Saturday, March 26, 2011

சிறுகதைகள் முடியும்...

பேருந்தில் ஏறியதுமே 
அறிந்து விட்டேன் 
அவள்தான்...
எத்தனையோ வருடங்கள் போயிருந்தாலும் 
முன்போலவே மார்பில் தொங்கும் 
மயில் சங்கிலியை 
மேலுதட்டில் உரசிக் கொண்டு 
கைப்பையை பொக்கிஷம் போல 
மடியோடு அழுத்திக் கொண்டு 
ஜன்னலுக்கு வெளியே 
சாய்ந்த பார்வையுடன் 
அவளேதான்.

சட்டென்று அணுகி 
தோள்தட்டி 
பையினுள் இன்னமும் 
மாவடு சாதம்தான் இருக்கிறதா 
என்று கேட்க நினைத்தேன் 
இல்லை இல்லை 
இறங்கும் போது 
பின்னிருந்து அழைத்து 
ஆச்சர்யமூட்டி 
காபிக்ளப் அழைத்துப் போய் ...
இன்னும் ஏராளம் கேட்கவேண்டும் 
அவள் இப்போதும் 
பாலகுமாரன் படிக்கிறாளா என்று..
பாசந்தி விரும்புகிறாளா என்று.
பாக்யராஜை விட்டுவிட்டாளா என்று..
பவள மல்லிதான் 
இன்னமும் 
பிடித்த பூவா என்று..
இளைய ராஜா பாட்டுக்கு 
இப்போதும் கண் கசிகிறாளா என்று..
கிணற்றடியில் பின்னிரவில் 
நிலவோடு மௌனமாய் நிற்கிறாளா என்று..
அபத்தக் கவிதைகள் எழுதுகிறாளா 
அடுத்த வீட்டுக் குழந்தையை 
அறியாமல் கிள்ளி அழப் பண்ணுகிறாளா என்று 
என்று என்று ...
இன்னும் இன்னும் ..
கேட்ட பிறகு 
இப்போதும் எப்போதாவது 
என்னை நினைத்துக் கொள்கிறாளா 
என்றெல்லாம் கேட்கவேண்டும் என நினைத்தேன் 

அருகில் நெருங்கி 
ஹலோ என்றேன் 
அவளும் நிமிர்ந்து ஹலோ 
என்றாள் 

பிறகு சரியாகத் 
தன் நிறுத்தம் வந்ததும் 
ஒற்றைப் புன்னகையுடன் 
விரைந்திறங்கிப் போனாள் 

நான் 
என் நிறுத்தத்தை எப்போதோ 
தவறவிட்டிருந்தேன்

2 comments:

  1. பாவம் தான் நீங்கள்!!

    ReplyDelete
  2. அவள் ...அவள்... அவள்... அவள் ..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails