Sunday, September 5, 2010

மதுரை புத்தகத் திருவிழா

இந்த தடவையும் மதுரை புத்தக விழாவுக்கு செல்வதற்கு  எப்படியோ நேரத்தையும் காசையும் கண்டுபிடித்து சென்றுவந்துவிட்டேன்.ஏறக்குறைய ஆறு மணிநேர பயணம்.நான் இருக்கும் இடத்தில் இருந்து திருவனந்தபுரம் ஒரு மணி நேரம்தான்.குறைந்தது முப்பது சதவீதம் தமிழர்களே.ஆனால் இதுவரை ஒரு தமிழ்ப் புத்தகக் கண்காட்சி கூட நடந்ததாக நினைவில்லை.பாவம்.அவர்களது  கலாச்சார சக்தியெல்லாம் விஜய் படத்துக்கு கட் அவுட் வைப்பதிலேயே செலவழிந்து விடுகிறது.என்ன செய்வது.நாகர்கோயிலில் காலச்சுவடு கடையில் கொஞ்சம் கிடைக்கும்.நெல்லை பரவாயில்லை.சென்னை ரொம்பதூரம்.ஏறக்குறைய அடுத்த மாநிலம்.ஆகவே என்னைப் போன்றவர்க்கு மதுரைப் புத்தகக் கண்காட்சி ஒரு வரம்தான்.

ஆனால் இந்த தடவை விளம்பரம் சரியில்லை என்று தோன்றுகிறது.நுழைவுக் கட்டணம் கிடையாது.ஆனாலும் நான் போன சனிக் கிழமை மாலையில் கூட்டம் குறைவே.கடைகளின் எண்ணிக்கையும் போனதடவையை விட குறைவு எனறார்கள்.ஆங்கிலப் பதிப்பாளர்கள் நிறைய பேரைக் காணோம்.ஏனோ?

ஆனாலும் இந்த புத்தக விழாவில் நான் நெடுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்த புத்தகங்கள் சிலவற்றை வாங்க முடிந்தது.இன்னொன்று எதிர்பாராது நிகழ்ந்தது.நான் பெரும்பாலும் புத்தகம் படிப்பதோடு சரி.அதை எழுதுபவர்களைத் தேடிப் போகும் அபாயகரமான  காரியத்தை பண்ணுவதில்லை. நண்பர்கள் சிலரின் அனுபவங்கள் அத்தனை உவப்பானதாய் இல்லை.நேரில் பார்த்தால் கூட விலகி வந்துவிடுவேன்.இந்த தடவை அ மார்க்சை இசகு பிசகாய் சந்திக்க நேர்ந்தது.தமிழினியில் வாசலில் அமர்ந்திருந்தார்.நான் அவரை முதலிலேயே பார்த்துவிட்டேன்.ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகங்களை அங்கு மட்டும் வாங்கியிருந்தேன்.மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அரசியல் என்ற அவரது புத்தகமும் ஒன்று,என்னுடைய பட்ஜெட் ஏறக்குறைய  காலியாகி விட்டிருந்தது.பில் போடும் போது அங்கிருந்த பணியாளர் மார்க்சின் புதிய புத்தகம் ஒன்றைக் காண்பித்தார்.கையில் காசில்லை.ஆகவே ஏற்கனவே படித்துவிட்டேன் என்று சமாளித்து பார்த்தேன்.இன்றுதான் வெளியிடுகிறோம் சார் என்றார் அவர் விடாக் கண்டனாக.நான் கொஞ்ச நேரம் அசட்டுத் தனமாக நின்று கொண்டிருந்தேன்.ஒரு எழுத்தாளனின் முன்னாலேயே அவர் புத்தகத்தை மறுப்பது என்னும் தர்மசங்கடத்துக்கு ஆளானேன்.பிறகு நானே அத் தருணத்தை உடைத்தேன்.அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.அவரது புத்தகத்தில் கையெழுத்தும் போட்டுத் தந்தார்.

இந்த கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்
தாந்தேயின் சிறுத்தை -சாரு நிவேதிதா -உயிர்மை -ரூ 230

 கொஞ்சம் புரட்டியதில் தெரிந்தது.பாதி உலக இலக்கியம் .மீதி ஜெயமோக[னைத் திட்டும் ]இலக்கியம் .பின்னது இல்லாமல் இருந்தால் நல்லாய் இருந்திருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்.இலக்கிய பூசல்களோடு சேர்த்துதான் இலக்கியம் வருகிறது.It comes with the package.

சாந்தாமணியும் இன்ன  பிற காதல் காதல் கதைகளும்-வா.மு.கோமு-உயிர்மை-ரூ 220
 கச்சு அற்ற மன்னிக்கவும் கட்டு அற்ற பாலியல் இலக்கியம் எனறார்கள்.என்ன அற்றது என்று பார்க்கலாமே என்று வாங்கினேன் .[இந்த இடத்தில் ஒரு ஹி ஹி போடவேண்டுமோ]
உறங்கா நகரம் .சென்னையின் இரவு வாழ்க்கை -வே.நீலகண்டன்-சந்தியா-ரூ 80
 சற்று சந்தேகத்துடன்தான் இந்த புத்தகத்தை வாங்கினேன்.ஆனால்..என்னைக் கலங்கடித்து விட்டது இந்த புத்தகம்.நூலின் பல பகுதிகளில் இயல்பாக கண்ணீர் பொங்குவதை தவிர்க்க முடியவில்லை.ஊரெல்லாம்உறங்கும் நேரத்தில் நமது பகல்கள் சிக்கலின்றி  அமைவதற்காக தங்கள் இரவுகளைத்  தொலைத்து விட்டவர்களை பற்றிய நேரடி  கள ஆய்வின் அனுபவத் தொகுப்பு இது.கள ஆய்வு என்றவுடன் அலறி ஓட வேண்டாம்.குங்குமத்தில் தொடராக வந்ததாம்.மிகுந்த முதிர்ச்சியான கவித்துவத்துடன் ஒரு சொல் கூட மிகாமல் எழுதி இருக்கிறார் நீலகண்டன்.அதிரடியாக ஒரு  ஆண் பாலியல் தொழிலாளியின் பேட்டியுடன் ஆரம்பிக்கிறது புத்தகம்.கானா பாடகர்கள்,மருத்துவமனை ஊழியர்கள்,கோயம்பேடு மார்க்கட் கூலித் தொழிலாளிகள்,துப்புரவாளார்கள்,மீனவர்கள்,போஸ்டர் ஓட்டுபவர்கள் துறைமுக ஊழியர்கள்,போக்குவரத்து தொழிலாளர்கள்,காவலர்கள்,என்று பல்வேறு இரவுத் தொழிலாளர்களின்  வாழ்வியல் அனுபவங்களே இந்நூல்.குழந்தையை தனியாக வீட்டில் உறங்கப் பண்ணிவிட்டு இரவு சாலைவேலைக்கு வந்த தாய் சொல்கிறாள்.''இரண்டு வயசில ஒரு பொண்ணு இருக்கா.வழக்கமா  அஞ்சு மணிக்கு எழுந்த்திருச்சு அம்மா அம்மான்னு அழுவா .அவ முழிக்கறதுக்குள்ள வீட்டுக்கு போகணும்'.தயக்கமே இல்லாது இந்நூலை பரிந்துரை செய்வேன்.'

தென்னிந்திய கிராம தெய்வங்கள்-ஹென்றி ஒயிட் ஹெட் -சந்தியா-ரூ 100
 நாட்டார் இயலில் ரொம்ப நாள் தேடிக் கொண்டிருந்த புத்தகம் .இப்போது தமிழில்.
ஆழி சூழ் உலகு-ஜோ டி க்ரூஸ் -தமிழினி-ரூ 320
 நிறைய மதிப்புரைகள் இந்நூல் பற்றி வந்துவிட்டன.இது போல் மீனவர் வாழ்வைப் பேசும் நூல் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள்.எனது இன்றைய பணி சூழலில் நிறைய மீனவர்களைச் சந்திக்க நேரிடுகிறது.பொதுப் புத்தியில் அவர்களைப் பற்றி உள்ள நிறைய எதிர்மறைப் பிம்பங்கள் உள்ளன.அவர்களது வாழ்வியல் சிரமங்களை அறியாமல் அவற்றை அழிக்க இயலாது.அவ்வகையில் இந்நூல் உதவும்.இந்நூலில் திருச்சபை பற்றி வரும் சில சித்தரிப்புகளுக்காக க்ரூஸின் குடும்பம் ஊரிலிருந்து விலக்கிவைக்கப் பட்டது என்கிறார்கள்.ஒவ்வொரு நூலும் அதை எழுதுபவனை ஏதோ ஒருவகையில் பலிகொண்டே எழுகிறது என்று தோன்றுகிறது.

ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்-அ .கா.பெருமாள்-தமிழினி-ரூ 120
 சரித்திர ஆய்வுகளை புனைவின் ருசியோடு இவரால்தான் தரமுடியும் எனத் தோன்றுகிறது.ஏற்கனவே இவரது தென் குமரியின் கதை,தாணுமாலயன் ஆலய வரலாறு ஆகிய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.நான் தற்போது குமரி மாவட்டத்தில் இருப்பதால் இந்நூலுடன் தனி அணுக்கம் வந்துவிட்டிருக்கிறது.இப்புத்தகத்தை ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலேயே கொண்டு சென்று வாசிப்பது என ஒரு மெலிய கனவு வைத்திருக்கிறேன்.
அறிவுநிலைகள் பத்து-இரா.குப்புசாமி-தமிழினி-ரூ 100
தமிழில் எளிமையான தத்துவ நூல்கள் குறைவு.தாடையை உடைக்கும் சைவ சித்தாந்த நூல்களை விட்டால் வேறு வழியே இல்லை.பிரேமா பிரசுரத்தில் மலர்மன்னன் எழுதி சில எளிய அறிமுகநூல்கள் மலிவு விலையில் வந்துள்ளன.ஆனால் அவை யாவும் மேற்கத்திய சிந்தனையாளர்களைப் பற்றியவை.அவ்வகையில் மிக முக்கியமான நூல்களே அவை. இந்நூல் இந்திய தத்துவத்தைப் பேசுகிறது.ஜெயமோகனின் சிபாரிசு வேறு இந்நூலுக்கு உண்டு.
முறிந்த பனை-பயணி-ராஜனி திராணகம-பயணி-ரூ 450
 தமிழ் விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு ஆவணம் இது.எழுதியவர் ஒரு மருத்துவர்.பெண்.இப்புத்தகம் எழுதியதற்காக கொல்லப்பட்டவர் .
மக்கள் தொகைஎடுப்பின் அரசியல்-பயணி-அ.மார்க்ஸ்-ரூ 25
 இந்த புத்தகத்தை மதுரையிலிருந்து திரும்புகையில் பேருந்திலேயே படித்து முடித்து விட்டேன்.சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி மார்க்ஸ் எழுப்பும் கேள்விகள் அவரின் கோணம் விவாதத்துக்கு உரியது.அவர் இந்தியாவில் மதத்தை விட சாதியே முக்கிய இயங்கு சக்தி என்கிறார்.இந்தியாவில் முழுமையாக கிறித்துவமும் ஓரளவு இஸ்லாமும் சாதியத்திலிருந்து தப்பவில்லை என்கிறார்.ஆகவே அம்மதத்தைச் சேர்ந்தவருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்.இப்புத்தகத்தை நான் படித்து முடித்ததும் பக்கத்தில் உள்ளவர் 'சார் படிச்சுட்டு தரேன் சார்''என்றார்.நான''கதைப்புத்தகம்இல்லீங்க.''என்றேன்''இல்லீங்க.படிப்பேன்''என்று வாங்கிப் படித்தார்.படித்து முடித்ததும் கோவில் பட்டியிலிருந்து நெல்லை வரை என்னைக் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டார்.அவர் கேட்டதின் முக்கிய சாராம்சம் ஒரு இந்து தலித்தும்  அதே சாதியைச் சேர்ந்த கிறித்துவ தலித்தும் சமூகத்தில் ஒரே தளத்தில்தான் இருக்கிறார்களா என்பதே.எனக்கு சரியாக பதில் சொல்லமுடிய வில்லை.இது சம்பந்தமாக இன்னும் நிறைய படிக்கவேண்டும் எனத் தெரிகிறது.
கொடுங்கோளூர் கண்ணகி-வி.ஆர்.சந்திரன்-தமிழில் ஜெயமோகன்-united writers-ரூ 50
 ஜெயமோகனின் கொற்றவையைப் படிக்கும் முன்பு இதைப் படிப்பது நல்லது.கண்ணகி என்ற தொன்மம் நம் ஆழ்மனதில் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பு மிகப் பெரியது.மேலும் தமிழகத்தின் பண்பாட்டு வேர்களை முழுவதுமாக புரிந்து கொள்ள கேரள வரலாற்றைப் புரிந்து கொள்வதும் அவசியம்.சங்க இலக்கியத்தின் பல கூறுகள் இன்றும் கேரளத்தில் உயிருடன் உள்ளன .துரதிஷ்டவசமாக நாம் இன்று வேறு வேறு திசைகளில் பேசி கொண்டிருக்கிறோம்.இந்நூல் நமக்கு சரியான பார்வையை அளிக்கும்.
சங்கர்லால் துப்பறியும் நாவல்கள்-பாகம் ஒன்று-தமிழ்வாணன்-மணிமேகலை-ரூ 250
 தமிழ்வாணனிடம் இருந்தே எனது வாசிப்பு பழக்கம் தொடங்கியது.நல்ல தமிழில் துப்பறியும் கதைகளை விறுவிறுப்புடன் எழுத முடியும் என நிரூபித்தவர்.ஒரு காலத்தில் இவர் புத்தகங்களுக்கு நூலகங்களில் கடும் கிராக்கி இருக்கும்.இன்று வாசிக்கையிலும் வியப்பை அளிக்கும் நடை.
ஸ்ரீரங்கம் to  சிவாஜி -ரஞ்சன்-குமுதம்-ரூ 80
 சுஜாதாவைப் பற்றி சில சுவையான நினைவுகள்.சில அரிதான புகைப்படங்கள் உண்டு.அவற்றில் ரொம்ப ஸ்டைலான ஒரு சுஜாதாவைப் பார்க்க முடிந்தது.மனைவியின் விருப்பம்.
வாங்க விரும்பி முடியாமல் போன சில நூல்கள் 
கொற்றவை -ஜெயமோகன் 
புயலிலே ஒரு தோணி-ப.சிங்காரம் 
ஆரோக்கிய நிகேதன்
பொழுதுபோக்கு பௌதீகம் [சுஜாதாவின் அறிவியல் நூல்களை விட நல்ல  புத்தகம் என்று ஜெயமோகன் மெச்சியது.ஆனால் விலை சற்று அதிகம் எனத் தோன்றிற்று.நியூ செஞ்சுரியின் புத்தகங்கள் முன்பெல்லாம் மலிவாக இருக்கும்]
கருநாகம்,பேய் பேய்தான் -தமிழ்வாணன் [ஹாலிவுட் படங்களுக்கு இணையான த்ரில்லர் கதைகள் இவை.மணிமேகலையிலேயே கிடைக்க வில்லை]
தெய்வங்கள் முளைக்கும் நிலம்-அ.கா.பெருமாள்  
எழுத்தாளர் மகரிஷியின் கதைகள் [தமிழில் அதிகம் படமாக்கப் பட்ட  கதைகள் இவருடையதாக தான் இருக்கும்.புவனா ஒரு கேள்விக்குறி,நண்டு முதலியவை குறிப்பிடத் தக்கவை]
இந்த புத்தகங்களில் சிலவற்றை விரிவாக பேச விருப்பம்.பார்க்கலாம்.
நான் வழக்கமாக புத்தக காட்சிகளுக்கு செல்கையில் பெண்கள் என்ன புத்தகங்கள் வாங்குகிறார்கள் என்று கவனிப்பேன்.அல்லது புத்தகங்கள் வாங்கும் பெண்களைக் கவனிப்பேன்.இந்த முறை நான் அவ்விதம் செய்யவில்லை என்பதை பின்பே மெலிய அதிர்ச்சியுடன் உணர்ந்தேன்.எனக்கு வயதாகி விட்டதா என்ன?

9 comments:

  1. வாழ்த்துக்கள் .happy reading ..
    உறங்கா நகரம் படித்ததுண்டு ..மிகவும் இயல்பாகவும் ,நிஜமாகவும் இருக்கும்.
    நண்டு சிவசங்கரி எழுதியது ...மகரிஷி அல்ல என்று நினைக்கிறேன் ..
    நேற்று உறங்கினீர்களா?
    நான் புத்தகம் வாங்கி வந்த நாளில் உறங்கவே மாட்டேன் ..மறு நாள் அலுவலகம் செல்லவும் மாட்டேன் ..silly me .

    ReplyDelete
  2. ஆம்.பத்ரகாளி என்பதற்கு நண்டு என எழுதிவிட்டேன்.ஆம்.உறங்கவில்லைதான்.சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்.உண்மையில் இந்த பித்து அச்சம் அளிக்கிறது.

    ReplyDelete
  3. கடைசியாக உள்ள addendum இப்போது தான் கவனித்தேன் ...புத்தகங்கள் கண்டால் சகலமும் மறக்கும் ...அதிர்ச்சி அடையாதீர்கள் ..will be back to normal soon :))

    ReplyDelete
  4. I like your writings and poems.
    Great :)

    ReplyDelete
  5. தமிழ்வாணனை வெல்ல ஆள் கிடையாது; குமுதத்தின் நிழலில் வாடிய மலர்.
    தமிழ்ப் புத்தகக் காட்சிகளையெல்லாம் மறந்து இருபது வருடங்களுக்கு மேலாகிறது; உங்கள் பதிவைப் படிக்கும் பொழுது நிறைவும் வலியும் உண்டாகிறது. Excellent coverage.

    ReplyDelete
  6. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. நன்றி சையது .அப்பா சார் ..தமிழில் இப்போது நல்ல புத்தகங்கள் வரத் தொடங்கிவிட்டன.ராம்ஜி சார்..ஜெயமோகத் தேரையே நிறுத்தி விட்டீர்களே..உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்.அந்த பின்னூட்ட கும்பமேளாவில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன்.பத்மா அவர்களுக்கு அந்த பி கு பின்னால்தான் சேர்த்தேன்.அதை விளக்கி உங்களுக்கு ஒரு பின்னூட்டம் எழுத ஆரம்பித்து அது மிகப் பெரிதாக ஆகிவிட்டதால் தனிப் பதிவாகவே இடுகிறேன்.யானையை விட யானை வால் பெரிதாக இருக்கக் கூடாது இல்லையா

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails