Thursday, July 12, 2012

காவல்

புகைப்படங்களுக்கும் 
மனிதர்களுக்கும் 
உள்ள உறவு தனித்துவமானது 
எல்லாருமே 
புகைப்படங்களில் இயல்பாக இருப்பதில்லை.
கடைசிவரை 
எந்த வேலையும் செய்யாது 
இருந்த சித்தப்பா 
எப்போதுமே அப்படியிருப்பார்,
அவர் படத்தைப் பார்க்கையில் 
எல்லாம் 
எனக்கு ஏனோ 
விபூதி வாசனை அடிக்கும் 

பாட்டியின் முகத்தில் 
எப்போதுமே 
அவளது 
இடுப்பில் தொங்கும் சாவிக் கொத்து தெரியும் 
அம்மா
வெருட்டப் பட்ட பூனை 
போலவே எல்லா 
புகைப்படங்களிலும் நிற்கிறாள் 
அரசாங்கத்தில் வேலை பார்த்த 
பெரியப்பாவின் புகைப்படத்தில் 
ஒவ்வொரு அங்குலத்திலும் 
அரசாங்கம் இருந்தது 
அப்பா எப்போதுமே 
கேமிராவின் 
அப்பாலுக்கு அப்பால் கிடக்கும் 
பாழ்வெளியை வெறித்துக் கொண்டே இருந்தார் 
சீனி அத்தையின் 
சின்ன உதட்டின் மேல் 
தொங்கும் மூக்குத்தியின் 
நிழல் 
அவளது எல்லா புகைப்படங்களிலும் 
தொடர்ந்தது 
ஆனால் எல்லாவற்றிலும் 
உயிரோட்டமான புகைப்படம் 
தாத்தாவுடையதுதான் 
நினைவாக ஒரு புகைப்படம் கூட இல்லை 
என்று இறந்தவுடன் 
நாற்காலியில் கட்டிவைத்து 
உட்காரவைத்து எடுத்தது 

அந்தப் படத்திலிருந்து 
கூடத்தின் நடுவில் 
சீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் 
மிதந்தவண்ணம் 
எல்லோரையும் 
பழங்கடிகாரத்தின் 
பெண்டுலம் போல 
அசையும் கண்களால் 
பார்த்தவண்ணமே இருக்கிறார் தாத்தா
சீமைக்குப் போய்விட்ட புருஷனின் 
கைபடாது 
சிதல் பிடித்துவிட்ட 
அத்தைப்பெண்ணின் 
யோனிக் கதவங்கள் 
எனக்காய் 
போன மாதம் 
முற்றிலும் இளகிவிடாமல்
அவர் தான் தடுத்தார் என்று 
நான் உறுதியாக நம்புகிறேன் 
பிறகேன் 
ஐயோ தாத்தா பார்க்கிறாரு 
என்று நிர்வாணம் உதறி 
அவள் ஓடிப் போனாள்?


அன்றைக்கு பதறி ஓடிப்போன 
பவானி 
போனவாரம் வேறு யாரோடோ ஓடிவிட்டாள்
அவள் வீட்டில் 
தாத்தாவின் புகைப்படம் இல்லை 
என்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

LinkWithin

Related Posts with Thumbnails