Sunday, March 20, 2011

சோற்றுக் கணக்கு

ஒருநாள் காலை நடையில்
எங்கிருந்தோ
பின்னாலேயே வந்துவிட்டது அது
வெள்ளையும் பழுப்புமாய் ..
மிதக்கும் பெரிய கண்ணுமாய்
குட்டி வாலை
சக்கரம் போல்
சதா சுற்றிக் கொண்டு
ஒரு நாட்டு நாய்க்குட்டி ..

என் மகன் அதை
வளர்க்க மிக விரும்பினான்
மகளோ வெகுவாகப்பயந்தாள்
மனைவிக்குக் கருத்தேதுமிலை
நான் யோசித்தேன்
நாய்க்கு ஆகாரச் செலவு
ஆரோக்கியச் செலவு
கடிக்கும் அபாயம்
எல்லாவற்றையும் கணக்கிட்டு நிராகரித்தேன்
நிராகரிப்பை அறியாத
நாய்க் குட்டி இன்னமும்
மூடிய கேட்டின் வெளியே
வெயிலில் காத்திருந்தது
நான் வெளியே வரும்போதெல்லாம்
வாலாட்டி விண்ணப்பித்தது
நான் அதன் கண்களை
சந்திக்க மறுத்தேன்
சாப்பாடு போடப் போன
மனைவியைத் தடுத்தேன்

நாய்க்குட்டி
அலுவலகம் போகையிலும்
என் பின்னால் வந்தது
அளவில் பெரிய தெரு நாய்கள்
துரத்திவந்த போது
அது என் கால்களோடு
ஒடுங்கிப் பதுங்கிக் கொண்டது
நான் அது என் நாயல்ல
என்று அந்த மற்ற நாய்களிடம்
உடல் மொழியால் தெரிவித்தேன்
அவை அவற்றை ஆக்ரோஷமாய்ச்
சூழ்ந்து கொண்டன
மாலை திரும்புகையில்
அது போயிருக்கும் என நினைத்தேன்
ஆனால் அது வீட்டுக்கு வெளியே
இன்னமும் வாட்டமாய்க் கிடந்தது
அதன் பச்சை உடலில்
கசிந்துகொண்டிருந்த காயங்களை
நக்கிக் கொண்டிருந்தது
நான் கேட்டைக் கவனமாய்
அதன் மீது சாத்தினேன்
மகளும் மனைவியும்
இப்போது அதை வளர்க்கலாமே என்றார்கள்
நான் உறுதியாய் மறுத்தேன்
வாழ்க்கை உணர்வுகளால் மட்டும் ஆனதல்ல
என்று அவர்களுக்குச் சொன்னேன்
வாழ்வு கணக்குகளாலும் ஆனது
என்றதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை

இரவு முழுவதும்
அது தன் சிறிய குரலால்
என்னை அழைத்துக் கொண்டே இருந்தது
ஏதோ ஒரு நொடியில்
அதன் குரல் கம்மி நின்றது
அப்புறம் அது கேட்கவேயில்லை.

எல்லோரும் எழுந்து
ஜன்னல் வழி பார்த்தார்கள்
போய் விட்டது என்றான்
மகன் பாதி அழுகையாய்
மனைவி முகத்தில் கசப்பிருந்தது
மகள் விசும்பிக் கொண்டிருந்தாள்
நான் திரும்பிப் படுத்துக் கொண்டேன்
நான் சீக்கிரமே உறங்கவேண்டும்
நாளை எனக்கு
நிறைய வேலை இருக்கிறது

7 comments:

  1. என் மனசிலும் கசப்புதான் வருகிறது.
    வெட்டிய மரம், அழகில்லா பெண்,
    கணக்கு பார்க்கும் ஆண்....
    ஏன் ....வரிசையாய் ?? யாருமே சந்தோஷத்தை கொண்டுவராமல் ......
    மனசு கசக்கிறது .

    ReplyDelete
  2. அருமை.
    கணக்கின் தீவரம் மனிதம் தொலைப்பதை நியாயப்படுத்துகிறது. உயரின் மதிப்பு கணக்கில் நேர் செய்கிறதோ ?

    ReplyDelete
  3. நாய் வளர்க்க கண்க்கு பார்த்து
    மகன் விசும்பலில், மகள் அழுகையில்.
    மனைவியின் மனகசப்பில்
    மிச்சம் பிடித்தேன்.. ரூபாய்களை..

    சுழன்றது கால சக்கரம்..
    கற்று வளர்ந்து இஞ்சினியரான மகன், டாக்டரான மகள்..
    முதிர்ந்த நான் , இப்போது அந்த நாய் நின்றா அதே.. இடத்தில் ...

    எதையும் கணக்கிடு என்று நான் சொன்ன பாடத்தை .. காசு சேர்க்க
    எனக்கே சொல்லி கொடுக்கிறான் என் மகன்..
    மனித நேயத்தை போதிக
    மறந்தனன் தண்டனை எனக்கு இது தானோ...

    http://vinothpakkangal.blogspot.com/

    ReplyDelete
  4. உண்ர்வுகளால் ஆவதில்லை, கணக்காலும்.. மிகவும் ரசித்தேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த வகைச் சிந்தனை தேவையற்ற கவலைகளைக் கொண்டு வருவதே இல்லையென்று தோன்றுகிறது. தொடர்ந்து கடைபிடிப்பது கஷ்டம்.

    ReplyDelete
  5. நம்மால் முடியவில்லை என்றால், அதற்கு அடைக்கலம் தரும் இடத்தில் ஒப்படைத்திருக்கலாம். காசுக்கும், கருணைக்கும் சம்பந்தம் வேண்டுமா!

    ReplyDelete
  6. நிதர்சன வரிகள் நண்பரே , நானும் ஒரு நாய் குட்டிதான் இப்போது

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails