Thursday, October 11, 2012

இரண்டு ராமர்கள்


ஆந்திரத்தில் பயணம் செய்யும்போதெல்லாம் இரண்டு விசயங்களைக் கவனித்திருக்கிறேன்.ஒன்று அவர்களுக்கு கோதாவரியின் மீதுள்ள பற்று.அடுத்து ராமனின் மீது அவர்களுக்கு இருக்கிற அபாரமான பிரேமை.வியப்பு.வாத்சல்யம்.எனக்கு அது சற்று மிகையாகவே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது.அவர்கள் எப்போதுமே சற்று அதிகம் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள்  என்ற பிம்பம் எனக்குள் இருந்ததாலும் இருக்கலாம்.ஒருபக்கம் தெலுங்கானா  பிரச்சினை.நக்சலைட் நெருப்பு.இதற்கு நடுவில் ராம பக்தி.எந்த ராமன்?தியாகராஜ சுவாமிகளின் பாடல்களில் நின்றும் நடந்தும் கிடந்தும் என வருகிற ராமன்.மனித  குல மாணிக்கம் என்று கம்பன் சிலாகிக்கிற ராமன்.இந்தியாவில் எங்கு போனாலும் இது ராமர் வில் ஊன்றியஇடம்.சீதை இருந்த இடம்,அனுமன் தாவிய இடம் என்று குருதிக் கோட்டுடன்  வரும் தொன்மங்கள் ஊற்ற்டுக்கும் ராமன்.நாட்டார் கலைகளில் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கும் ராமன்.சீதையின் பிரிவுக்காக மனம் கலங்கி அழுத சீதா ராமன்.தந்தை வாக்கைக்  காப்பாற்ற நாடு துறந்த தசரத ராமன்.அதே சீதையை  ராஜனின் தர்மம் என்ற காரணத்துக்காக  காட்டுக்கும் அனுப்பிய ராஜா ராமன்.காந்தியின் ஆதர்ச ரகு ராமன்.


இன்னொரு பக்கம் .தொடர்ச்சியாக அரசியலாக்கப் பட்டுவரும் ராமன்.

இரண்டு ராமன்களையும் நான் பெரும்பாலோனோரைப் போலவே குழப்பிக் கொண்டிருந்தேன்.ஆனால் குழப்பம் என்னைப் போன்ற ராமனை புத்தியால் மட்டுமே  அணுகும்  அரைவேக்காடு அறிவு ஜீவிகளுக்குத்தான் என்றொருவர் உணர்த்தினார் 

போனதடவை ஆந்திரத்தில் பயணம் செய்யும்போது தான் ரயிலில் அந்தக் கிழவரைச் சந்தித்தேன்.கையில் தம்புரு போன்ற ஒரு கருவியுடன் ராமனைப் பற்றி எதோ ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.பிச்சை எதுவும் கேட்கவில்லை.நாங்கள் சாப்பிடும்போதெல்லாம் பாடிக் கொண்டே இருந்தார்.டிக்கட் இல்லை என்று தெரிந்தது.ஆனால் டிடிஆர் எதுவும் கேட்கவில்லை.ஒன்றும் சொல்லாமல் கடந்து போய்  விட்டார்.சிலர் அவருக்கு தாங்கள் சாப்பிடுவதைக் கொடுத்தபோது மறுக்காமல் வாங்கி கொண்டார்.ஒரு முஸ்லீம்  குடும்பமும் இதில் அடக்கம்.பர்தா அணிந்த அந்தக் குடும்பத்தின் பெண்கள் இருவரும் அவர் பாடல்களை உன்னிப்பாகக் கேட்டவாறே வந்தனர்.அவரது பாடல்கள் சில எனக்குப் பரிச்சயமானவை.தியாகராஜரின் கிருதிகள் போலத் தோன்றியவை.சில ஆந்திரத்தில் புழங்கும் நாட்டுப் புறப் பாடல்களாக இருக்கக் கூடும் என யூகித்தேன்.அ வரே சில பாடல்களைப் புனைந்து  பாடுகிறார் என்பதையும் அவர் முகத்திலிருந்து யூகித்தேன்..மத்திய குரலில் அவர் சீராகப் பாடிக் கொண்டே வந்தார்.எல்லாமே ராமனைப் பற்றி அல்லது சீதையைப் பற்றி, அனுமனைப் பற்றி.அவர்களிடையே இருந்த உறவு பற்றி.யாரோ ஒருவர் தூங்கவேண்டும் என்று ஆட்சேபித்த சமயம்  மட்டும் பாட்டை நிறுத்திவிட்டார்.ஆனால்அப்போதும்  மனதுக்குள் பாடிக்கொண்டுதான் இருந்தார் என்று முக பாவனைகளில் இருந்து தெரிந்தது. எங்கள்  செவிகளுக்குக் கேட்காத ஒரு ஸ்வர இழையில் சேர்ந்துகொண்டு அவர் உள்ளே  கசிந்து கொண்டிருந்தார்.நாங்கள் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.நானும் எனது நண்பரும்.நண்பர் ஒரு இந்துத்துவர்.அவருக்கு ஓரளவு தெலுங்கு தெரியும்.எனக்கு லேசு லேசாகப் புரியும்.கிழவருக்கு லேசாக தமிழும் தெரிந்திருந்தது.ராமேஸ்வரத்துக்கும் கும்பகோணத்தில் ஒரு ராமன் கோயிலுக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னார்.எனக்குத் தெரியவில்லை.மேலும் தமிழ்நாட்டில் ராம வழிபாடு அத்தனை தீவிரமாக இல்லை என்று சொன்னேன்.மற்ற தெய்வங்களிடம் இல்லாத ஒரு சோகமான அமைதியை  நான் போன மிகச் சில ராமர் கோயில்களில் உணர்ந்திருக்கிறேன்.ஏறக்குறைய கிறித்துவ சர்ச்களில் நான் உணரும் சோகம். மற்றபடி  நாங்கள் சைவ பாரம்பர்யத்தில் வந்தவர்கள்.ராமன் அத்தனை நெருக்கமில்லை. ஆகவே ஆரம்பத்தில் அவருடன் எனது நண்பர்தான் அதிகம் பேசிக் கொண்டிருந்தார்.அவர் உற்சாகமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.ராமன் மீதான அவரது காதல் அந்தப் பதில்களில் தெரிந்தது.ஆனால் அவர் ஒரு தவறு செய்துவிட்டார்.ராமபக்தர் என்பதால் அவர் ஒரு ஹிந்துத்துவ ஆதரவாளராகவும் இருக்க கூடும் என்று நினைத்துவிட்டார்.ராமனை மையப் படுத்திய அரசியல் பற்றி பேச்சு வந்ததுமே அவரது புன்னகை மறைந்தது..''அய்யா நீங்கள் பேசுவது எங்களது ராமனைப் பற்றியதல்ல''என்று சொல்லிவிட்டார்.எங்களை விட்டு விலகிப் போய்  அமர்ந்து கொண்டார்.அதன்பிறகு அவருடன் தொடர்ந்து பேச எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவுமே பலிக்க வில்லை.


ஆனால்  அவர் முகம் மாறிவிட்டது.எங்களையே அடிக் கண்ணால்  பார்ப்பதும் முணுமுணுப்பதுமாக  இருந்தார்.எங்களிடையே ஒரு இழை அறுந்து போனதை  நான் உணர்ந்தேன்.அவர் உதடுகள் பேசா விட்டாலும் உள்ளுக்குள் அசைந்து கொண்டே இருந்தது.அவர் எதையோ தீவிரமாக சொல்ல நினைக்கிறார் என்று நினைத்தேன்.ஆனால்  மந்திராலயம் நெருங்கும் முன்பு எங்களை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு சட்டென்று உரத்த குரலில் பாட ஆரம்பித்துவிட்டார் .அதன் சுமாரான மொழி பெயர்ப்பு இது.



அய்யா 
எங்கள்  ராமன் உங்கள் ராமன் அல்ல 
எங்கள்  ராமன் 
தவளைக்கும் 
கல்லுக்கும் 
கூனிக்கும் 
குகனுக்கும் 
மந்திக்கும் 
ஏன் 
எதிரிக்கும் கூட  கருணை செய்யும் ராமன் 
துணி தோய்ப்பவன்  
சொல்லுக்கும் காதுள்ள ராமன் 
அப்பன் சொல்லுக்காக 
ராஜ்ஜியம் அத்தனையும் 
விட்டுப் போன ராமன் 
கல்லும் முள்ளும் குத்த 
காடுகளிலும் மேடுகளிலும் 
கட்டிய ஒரே பத்தினியைத் தேடி அலைந்தவன் 

உங்கள் ராமனோ எளியோரையும் 
முதியோரையும் 
பெண்களையும் வதைக்கின்ற ராமன் 
தோளில்  உள்ள சிசுவையும் 
வயிற்றில் உள்ள சிசுவையும் 
சேர்த்தழிக்கிற  ராமன் 


அரக்கனுக்கும் அடுத்த நாள் தந்த 
எங்கள்  ராமனை நீங்கள் அரக்கனாக்கினீர்கள்  

அய்யா 
அரக்கனாக்கியதின்  மூலம் 
எங்கள் ராமனின் ஆன்மாவை நீங்கள் கொன்றுவிட்டீர்கள் 

ஐயோ 
எங்கள்  ராமனை நீங்கள் கொன்று போட்டீர்கள் 
கொன்று போட்டீர்கள் 

நாங்கள் உறைந்து போய்  நின்றுவிட்டோம்.பெரிய மௌனம் பெட்டி முழுவதும் நிலவியது.எனது நண்பரின் முகம் மிக சிவந்துவிட்டது.அடிப்படையில் அவர் மென்மையானவர்.நாங்கள் மந்திராலயவில் இறங்கிவிட்டோம்.இறங்கி  வெளியே கூரை வேய்ந்த கடையில்  சிறிய குவளையில் டீ  குடித்தோம்.நண்பர் என் கண்களைச் சந்திக்க மறுத்தார்.நான்  பிடிவாதமாகச் சந்தித்த பொழுது   பதறி விலகி ''பைத்தியக் காரன் பைத்தியக் காரன்'' என்றார் 

LinkWithin

Related Posts with Thumbnails