Sunday, September 23, 2012

கண்ணி 9

அவர் மிகவும் அனுபவித்துக் குளித்தார்.அவருக்கு நீச்சல் நன்றாகத் தெரிந்திருந்தது.அக்கரைவரை நீந்தி போனார்.அங்கிருந்து திடீரென்று காணாமற் போனார்.திடீரென்று ஒரு நீர்க் காகம் போல தலையைத் தூக்கிக்  கொண்டு முழுநிலவைப் பார்த்துக் கூக்குரலிட்டார்.அந்த தனித்த நதிக் கரையில் முழுநிலவின் கீழே காற்றில் சலங்கைப் பட்டையை வீசியது போன்ற அவரது சிரிப்பொலி கதைகளால் நிறைந்திருப்பவருக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கும்.எனக்கே முதுகு விசிறப் பட்ட சாட்டையைப் போல படபடவென்று நடுங்கியது.நான் கேட்டிருந்த மோகினிக் கதைகள் அனைத்தும் நினைவு வந்தது.அவை இப்படித்தான்  பிறக்கின்றன போலும்.என்று நினைத்தேன் .

சட்டென்று என் மனம் படித்தவர் போல சாமியார் பேச ஆரம்பித்தார்.

''தனித்த பெண் எப்போதுமே ஆணுக்கு அச்சத்தைத் தருகிறாள்.அதுவும் இயற்கையோடு தனித்திருக்கும் பெண்.அது அவன் வேட்டையாடிக் கழித்த காலத்தை நினைவுப் படுத்துகிறது.பெரிய மிருகங்களுக்கு குளிருக்கும் அஞ்சி இரவுகளில் குகைகளில் கழிந்த காலம்.இறப்பென்பதும் பிரப்பென்பதும் பெரிய புதிராக இருந்த காலம்.சந்தான விருத்தியில் ஆணுக்கு தனது பங்கு என்னவென்று தெரியாத காலம்.எந்தக் காயமும் இன்றி அவளது யோனியிலிருந்து பெருகும் உதிரம் கண்டு அவன் உறைந்த காலம்.உதிரம் என்பதே வாழ்க்கை என்று அவன் கண்டிருந்தான்.இறக்கும்போது உதிரம் பெருகுகிறது.நிறைய உதிரம்.நோயிலோ முதுமையிலோ இறப்பவர் என்று அங்கு யாருமே இல்லை.எல்லோருமே கொல்லப்  பட்டும் தின்னப் பட்டும் இறந்து போனார்கள்.ஆகவே உதிரம் என்பதே அவனுக்கு வாழ்க்கை.மரணம்.எல்லாம்.பெண் மட்டுமே மாத மாதம்  உதிரம் பெருக்கியும் உயிரோடு மீண்டு வருகிறாள்.சில நேரங்களில் அத்தோடு ஒரு மாமிசப் பந்து போல சுருண்டுகொண்டு ஒரு உயிரும் வெளிவருகிறது.எப்படி அது வருகிறது?யார் அதை உள்ளே வைத்தார் அதை அங்கு?என்ன்று அவன் வியந்தான்.யோனி என்பது ஒரு திறப்பு.தெய்வம் உலகிற்கு உயிரை அனுப்பும் வாசல் .கருவறை.உள்ளே அதன் இருட்டுக்குள் தெய்வம் இருக்கிறது.அழிக்கும் ஆக்கும் காக்கும் தெய்வம்.ஆகவே பெண்ணை அறிய அவளது யோனியை நீ அறிய வேண்டும்.அதை நீ வணங்க வேண்டும்.அதை அஞ்ச வேண்டும்.ஆராதிக்க வேண்டும்.ஏனெனில் அச்சமே அறிவின் ஆரம்பம் என்று சொல்லப் பட்டிருக்கிறது''

எனக்கு அவர் சொன்னதில் நிறைய புரியவில்லை.பொம்பிள சாமானைக் கும்பிடுன்னு சொல்றானா சாமியார்?என்று தோன்றியது

அவர் தொடர்ந்து பேசினார்.''பிறகு ஒரு காலகட்டம் வந்தது.அவன் குகையில் இருந்து வெளியே வந்தான்.ஆயுதங்கள் செய்தான்.விவசாயத்தைக் கண்டுகொண்டான்.அங்குமிங்கும் அலையாமல் ஒரே இடத்தில் அமர்ந்தான்.காடழித்து திருத்தினான்.எல்லாமே அவனுக்குப் பெண் கொடுத்தவை.விளைவாக அவனுக்கு குருதி என்பது தூரமாயிற்று.மரணம் எப்போதுமே கழுத்தைச் சுற்றிய மலைப்  பாம்பு என்ற நிலை மாறிற்று.தான் அவள் அருகில் போகாவிட்டால் யோனித் திறப்பு வழியாக உயிர் வருவதில்லை என்றவன் கண்டு கொண்டான்.இயற்கையின் மீது அச்சம் விலக விலக அவன் அவள் மீதான அச்சமும் வியப்பும் குறைந்தது.ஏனெனில் அதுவரை அவளை இயற்கையின் ஒரு பகுதியாகவே அவன் அகத்தில் வைத்திருந்தான்.சிங்கமும் புலியும் பாம்பும் விஷப்  பூச்சிகளும் புதை மணலும் காட்டாறும்  கொண்ட வனத்தின் ஒரு பகுதி.ஆனால் மெல்ல மெல்ல காட்டிலிருந்து அவன் விலகினான்..காட்டை தன்னிலிருந்து விலக்கினான் .இப்போது அவன் காட்டை வெறுத்தான்,அதுநாள் வரை அது தன மேல் செலுத்தி வந்த நுகத்தை அச்சத்தை எண்ணி சீற்றம் கொண்டான்.அதன் மீதான சீற்றம் அவனுக்கு இப்போது பெண் மீதான சீற்றமாக வெறுப்பாக மாறிற்று..காளியின் காலின்  கீழே புரண்டுகொண்டிருந்த சிவன் எழுந்தான்.அவளை வென்றான்.அம்மை இப்போது அவனுக்கு அடங்கியவள் ஆனாள் .அவளை அவன் தன்னுள்  ஒருபாகம் என்ற அளவிலே அடக்கிக் கொண்டான்.''



நான் அவர் இதையெல்லாம் அவர் என் என்னிடம் என் சொல்கிறார் என்பது போலப் பார்த்தேன்.அவர் கீழே மணலில் கிடந்த ஜோல்நாப்பையில் இருந்து எதையோ எடுத்தார்.அது ஒரு குழாய்ப் போலிருந்தது.சுரைக்காய் போன்ற எதோ ஒன்றால் செய்யப் பட்ட குழாய்.அவர்  எதையோ அதனுள் நிரப்பினார்.காட்டமான புகையிலை வாசம் போல வீசிற்று.அவர் அதைப் பற்றவைத்தார்.காற்று வீசிக் கொண்டிருந்ததால் சற்று சிரமமாக இருந்தது.கைகளை குவித்துக் கொண்டு அதை மறைத்துப் பற்றவைத்தார்.


குளித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைக் காணவில்லை.

சாமியார் புகையை ஆழ இழுத்துக் கொண்டார்.என்னிடம் நீட்டினார்.நான்  தயங்கினேன்.''அவர் ''ம்ம்''என்றார்.''உனக்கு இன்னிக்கு ஒரு ஆப்பரேசன்  பண்ணப் போறேன்.ஆப்பரேசன் பண்றதுக்கு முன்னாலே மயக்க மருந்து கொடுக்கணும்ல?"'

நான் அதை வாங்கிக் கையைக் குவித்து இழுத்தேன்.முதலில் ஒன்றுமே தெரியவில்லை.''என்ன சாமி இது...மண்ணு மாதிரி இருக்கு?''
அவர் சிரித்தார்.என்னை உற்றுப் பார்த்துவிட்டு திரும்பி கொண்டார்.நான் ஒரு அசட்டு சிரிப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நிலவு ஆற்றின்மீது ஒரு வெள்ளிச் சேலை போல  கசிந்து அலைந்தது.ஈர மணலில் இருந்து மீன்வீச்சம் எழுந்து மூச்சை நிறைத்தது.இல்லை மீன் வீச்சம் இல்லை.நான் அந்த மணத்தை  வேறெங்கோ அறிந்திருக்கிறேன்.நான் எனது அகத்துக்குள் அந்த வாசனையின் மூலத்தைத் தேடி அலைந்தேன்.நீர்க் காக்கை ஒன்று கிராக் என்று கத்தியபடி தலைக்கு மேலே போனது.எங்கோ மர  மறைவிலிருந்து புறா ஒன்று க்கும் என்று செருமி நிறுத்திக் கொண்டது..நான் நாணல் ஒன்றை பிடுங்கி மோந்து பார்த்தேன்.எனக்கு ஏனோ எல்லாவற்றையும் மோந்து பார்க்கவேண்டும் போலத் தோன்றியது..நான் சாமியாரைப் பார்த்தேன்.அவர் என்னையே பார்த்தபடி தலைக்கு மேலே கைகளால் வெளியில் கோலம் வரைவது போல எதோ சைகைகள் செய்துகொண்டிருந்தார்.நான் இன்னொருமுறை புகையை இழுத்தேன்.இப்போது அது ஒரு திரவம் போல என்னுள் கனமாய் இறங்கியது உணர்ந்தேன்.எரியும் நெருப்புப் பந்து போல அது என்னுள் இறங்கியது.வளை  எலி தானியத்தைத் தேடுவது போல அது என்னுள் இறங்கி எதையோ தேடியது.நான் ஒருவித அச்சத்துடனும் வியப்புடனும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அது எதைத் தேடுகிறது?அது எனது நெஞ்சில் இருந்து சட்டென்று தீர்மானித்துக் கொண்டது போல விலகி எனது அடி வயிற்றுக்குள்  புகுந்தது.பிறகு ஒரு முடிவற்ற காலம் காற்றில் மிதக்கும் ஒரு பலூன் போல அங்கேயே அது மிதந்த வண்ணம் நின்றது.ஒரு சிறிய பந்தளவு உள்ள மஞ்சள் வெளிச்சம்ஒன்று அங்கிருந்தது.அது மெல்ல அசைந்து ஆரஞ்சாகி சிகப்பாகி எழுந்து மேலே ஒரு ஷட்டில்காக்  போல நின்றிருந்த நெருப்புக் கோளத்தைச்  சந்திக்க வந்தது..இரண்டும் சந்தித்த வினாடியில் ப்ளக் என்று பாட்டில் வெடித்தது போல ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

சாமியார் சட்டென்று என்னை பிடித்து உலுக்கினார்.''இங்கே பார்'.இங்கே பார்''என்றார்.நான் சிரமப்பட்டு உள்ளிருந்து என் கண்களை திருப்பிக்  கொண்டு வெளியே பார்த்தேன்.''இது யார் பார்''என்றார்.

அங்கெ பளபளக்கும் நிலவொளியில் நிமிர்ந்து நிற்கும் சர்ப்பம் போல முழு நிர்வாணமாய் முலை  முட்கள்  இரண்டும் பெரிய கண்கள் போல வான் பார்த்து விழித்துப் பார்க்க நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.சாமியார் ''இது யார்?''என்றார்.நான் இதென்ன கேள்வி என்பதுபோல அவரை பார்க்க அவர் ''இல்லை.திரும்பிப் பார்''என்றார்.''அவள் கண்களைப் பார்''என்றார்.

நான் திரும்பி அவரது கண்களைப் பார்த்தேன்.அவை இப்போது நுட்பமாக மாற்றம் பெற்றிருந்தன.ஒருநிமிடம் அது அந்தப் பெண் சாமியாரின் கண்ணாய் அது இருந்தது.மறுநிமிடம் ஒரு சர்ப்பத்தின் கண்ணாய் மாறியது .நான் அஞ்சி விலகும் சமயம் அது வேறு ஒருவரின் கண்களாய் மாற்றம் கொண்டது.சட்டென்று அந்தப் பெண்ணின் கண்கள்  இளகி இறைஞ்சலாய்  ''அண்ணன் மாதிரின்னு சொன்னியேண்ணே ?"'என்றது.
நான் தாக்கப் பட்டவன் போல அதிர்ச்சியுற்று திரும்பி சாமியாரைப் பார்க்க அவர் அங்கு இல்லை.மாறாக சண்முகம் நின்றுகொண்டிருந்தான்.''ஏலே சும்பக் கூதி.லட்டு மாதிரி பொண்ணு.இப்பவாது சோலியை முடி ''என்றான்.
நெருங்கி வந்து''எவ்வளவு ரத்தம்!தேங்காய் உடைச்சாப்ல!''என்றான்.
நான் அந்த மணம்  என்னவென்பதை இப்போது உணர்ந்தேன்.அது அவளது யோனி உதிரத்தின் உப்புவீச்சம் நிறைந்த மணம் .

கண்ணி 8
http://ezhuththuppizhai.blogspot.in/2011/08/8.html

LinkWithin

Related Posts with Thumbnails