Wednesday, June 30, 2010

இன்று இன்னுமொரு நாளே

முனைகள் தெளிவற்ற
மாலைக் கதிரோடு
தெருவில் இறங்கி நடந்தேன்
இன்றோடு என் வயது
இன்னுமொன்று முடிகிறது
வருடங்களுக்கிடையில்
வித்தியாசம் ஒன்றுமில்லை

பணியிடத்தில்
களைப்பே இல்லாது
கண்சிமிட்டும் கணினிகளைப்
பார்த்து பொறாமை அடைகிறேன்
நேற்று முடிக்க வேண்டிய வேலைகள்
மோவாயில் கை ஏந்தி
எதிர் நாற்காலிகளில் அமர்ந்திருக்க

மூலையில் மடித்து
தொடரக் காத்திருக்கும் புத்தகங்கள்
ஏராளமாய் நிறைந்த அலமாரிகளில்
எட்டுக் கால் பூச்சிகள்
அயராது
எதையோ  தேடுகின்றன ..
பஸ் பிடித்து
வீடு வந்து
உணவு உண்டு
நான் பாதியில் விட்ட
முப்பதாவது சிறுகதையின்
அடுத்த வரி முயற்சிப்பதற்குள்
தூக்கம் மூட
படுக்கையில் வீழ்கையில்
மங்கலாய்த் தோன்றிற்று
நேற்றும்
இதுதானே நிகழ்ந்தது ?

எதுவும் படிக்காமல்
எதுவும் எழுதாமல்
எதற்கும் சிரிக்காமல்
எதற்கும் நெகிழ்ந்து அழாமல்
எவரையும் நேசிக்காமல்
எவரோடும் முரணாமல்

மற்றுமொரு
நகல்நாளாகவே இன்றும் போயிற்று

Monday, June 28, 2010

நம் கவிதை

ரொம்ப நாளைக்குப் பிறகு
அவள் மேல்
ஒரு கவிதை முயற்சிக்கிறேன்
டியர் ரா....
என்னை

நினைவு இருக்கிறதா?
உன் பார்வைமேல் படர்ந்திருக்கும் 
நாட்களின் பனியைத்
துடைத்துப் பார்த்தால்
ஒருவேளை
நான் தெரியலாம்
தூரத்தில் மங்கலாய் தனியாய்....
முகம் தெளிவற்று
வான் நோக்கி
ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டு...

நட்சத்திரங்களைப் பார்க்கையில்
எல்லாம்
உன்னை நினைக்கிறேன்
என்று சொல்லமாட்டேன்
சில நட்சத்திரங்கள்
உன்னை நினைவு படுத்துவது உண்டு
ஆனால் கவிதை எழுதும்போதெல்லாம்
உன் நினைவு நிச்சயம் வரும்
என் முதல் வாசகி நீ அல்லவா..

வேப்பம்பூக்கள் வாசனையாய்க்
காற்றில் பூக்கின்றன
உனக்கும் இது பிடிக்கும்
என்பது நினைவு வருகிறது
சோன்பப்படி வண்டியின்
மஞ்சள் வெளிச்சம்
இரவின் முனைகளை
தங்க வர்ணம் பூசிக்கொண்டே செல்கிறது
இதுவும் உனக்குப் பிடிக்கும்.
நள்ளிரவில்
திடும் என விழித்துக் கொண்டு
புழக்கடை வர
எதிர் பாராத பிரகாசமாய்
காய்ந்து கொண்டிருக்கும்
ரகசிய நிலவு வெள்ளி ..
இதுவும் உனக்குப் பிடிக்கும்.
வேறு யார் விருப்பத்திலோ
தேனருவியில்  வழியும் 
நமக்குப் பிடித்த பாடல்...

கவிதை எழுதுவதற்கான விசயங்கள்
உனக்கும் எனக்கும்
பொதுவாகவே இருந்தன

ஆனாலும் நீ
அதிகம் எழுதியதே இல்லை
எழுதிய கொஞ்சமும்
வரதட்சிணைக் கொடுமை
பற்றி கண்ணீர் விட்டது.

இப்போது கல்யாணம் ஆகிவிட்டது
அந்தக் கவலை ஒழிந்திருக்கும்

இப்போது எது பற்றி
கவிதை எழுதுகிறாய்?
சிலசமயம்
உனக்கு நேரமில்லைஎன்று
உணர்ந்து 
உன் கவிதைகளையும் சேர்த்து
நானே எழுதுகிறேன் தெரியுமோ...
உன் குழந்தைக்கு
தாலாட்டு உட்பட...

Saturday, June 26, 2010

மாற்றம்

சந்தான லட்சுமிக்கு
இரட்டைக் குழந்தைகளாம்
படிக்கும் போதில்
அவளது
ஒவ்வொரு அசைவையும்
படித்திருக்கிறேன்
கல்யாண விநாயகர் கோயிலில்
அவள் மீது
அர்ச்சனை கூட
பண்ணியிருக்கிறேன்
அர்த்த ராத்திரிகளில்
ஆபாயில் கவிதைகள்....
பிரிவுப் புத்தகத்தில்
கண்ணீர் வசனங்கள்..
எல்லா காதலர்களின்
எல்லா மடத்தனங்களையும்
பண்ணி இருக்கிறேன்
அவள் கல்யாணப் பத்திரிக்கை
கொடுத்த அன்று
முதன் முதலாய்க் குடித்தேன்
பத்து வருடத்துக்குப் பிறகு
நேற்று சந்தித்தேன் மீண்டும்
சந்திக்காமலே இருந்திருக்கலாம்
எனத் தோன்றுகிறது
நல்லவேளையாக
என் காதல் வெற்றி பெறவில்லை
வாய் ஓயாது பேசும்
இந்த சவுக்கபூதம்
நான் மையல் உற்ற பெண் அல்ல
வேறு யாரோ

இன்னும் முடியவில்லை

இழந்ததும் இருப்பதும் தாண்டி
கையில் இருக்கும்
வாழ்க்கையில்
ஏதோ வசீகரம்
இருக்கத்தான் செய்கிறது
இல்லாவிடில்
இன்னமும்
கவிதை நிகழாது என்னுள்

பெண்கள் வராத கனவுகளை
இப்போதுதான்
காண ஆரம்பித்திருக்கிறேன்

வெற்றிக்காக
பிரார்த்தனைகளை
நிறுத்திவிட்டேன்
தோல்விகளுக்காக
அவர் மீது
பழி போடுவதையும் ..

இன்று
என்னுடைய
லட்சியமும் ஆதர்சமும்
நானே
நான் எவ்வளவு
முயன்றாலும்
பிறராக ஆகமுடியாது
என உணர்கிறேன்
என்னிடமிருந்து நான்
என்றைக்குமே
தப்பிக்க முடியாது
என புரிகிறது

இருந்தாலும்
நான் இன்னமும்
எப்படி கவிதை எழுதுகிறேன்
என்றுதான் வியக்கிறேன்

Thursday, June 24, 2010

போதவில்லை கவிதை

உன்னை திருப்தியாய்
வர்ணிக்கவே முடியவில்லை

உன் கண்களில் துள்ளும் காதல்
கவிதையில் விழவே இல்லை
உன் குரலில் இழையும் சரசம்
சந்தத்தில் அடைபடவே இல்லை
எல்லா வார்த்தையும்
தாண்டி சிரிக்கிறாய்

கரை மணலெங்கும் பேசுகிறது
உன் காற் சதங்கை ஒலி
வெளேர் என்று
விரித்துக் கொட்டின  கடற்கரையில்
அமர்ந்து உன்னை யோசிக்கிறேன்
பால்வீதிக் கொலுசில்
நட்சத்திரமணிகள்
காற்றில் அசைகின்றன
பெரிய வட்டப் பொன்னிலா
கறுப்புக் கச்சைக்குள் இருந்து
எட்டிப் பார்க்கிறது உன் மார் போல
இன்னொரு நிலா எங்கே
என்று மயங்குகிறேன்
விடியும் வரை விழித்திருந்து
நெய்தாலும்
கிடைக்கவே இல்லை
உன் அத்தனை அழகையும் மூடும் கவிதை

Tuesday, June 22, 2010

எனக்கு கொல்வது பிடிக்கும்

எனக்கு
கொல்வது பிடிக்கும்
முதன் முதலாய்
என்னை விரட்டிய
தெரு நாயை
அடித்துக் கொன்றேன்
அன்று
தெரிந்துகொண்டேன்
நாய்களுடன் விவாதிப்பது
என்றுமே பயன்  தராது
என்னுடைய பயத்தை
நான்
கொல்வதன் மூலமே
வென்றேன்
எப்போதெல்லாம் பயந்தேனோ
அப்போதெல்லாம் கொன்றேன்
பிடிக்காத வாத்தியார்
பிடிக்கவில்லை என்ற பெண்
விளையாட்டில் வென்ற நண்பன்...
ஆனால்
ஒரு கோழையைப்போல்
ரகசியமாய்க் கொல்வது
எனக்குப் பிடிக்கவில்லை
வெளிப்படையாக கொல்வதற்கு
நீங்கள்
சில காரணங்களை கேட்டீர்கள்
நாடு,மொழி,மதம்
இனம்,ஜாதி சித்தாந்தம்
போன்ற முகாந்திரங்களுடன்
கொல்வதை
நீங்கள் அனுமதிக்கிறீர்கள்
என புரிந்துகொண்டேன்
ராணுவத்தில் சேர்ந்து
எதிர் நாட்டினரைக் கொன்றேன்
விருதுகள் கிடைத்தன
கடவுள் நம்பிக்கை
இல்லாவிடினும்
மதக் கலவரங்கள் செய்தேன்
ஏனெனில்
மதக் கலவரங்களில்
எல்லாம் அனுமதிக்கப் படுகின்றன
பெண்களைப் புணர்வதும்
குழந்தைகளை எரிப்பதும் கூட..
ஆண்களைக் கொல்வதை விட
பெண்களைக் கொல்வது இனிப்பானது
இன்னும் பிறக்காத சிசுக்களை
வயிற்றிலிருந்து பிடுங்கிக் கொன்றிருக்கிறேன்..
எல்லாம் கடவுளுக்காக எனில்
எதுவும் பாவமில்லை
உண்மையில் கொல்பவர்
 அனைவர் கையிலும்
சொர்க்கத்தின் திறவுகோலை பார்த்தேன்
எல்லாக் கடவுள்களும்
கொலை செய்துள்ளனர்
ஆகவே
கொல்வதினால்
நானும் கடவுள் ஆகிறேன்
பின்னர்
இனக் கலவரங்களில் ஈடுபட்டேன்
மொழிப் போர்களில்..
சித்தாந்த சுத்திகரிப்புகளில்...
கொன்ற இடங்களில் எல்லாம்
என்னைப் பயந்தீர்கள்
மரியாதை செய்தீர்கள்
வலியதே எஞ்சும்
என்பது உங்களுக்கும் தெரியும்
சிலர்
என்னை
பாசிஸ்ட் என்பீர்கள்
கவலையில்லை
ஏனெனில்
எனக்குத் தெரியும்
உங்களைக் கொல்பவர்களை
மட்டுமே
நீங்கள்
உங்களை
ஆள அனுமதிப்பீர்கள்  என்று...

வானவில் நாட்கள்

பச்சையம்
பூசிய நாட்கள் அவை
மனக் குளத்தில் இன்னும்
யாரும் கல் எறிந்திரா
நாட்கள்
வேலியோரமும்
உள்ளும்
பூக்கள் பூத்த நாட்கள்
மழை வாசனையோடு
கனவு நுரைத்த நாட்கள்
சோகமின்றி
இமை விளிம்பில் நீர்
துளிர்த்து நின்ற நாட்கள்
வானமெங்கும் மேகம்
தொங்கின நாட்கள்
கிராமத்து இருட்டைக்
கிழிக்க மனதில்லாது
மஞ்சள் பல்புகள்
உறங்கிய நாட்கள்
சுவர்க் கோழிகளின்
கச்சேரியுடன் விடியும்வரை
புத்தகங்கள் சுவாசித்த நாட்கள்
புகை பிடிக்காத நாட்கள்
உயிர் தின்னாத நாட்கள்
இனி எப்போதும்
திரும்பி வரவே போகாத
அந்த நாட்கள்...

Sunday, June 20, 2010

இருவர்

நான்
நித்யஸ்ரீ போல்
பாடுவதாய்
அக்கா சொல்வாள்
இரண்டு தடவை
சபாவில் பாடி
இரண்டு தடவையும் மழை
'எல்லா ராகமும்
அமிர்த வர்ஷினியா '
என்று கேலி செய்தார்கள்
ஆனால் திரும்ப திரும்ப
பாடச் சொல்லி மயங்குவார்கள்
மூன்றாவது கச்சேரி பண்ணுவதற்குள்
கல்யாணம் பண்ணிவிட்டார்கள்
கல்யாணத்தின் பின்
அவரது
அலுவலக விருந்தில்
பாடச்  சொல்லி
'கிருஷ்ணா நீ பேகனே'பாட
 எல்லோரும் சிரித்தார்கள்
அன்று  ராத்திரி
எல்லாம் முடிந்ததும்
'உனக்குப்
பாடத் தெரியாதுன்னு
சொல்லியிருக்கலாமே"என்றார்
அவர் பாத்ரூம்
போனபிறகு அழுதேன்

எல்.எஸ்.டி!

எழுதப் போகிற
கடிதத்துக்கு
வார்த்தைகள் உதிரும்
காற்றிலிருந்து
வேப்ப மரங்கள்
எட்டிப் பார்க்கும்
ஹிருதய ரகசியங்களை
பிசாசு ஜொலிப்போடு
நிலவு நகரும்
தியானத்தில்
இருட்டு கொப்பளிக்கும்
கனவில் எச்சில் மிதக்கும்
ஆற்றங்கரையோரம்
உயிர் வழிந்து உறைந்திருக்கும்
விட்டம் நோக்கி எய்த
பெருமூச்சு
தலைமேல் இன்னும் சுற்றும்
கதேயின் சாத்தான்
கடவுளை விடவும்
உன்னதக் கவிதை சொல்வான்
காதோரம் சொன்னான்
'கடவுள்
சிலுவையில் அறையப் படவே
தகுதியானவர்'
காலடியில்
புழுதி உயர்ந்து
முகத்தை மூடும்
கோடைவெயில்
எழுத்தின்  கழுத்தை நெறிக்கும்
வராத கடிதங்கள்
எண்ணிக்கை லட்சமாகும்
எழுதாத கவிதைகள்
கைவிரலில் சுடும்
பகல் இரவு
விழிப்பு உறக்கம்
எல்லாம் மாறும்
கணப்  பொழுதில்
L.S.D!

கடைசிச் சொல்

ஒரு
சூன்யம் நோக்கிப் புறப்பாடு இது
காற்றோடு கரைந்து போய்விடுவதற்காய்
என்னை
நானே தயாரித்துக் கொள்கிறேன்

எதை எதையோ
எடுத்துக் கொள்கிறேன்
புத்தகங்களில் இருந்து
எனக்குப் பிடித்த கவிதைகளை
கண்ணாடிக்குப் பின்னால் இருந்த
என் நிழல்களை
நான் காதலித்த பெண்களிடம் இருந்து
காதலை எடுத்துக் கொள்கிறேன்.
என் இசை சேகரத்தில் இருந்து
சில ஸ்வரங்களை..
ஆனால் எதையும்
எடுத்துச் செல்லமுடியாது
என அறிந்து அயர்கிறேன்
இப்போதுதான் புரிகிறது
இவற்றையெல்லாம்
இழந்து விடுவதற்காகவே
சேகரித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

Friday, June 18, 2010

களவு காதல் கற்பு 5

உன்னையே
 நேசிக்கிறேன்
உன்னையே
வெறுக்கிறேன்
உன்னையே
உண்கிறேன்
உன்னையே
குடிக்கிறேன்
உன்னையே
யோசிக்கிறேன்
உலகெங்கும்
உன்னைத் தேடி
அலைகிறேன்
யுகக் கணக்கில்
அசையாது உனக்காய்
காத்திருக்கிறேன்
ஆனால்
நீ
வந்துபோன பின்பும்
மனக் கோப்பை
நிரம்பாது நிரம்பாது
மீண்டும் மீண்டும்
இதையே
செய்கிறேன்
ஒருவேளை
நீ
இன்னொருவள் உண்டோ?

களவு காதல் கற்பு 4

ஒரு
புதிரான மலர்க்காடு
மயிர் செறிந்த
செம்பருத்திகள்
இறுகிய
இதழ்திரை திறந்து
தீப தரிசனம்
சிவத்தின் சீண்டலில்
சக்தியின்
மூன்றாவது கண்
விழித்தது
சிவந்தது
எரித்தது

Thursday, June 17, 2010

வரிசை

விசித்திர கனவு
என்னை
காதலிப்பவர் எல்லாம்
ஒரு வரிசை
காதலிக்காதவர் ஒரு வரிசை
என்னைக்
காதலிக்காதவர் வரிசையில்
நானும் நின்றிருந்தேன் ...

களவு காதல் கற்பு 3

ஈர ரத்தம்
காயாத துணியில்
பொதிந்து தந்தனர்
83a யில்
மீன் வாங்க  வந்தவன்
வெட்டு மணி சந்தியில்

கேரளா பஸ்சில் நசுங்கி..
நம்பவே முடியவில்லை
முன்னிரவு புணர்ந்தது
அடிவயிற்றில்
இன்னும் ஈரமாய் இருக்கிறது
முன்பு புணர்ந்தது
முந்தானையைப் பிடித்துக் கொண்டு
மிட்டாய்க்கு அழுதது
பாடியை நகர்த்த
வார்டுபாய் அம்பது ரூபாய் கேட்டான்
டாக்ஸிக் காரன்
முலை மேல் விழியுடன்
முன்னூறு கேட்டான்
கொஞ்ச நேரம் அழுதவுடனே
பசித்தது
மொத்தமே கையில் நாற்பத்தி மூன்று
சில்லரைதான் இருந்தது
பாவி
செத்தும் சீரழிக்கிறான்
கடைசியில்
தாமசுக்குதான் போன செய்தாள்
தாமஸ்
வீங்கிய மூஞ்சியுடன்
ஆட்டோவில் வந்தது
இவர்தான் போனவாரம்
சந்தையில் வைத்து
அடித்துவிட்டார்.
சந்தேகம்.
தாமஸ் அங்குமிங்கும் அலைந்து
பிணத்தை வாங்கி விட்டது
பாடியை
வண்டியில் ஏற்றிவிட்டு
பக்கத்தில் அமர்ந்து
'ஏதாவது சாப்பிட்டியா புள்ள'
என்ற போதுதான்
எல்லா மதகும் உடைந்தது
கொஞ்ச நேரத்தில்
கண்ணீர்க் குடம்  வற்றி
சிரிப்பு கூட வந்தது
'இதன்' முடை மீறி
தாமசின் உடல் வாசனை
கூட தெரிந்தது
வியர்வையும் கோகுல் பவுடருமாய் ..
இதைக் கட்டிக்குமுன்
கடலோரம்  புணர்கையில்
இருந்த அதே வாசனை ..
'இது' போல் இல்லை
தாமசுக்கு
மனசு குறி
இரண்டுமே பெரிசு..

Wednesday, June 16, 2010

களவு காதல் கற்பு 2

தூர ஆற்றின்
கீழே
விழுந்து உறைந்தது
வீதி விளக்கின்
மஞ்சள் பிரகாசம்
கிழக்கே
 சூலுறும் மௌனத்துடன்
எழும் மேகங்கள்
சாயங்காலம் குளிக்கும்
பெண்களை வருடும் கூதல்
படபடக்கும் ஈரச்சேலையுள்
குளிர்ந்த யோனியுடன்
விரைகின்றனர்
சூடான லிங்கம் தேடி..
குடியும் புகையும்
சுருக்கிய குறிகளால்
நிரப்ப முடியவில்லை
தேவையான வெப்பத்தை
நள்ளிரவு தாண்டியும்
மோட்டை வெறிக்கின்றனர்
பிரியும் பெருமூச்சில்
கூரைகள் நடுங்குகின்றன
பக்கத்துவீட்டு புழக்கடைகளில்
காத்திருக்கும் இந்திரன்களுக்கு
நல்ல சகுனம் அதல்லோ?
விரிந்த குறியோடும்
சிரியோடும்
மதில் தாண்டி
குதிக்கின்றனர்
அணையாத அகலிகை தேடி...
[சிரி-சிரிப்பு மலையாளத்தில் ]

களவு காதல் கற்பு 1

பத்து ரூபாய்
டிக்கெட்டுக்கு
ஒதுங்கிய தியேட்டரில்
சகீலாவின் ஏராள சதை.
மெஸ்ஸில் பரிமாறும்
பெண்ணின்
முண்டு மீறிய முலைகள்
முட்டை பரோட்டா
மீறிய உறக்கத்தில்
வினோத கனவு
ஆலவாய் ஆற்றில்
என்னை விழுங்க வந்த
முதலையை
நான் விழுங்கிவிட்டேன்

'சங்கரா துப்பு துப்பு '
எனறாள் அம்மா.
துப்பிய முதலை
பெண்ணாய் மாறி
'எண்ட பர்த்தாவே'என்றது.

Tuesday, June 15, 2010

ஓர் இரவு

''நோ ரவி''எனறாள் ராதிகா. ''இப்படியே ஆரம்பிச்சு எங்கேயோ போய்டும்''
ரவி சட்டென்று அவள்  கைகளை விடுவித்தான். ''நீ என்னை நம்பவே இல்லை இல்லே ?''என்றான் முகம் சிவக்க.''உனக்கு என் உணர்ச்சிகள் முக்கியமே இல்லை''
''லூசுத்தனமா பேசாதிங்க''
''உன் பின்னால இரண்டு வருசமா சுத்தறேன் பாரு .நான் லூசுதான்.''
''நான் வரேன்.இன்னைக்கு உங்க மூட் சரியில்லை.''
''கெட் லாஸ்ட்''
அவள் முறைத்துவிட்டு போனபிறகு கொஞ்ச நேரம் அலைகளையே பார்த்துக் கொண்டு அபத்தமாய்  அமர்ந்திருந்தான்.அவனுக்கே அவமானமாய் இருந்தது.ஏன் அப்படி பட்டிக்காட்டுத் தனமாய் நடந்துகொண்டேன்?எங்கே போய்விடப் போகிறாள் ராதிகா?
ஆனால் பிரச்சினை ராதிகா இல்லை.செக்ஸ்.முப்பத்தி ஒரு வயசு  வரை  பெண் உடல்  என்னவென்றே அறியாது இருப்பது எவ்வளவு கொடுமை என்று நினைத்தான்.

மாலை மெதுவாய் இறங்கிக் கொண்டிருக்க சற்றுத் தள்ளி மணலில் உட்கார்ந்திருந்த ஜோடி  இருட்டு வர வர துணிச்சல் பெற்று அந்தரங்க சேட்டைகளில் இறங்கியிருந்தது.அவன் அவள் மார்பை அழுத்த முயற்சிக்க அவள் தடுக்க முயற்சிப்பது போல் நடித்தாள்.அந்தப் பெண் ஒரு கணம் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.போயேன் என்பது போல்...ரவி எழுந்து நடந்தான்.பஸ் ஏறி திருவல்லிக்கேணி வந்தான் முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் வேர்வை மின்னும் இடுப்பு மடிப்பு உறுத்தியது.

என்னைச் சுற்றி எங்கும் செக்ஸ் இருக்கிறது.பீச்சில் அலுவலகத்தில் பஸ்ஸில் செய்தித்தாளில் டிவியில் சினிமாவில் இணையத்த்தில் இலக்கியத்தில் ....செல்போனில் கூட ..ஆனால் என் வாழ்வில் மட்டும் இல்லை என்று நினைத்தான்.ராதிகா கல்யாணத்துக்கு முன்னால் தொட அனுமதிக்க மாட்டாள்.ரொம்ப ஜாக்கிரதை.கல்யாணம் இப்போது இல்லை.இவன் தங்கை கல்யாணம் அவள் அக்கா கல்யாணம் எல்லாம் முடிந்து இவன் பிள்ளை அவள் வன்னியர் என்ற  மலை எல்லாம் தாண்டினாலும் குறைந்தது மூன்று வருடம் ஆகும் .ரொம்ப அவசரம் எனில் ஊருக்குப் போய் மூலக்கரைப் பட்டி முன்பல் தூக்கின அத்தை பெண் தன லட்சுமியைத்தான் பண்ணிக் கொள்ளவேண்டும்.சென்னை மாதிரி நகரத்தில் உலவும் தேவதைகளைப் பார்த்துவிட்டு ...அது சாத்தியமே இல்லை.மூச்சு முட்டும்.

ராதிகாவும் அவனும் மூன்று வருடங்களாக காதலிக்கிறார்கள்.ஏன் என்று அவர்களுக்கே தெரியாது.எளிதான காரணம் வேறு யாரும் காதலிக்க கிடைக்க வில்லை என்பதுதான்.அவளுக்கும் வயது முப்பதை நெருங்குகிறது.இப்போதே அவளது மார்புகள் தொய்ந்து கன்னச் சதைகள் வற்ற ஆரம்பித்துவிட்டன.அவனுக்கும் தொப்பை விழத் துவங்கிவிட்டது.தினம் காலையில் ஜாக்கிங் எல்லாம் செய்தாலும் அது ரிப்பேர் வேலைதான் என அவனுக்கு தெரிந்திருந்தது.முன்புபோல் கரமைதுனமும் அதிகம் பண்ண முடிவதில்லை.மறுநாள் ரொம்ப டயர்ட் ஆகி ஆபிஸ் போக முடியவில்லை.தவிர அதில் ஆண்மைக் குறைவு வந்துவிடுமாமே.விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று அவன் படித்த புத்தகத்தில் போட்டிருந்தது.முன்பு கோயிலுக்கு போவான்.ஆனால் கோயிலில் தான் மிக அழகான பெண்களெல்லாம் வருகிறார்கள்.மனத்தைக் கட்டுப் படுத்த கோயிலுக்குப் போவது சிறந்த வழி அல்ல என்று கண்டுகொண்ட பிறகு நிறுத்திவிட்டான்.யாரோ சொன்னார்கள் என்று தியானம் கற்றுக் கொண்டு பயிற்சி செய்ய முன்பை விட கட்டுப் பாடு இல்லாமல் மனம் அலைவது கண்டு சொல்லிக் கொடுத்தவரிடம் செல்ல அவர் உங்களுக்கு குண்டலினி எழும்புகிறது என்றார்.அவனது நோக்கம் குண்டலினியை எழுப்புவது அல்லவே?சென்னை போன்ற ஒரு பெரு நகரத்தில் அவனைப் போன்ற மிடில் கிளாஸ் ஆத்மாக்களின் ஏக்கங்களை  சங்கடங்களை யாரும் புரிந்து கொள்வதில்லை.சென்னை ஒன்று மேல்தட்டு மக்களுக்கானது.அல்லது அடித்தள மக்களுக்கானது.மத்திய வர்க்கமக்களுக்கான சென்னை எங்கே இருக்கிறது?
 
மெஸ்ஸில் புது  ரூம்மேட் மணியைப் பார்த்தான்.
''எங்கே சார் போயிட்டீங்க சினிமாவா''என்றதற்கு பதில் சொல்லவில்லை.
சாப்பிட்டுவிட்டு மணி ஒரு சிகரெட் பற்றவைத்து ஆழமாய் இழுத்தான்.''சார் சிகரெட்?''
''இல்லே .பிடிக்கறது இல்லை.''
அவன் ஆச்சர்யமாய் பார்த்து''ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத மனிதன் ரொம்ப ஆபத்தானவன்னு குஸ்வந்த்சிங் சொல்லியிருக்கார் சார்''

மறுநாள் ஆபிசில் இருப்பு கொள்ளவில்லை.டைப்பிஸ்ட் மஞ்சுவிடம் காரணம் இல்லாமல் எரிந்து விழுந்தான்.[அவள் அழகாய் இருக்க மாட்டாள்]ராதிகா  போன் செய்யவில்லை.டாம் இட்!ஒரு மணிநேரம் அனுமதியுடன் வெளியே வந்தான்.மஞ்சள் வெயில் கூசியது.பஸ் ஸ்டாண்டில் காலேஜ் பெண்கள் மார்பின் மேல் புத்தகங்களுடன் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருக்க அருகில் ஒரு பைக் வந்து நின்று நின்றிருந்த ஒரு பெண் அதில் ஏராள சிரிப்புடன்  அவன் முதுகில் நெஞ்சை அழுத்தியவாறு ஏறிப் போனாள்.ஒரு பைக் வாங்கவேண்டும் என நினைத்துக்  கொண்டான்.

விலகி நடந்தான்.நடந்தே போகலாம்.உடற்பயிற்சி மாதிரியும் ஆயிற்று.போகிற வழியில் இருந்த தியேட்டரில் பெரும் கூட்டம் கண்டு நின்றான்.'மஞ்சத்தில் கிளிகள்''போஸ்டரில் வழியும் மலையாள முலைகள்.தயக்கமாய் நின்று எதிரில் இருந்த டீக் கடையில் ஒரு காபி வாங்கிக் கொண்டு எதிரே கூட்டம்  பெருகுவதையே  பார்த்தான்.


ரூமுக்குப் போன போது மணி வரவில்லை.மெஸ்ஸில் கூட  காணோம்.கொஞ்ச நேரம் போரும் சமாதானமும் படிக்க ஏழாவது முறை முயன்றபோதுதான் மணியின் கட்டிலின் கீழ் அந்த புத்தகங்களைப் பார்த்தான்.ஹச்லர் என்ற அந்த ஜப்பானிய புத்தகத்தில்...
 காய்ச்சல் வருவது போல் இருந்தது.கண்மூடி உறங்க முயற்சிக்க ராதிகா குளிப்பது போல மஞ்சுவை புணர்வது போல அவனுக்குப் பிடித்த ஏழாங்கிளாஸ் டீச்சருடன்  ...
மணி சட்டென்று கதவு திறந்து வந்து ''சார் தூங்கியாச்சா''
ரவி கண்கூசி ''இல்லை''என்றான்.அவன் அந்நேரம் முகம் கழுவிக் கொள்வது பார்த்து ''வெளியே போறிங்களா''
''ஆமா சார்.சினிமா.ஜெயபாரதி அரை மணி நேரம் குளிக்கிறா ..வரீங்களா''
ரவி மொத்த தூக்கமும் கலைந்து''செகன்ட் ஷோவா'' என்றதற்கு ''நீங்க எங்க வரப் போறிங்க .இதென்ன புஸ்தகம்.டால்ஸ்டாய் .படிச்சிட்டு இருங்க''என்று சிரித்ததில் சீண்டப் பட்டு ''வரேன்''என்றான்.

''எப்படி சார்  படம்''என்றான் மணி.''நான் நினைச்சதை விட ரொம்ப ஹாட்.பிடிச்சதா''
ரவி பேசாது வந்தான்.மனம் முழுக்க ஜெயபாரதியின் அரை நிர்வாண குளியல் மிதக்க மணி சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு ''சார் .ஒண்னு சொல்லட்டா.காமம்தான் உலகத்தின் உப்பு.''
கூவத்தின் நீரில் சோடியம் வேப்பர்கள் கரைந்துவிட முயன்று கொண்டிருக்க நடைபாதைகளில் படுத்திருந்தவர்களை மிதித்துவிடாமல் நடந்தார்கள்.கூதற் காற்று  காதில்  உரச உடல் கணகணவென்று இருந்தது.ரவி கனவில் நடப்பது போல் உணர்ந்தான்.கீழே சுருண்டு தூங்குபவர்களை ஆச்சர்யமாக பார்த்தான்.இவர்களுக்கு எல்லாம் எங்கு கல்யாணம்?எங்கு சரசம்?எங்கு கர்ப்பம்?
மணி அவன் பார்ப்பது பார்த்துவிட்டு ''இதிலேயும் சிலசமயம் நல்ல கட்டைங்க கிடைக்கும் சார்''
ரவி திடுக்கிட்டு ''சேச்சே''என்றான்.ஒரு பெண்ணின் ஆடைகள் தொடை வரை ஏறியிருப்பது பார்த்து கண்களை விலக்கிக் கொண்டான்.
மணி உரக்க சிரித்து ''பணத்தி  போகம் பெரிதோ பரத்தி போகம் பெரிதோ''
ரவி சற்று வியப்புடன் மணியைப் பார்த்தான்.சற்று நேரம் இருவரும் மௌனமாய் நடந்தார்கள்.''நான் ஒரு ஹெடானிஸ்ட்.''என்றான் மணி.''அப்படின்னா..''
''இன்பத்தை ஆராதிப்பவன்''என்றான் ரவி''படிச்சிருக்கேன்''
''உண்.குடி.கூடு.இதுதான் எனது தத்துவம்.இன்றைய உலகில் காலாவதியாகாத ஒரே தத்துவமும் இதுதான்''
மணி நின்றான்.''பால் சாப்பிடலாமா.பருத்திப் பால்.உடம்புச் சூட்டுக்கு ரொம்ப நல்லது.''
ரவி தயங்கி நின்றான்.
''வா சார்''என்ற தள்ளுவண்டி முண்டாசுக்காரனுக்கு மணி நிரந்தர கஸ்டமராக இருக்கலாம்.பெட்ரோமாக்ஸ் ஒளியில் மஞ்சளாய்ச் சிரித்தான்.மணியும் பதிலுக்கு சிரித்து''இரண்டு பால்''என்றான்.
''சார் யாரு புதுசா''
''நம்ம ரூம்தான்.எல் ஐ சி ல ஆபிசர்'''
கிளார்க்குதான் என்று சொல்ல நினைத்தான்.
''எனக்கும் ஒரு பால் சொல்லு சார்''என்றது ஒரு பெண் குரல்.
ரவி சட்டென்று கலைந்தான்.வெற்றிலை சிகப்பேறிய உதடுகளும் தழையக் கட்டின புடவையும் இந்த ராத்திரியிலும் பவுடருமாய் ..
அவள் இருவரையும் கண்களால் ஒரு வெட்டு வெட்டி ரவியைப் பார்த்துச் சிரித்தாள்.''மணி எத்தனை சார்''
பருத்திப் பால்காரன்''இந்தா அலமேலு .சார் ஆபிசரு.அவர்கிட்ட இதெல்லாம் வேணாம்''
''அட!நான் மணி தானே கேட்டேன்.''என்றபோது மார்புகள் குலுங்கின.நன்கு விளைந்த நுங்குகள் போன்று கெட்டி மார்புகள்.
மணி அருகே நெருங்கி ''என்ன சார்.ஒரு கேம் ஆடறியா''
அவள் இன்னொரு தடவை சிரித்து''ஏன்னா சார்.மணி என்னா''
மணி இன்னும் நெருங்கி ''சொல்லு சார்.''
ரவி சேச்சே என்று சொல்ல நினைத்து ''சரி''என்றான்.

  அதேநேரம் அண்ணா நகரில் ஒரு வீட்டில் டிவிடியில் பிலடெல்பியா படம் பார்த்துக் கொண்டிருந்த முகேஷ் போன் ஒலிக்க எடுத்து''ஹலோ முகேஷ்''
''ராம்டா.தூங்கிட்டியா''
''இல்லே.படம் டிவிடி.''
''என்ன படம்''
சொன்னான்.
''அவார்ட் படமா .ஆளவிடு. உன் பத்தினி எப்படி இருக்கா''
''இன்னும் கோபம்தான்.ஆனா சரியாய்டும்''
''பின்னே.நீ நர்சை தடவினா சிரிக்கணுமா''
''அட.நான் ஒன்னும் பண்ணலை.பின்னால லேசா ஒரு தட்டு தட்டும் போது சரியா வந்து தொலைச்சுட்டா.உண்மையிலஅந்த அளவு துணிச்சல் எல்லாம் கிடையாது.அதுவும் இந்த சின்றோம்லாம் வந்த பிறகு''
''சரி.விடு.ஒரு கேஸ் அனுப்பினேனே. அலமேலு.என்ன ஆச்சு''
''எல்லாம் ஆச்சு''
''பாசிடிவ்?''
''ஆமா.சொல்லிடு''
''வந்தா சொல்றேன் ஆனா திரும்ப வருமான்னு சந்தேகம்.பெரும்பாலும் அதுங்களுக்கே தெரிஞ்சிரும்''
''ஓகே.குட் நைட்''
ஏறக் குறைய அதே நேரம் ரவி தன் முதல் பெண்  உடலை அறிந்திருந்தான். உச்சக் கட்டத்தில் தன் மார்பு மீது தளர்ந்து விழுந்து  அழும் மனிதனை அலர்மேலு''அட.என்னா இது''என்று வியப்புடன் அணைத்துக் கொண்டாள்.

ஜன்னலின் வெளியே

ராட்சச விசிறிகள் போல் தென்னை மரங்கள் நின்றிருந்தன.மரங்களின் கால்களில் மீன்பிடிவலைகள் காய்வதற்காக கட்டுண்டிருந்தன.வானம் மழை இறங்கிய களைப்புடன் சோகையாய் இருந்தது.நேற்றைய மழை மிச்சங்கள் செம்மண் தரையில் சிதறிக் கிடந்தன.சில காகங்கள் தங்களைக் கவனமாய்க் கழுவிக் கொண்டிருந்தன.வலைக்  கண்களில் செம்போத்து ஒன்று அபாயகரமாக ஊஞ்சலாட கருப்பு நாய் ஒன்று நின்று பார்த்து வியந்தது.மரங்கள் இடையே பருந்து ஒன்று தாழப் பறக்க பறவைகள் சலசலத்து அடங்கின.ஒரு எந்திரக் காளை போல் மோட்டார் சைக்கிள் அசையாது காத்திருந்தது.சிறு குழந்தை கற்களைத் தட்டி விளையாடிக் கொண்டிருந்தது.ஜன்னல் திரைகள் திடீர் திடீர் என அசைந்தன.காற்றில் ஒரு ஒரு காய்ச்சல் குளிர் இருந்தது.தூரத்தில் வாகனங்களின் கதறல்கள் மழுப்பலாய்க் கேட்டன.ஸ்கூட்டர் ஒன்று செம்மண் சாலையில் பாம்பு ஊர்வது போல் போனது.சிறுவன் ஒருவன் ஆழ் குரலில் சீரான லயத்தில் இருமிக் கொண்டிருந்தான்.மின்சாரம் வந்ததும் விசிறி துணுக்குற்று அசைந்தது.மரம் முறிவது போல் சத்தத்துடன் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.அதன் முதுகு முழுதும் பொம்மை வண்ணங்களில் பிளாஸ்டிக் குடங்கள் பன்றியின் முலைகள் போல் தொங்கின.இன்னும் மழை உண்டு எனறார்கள்.இன்னும் குளிர்.இன்னும் சில கவிதை முயற்சிகள்.Life can be beautiful.

Sunday, June 13, 2010

ஆரம்பத்தில் ....

ஆரம்பத்தில்
எல்லாமே
தெளிவாக இருந்தது.
சிங்களவன்
தமிழனை
அடித்தான்.
தமிழன்
திருப்பி
அடித்தான்.
பின்னர்
தமிழனே
தமிழனை
அடித்தான்.
நடுவே
பஞ்சாயத்து பேச வந்த
இந்தியனும் தமிழனை
அடித்தான்.
உடனே
தமிழனும் இந்தியனை
அடித்தான்.
பிறகு
முஸ்லிமும்
தமிழனை
அடிப்பதாக சொல்லி
முஸ்லிமை
தமிழன் அடித்தான்.
இடையில்
பாகிஸ்தான் காரனும்
சீனா காரனும்
யூதனும்
வேறு வந்தார்கள்.
பின்னர் வேறு ஒரு இடத்தில்
முஸ்லிமை அமெரிக்கன் அடிக்க
அமெரிக்கனை முஸ்லிம்
அடிக்க
கயோஸ் விளைவு
பற்றியெல்லாம் அறியாத
தமிழன்
மறுபடி அடித்து
மறுபடி
அடித்துக் கொண்டு
கூட்டமாய் மடிந்து போனான்.
இந்த
குழப்பம்
எதுவும் விளங்காத
இந்தியத் தமிழன்
மானாட மயிலாட
போய்விட்டான்.
ஆனால்
இப்போது யோசிக்கையில்
தோன்றுகிறது...
ஆரம்பத்தில்
எல்லாம் தெளிவாக
இருந்தது போல் தோன்றியதே....

LinkWithin

Related Posts with Thumbnails