Friday, December 30, 2011

கன்னித் திரை

அவிழ்க்க 
அவிழ்க்க 
அவிழா புதிராய் 
அவள் 
இறுகிக் கொண்டே இருந்தாள்

கடைசி முடிச்சு 
என்று நான் 
முட்டியதும் 
கடைசி யல்ல 
என்றறிந்தபோது அயர்ந்து போனேன் 

காய்களை நகர்த்துகிறவன்
நானல்ல 
என்று எந்தக் கணம் உணர்ந்தேன்?
என்று தெரியவில்லை.

ஆனால் 
உணரும்போது 
முற்றிலுமாக 
நான் 
சிக்கிக் கொண்டிருந்தேன்.

கால் பாவ 
இடம் தராத புதை மணல்...
வழி திரும்பா 
அடர் வனம்..
கபால மாலை 
அணிந்த கொற்றவை..


மழை நாள் மதியத்தில் 
உறவு முடிந்ததும் 
ஆடை அணிந்து கொண்டிருந்தவளை 
அச்சத்துடன் பார்த்தேன் 
யார் இவள்?


அவள் 
என் பதற்றத்தைக் 
கண்ணாடியில் கவனித்துப் 
புன்னகைத்தாள் 

வெறும் கன்னித்திரை என நினைத்தாயோ 
என்னை ?
என்பது போல...

Monday, December 26, 2011

உள்ளின் உள்

மரமேறி விளையாட்டில் 
உச்சிப் பொந்தில்
ஒளிந்திருந்த 
ஆந்தைக் குஞ்சைப் பிடித்துவிட்டோம் 
சத்தம் மட்டும் கேட்டு 
வெளியே வந்த 
வெளிச்சக் குருடு ஆந்தை 
தடுமாறித் தவித்தது 
பயத்தில் கிரீச்சிட்டது.
ஆந்தை 
என்று கத்தினோம் 
எல்லோரும்அருவருப்பாய் 


சேகர் அதைக் கொன்றுவிடலாம் 
என்றான் 
அலெக்ஸ் அதை ஆமோதித்தான் 
ஆந்தை சாத்தானின் பறவை 
என்ற போது அவன் உடல் நடுங்கியது 
கருப்பசாமி 
ஆந்தையை சுட்டுத் திங்கலாமா 
என்று சந்தேகம் எழுப்பினான் 
அம்பிக்கு அது பிடிக்கவில்லை 
உவ்வே என்று எருக்களித்தான் 

கூட ஏறிவந்த 
தனலக்ஷ்மி மட்டும் '
''ச்சே பாவம் குழந்தை"'என்ற படி 
பாவாடையில் பொதிந்து 
ஆதூரமாய்'
மீண்டும் கூட்டுக்குள்ளேயே
வைத்தாள் 



எப்போதுமே 
அவள் அம்மாவாகவே இருந்தாள்
என்று சொன்னால்
ஆணியச் சிந்தனை 
என்பீர்களானால்
சொல்லவில்லை.

Thursday, December 8, 2011

ஆணின் கண்கள் ..

பில்லியனில் இருபக்கமும் 
கால் விரித்து 
ஆரோகணிக்கும் யுவதிகள் 
இன்னமும் எலாஸ்டிக் நாடா 
இடுப்பை அழுத்த 
உள்பாவாடை அணிபவர்கள் 
குத்த வைத்து 
முழங்கால் பளிச்சிட 
பத்து தேய்க்கும் வேலைக் காரிகள் 
ஜன்னலைத் திறந்து 
வைத்துக் கொண்டே உடை மாற்றுபவர்கள் 
உதட்டின் மீது வளரும் 
மெல்லிய பூனை மயிருக்கு 
க்ரீம் தடவுகிரவர்கள் 
ரோமப் பசுவெளி தெரிய 
பஸ் கம்பியை பிடித்துக் கொண்டே 
பிரயாணிக்கும் 
அரைச் சோளி தேவதைகள் 
அலுவல் கூட்டங்களில் 
கால் மீது கால் போட்டு அமர்பவர்கள் 
உள்ளுடை வரை தெரிய 
இறுக்கமாய்
சுரிதார் அணிபவர்கள் 
கால்பந்து மைதானத்தில் 
உப்பு வியர்வை வீச்சத்துடன் 
கடந்து போகிறவர்கள் 
உதடுகளை அடிக்கடி 
நாவால் வருடிக் கொள்கிறவர்கள் 
மார்புச் செயின் எடுத்துக் 
கடித்துக் கொள்கிறவர்கள் 
ரோட்டோரக் கடையில் 
நின்று 
டீ குடிப்பவர்கள் 
ஞாயிற்றுக் கிழமைகளில் 
பேரம் பேசி 
மாமிசம் வாங்குகிறவர்கள் 
துண்டு போர்த்திய 
இரவுடையுடன் 
விலாசம் சொல்கிறவர்கள் 
அது நனைய நனைய 
தண்ணீர் பிடிக்கிறவர்கள் 
மருந்துக் கடையில் 
நாப்கின் வாங்குகிறவர்கள் 
பெரிய தொங்கட்டான் 
அசைய அசையப் பேசுகிறவர்கள் 
ஹோட்டல் வாஷ்பேசினில்
குனிந்து முகம் கழுவுகிறவர்கள் 
கார்ப்பரேசன் கழிவறை வெளியே 
கொலுசுக் கால்களை தேய்த்துக் கழுவுகிறவர்கள் 
துணிக் கடையில் 
உள்ளாடை செக்சனில் நிற்பவர்கள் 
பூப்புனித நீராட்டுவிழாவில் 
புன்சிரிப்புடன் பன்னீர் தெளிப்பவர்கள் 
முதல் இரவுக்கு 
பெண்ணைத் தயார்ப் படுத்துகிறவர்கள் 
குல்பியை உறிஞ்சிச் சாப்பிடுகிறவர்கள் 
டிபன் பாக்ஸில் 
மல்லிகைப் பூ கொண்டு வருகிறவர்கள் 
ரேடியோவுடன் சேர்ந்து பாடுகிறவர்கள் 
கடற்கரைகளில் 
குதிரை மீது சவாரி ஏறுகிறவர்கள் 
நாய்களுடன் 
காலை நடை வருகிறவர்கள் 
பால்கனியில் நின்றுகொண்டு 
தலை கோதுகிறவர்கள் 
கடக்கும் போது 
ஓரக்கண்ணால் பார்க்கிறவர்கள் 
பேசிக் கொண்டிருக்கும்போதே 
ஜாக்கட்டைத் தளர்த்திக் கொள்கிறவர்கள் ..
நெடுநேரம் அலைபேசியில் 
கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறவர்கள் 
குழந்தைகளை உதட்டில் 
முத்தமிடுகிறவர்கள்....


முதிர் யுவனின் 
கனவுகளில் நிறையும் பெண்கள்..





LinkWithin

Related Posts with Thumbnails