Tuesday, March 22, 2011

விடிந்தது

பாய்லரிலிருது கிளம்பும்
புகை போல
கசிந்து கசிந்து வந்தது
முதல் வெளிச்சம்
அன்றைய கச்சேரிக்குப் பயிற்சியாய்
பறவைகள்
குரல்களைத் தீட்டிப் பார்த்தன
அணில்குஞ்சுகள்
முன்னங்கால்களைத்
தேய்த்துப் புதிதாக்கின
பட்டாம்பூச்சிகள்
சோம்பல் முறிப்பதை
முதன்முறையாக பார்த்தேன்
ஒரு இசைக் கோர்வை போல
மலர்கள் வரிசையாக விரிந்தன
காற்றின் நீண்ட பெருமூச்சில் விடுபட்ட
நேற்றைய இலைகள்
தங்கத் துளிகள் போல
தவழ்ந்து தவழ்ந்திறங்கின
ஒரு பெரிய
மிருகத்தின் மேல்சருமம்போல்
நீர்ப் பரப்பு
சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது
சர்க்கரைச் சமுத்திரத்தில்
ஒரு ஸ்பூன் போல
கிடந்தது
மொத்தப் பிரபஞ்சமும்

5 comments:

  1. அழகான விடியல்!
    //சர்க்கரை சமுத்திரத்தில்.......// ரசிக்க வைத்தது!

    ReplyDelete
  2. காலையில் இந்த சுறுசுறுப்பும் சரியே.
    இசைக்கோர்வை - ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருந்தேன் இந்தச் சொல்லை. நன்றி.

    ReplyDelete
  3. //காற்றின் நீண்ட பெருமூச்சில் விடுபட்ட
    நேற்றைய இலைகள்
    தங்கத் துளிகள் போல
    தவழ்ந்து தவழ்ந்திறங்கின..//

    அட்டகாசமான வர்ணனை.. அந்த 'தவழ்ந்து தவழ்ந்து இறங்கலி'ல், காட்சியே கண்முன் விரிந்தது.

    ReplyDelete
  4. //காற்றின் நீண்ட பெருமூச்சில் விடுபட்ட
    நேற்றைய இலைகள்
    தங்கத் துளிகள் போல
    தவழ்ந்து தவழ்ந்திறங்கின..//

    சிலிர்க்கிறது, கற்பனையில்.

    //பட்டாம்பூச்சிகள்
    சோம்பல் முறிப்பதை
    முதன்முறையாக பார்த்தேன்///

    so cute.
    ///மிருகத்தின் மேல்சருமம்போல்
    நீர்ப் பரப்பு
    சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது///

    சந்தோசப்படுத்திய உவமை.

    //சர்க்கரைச் சமுத்திரத்தில்
    ஒரு ஸ்பூன் போல
    கிடந்தது
    மொத்தப் பிரபஞ்சமும்//
    ஸ்பூன் போல பிரபஞ்சம். :)))))

    Thank you Bogan !
    மீண்டும் சிலிர்ப்பூட்டியதற்கு.

    ReplyDelete
  5. azhagu kavithai bogan urchakamoottukirathu

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails