Sunday, April 29, 2012

கால இயந்திரத்தில் ஜாலி ஜம்பர்

ரானா பிரதாப் சிங் 
கடிவாளத்தை இழுத்து 
சேத்தக்கை நிறுத்தினார் 
''மீண்டும் வழி தப்பிவிட்டது''
என்றார் அலுப்பாக.
''அடுத்த முறை ஒரு ஜி பி எஸ் வைத்துக் கொள்ள வேண்டும் ''

ஜாலி ஜம்பர் 
முதுகை உதறிக் கொண்டது 
வலது முன்னங்காலை தூக்கி முகர்ந்து பரிசோதித்தது 
''ஷிட் ''என்று சபித்தது 
''அதுவும் மனித ஷிட்''

அதற்குள் மேலே உட்கார்ந்து கொண்டே தூங்கிவிட்ட 
நெப்போலியனை 
உலுக்கி எழுப்பியது 
அலெக்சாண்டர் விழித்துக் கொண்டு 
''கருப்பழகி 
எங்கிருக்கிறோம்?"'
என்றான் 

அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது 
''இள மழை ''என்றான் 
பாக்சர் குனிந்து 
''இளம் புல்''எனும்போது 
செங்கிஸ்கான் 
தோல் காலணிகளால்
இடுப்பில் உதைத்து 
''இளம்பெண்''என்றான்

ஜிஞ்சர் சுதாரித்து 
''இப்போது கற்பழிக்கலாமா 
என்று தெரியவில்லையே?''
சார்ல்மேகன் குழம்பி 
''எல்லா காலங்களிலும் 
அரசர்கள் கற்பழிக்கலாம்''

''இது எந்தக் காலம்?""
என்று ப்ரு ப்ரு கேட்டது 
ராஜ ராஜன் 
பானையில் தண்ணீர் தூக்கி வந்த பெண்ணை நெருங்கிப பார்த்து 
''தேவை இல்லை 
இவள் பெண்ணே அல்ல
ஜீன்ஸ் அணிந்திருக்கிறாள்''என்றான் 

அவர்கள் குழம்பி நின்ற போது 
வானத்திலிருந்து ஒரு குரல் 
''பவுலே பவுலே 
ஏன் என்னைத் துரத்துகிறாய்?"'என்றது 
கிங் ஆர்தர் தலை உயர்த்திப் பார்த்து 
''இதப் பார்ரா ''என்றான் 
வானத்தில் புகை போல ஒரு பெரிய சிலுவை தோன்றியது 
''நாம் அந்தத் திசை போவோம் ''
என்று சொன்ன கஜினியை 
''நம்பாதே 
அது காபிர்களின் கடவுள் 
அந்த பக்கம் கடல்தான் இருக்கிறது 
தவிர''என்று கூர்ந்து பார்த்து 
''ஒரு அணு உலை வேறு இருப்பது போலத் தெரிகிறது''
மக்னோலியா தடுத்தது 


இவற்றை எல்லாம் 
மரத்தில் இருந்து கவனித்த இரு குருவிகளில் ஒன்று 
''விக்கிரமாத்தித்த ராஜா வும் பட்டியும்''என்றது 
மற்ற குருவி 
''பட்டி என்றால் நாய் அல்லவா?'
இது குதிரை போல் தெரிகிறதே?'' என 
''ஸ்க்ரிப்டில் இல்லாததை  எல்லாம் பேசுகிறாய்
இந்தக் காலக் குருவிகளுக்கு ஒழுக்கமே இல்லை''
என்று முதல் குருவி  கடிந்து கொண்டது 

கேட்டுக் கொண்டிருந்த சார்ல்மேகன் சோர்ந்து 
''குதிரையே நீ இதற்கு முன்பு 
கற்பழித்திருக்கிறாயா""என்று கேட்டான் 
அது திடுக்கிட்டு 
''இல்லை.
ஆனால் ஏன்?''என்று யோசித்தது 

நீண்ட மௌனத்துக்கு பின்பு 
லக்கி  லூக்
குதிரையிடம் ''மன்னிக்கவும் குதிரை மாறிவிட்டது''என்றான் 
ஜாலி சம்பரும் ''ஆம்.
ஆளும் மாறிவிட்டது என்றே தோன்றுகிறது 
காலமும் .
சாரி''
இருவரும் பிரிந்து நடந்தார்கள் 

லக்கி லூக் மவுத் ஆர்கனில் 
கீழ்கண்ட பாடலை இசைத்த படியே போனான் 


''தனிமையே எனது துணைவன் 
தனிமையே எனது இசை...''


ஜாலி ஜம்பர் 
எதிரே வந்த ஒரு பெண் குதிரையைப் பார்த்தது 

சார்ல் மேகனின் கேள்வி நினைவுக்கு வந்து 
''TO DO OR NOT TO DO?"'
என்று யோசித்தபடி அங்கேயே யுகாந்திரமாய் நின்றுகொண்டிருக்கிறது 

Wednesday, April 18, 2012

எலிப்பத்தாயம்

இன்றுடன் நம் தொடர்பு முறிந்தது
என்றாள் அவள் 
பேருந்து இரைச்சலில் 
சரியாகக் கேட்கவில்லை எனினும் 
விஷயம் அதுதான்.

பேருந்தில் இருந்து இறங்கித் 
தளர்வாய் நடக்கிறேன் 
என்னிடம் 
சில காகிதங்கள் உள்ளனவே
அவற்றில் 
அவள் மேல் சில கவிதைகள் உள்ளனவே 
என்பது நினைவுக்கு வருகிறது 

அவற்றை முதலில் தொலைக்கவேண்டும்
என்று எரிச்சலுடன் நினைத்துக் கொள்கிறேன் 

மின்சாரம் போன தெருவில் 
கும்பலாய் எல்லோரும் 
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் 
என்ன தேடுகிறீர்கள் 
என்றதற்கு 
சாவிகள் என்றார்கள்
சாவிகள்!
என்று முணுமுணுத்துக் கொள்கிறேன்

மனைவி 
கொண்டுவந்த சப்பாத்தி
மடிந்து உலர்ந்து இருக்கிறது 
இந்த சப்பாத்தியை 
புதைத்துவிடு 
எப்போதோ இறந்துவிட்டது 
என்று சீறுகிறேன் 

கை கழுவச் செல்கையில் 
நெடுநாள் இம்சித்த எலி ஒன்று 
மருந்தைத் தின்றுவிட்டு 
கிச்சனில் கிடப்பதைப் பார்க்கிறேன் 


அதை நேற்றிரவுதான் 
எனது படுக்கை அறையில் 
நேருக்கு நேராய் சந்தித்தேன் 
நான் படிக்கவே படிக்காத 
கருணானந்த சாகரம் 
புத்தகத்தை அது படித்துக் கொண்டிருந்தது 
இடையில்
ஒரு கணம் நிறுத்தி 
தனது எண்ணெய்த் துளிக் கண்களால் 
என்னைப் பார்த்தது 


அதைப் புதைக்கும் பணியுடன் 
வெளியே வருகிறேன் 
இன்னும் மின்சாரம் வரவில்லை 

கோயில் மணி ஓசையை விலக்கி நடக்கிறேன் 
எலித் தீட்டு.

கோயிலில்திரி தூண்டும் 
பெண்ணின் 
முகத்திலும் 
குதித்து ஏறுகிறது தீபம் 
யாரோ ஒரு வாலிபன் 
அவளிடம் 
ஓடிவந்து எதுவோ சொல்கிறான் 
அவள் மார்புகள் 
ஒரு பூ போல 
விரிவதை இங்கிருந்தே என்னால் பார்க்க முடிக்கிறது 
சட்டென்று 
பெருமூச்சுடன் விலகிக் கொள்கிறேன் 

அலைபேசியில் 
அந்த நேரத்திலும் அழைத்துக் 
கடன் வழங்குகிறாள் 
வங்கிப் பெண் 
அவள் குரல் இளமையாக இருக்கிறது 
இன்றிரவு என்னுடன் 
நீ உடையின்றி இருக்க முடிந்தால் 
உடனே கடனட்டை வாங்கத் தயார் 
என்று சொல்ல விரும்புகிறேன் 

ஆனால் சொல்ல முடியாது 
செப்பு போன்ற 
சிறிய குரல் உடைய 
ஒரு பெண்ணை ஒருதடவை 
நேரில் சந்தித்து பீதியடைந்துவிட்டேன் 
திருவாரூர்த் தேர் போல இருந்தாள்
அவளது பின்னம்பாகங்கள் 
நெடுநாள் என்கனவில் 
அசைந்து கொண்டே இருந்தன.

சிறுநீர் கழிக்க நிற்கிறேன் 
முன்புபோல் 
அது தொலைதூரம் செல்வதில்லை.
என்று கவனிக்கிறேன் 
எனது ஆண்குறி இறக்கிறதா என்ன?

பன்றிகள் உருமுகின்றன.
தொங்கும் முலைகளுடன் 
திரிந்த பன்றியை 
ஆண் பன்றிகள் விரட்டுகின்றன 

அதில் முதலில் ஓடும் பன்றி 
நிச்சயம் 
ஒரு ஆணாதிக்கப் பன்றிதான் 
என்பது அதன் குரலில் இருந்து தெரிகிறது 

பன்றிகள் புணர்வதை 
யாரும் இதுவரைப் 
பதிவு செய்ததே இல்லையே 
என்று கேட்டுக் கொள்கிறேன் 


மாடி ஜன்னலில் இருந்து 
ஒரு பெண் எட்டிப் பார்க்கிறாள் 
ஜன்னலுக்கு வெளியே 
அவள் முலை சரிந்து தொங்குகிறது 

எலியின் பிரேதத்தை 
கவனத்துடன் குப்பைத் தொட்டியில் இடுகிறேன் 

நடக்கிறேன் 
பின் கவனம் உற்றவவனாய் 
திரும்பிவந்து சொல்கிறேன்

'போய் வா நண்பனே''

Tuesday, April 17, 2012

இலக்கியம் பேசுதல்

சிக்கலான உடைகளிலிருந்து 
அவள் இன்னமும் 
தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறாள் 
பழம் கடிகாரத்தில் 
பனிரெண்டு மணிக்கு 
முன்னிமிடத்தில் 
துடிக்கும் முள் போல 
என் குறி துடித்துக் கொண்டிருக்கிறது.
மேசை மீது 
பாதி குடித்த காபி 
ஆவி விட்டுக் கொண்டிருக்கிறது 
சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது 
அவசரமாக நிறுத்தப் பட்ட 
சதுரங்க விளையாட்டு 
காத்திருக்கிறது 
விவாதிக்க விரும்பிக் கொண்டுவந்த புத்தகங்கள் 
பிரிக்கப் படாமலே கிடக்கின்றன 
அவள் கணவன் எப்போது வருவான் 
என்று மீண்டுமொரு தடவை
நான் பதற்றமாய்க் கேட்டுக் கொள்கிறேன் 

இவ்வளவு சீக்கிரம் 
இந்த முனைக்கு வருவோம் 
என எதிர்பார்க்கவில்லை 
பார்த்திருந்தால் 
நான் இன்னும் சற்று முன்னதாகவே 
பத்திரமான நேரத்துக்கு அங்கு போயிருப்பேன் 
அவளும் இன்னும் 
இலகுவான ஆடை ஒன்றை அணிந்திருக்கக் கூடும்

கந்தர்வன்

பேராற்றின் கரையில் 
நுண்மணல் மலர 
அமர்ந்திருந்தாள் அவள் 
இருள் 
ஒரு பெரும்பாம்பு போல 
பூமி மீது படரும் பொழுதில் 
வானிலிருந்து 
வீழ்ந்து கொண்டிருத்த 
அவன் அவளைக் கண்டான் 
மனிதர்களைப் போலவே இருந்தாலும் 
அவன் மனிதன் அல்லன். 
புராணங்களில் 
அவன் கந்தர்வனாகவும் 
விஞ்சையனாகவும் 
தேவனாகவும் 
இயக்கனாகவும் 
அறியப் படுகிறான் 
அங்கிருந்து நோக்க 
கரை மேல் ஏற்றி வைத்த அகல் போல 
அவளிருக்கக் கண்டு 
அவனருகில் வந்தான் 
சூறைக் காற்றில் ஒடுங்கி நடுங்கும் 
சிற்றகல் அவள் 
எனினும் 
முனைகளில் ஆடக முனை 
விட்டெறிந்த அந்த அகல் 
வெளிச்ச ஏணிபற்றி 
தான் வீழ்ந்த 
சொர்க்கத்திற்கு ஏற முடியும் 
என்று அவன் கண்டு கொண்டான் 
மெல்ல ஒரு இறகு போல 
இறங்கி அவளருகில் நின்றான் 
கைகூப்பி 
வான் முனை காண்பித்து 
அவளிடம் ஏதோ சொன்னான் 
ஒருவேளை 
நட்சத்திரங்களின் தோற்றம் பற்றி 
அவளிடம் சொல்லி இருக்கக் கூடும் 
அல்லது 
அவள் தனது கருவறையில் 
பொதிந்துவைத்திருக்கும் 
இன்னும் பிறக்காத பிரபஞ்சங்கள் பற்றி 
அவள் அதைக் கேட்டாளா 
தெரியவில்லை.
அதன்பிறகு 
இப்புவி மீது 
அவளைக் கண்டவரில்லை.

ஆனால் 
ஒன்று நிச்சயம் 
கணிணியில் 
வெறும் எண்களாய் 
அவளை 
நான் மாற்றிக் கொண்டிருந்த வேளையில்தான் 
இவையெல்லாம் நிகழ்ந்தது.

Monday, April 16, 2012

அமரன்

நடு இரவில் 
தூக்கப் பட்டு 
கண்ணாடிக் கூண்டுக்குள் அடைக்கப் பட்டேன் 
முகமூடிகள் மாட்டப் பட்டன 
எலும்புக் கரங்களில் 
நரம்புகளை நெருடி நெருடி 
ஊசிகள் ஏற்றப் பட்டன 
வினோத நிறங்கள் பொலியும் 
திரவங்கள் 
உடலை ஊடுருவின 
இருபத்தி நாலுமணி 
என்று கடிகாரத்தில் 
எல்லைகள் குறிக்கப் பட்டன 
நல்ல வேளையாக
நான் நிரந்தரமானவன் 
என்ற புகழ் பெற்ற 
கவிதையை எழுதிய 
கவி நான்தான் 
என்று 
சுற்றி நின்றிருந்த யாருக்கும் தெரியவில்லை 
என்ற ஆறுதலோடு 
இறந்து போனேன்

கொற்றவை

பேரணங்கின் ஆரம் சுழலுமிடம் 
என்ற துணிவோ 
உடல் என்பது வெறும் ஊன் 
என்ற தத்துவம் கொண்டவளோ 
தேநீரின் மீது மிதக்கும் பாலாடை போல 
பாசி மிதக்கும் 
அம்பலக் குளத்துறையில்

ஆயிரமாயிரம் பாதங்கள் அழுந்தித் தேய்ந்த 
கல் தரையில் நின்று 
அலட்சியமாய் 
ஆடை களைந்து கொண்டிருந்தாள் பெண் 
விரித்த சாளரத்தின் வழி 
புலர் பொழுதில் கிடைத்த முதல் காட்சி
காதலிக்காமல் 
கல்யாணம் செய்யாமல் 
காசு எறியாமல் 
காணக்கிடைத்த 
இலவசப் பெண் உடலைப் 
புறக்கணிக்க முடியாது 
நின்றேன் 
அடி வயிற்றுத் தசைகள் இறுக
ஒரு துப்பாக்கி உயர்த்தப் படுவது போல 
ஆண்குறி எழும்ப 


சீலை விலக்கி எறிந்து 
முலை மூடாடை கழற்றி 
முடிச்சிட்ட்ட பாவாடையைத் தளர்த்தி 
மேலேற்றி 
கரிய வாழை போல சரியும் 
கால்களை உயர்த்தி 
கீழாடை உதறும் போது 
கணுக்களில் தயங்கி நின்ற 
ஒற்றைக் கொலுசை மாத்திரம் கண்டேன் 

யாரோ பார்ப்பது போல உணர்ந்து 
சட்டென்று ஜன்னலை மூடினேன் 

துடிக்கும் இருதயத்தோடு 
திரும்பியபோது 
அறையில் இருந்த 
பழந் தெய்வத்தின் 
சினத்தின் செவ்வரி ஓடிய
சித்திரக் கண்கள் 
ஒரு கணம் 
அசைந்து மீண்டனவா?


எப்போதும் எச்சரிக்கையாய் இருங்கள் 
ஆடை மாற்றும் போது
பார்க்கும் கண்களைக் குறித்து..

பார்க்கும் கண்களைப் பார்க்கும் கண்கள் குறித்தும்..

LinkWithin

Related Posts with Thumbnails