Friday, January 28, 2011

சுவர்

நான்
என் கண்ணை  அறிந்ததிலிருந்து
இந்தச் சுவரை அறிவேன்
வெயிலோ இள மழையோ
சுடுங் கோடையோ
சுருள் கத்திக் குளிரோ
எல்லா நேரங்களிலும்
எல்லா  திசைகளிலும்
விழித்திருக்கும்போதும்
வளை இருட்டில்
ஒளி புதைந்திருக்கும்போதும்
என்னைச் சுற்றி
ஒரு மலைப் பாம்பு போல்
கணத்த மூச்சுடன்
பரவிக் கிடக்கிறது
இந்தச் சுவர்.

ஒவ்வொரு முறை
இந்த சுவருக்கு மறுபுறம்
என்ன இருக்கிறது
என வியப்பதுண்டு
சற்றேனும்
விபரச் சுமை கொண்டவரென்று
தோன்றுபவர் எல்லாரிடமும்
கேட்பதுமுண்டு
பலர் எந்தச் சுவர் என்று
திரும்பிக் கேட்டனர்
மலைப் பாம்பு
விழுங்கிய இரை
மலைப்பாம்பே ஆனது போல்
அவர்கள்
திரும்பிய திசைகளெங்கும்
சுவற்றில் முட்டி முட்டி
 சுவர்களாகவே
மாறிவிட்டிருந்தது அறிந்து விலகினேன்
இன்னும் சிலர்
சுவற்றுக்கப்புறம்
கிடப்பதுதான் ஏடன் தோட்டம்
என்று விவரித்தனர்
பறக்கும்  வானவில்கள்
சிரிக்கும் மலர்கள்
உயிர் கசிந்து வழியும் கனிகள்
கிடக்கும் கடவுளின் தோட்டம் என்றனர்
என்றும் இறங்காத முலைகளுடன்
என்றும் உதிராப் புன்னகையுடன்
தேன் கண்ணியர்
திரியும் தோட்டம்
என்றும் வீழாத குறிகளுடன்
படர் தோள் ஆடவர் கூட்டம்
அலையும் தோட்டம்
என்றபோது
என் இதயம் ஏங்கி
அது நோக்கி
எம்புவதை உணர்ந்தேன்

ஆனால் இன்னும் சிலரோ
நம்பாதே என்று எச்சரித்தனர்
உதிரப் பற்களுடன்
கடுவாய்ப் புலிகள்
அலையும் காடது எனறார்கள்
வழிதப்பியவர்களின்
எலும்புகள்
அவற்றின் வயிற்றில்
குலுங்கும்போது
எழுப்பும் சப்தம்
இரவின் அமைதியில்
சிலசமயம் இங்கும் கேட்கிறது என்றார்கள்

நான் இப்போது
விலக்கப் பட்ட காதலன் போல் ஆகிவிட்டேன்
இரவும் பகலும்
சுவரைப் பற்றி
சுவரிலே எழுதி எழுதி
அழித்துக் கொண்டிருந்தேன்

என் கனவுகள்  கூட
சுவரைப் பற்றியதாகவே இருந்தன
அல்லது சுவற்றைக்
கடந்து கிடக்கும்
வெளி பற்றி...
ஓர் முழுநிலவன்று
என் நெஞ்சுக் கூட்டையே
ஒரு சுவரென உணர்ந்து
சுவாசம் முறிந்து
மயங்கியபோது
மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள்
பல வைத்தியர் வந்தும்
என் நோய்
தப்பிக் கொண்டே இருந்தது
எல்லா மருந்துகளும்
நீர்த்துவிட்ட
 ஒரு மோசமான  இரவின் முடிவில்
பக்கத்துப் படுக்கையில்
இருந்தவர் எழும்பி
என்னருகில் வந்தார்
என்னுடன்  வா என்றழைத்துப் போனார்
ஒரு திருகாணி போல்
முறுகி முறுகி
மேலேறிய
படிக்கட்டுகள் வழி
அவர் போய்க் கொண்டே இருந்தார்
ஒரு  யுக ஏறலுக்குப் பிறகு
படிகள்
ஓரிடத்தில் நிலைத்தன
அவர்
தாடிக்கடியில்
மிதக்கும் விழிகளுடன் திரும்பி
இங்கிருந்து பார்
சுவற்றுக்கப்புறம்
உள்ள  உலகை
என்று சொல்லி விலகினார்
நான் நடுக்கத்துடன்
ஏறிப் பார்த்தேன்

இந்த சுவற்றுக்கு  அப்பால்
இருப்பது
ஏடன் தோட்டமோ
கொடு மிருகக்  காடோ
என்ற பதைப்பில்.....


ஆனால் கண்டேன்
இந்த சுவற்றுக்கப்புறம்
இருந்தது
இன்னுமொரு சுவரே....
அதற்குப் பிறகு
இன்னுமொரு சுவர்
அதற்கப்புறம்
இன்னுமொரு....
அதற்கப்புறமும் .....
14 comments:

 1. unkal kavithaikal niraiya vaasiththen, anaiththum arumai bogan.

  ReplyDelete
 2. என் கனவுகள் கூட
  சுவரைப் பற்றியதாகவே இருந்தன
  அல்லது சுவற்றைக்
  கடந்து கிடக்கும்
  வெளி பற்றி...//அருமையான வார்த்தை பிரயோகம். அருமை..
  See,
  http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.html

  ReplyDelete
 3. கவிதை பிடித்திருந்தால் இன்ட்லி, மற்றும் தமிழ்மணத்தில் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

  நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

  ReplyDelete
 4. நெடுங்கவிதை நல்லாயிருக்குதுங்க.

  ReplyDelete
 5. கடைசியில் வெங்காயம் தான்

  good one !

  ReplyDelete
 6. 'வளை இருட்டில்
  ஒளி புதைந்திருக்கும்போதும்'

  கொல்ரீங்க சார். ரசித்தேன்.

  ReplyDelete
 7. //மலைப் பாம்பு
  விழுங்கிய இரை
  மலைப்பாம்பே ஆனது போல்//

  இப்பொழுதெல்லாம் விடுமுறையில் செல்லும் போது என் மனைவியிடம் சொல்லும் வார்த்தை.. அதீதமாய் உண்டு முடித்த பின்.. மலைப்பாம்பு இரை எடுத்தது போல் இருக்கிறது என்று..

  ReplyDelete
 8. மூன்று கவிதைகளை எழுதியிருக்கிறீர்கள் - சுவர் வெறும் பாலம்.

  நிறைய வரிகளில் சொல்லாட்சி அருமை. 'வீழாத குறிகள்' பிரயோகம் இப்போது தான் அறிமுகம். ஒரு எம்ஜிஆர் கதை நினைவுக்கு வருகிறது :)

  ReplyDelete
 9. மிகவும் அருமை!

  ReplyDelete
 10. பத்மாவின் கமென்ட் பிரமாதம்.
  கடைசியில் வெங்காயம்! இதுவே தத்துவம்.

  ReplyDelete
 11. திருகாணி போல் படிக்கட்டு - ரொம்ப ரசித்தேன்.

  ReplyDelete
 12. தாடிக்கடியில் மிதக்கும் விழிகளா?

  ReplyDelete
 13. //நான் இப்போது
  விலக்கப் பட்ட காதலன் போல் ஆகிவிட்டேன்
  இரவும் பகலும்
  சுவரைப் பற்றி
  சுவரிலே எழுதி எழுதி
  அழித்துக் கொண்டிருந்தேன்//

  சுவற்றுக்காப்பால் சிந்தனை நமக்கப்பாலும் தொடந்து கொண்டேதானிருக்கும்... நெடுங்கனவு இது!
  நல்ல கவிதை நண்பரே!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails