Friday, June 17, 2011

கொஞ்சம் பிதற்றல்...

1.ஆழக் குதிக்கும்
'அலை கடலினுள்
குனிந்து நோக்கினேன்
யுகத் தொடக்கத்திலிருந்து அங்கே
நீலநாவாய் என
மிதந்து கிடக்கும்
வலியச் சுழல்மீனும்
நிமிர்ந்து நோக்கியது

ஒரு கணம்..

பாறையின் உச்சியில் இருந்து
குனிந்து நோக்கும் மீனாக
நானிருந்தேன்
உறை கடலில் இருந்து
அண்ணாந்து நோக்கும்
மனிதனாக அது ...





2.நேற்று 
அனல் எரியும்
மாநகரக் கூடல்
இன்று அலையின்
உப்பு தெறிக்கும் குமரிமுனை
நேற்று ஜனத்திரள் நடுவே
தொலைந்த துளி..
இன்று
நெடிய கடற்கரையில்
ஒற்றையாய் உலவும் காகம்
நேற்று பிடரியில் சுடுவெயில்
இன்று மார்பில் அறையும் குளிர்மழை
நேற்று அவளுடன் உறவில்
இன்று தனிமையில் பிரிவில்

அதனால் என்ன....
நேற்றும் நான்
இன்றும் நான் ..

சலிக்கச் சலிக்கத்
தன்னைத் தின்றும்
தான் தீராத
நான்..


3.வழக்கம் போல
இன்றும் விடிந்தது
இன்று காலையும்.

வழக்கம் போலவே
இன்றும் நான்
உயிரோடிருக்கிறேன்..

வழக்கம் போலவே
என்பதைத் தவிர
இதில் வேறு செய்தி
எதுவும் இல்லை...

4.ஒரு எச்சில் தட்டு போல
கிடக்கிறது நிலவு
சிதறிய பருக்கைகளாய்
விண்மீன்கள்...

வேறெப்படியும்
தோன்றவில்லை
வெறும் வயிற்றோடு
வீதியில் படுத்துக் கொண்டு
விண்ணை வெறிப்பவனுக்கு

5.பார்த்துக் கொண்டிருக்கையிலேயே
பசிய இலை
நெளிந்து
பச்சைப் புழுவாய் மாறிற்று
புழுவும் விரிந்து
சர்ப்பமாகக் கூடுமென
அஞ்சி விலகினேன்

காத்திரு
என்று அதட்டியது ஒரு குரல்
புழு மலர்ந்து
பூவாகவும் கூடும் என்றது



6.அப்புறம் ஒரு உதவி
நான் வேலைக்குச் சென்று வரும்வரை
இந்தக் கவிதையை சற்று
உங்கள் பாதுகாப்பில் வைத்திருங்கள்
பத்திரம்
பலநேரம்
தப்பித்துப் போயிருக்கிறது


7 comments:

  1. Fantastic! இந்த கவிதையை படித்தவுடன் என் மனதில் தோன்றிய உணர்வை அப்படியே விவரிக்க என்னால் முடியவில்லை போகன். 'மிகவும் ரசித்தேன்' என்று சொல்லி என் உணர்வை சுருக்கி முடித்து விடவும் மனம் வரவில்லை. அதே நேரம் எவ்வளவு ரசித்தேன் என்று விவரிக்கவும் முடியவில்லை. மிக மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அன்பு வணக்கங்கள்,

    வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை

    அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத

    வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை.

    இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு,

    குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும்

    என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து

    எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின்

    கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

    நன்றி !

    ReplyDelete
  3. நன்றி சுந்தர் ,மீனாக்ஷி
    ரிஷான் மதம் சார்ந்த பகுத்தறிவு என்று எதை நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை.இது பற்றிய என் கருத்து மனித சரித்திரத்தின் பெரும்பகுதியை மதங்கள் ஆக்கிரமித்துவிட்டன என்பதே.அவற்றின் பயன்மதிப்புக்கும் மீறியே அவற்றை நாம் ஏராளம் பேசிவிட்டோம் ...இது முழுக்க முழுக்க அகவயமானது என்பதால் நீங்கள் பேசிப் புரியவைக்க முடியுமா என்பதும் சந்தேகமே ..குறைந்தது ஐயாயிரம் ஆண்டுகளாக முயல்கிறோம்..இல்லையா!இங்கு நான் பேசுவது நாத்திகம் அல்ல என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  4. ungkal kavithai thappiththu vasakan kaikalil thaan thaluvukirathu enave payappada vendaam.. vaalththukkal

    ReplyDelete
  5. தலைப்பை விட கவிதைகள் பரவாயில்லை :)

    கடைசிக் கவிதையின் குறும்பு ரசிக்க முடிகிறது.

    ReplyDelete
  6. பாதுகாப்பாகவே வைத்திருக்கிறேன். :)
    --

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails