்தான் இருந்தது. படுக்கையில் கிடக்கும் பெண்மணி அந்த முயற்சியில் எதிர்ப்பட்ட மார்பிள் படுகை போலத்தான் இருந்தாள் .நாகமே இன்னும் போ.இன்னும் இன்னும் துளைத்து அங்கிருக்கும் வெறுமையையும் முடிந்தால் உறிஞ்சி வெளியேற்று.
இயக்குகிறவன் ஒரு சிகரட்டைப் பிடித்தவாறே அங்கேயே நின்றிருந்தான்.
மற்ற இயந்திரமும் இப்போது வேலை செய்துகொண்டிருந்தன்தது.அதை இயக்குகிறவனும் முந்தியவனைப் போலவே கறைபடியாத ஒரு பழுப்பு அங்கியில் முற்றிலும் மனிதச் சாயல் இல்லாமல்தான் இருந்தான். அந்த இயந்திரம் உடலிலிருந்து கெட்ட ரத்தம் முழுவதையும் வெளியேற்றி புதிய தூய ரத்தத்தால் நிரப்பிக் கொண்டிருந்தது.
''இரண்டையுமே செய்யவேண்டும் வயிற்றை மட்டும் சுத்தப் படுத்தினால் போதாது.இல்லை எனில் உடம்பில் தேங்கியிருக்கும் நச்சு ரத்தம் மூளையை சுத்தியலால் அடிப்பது போல அடித்து அடித்து ஒரு மாமிசக் கூழ் போல ஆக்கிவிடும்''
மண்டேக்''போதும்!''என்றான்.
அவன் ''சும்மா சொன்னேன்''
''உங்கள் வேலை முடிந்துவிட்டதா?''
அவர்கள் இயந்திரங்களை நிறுத்தி மூடி வைத்தார்கள்.அவனுடைய கோபம் அவர்களைத் தொடக் கூட இல்லை.தங்களது சிகரெட் புகை சூழ கண்கள் மீது சுழல அசையாது நின்றிருந்தார்கள்.
''ஐம்பது டாலர்கள் ''என்றார்கள்
''முதலில் அவள் நன்றாக இருக்கிறாளா என்பதைச் சொல்லுங்கள்''
''நன்றாகிவிடுவார்.நாங்கள் அவர் உடலிலிருந்து கெட்ட விஷயங்களை எல்லாம் எடுத்துவிட்டு புதிய விசயங்களை வைத்திருக்கிறோம்.எல்லாம் சரியாகிவிடும்''
''நீங்கள் இரண்டு பேருமே எம் டி படித்தவர் இல்லை.அவசரசிகிச்சைப் பிரிவிலிருந்து ஒரு எம் டி மருத்துவரை அழைத்து வந்திருக்கக் கூடாதா?""
''தேவை இல்லை.நாங்கள் இதுபோல நிறைய கேஸ்களை கடந்த இரண்டு வருடங்களாக பார்க்கிறோம்.இவை இதற்காகவே தயாரிக்கப் பட்ட இயந்திரங்கள்.,அதன் சிறப்பு லென்ஸ் மூலமாக மிக எளிதாக இதைக் கையாள முடியும்..இதற்கு இந்த இயந்திரத்தைக் கையாளும் இரண்டு மனிதர்கள் போதும்.அரைமணி நேரத்தில் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட முடியும் ''என்றான் அவன்.பிறகு ''நாங்கள் போக வேண்டியிருக்கிறது .புதிதாய் ஒரு அழைப்பு ஹெட்போன்கள் மூலம் வந்திருக்கிறது.இன்னொரு நபர் எங்கோ தனது தூக்க மாத்திரைப் புட்டியின் மூடியைத் தொலைத்திருக்கிறார்.தேவை எனில் கூப்பிடுங்கள் .தூக்கத்திலிருந்து எழுப்பும் மருந்து அவருக்குக் கொடுத்திருக்கிறது.பசியோடு எழுந்திருப்பார்.பார்க்கலாம்''
பிறகு அவர்கள் தங்களது சிகரெட் புகையோடு விஷப் பாம்புக் கண்களோடு தங்களது இயந்திரங்களோடு குழாய்களோடு பாட்டில்களில் தளும்பும் துக்க திரவங்களோடு வெளியே போனார்கள்
மாண்டேக் அவள் அருகில் அமர்ந்தான்.புறங்கையால் அவளது மூச்சை உணர முயற்சித்தான்.
''மில்டரெட் !''என்றழைத்தான்
பிறகு நாம் நிறைய பேர் இருக்கிறோம் என்று நினைத்தான்.மிக நிறைய பேர்.ஒருவரை ஒருவர் அறியாமல்.கோடிக் கணக்கில்.அந்நியர்களாய்.நாம் முற்றிலும் அறியாத அன்னியர்கள் திடீரென்று உங்கள் வாழ்வுக்குள் வருகிறார்கள்.உங்கள் இதயத்தை வெட்டி எடுக்கிறார்கள் .உங்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் கடவுளே!யார் இந்த மனிதர்கள் ?நான் இதுவரை இவர்களைப் பார்த்ததே இல்லை
அரைமணிநேரம் போனது.
இந்தப் பெண்மணியின் உடலில் இப்போது புது ரத்தம் ஓடுகிறது.அது அவளுக்குப் புதிய விசயங்களைச் செய்திருக்கிறது.அவள் கன்னங்கள் மிகச் சிகப்பாகவும் உதடுகள் மிருதுவாகவும் புதிதாகவும் இப்போது மாறிவிட்டன.வேறொருவரின் ரத்தம்.இதேபோல வேறு ஒருவரின் தசைகளையும் மூளையையும் இவ்வாறு பொருத்த முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் !அவளுடைய மனத்தையும் கூடக் கழற்றிச் சுத்தம் செய்து தூசு தட்டி துளைகளை அடைத்து புத்தம் புதிதாய் மறுநாள் காலை கொண்டுவர முடிந்தால்.....
முடிந்தால்...
அவன் எழுந்து திரைகளை இழுத்துவிட்டு ஜன்னலைத் திறந்து இரவுக் காற்றை அறைக்குள் அனுமதித்தான்.நேரம் அதிகாலை இரண்டு மணி.இதோ அவனும் க்ளாரிசும் வெள்ளி நிலவின் கீழ் நடந்து வந்து ஒருமணிநேரம் ஆகியிருக்குமா என்ன?அதற்குள் அவனது அந்த வண்ண உலகம் உருகி விழுந்து மீண்டும் தனது சாம்பல் நிறத்துக்குத் திரும்பிவிட்டது.
க்ளாரிசின் வீட்டிலிருந்து சிரிப்புச் சத்தம் மிதந்து வந்தது.மிகத் தளர்வான இயல்பான சிரிப்புச் சத்தங்கள்.உற்சாகமான பேச்சொலிகள்..கொஞ்சம் கூட அவற்றில் செயற்கை இல்லை .சுற்றிலும் இருளால் பொதியப் பட்ட வீடுகள் நடுவே தான்மட்டும் தனியாக அந்த நள்ளிரவிலும் ஒளிரும் அந்த வீட்டிலிருந்து அவர்களது பேச்சுக் குரல்கள் சிரிப்புகள் காற்றில் ஒரு வசியவலையை நெய்து பிரித்து மீண்டும் நெய்து கொண்டிருந்தன
மாண்டேக் சட்டென்று வெளியே வந்து புல் தரையைக் கடந்து அவர்கள் வீட்டின் முன்னால் போய் நின்றான்.கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.கொஞ்சநேரம் அப்படியே நிழலில் நின்றுகொண்டிருந்தான்.கதவைத் தட்டி உள்ளே போகலாமா என்று கூட யோசித்தான்.''நான் உள்ளே வருகிறேன்.வந்து எதுவும் செய்யாமல் பேசாமல் நீங்கள் பேசுவதை மட்டும் சும்மா கேட்டுக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?''என்று சொல்லலாமா என்று...
ஆனால் மாண்டேக் உள்ளே செல்லவில்லை.அவன் முகத்தின் மீது ஒரு பனிப்பாளம் போன்று படர்ந்த பாவனையுடன் உள்ளே அந்த மனிதர்(அவளது மாமா?) பேசுவதை மட்டும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தான்.
அந்த மனிதர் சொல்லிக் கொண்டிருந்தார்
''இது உண்மையில் பயன்படுத்து -தூர எறி உலகம்.யார் மேலாவது நம் நமது மூக்கைச் சிந்துகிறோம்.பிறகு துடைத்துத் தூர எறிந்துவிடுகிறோம்.ஒவ்வொரு வரும் இவ்விதமே அடுத்தவரைச் செய்கிறோம்.இதில் எனது விளையாட்டு அணி என்று எதைச் சொல்வது ?அவர்களுக்குப் பெயர்களே இல்லாதபோது ?இருக்கட்டும் .இப்போது அரங்கத்துக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறவர்கள் என்ன நிறச சட்டை அணிந்துகொண்டிருக்கிறார்கள் ?""
மாண்டேக் வீட்டுக்குத் திரும்பினான்.ஜன்னலை அடைக்கவில்லை,மில்ட்ரெட் நன்றாக இருக்கிறாளா என்று பார்த்தான்.அவளைச் சுற்றி கவனமாகப் போர்த்திவிட்டு பிறகு நிலவொளி தனது கன்னங்களில் படியக் கண்மூடிக் கிடந்தான்.
ஒரே ஒரு மழைத் துளி .க்ளாரிஸ்.
இன்னொன்று மழைத்துளி -மில்டெரெட் .இன்னொன்று இன்று இட்ட தீ.தூக்க மாத்திரைகள்.தூர எறியும் திசுக் காகிதங்கள் .மாமா.கிளாரிஸ் மில்ட்ரெட் மாமா சிரிப்பு
மழை.புயல்.இடிமுழக்கம் .கொடும் மழை.வெடித்துச் சிதறும் எரிமலை.எல்லாம் சேர்ந்து பெரிய இரைச்சலுடன் காலையை நோக்கிச் செல்லும் ஒரு பிரவாகம்.
''இனி முடியாது''என்று சொல்லிக் கொண்டே அவன் ஒரு தூக்க மாத்திரையை நாக்கில் கரைத்துக் கொண்டான்
காலை.மணி ஒன்பது.மில்ட்ரெடின் படுக்கை காலியாக இருந்தது.
அவன் சட்டென்று இதயம் துடிக்க எழுந்து கீழே ஓடி அடுக்களைக் கதவருகே நின்றான்.
டோஸ்டரின் வாயிலிருந்து வெளியே வந்ததை இயந்திரச் சிலந்திக் கைகள் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டிருக்க அவள் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் காதுகளில் வழக்கமான ஹெட்போன்கள் காலத்தைக் கரைத்துக் கொண்டிருந்தன
''நீ நலமாக இருக்கிறாயா''என்று அவன் கேட்டான்.
அவள் நிமிர்ந்துபார்த்து அவன் உதடுகளை வாசித்து ஆம் என்று தலை அசைத்தாள்.பிறகு டோஸ்டரை இன்னொரு டோஸ்டுக்காக அமைத்து வைத்தாள்.
அவன் உட்கார்ந்தான்.அவள் ''ஏனென்றே தெரியவில்லை.ரொம்ப பசிக்கிறது ''
அவன் ''நேற்று இரவு ...''என்று ஆரம்பித்தான்
''நேற்றிரவு தூக்கமே இல்லை.கடவுளே ரொம்ப பசிக்கிறது இன்று ''என்றாள்
அவன் மறுபடியும் ''நேற்றிரவு...''என்று ஆரம்பித்தான்
''நேற்றிரவு என்ன??''
''உனக்கு ஒன்றும் நினைவில்லையா?""
''என்ன?எனக்கு ஒன்றும் நினைவில்லை,நேற்று இங்கு பார்ட்டி எதுவும் நடத்தினோமா? கடுமையான ஹாங் ஓவர் போல உணர்கிறேன்.கொடும் பசி வேறு.நேற்று இரவு இங்கு யார் எல்லாம் வந்தார்கள்''
அவன் ''சிலர்''என்றான்
''அப்போ அதுதான். பார்ட்டி!வயிறு வலிக்கிறது .பார்ட்டியில் நான் ரொம்ப ஒன்றும் முட்டாள்த் தனமாக நடந்துகொள்ளவில்லையே ?"
அவன் அமைதியாக ''இல்லை''என்றான்
டோஸ்டர் இன்னொரு டோஸ ட்டை அவனிடம் வெண்ணெய் தடவி தள்ளியது.அவன் அதை நன்றியுடன் பெற்றுக் கொண்டான்.
''உனது முகம் கூட சரியில்லை ''என்றாள் அவள்.
மாலையில் மழை பெய்தது.மொத்த உலகமும் சாம்பலாக மாறியது.அவன் கூடத்தின் நடுவில் நின்றுகொண்டு தனது உடலின் மீது அந்த ஆரஞ்சு நிற நெருப்புப் பல்லியின் சின்னத்தை அணிந்துகொண்டான் .பிறகு குளிர்சாதனக் கருவியின் காற்றுத் துளையைப் பார்த்தவண்ணமே கொஞ்சநேரம் நின்றுகொண்டிருந்தான்.மில்ட்ரெ ட் தனது டிவி சுவர் அறையில் வாசித்துக் கொண்டிருந்த ஸ்க்ரிப்டில் இருந்து ஒருகணம் விடுபட்டு ''ஒரு மனிதன் சிந்திக்கிறான்!''என்றாள்
அவன் ''ஆம்.உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.மில்ட்ரெட் ,நீ நேற்றிரவு எல்லா தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டுவிட்டாய் ''என்றான்
அவள்ஒருகணம் தயங்கி ''ச்ச்சே.இருக்காது''என்றாள் பிறகு ''நான் ஏ னப்படி செய்யவேண்டும்?''
''ஒருவேளை நீ முதல் இரண்டு தூக்க மாத்திரைகளை எடுத்ததும் அதை மறந்து இன்னும் இரண்டு தூக்க மாத்திரைகளை எடுத்திருக்கலாம்.அப்புறம் அதையும் மறந்து இன்னும் இரண்டு.அப்புறம் இன்னும் இரண்டு.இப்படியே முப்பது மாத்திரைகளையும்..'
அவள் மறுபடியும் ''நான் ஏனப்படி செய்யவேண்டும்??"'என்றாள் பிறகு ''நான் அப்படி செய்யவில்லை.செய்யவே மாட்டேன் ஒருபோதும் ''என்றாள்.
அவன் ''நீ சொன்னால் சரிதான்''என்றான்.பிறகு ''இன்று என்ன புதிதாக ?""
''இது இன்னும் பத்து நிமிடத்தில் நமது டிவி சுவரில் வரபோகிற ஒரு நாடகம்.என் பக்க ஸ்க்ரிப்ட் காலையில்தான் வந்தது .இது ஒரு புதுமையான இன்டராக்டிவ் நாடகம் ,இதில் ஒரு காரக்டர் நான்.இல்லத்தரசி ஹெலன்.எனது வசனங்கள் மட்டும் இதில் முன்கூட்டியே தயாரிக்கப் படாமல் இருக்கும்.நாடகம் நிகழும்போது அதல் வரும் மற்ற காரக்டர் நீ என்ன நினைக்கிறாய் ஹெலன்?என்று என்னைப் பார்த்துக் கேட்பார்.நான் சூழலுக்குத் தகுந்தாற்போல யோசித்து எதையாவது சொல்லவேண்டும்.ஜாலியாக இல்லை?""
