Tuesday, January 18, 2011

ஜெயமோகனும் பாலகுமாரனும் பின்னே நானும்..

 
மெட்டி படத்திலிருந்து இளையராஜா இசையமைத்த இந்தப் பாடல் இளமையில் நான் திரும்பத் திரும்பக் கேட்ட பாடல்.பாடியது தீபன் சக்கரவர்த்தி போல் யாரோ என்று நினைத்திருந்தேன்.மெல்ல மெல்ல நாட்களின் சருகுகள் மூடிய எத்தனையோ நல்ல விசயங்களில் ஒன்றாய் இந்தப் பாடலும் ஆகியது.சமீபத்தில் ஜெயமோகனின் தளத்தின் மூலமாக இதைப் பாடியவர் பிரம்மானந்தன் என்று தெரிந்தது.ஆனால் அவரைப் பற்றி அவர் எழுதியிருந்த கட்டுரை மிகுந்த அதிர்ச்சியையும் மனச் சோர்வையும் அளித்தது.
பிரமானந்தன் ஞாபகத்தின் புதைகுழிகளில் தொலைந்த இன்னுமொரு நட்சத்திரம்.ஜெயிக்கிற ஒவ்வொரு ஜேசுதாசுக்கும் பின் திறமை இருந்தும் தோற்கடிக்கப் படும் ஒரு நூறு பிரம்மானந்தன்கள் இருக்கிறார்கள்.இசை மட்டுமலாது இலக்கியம் சினிமா என்று எல்லா துறைகளிலும் பாடப்படாத புகழின் மென் வெளிச்சம் தொடாத ஓராயிரம் நிழல்கள் நெளிந்து கொண்டே இருக்கின்றன.பின்னர் நினைவிலிருந்து உதிர்ந்து போகின்றன.திறமை மட்டுமே அல்ல ஜெயிப்பதற்குத் தேவையான விஷயம்.வேறு என்னென்னவோ வித்தைகள் தேவைப் படுகின்றன.அவற்றைக் கற்றுக் கொள்ளாதவர்கள்,அவை எல்லாம் கற்றுக் கொள்ள மாட்டேன் என்று தருக்கிய நடையுடன் நிமிர்ந்த பார்வையுடன் அலைந்தவர்களை எல்லாம் வாழ்வு அலட்சியமாய் ஒரு குப்பையைப் போல கசக்கி வீசி எறிந்திருக்கிறது..பிரம்மனந்தன் தன கடைசிக் காலங்களில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அனாமி யாக குடிப்பதற்கு காசு கேட்டவாறு திரிந்தார் என்று சொல்கிறார்கள்.கேட்கும் போதெல்லாம் முதுகு சொடுக்கும் இந்தப் பாடலைப் பாடிய அதே குரல் யாசகம் கேட்டுத் திரிந்திருக்கிறது என்று வாசித்த போது சட்டென்று எல்லாவற்றின் மீது நம்பிக்கை உடைந்தது.

...ஜெயமோகன் திரும்பத் திரும்பத் தன நாவல்களில் தனிமனிதனின் அல்லது ஒரு சமூகத்தின் அல்லது ஒரு தத்துவத்தின் வீழ்ச்சியைப் பேசிக் கொண்டே இருப்பார்.பெரும்பாலும் ஆழ்ந்த மனச் சோர்வுடனே அவரது நூல்களை விட்டு விலகுவேன்.ஏற்கனவே அத்துணை வெளிச்சமற்ற என் உலகம் மேலும் பயமுறுத்தும் அந்தகாரத்துடன் என்னைச் சுற்றி எந்நேரமும் உடைந்து விழுந்துவிடக் கூடும் என்ற பதற்றத்துடன் சூழ விலகி ஓடி சுஜாதாவின் புத்தகத்தையோ பால குமாரனையோ படிக்க ஆரம்பிப்பேன்.மெல்ல கோழை உருகி மூச்சு சீராவதை உணரும் ஆஸ்த்மா நோயாளி போல தளர்ந்து வெளியே நடக்கையில் ஒவ்வொரு தடவையும் நினைத்துக் கொள்வேன்.இனி ஜெமோ மட்டுமல்ல தீவிர இலக்கியம் என்ற பெயரில் வரும் எதையுமே தொடக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன்.ஒவ்வொரு முறையும்... இந்த முறையும் நினைத்தேன்.இந்தக் கட்டுரையை நான் படித்திருக்கக் கூடாது.யாரிந்த பிரம்மானந்தன் இவரைப் பற்றி எழுதி ஜெமோ என் நிம்மதியில் எதனால் முள் தொடுக்கிறார் என்று அவர் மீது மெல்லிய சீற்றம் கூட எழுந்தது.சட்டென்று உதறி ரத்தப் படலம் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த பின்னால்தான் என் உலகம் நிமிர்ந்தது.நான் ஏன் இன்னும் காமிக்ஸ் படித்துக் கொண்டிருக்கிறேன் என்ற நீண்ட நாள் கேள்விக்கும் பதில் கிடைத்தது.எளிய பதில்தான்.நான் காமிக்ஸ் படிப்பதும் பாலகுமாரன் படிப்பதும் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடாமல் இருக்கத்தான்...

http://www.jeyamohan.in/?p=11498

8 comments:

  1. மகாபாரதத்தின் இறுதிப்பகுதி இப்படித்தான் இருக்கும். அர்ச்சுனன் கிருஷ்ணனின் உறவினர்களை திருடர்களிடமிருந்து காப்பாற்றபோராடி தோற்றுவிடுவான். பாண்டவர்கள் வலிமை குன்றி இறந்து போவார்கள். ஆனாலும் அப்பகுதிஇல்லையென்றால் மகாபாரதம் முழுமையடைவதில்லை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பல்வேறு மனிதர்கள், நிறுவனங்கள், தத்துவங்களின் சிதைவுறுதல் பற்றியதுமட்டுமே. இப்போது நினைத்துப் பார்க்கையில் அவருடைய அனைத்து நாவல்களும் அப்படிப்பட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. ஆனால் இந்நூல்கள் என்னிடம் ஏற்படுத்திய விளைவு வித்தியாசமானது. இவ்வுலகே ஒரு காமிக்ஸ்புத்தகமாகிவிட்டது. எல்லோரும் (என்னையும் சேர்த்து ) மிக்கி மௌஸாகவும் டொனால்ட் டக்காகவும் மிஸ்டர் பீனாகவும் தோன்றத் தொடங்கிவிட்டனர். உலகநியதியின் ஒரே அர்த்தம் அது அர்த்தமற்றது என்பதே.

    ReplyDelete
  2. வாழ்வின் கடுமையான வீச்சின் நடுவில், தோல்வியைப் போற்றும் படைப்பு தருவது மனச்சோர்வையே. பதின்மத்தில் படித்த தீவிர எழுத்துக்களை இப்போது நான் ஒதுக்க இதுவும் காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  3. இவரையும் அறிந்ததில்லை; அவரையும் அறிந்ததில்லை. அறிந்தாலும் வருந்துவேனா, சந்தேகம் தான்.

    ReplyDelete
  4. சமூக நோக்கு ஓரளவுக்கு செக்ஸ் போல என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. ஒரேயடியா நொந்து போயிட்டீங்களா?

    ReplyDelete
  6. இல்லை சார் திடீர்னு குழாயை மூடினாற்போல் ஆகிவிட்டது

    ReplyDelete
  7. கொஞ்சம் தாமதமாய்த் தான் இந்தப் பதிவைப் படித்தேன்.உங்கள் பரிதவிப்பை
    உள்ளபடி சொல்லியிருக்கிறீர்கள். ஜே.மோ வைப் படிக்கும் போது எனக்கும் இவ்வண்ணம் தோன்றுவதுண்டு. ஆனாலும் அந்த விக்கித்த மனநிலையையோ,கையறு உணர்வு நிலையையோ, மாற்று வாசிப்பால் நீர்க்க செய்து விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. தீவீர இலக்கியம் ஏற்படுத்தும் மனத்தாக்கம் துய்க்க வேண்டிய ஒன்று எனத் தோன்றுகிறது. அது எழுத்தாளனுக்கு நாம் தரும் மரியாதை என்பது மட்டுமல்ல.. நம் உணர்வுகளுக்கு நாம் தரும் ஊட்டமும் கூட..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails