Sunday, November 27, 2011

விலக்கப் பட்ட கனி


மதுக் கோப்பையில் 
மிதக்கிறது 
ஒரு நிணத் துண்டு. 
ஐந்தாங் கிளாஸ் தமிழ்  டீச்சரின் 
பருத்திப் புடவைக்குள் 
விறைத்து நிற்கும் 
இடது முலைப் பொட்டு
விவிலிய வகுப்பெடுத்த 
இளம் துறவியின் 
கீழுதடு 
நண்பனின் அம்மா 
பாத்திரம் கழுவுகையில் 
அசையும் இடுப்புச் சதை 
புடவை மாற்றுகையில் எல்லாம் 
விரியும் 
ராமேஸ்வரி அத்தையின் 
பூனை மயிர் பூத்த தொப்புள்.. 
தடுக்கப் பட்ட பழம் 
நிச்சயமாய் மறப்பதே இல்லை 
அனுமதிக்கப் பட்ட யோனிகளில் கூட 
அதன் சுவடு நகக் குறி போல பதிந்திருக்கிறது 
தொழும் கைகளின் நடுவே கூட 
இருக்கிறது ஆறாவது விரலாய்..
எல்லா விளையாட்டுகளின் 
நடுவிலும் ஓடுகிறது 
இன்னொரு இழையாய் 

இலுப்பூர் பேருந்து நிலையத்தில் 
நேற்று மாலை 
எனக்குத் தடுக்கப் பட்ட கீழுதடைப் பார்த்துப் 
பேசிக் கொண்டிருந்தேன் 
கர்த்தருக்கு ஸ்தோத்திரங்கள் சொல்லி 
விடைபெற்றவுடன் 
பதற்றத்துடன் தேடிக் கண்டடைந்தேன் 
மதுக் கோப்பையில் எப்போதும் 
எனக்காகக் 
கிடக்கும் நிணத் துண்டை ..

Thursday, November 24, 2011

கலைடாஸ்கோப் -1





1.அறுத்துப் பார்த்த 
கணவனின் பிணத்துடன் 
தனியாக நின்றிருந்தாள் அவள் 
ஆம்புலன்சுக்கு காசு இல்லாமல் 
அழுதுகொண்டிருந்தாள்
வளருகில் 
அவள் குழந்தை 
யாரோ வாங்கித் தந்த 
சிகப்பு மிட்டாயைச் சப்பிக் கொண்டிருந்தது 

எல்லா துக்கங்களையும் 
மறக்கடிக்கும் 
சிகப்பு மிட்டாய் ஒன்று 
எனக்கும் தா கடவுளே ..




2.மணல் நதியில்
நீந்தித் திளைக்கிறது மீன்

ஒன்று
அது மீனல்ல
அல்லது
அது நீந்துவது மணல் அல்ல.

ஆனால்
என் கனவில்
ஒன்றல்லது மற்றது
என்பதே கிடையாதே ...


3.பல நேரங்களில்
இல்லாத கதவுகளை
திறக்க முயலும்
குடிகாரனின் முயற்சி போல
ஆகிவிடுகிறது


சிலருடனான உரையாடல் .....


4.நுரை பொங்க
பழுத்த ரொட்டியில்
தடவப் படும்
என் பச்சை ரத்தம்..
உண்டு வளர்த்துக் கொள்
உன் உயிர்த் தசையை ...

5.நீங்கள் 
இறங்கும் போதிருந்த 
அதே ஆறுதான் இது 
ஆனால் 
நீங்கள்... 
இறங்கும் போதிருந்த 
அதே ஆள்தானா?











Sunday, November 20, 2011

பிளாஸ்டிக் புன்னகைகள்

1.அவளது 
சாக்கரின் புன்னகை
மிதக்கும் 
பிளாஸ்டிக் கண்களைத் தாண்டி 
எப்படி 
அவளை நேசிப்பது 
என்பதுதான் 
எனக்கு 
இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை


2.எங்கிருந்தோ பறந்துவந்து 
ஜன்னல் விளிம்பில்
அமர்ந்துகொண்ட 
பட்டாம்பூச்சியை 
குறைந்தது 
பத்துப் பேராவது
கவிதை செய்திருக்கக் கூடும் 
என்று நினைத்துக் கொண்டேன் 
களங்கமின்மையின் பாவனைகளோடு 
புகைப்படத்துக்கு 
போஸ் தரும் 
குழந்தை நடிகை போல 
இது 
ஒரு தொழில்முறைப் பட்டாம்பூச்சியாகவும் இருக்கக் கூடும் தானே?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

3.எப்படி இருக்கிறாய்
என்றவள் கேட்டதில் 
இருக்கிறாயா 
என்ற 
கேள்வியும் இருந்ததா?

4நான் இல்லாவிட்டால் 
இறந்துவிடுவேன் 
என்றவளை 
நேற்று தெருவில் பார்த்தேன் 
கையில் சாத்திய குழந்தையோடு..

இறந்தபிறகு 
பிறந்ததா இது?

5.நெடுநாட்களாய் 
உன் குகையில் நீ இருந்தாய் 
என் குகையில் நான் இருந்தேன் 
ஒரு சலிப்பான காலையில் 
ஒரே நேரத்தில் 
தற்செயலாய் வெளியே வந்தோம் 
காலைக் கதிரின
பொன் வெயில்
இருவர் மீதும் படர்ந்தது 

அந்த 
இனிப்புவெளிச்சம் 
மற்றவரிடமிருந்தே வருகிறது 
என்று தவறுதலாக நினைத்துக் கொண்டோம்... 
காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் ...


Friday, November 18, 2011

கிளையில் பறவை



1.இது எனக்கான பறவை 
என்று குறிவைத்து விட்டான் வேடன் 
இன்றைய இரவுணவு
என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் 
வழக்கம் போல 
பறந்துகொண்டிருந்தது பறவை 
வேடனின் கண்களையும் 
சுமந்துகொண்டு ....

2..நீங்கள் 
இறங்கும் போதிருந்த 
அதே ஆறுதான் இது 
ஆனால் 
நீங்கள்... 
இறங்கும் போதிருந்த 
அதே ஆள்தானா?

3.முடிவின்மையின் ஆழத்திலிருந்து 
கிளம்பி வந்தது அது 
கிளிஞ்சல்கள் பொறுக்கிக் கொண்டிருந்தவனை 
வா என்றது 
நான் அழுது 
கிளிஞ்சல்கள் அழகாய் இருக்கின்றன என்றேன் 
அது புன்னகைத்து 
உனக்கான கடைசி அழைப்பும் தீர்ந்துவிட்டது 
என்று சொல்லி 
மீண்டும் உள்ளே அமிழ்ந்து கொண்டது
கையிலிருந்த 
கிளிஞ்சல்கள் 
சட்டென்று நெளிந்து புழுக்களாவதை
உணர்ந்தேன் 
ஆனால் வெகு தாமதமாக...
அதற்குள் புழுக்கள் பெருகி 
என்னைத் தின்ன ஆரம்பித்தன

4.மழை
என்று சொல்வதே
மழைக்குச்
சரியாய் இருக்கிறது

5.உடனே 
புறப்பட்டு வந்தால் 
இந்த பட்டாம்பூச்சியைப் பிடித்துவிடலாம் 
ஆனால்...

விடுங்கள்... 
உங்களுக்கும் ஆனைக் கால்...
பாம்புக் கை..




Tuesday, November 15, 2011

ஓநாய் எழுதுகிறேன் ..

1.சக்கரவர்த்தி
துறவி
முட்டாள்
டாரட் ஜோசியத்தில்
எனக்கு வந்த கார்டுகள்


''இவைதாம் நீ .
எந்த வரிசையில்
அவர்கள் உனக்குள் நிற்கிறார்கள்
என்பதை மட்டும்
நீ தீர்மானித்துக் கொள்ளலாம் ''
என்றான் ஜோதிடன்

சிரித்துக் கொண்டேன்
சந்தேகமென்ன
நான்
முட்டாளாய் இருந்ததால்
துறவு போக வேண்டியிருந்த
சக்கரவர்த்தி ..


2.நான்
தன்னைத் தானே
சேர்த்துக் கொள்ள முயலும்
க்யூப் போல
அல்லது
தன்னைத் தானே
விடுவித்துக் கொள்ள
முயலும் புதிர் போல
அல்லது
தன்னைத் தானே
திறக்க முயலும் தாழ் போல...

க்யூப் .
புதிர்.
தாழ்.
ஆம் இவைதான் நான்.




3.அவர்களுக்குத்
தெரியாது என்பதால் 
என்னைப் புசிக்கவரும் 
ஓநாயுடைய பசியையும் 
சிலுவையில் 
அறைபவனின் 
மெய்வருத்தத்தையும் 
என்னைப் புதைக்க வந்தவன் 
கைதவறி 
காலில் வெட்டிக் கொண்டதையும் 
நானேதான் எழுத வேண்டி இருக்கிறது 

தனக்கு மட்டுமேயானவன் இல்லை 
கவி..


4.அடிபட்ட 
பின்னங்கால்களுடன் 
எங்கள் ஜன்னலை நோக்கி 
ஏறெடுத்து 
அழும் 
பழுப்பு நிற நாய்க் குட்டியிடம் 
நாங்கள் 
அதற்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை 
என்பதை 
யாராவது சொல்லிவிடுவது நல்லது

Monday, November 14, 2011

இவை கூட...

1.சற்றே சரிந்த
பிள்ளையார் கண்
என்றாலும் அழகுதான்
இரண்டில் ஒரு மார்பு சிறியது
எனினும்
இரண்டுமே அழகுதான்

மூக்கில் அமர்ந்த
ரத்தினத்தின்
நிழல் காட்டிய
சிகப்பு உதடுகள்
கண்ணாடித் துளிகள்
மினுங்கும் சேலையுள்
பொதிந்து உறங்கும்
தொப்புள்...

யூகித்துத் தீராத பெண்...






2.வரிகளை
தேய்த்துக் கொண்டு
நாற்காலியில்
மர்ந்திருக்கிறது புலி
பசிக்கென
பையில்
சில பழங்களை
வைத்திருக்கிறது
அலுவல் முடித்து
வீடு போய்
ஆசார உணவு
படுக்கும் முன்பு
ஒரு தம்ளர் பால்
வேட்டையின் கனவுகள்
வந்துவிடாமலிருக்க
தூக்க மாத்திரைகள்
என்று நன்றாகத்தானிருக்கிறது புலி
யாராவது
காடு என்று உச்சரிக்கும்போது மட்டும்
முகம் வலியில் கோணுகிறது
மற்றபடி
சுகமாய்த்தானிருக்கிறது
புலியாய் இருப்பது எப்படி
என்று மறந்த புலி ...


3.கரிந்துபோன 
தென்னை மரத்தின் 
உச்சியில் 
வந்தமர்ந்தது 
விலாவில் 
பச்சை தடவிய 
அப்புவின் கைப்பிடி அளவே இருந்த 
பூங்குருவி .
காய்ந்த மட்டைகளைக் 
கிலுக்கிப் பார்த்து 
''வீண் ..வீண்... ''
என்று கத்தியது 
அப்பா ஆசையாய் 
வைத்துப் போன தென்னை அது ..
நான் எதிர்வாதம் புரியாது 
மௌனமாய் இருந்தேன் 
உண்மைதான் .
எல்லாம் வீண்... வீண் ...


LinkWithin

Related Posts with Thumbnails