அவன் ''நிச்சயமாக''என்றான் ''எது பற்றிய நாடகம் இது??''
''அதான் சொன்னேனே.இது மூன்று மனிதர்கள் பற்றியது பாப்.ரூத்.ஹெலன்.நான்தான் ஹெலன்''
'ரொம்ப ஜாலியான நாடகம் மாண்டேக்.நாம் நமது நான்காவது சுவரையும் ஒரு டிவி சுவராக மாற்றிவிட்டால் இன்னும் ஜாலியாக இருக்கும்.வெறும் இரண்டாயிரம் டாலர்கள் தானே ?எப்போது நம்மால்முடியும் மாண்டேக்??""
''அது எனது வருடச் சம்பளத்தில் மூன்றில் ஒருபங்கு''
''அது எனது வருடச் சம்பளத்தில் மூன்றில் ஒருபங்கு''
''வெறும் இரண்டாயிரம் டாலர்கள்''என்றால் அவள்.''நீ என்னைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேண்டும் மாண்டேக்.நான்காவது டிவி சுவர் மட்டும் கிடைத்துவிட்டால் நமது அறையும் பெரிய பணக்கார்கள் அறை போல ஆகிவவிடும் இல்லையா?வேண்டுமெனில் நாம் சில விசயங்களை தியாகம் செய்துவிடலாம் ''
''சில விசயங்களை தியாகம் செய்துதான் நாம் இந்த மூன்றாவது டிவி சுவரையே வாங்கினோம் நினைவில்லையா மில்ட்ரெட் ?இரண்டு மாதங்கள்தான் ஆயிற்று ''
அவள் அவனையே உற்றப் பார்த்துவிட்டு 'அப்படியா?நல்லது மாண்டேக்.குட்பை''
''குட்பை''என்றவன் திரும்பி ''உனது நாடகம் சந்தோசமாக முடிகிறதா ?"என்று கேட்டான்
''நான் அதுவரை இன்னும் படிக்கவில்லை''
அவன் குனிந்து அவளது ஸ்க்ரிப்டின் கடைசிப் பகுதியைப் படித்துவிட்டுத் திரும்ப அவள் கையிலேயே கொடுத்துவிட்டு வெளியே மழைக்குள் நடந்தான்.
மழை குறைந்து கொண்டிருக்க க்ளாரிஸ் பாதையின் நடுவில் நின்றுகொண்டு வானோக்கி தன் முகத்தை உயர்த்திக் கொண்டிருந்தாள் அவள் முகத்திலிருந்து சில மழைத்துளிகள் சிதறின அவள் அவனைக் கண்டுகொண்டு புன்னகைத்தாள்.
''ஹல்லோ??
''அவன் ஹலோ''என்றான்''இப்போது புதிதாய் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய் க்ளரிஸ்?""
இன்னும் பைத்தியமாய்த்தான் இருக்கிறேன்.மாண்டேக்.மழை நன்றாக இருக்கிறது எனக்கு மழையில் நடக்கப் பிடிக்கும்''
''எனக்குப் பிடிக்காது''
''ஒருதடவை செய்துபார்த்தால் உங்களுக்கும் பிடிக்கலாம்''
''செய்ததே இல்லை''என்றான் அவன்.
அவள் தனது உதடுகளை சப்பிக் கொண்டு ''மழை ருசியாகக் கூட இருக்கிறது''
''நீ என்ன செய்கிறாய்?இப்படி எல்லாவற்றையு ம் ஒருமுறை செய்துபார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர?'
''சிலவற்றை இரண்டாவது முறையும் செய்து பார்ப்பதுண்டு ''என்றாள் அவள்.தனது கைகளைப் பார்த்துக் கொண்டே.
''உன் கைகளில் என்ன வைத்திருக்கிறாய் க்லாரிஸ்?""
''டான்டலியன் மலர்கள்!.இந்தப் பருவத்தின் கடைசி மலர்கள்.கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.டான்டலியன் மலர்களை நாடியின் கீழ் தேய்க்கும் வழக்கத்தைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா மாண்டேக்?""அவள் சிரித்தவண்ணம் அந்த மலர்களை தனது நாடிக்குக் கீழ்த் தேய்த்தாள். ''இதன் நிறம் நம் மேல் பற்றிக் கொண்டால் நாம் காதலில் இருக்கிறோம் என்று அர்த்தம் .நான் காதலில் இருக்கிறேனா மாண்டேக்?"'
அவனால் அவளை விட்டுக் கண்களை எடுக்கவே முடியவில்லை.
''அங்கே மஞ்சளாக இருக்கிறது ''
'ரொம்ப நல்லது,இப்போது நீங்கள் முயற்சி செய்யுங்கள்''
அவன் தயங்கி ''எனக்கு அது வேலை செய்யாது''
ஆனா ல் அவன் வேண்டாம் என்று சொல்லும்முன்பு அவள் அந்த மலர்களை அவன் நாடிக்குக் கீழ்த் தேய்த்தாள் ''அசையதிருங்கள் மாண்டேக் ''
பிறகு குனிந்து பார்த்தாள் அவள் புருவங்கள் இடுங்கின.
அவன் ''என்ன?"" என்றான்
''ப்ச்.நீங்கள் யாருடனும் காதலில் இல்லை''
''இல்லை!நான் காதலில் இருக்கிறேன்!""
'ஆனால் இது காட்ட மாட்டேன் என்கிறதே ''
''இல்லை.நான் ரொம்பக் காதலில் இருக்கிறேன்''என்றான் அவன்.பிறகு ரொம்பக் காதலில் இருப்பதுபோன்ற ஒரு முகத்தைக் கொண்டுவர முயன்றான் .ஆனால் அப்படியொரு முகமே அவனிடம் இல்லை.
அவள் ''தயவு செய்து அப்படிப் பார்க்காதீர்கள் ''
அவன் ''அது இந்த மலர்களின் தவறுதான்.நீ முதலில் அவற்றை உன்மீது பயன்படுத்தினாய்.அதனால்தான் அவை என்னிடம் பற்ற மாட்டேன் என்கின்றன''
அவள் அவனது கையைத் தொட்டு ''அப்படியாகத்தான் இருக்கவேண்டும்.விடுங்கள் நான் உங்களை கவலைப் படுத்திவிட்டேன் போலிருக்கிறது மன்னியுங்கள்''
''அதெல்லாம் ஒன்றுமில்லை ''என்றான் அவன் ''நான் நன்றாகத்தான் இருக்கிறேன்''
''நல்லது நான் போகவேண்டும் .உங்களைக் கோபப் படுத்தவில்லை என்று நம்புகிறேன் ''
''கோபமில்லை.கொஞ்சம் தடுமாறிவிட்டேன் உண்மைதான்''
''நான் சென்று எனது மனநல மருத்துவரைப் பார்க்கவேண்டும் அவர்கள் என்னைப் பார்க்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்..நான் எப்போதும் அவரிடம் என்ன சொல்வதென்று தீர்மானித்து விட்டே செல்வேன்.எப்போதும் அவர் நான் ஒரு வழக்கமான வெங்காயம்தான் என்று சொல்வார்.பிறகு அவர் அந்த வெங்காயத்தின் அடுக்குகளை உரிக்க விட்டுவிட்டு வந்துவிடுவேன்''
''உனக்கு ஒரு மனநல மருத்துவர் தேவைப்படுகிறார் எ ன்றே நானும் நினைக்கிறேன்''
''உண்மையாகவா?"'
அவன் தயங்கி ''இல்லை''என்றான்
''அவருக்கு நான்ஏ ன் காடுகளில் தனியாக அலைகிறேன் பறவைகளைத் துரத்திக் கொண்டு பட்டாம்பூச்சிகளைத் சேர்த்துக் கொண்டு அலைகிறேன் என்று தெரியவேண்டும்.எனது பட்டாம்பூச்சிகள் சேகரிப்பை ஒருநாள் உங்களிடம் காட்டுகிறேன்''
''நல்லது''
''அவர்களுக்கு நான் நாள் முழுவதும் என்ன செய்கிறேன் என்று தெரியவேண்டும்.நான் சொல்வேன்.சிலநேரம் நான் சும்மா அமர்ந்து எதையாவது யோசனை பண்ணிக் கொண்டிருப்பேன் என்று.ஆனால் என்ன சிந்திக்கிறேன் என்று சொல்லமாட்டேன்.சிலநேரங்களில் இதுபோல மழையில் முகத்தைக் காட்டிக் கொண்டு நிற்பேன் என்றும் சொல்வேன்.மழைக்கு வைனின் ருசி உண்டு.தெரியுமா?"'
அவன் ''தெரியாது''என்றான்
''நீங்கள் என்னை மன்னித்துவிட்டீர்கள் தானே??''
அவன் ''ஆமாம் ''என்றான் ''ஏனென்று தெரியவில்லை. நீ ஒரு வினோதமான பெண்.பலநேரங்களில் எரிச்சலும் படுத்துகிறாய் எனினும் உன்னை மன்னிப்பது எளிதாக இருக்கிறது.உன் வயதென்ன சொன்னாய்?பதினேழு?""
''அடுத்த மாதம்''
''வினோதம் எனது மனைவியின் வயது முப்பது.ஆனால் நீதான் மிக முதிர்ந்த பெண் போல எனக்கு சிலநேரங்களில் தோன்றுகிறாய் ''
''நீங்களும் ஒரு வினோதமான மனிதர்தான்.மாண்டேக்.சமயங்களில் நீங்கள் ஒரு தீத்துறை வீரர் என்பதையே மறந்துவிடுகிறேன்.ஓ ..மறுபடி உங்களை எரிச்சல் படுத்திவிட்டேனா ?""
''பரவாயில்லை''
.''இதில் நீங்கள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?உங்களது இந்த வேலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?நீங்கள் நிச்சயமாக மற்றவர்களைப் போல அல்ல.எனக்கு அவர்களில் சிலரைத் தெரியும்.அவர்கள் உங்கள் முகத்தைப் பார்த்தே பேச மாட்டார்கள்.ஆனால் நீங்கள் நான் பேசுவதைக் கேட்டீர்கள்.நிலவைப் பற்றி ஏ தோ சொன்னபோது நீங்கள் நிலவைப் பார்த்தீர்கள்.மற்றவர் கள் அப்படிச் செய்ய மாட்டார்கள்.நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.அல்லது உங்களை மிரட்ட ஆரம்பிப்பார்கள் .ஆம் வினோதம்.நீங்கள் இந்த தீத்துறை வேலையில் இருப்பது .இது உங்களுக்குப் பொருந்தாதது போல எனக்குத் தோன்றுகிறது''
மாண்டேக் தனது உடல் இரண்டாகப் பிளப்பது போல உணர்ந்தான்.ஒருபக்கம் வெப்பமாக மறுபக்கம் குளிராக .ஒருபக்கம் மிருதுவாக மறுபக்கம் கடினமாக ஒருபக்கம் நடுங்கிக் கொண்டு ஒருபக்கம் நடுங்காமல் ...இரண்டு உடல்கள்.இரண்டு உடல்களும் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு...
''உன்னுடைய அப்பாய்ண்ட்மெண்டுக்கு நேரமாகிவிட்டது க்ள
ரிஸ்''
அவள் எதுவும் பேசாமல் அவனை அந்த மழையில் விட்டுவிட்டு ஓடி மறைந்தாள் .
அவள் போய் நெடுநேரம் ஆனபின்பே மாண்டேக் அந்த இடத்தைவிட்டு அசைந்தான்
பிறகு மெதுவாக மிக மெதுவாக தலையை உயர்த்தி சில கணங்களுக்கு மட்டும் ........வாய் திறந்து மழையை ருசித்தான்
No comments:
Post a Comment