Wednesday, March 2, 2011

பறவையுடன் பறத்தல்

நான் 
பெரும்பாலும் 
பறவைகளுடன் பேசுவதில்லை
முயற்சி செய்த 
ஒவ்வொரு தடவையும் 
அது வியர்த்தமாகவே முடிந்தது 
தனக்குப் பறக்கத் தெரியும் 
என்பதை 
பறவைகள் எப்போதும் மறப்பதில்லை 
நமக்குப் பறக்கத் தெரியாது என்பதையும்...

 கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் 
நமக்கு இல்லாத சிறகுகள் பற்றி 
 அவை நினைவூட்டத் தவறுவதுமில்லை 


ஒரு பிச்சைக்காரனிடம் 
கிரெடிட் கார்டுகளை விசிறும் 
பணக்காரன் போல 
சில நேரங்களில் 
அவை மிக 
ஆபாசமாக நடந்து கொள்கின்றன 

நேற்று மதியம் 
தவிர்க்க இயலாதவாறு 
ஒரு பறவையிடம் பேச நேர்ந்தது 
நீ கவிதை எழுதுகிறவனாமே
எனக்கொரு கவிதை சொல் என்றது 
தோள் மீதமர்ந்து ...

சொல்கிறேன் 
ஆனால் அசையாமல் கேட்பாயா
என்று கேட்டுக் கொண்டு 
அதன் தவிட்டுக் கண்களை 
உற்றுப் பார்த்துவிட்டு 
சற்று அவ நம்பிக்கையுடனே தான் 
கவிதை சொல்ல ஆரம்பித்தேன் 
ஆனால் ஆரம்பித்த பத்தாவது வினாடியே 
அது எழும்பிப் 
பழைய படி 
பறக்க ஆரம்பித்து விட்டது 
காற்றில் அலையும் 
ஒரு ஓலைக் காற்றாடி போல 
கண்ணுக்குத் தெரியாத 
தூரிகையின் தீற்றல் போல 
ஒரு பாலே ஆட்டம் போல 
அறையெங்கும் 
பறந்து திரிந்தது
நான் எரிச்சலுற்று நிறுத்திவிட்டேன் 

அது ஏன் நிறுத்திவிட்டாய் 
உன் கவிதை என்னைப் பறக்கத் தூண்டுகிறது என்றது 
இதை எப்படி 
நிலத்தில் கால் பாவி நின்று எழுதுகிறாய் 
ஒவ்வொரு சொல்லும் 
என்னை விண்ணில் ஏற்றுகிறது
என வியந்தது 
பின் சிந்தனையாய் 
இப்போது புரிகிறது எனக்கு 
எங்களுக்குப் பறத்தல் போல 
உங்களுக்குக் கவிதை இல்லையா என்றது  

சரிதானே
எனக்குப் பறக்கத் தெரியாதுதான்
ஆனால் அது 
பறவைக்குக் கவிதை தெரியாதது  போலவேதான் 
இப்போதெல்லாம் 
பறவைகள் முன்பு 
நான் 
தாழ்வுணர்ச்சி கொள்வதில்லை...

5 comments:

  1. ஆம் நி்ஜமாகவே உங்கள் கவிதை என்னைப் பறக்கத் தூண்டுகிறது ...

    ReplyDelete
  2. ஆகா! இது உங்கள் டாப்10ல் தேறும் என்று தோன்றுகிறது. கவிதையின் இலக்கணம் என்று keats சொன்னதாகச் சொல்வது நினைவுக்கு வருகிறது. மனதை இறகாக்குவது கவிதை என்றாராம். ஒருவேளை miltonஓ?

    தோளில் அமர்ந்த பறவையின் தவிட்டுக் கண்ணை உற்றுப் பார்த்து...
    சாத்தியமா?

    பிச்சைக்காரர்-க்ரெடிட் கார்ட் ரொம்ப ரசித்தேன்.

    ReplyDelete
  3. ம்ம்ம்!! கற்றுக் கொண்டு விட்டீர்கள்! நல்லது !
    அழகு கவிதை.

    ReplyDelete
  4. 'பறவையுடன் பறத்தல்' ஆஹா....எவ்வளவு சுகம்! இந்த கவிதை வழி அந்த சுகம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails