Thursday, September 16, 2010

சப்பாத்திக் கள்ளிகளின் காதல்

உன் மேல்
ஒரு கவிதை
உடனே வா
என்று போன் செய்தேன்
ஆணியடித்தாற்போல்
தலையில் இறங்கும் வெயிலில்
பேருந்தின் பிதுக்கத்தில் இருந்து
உதிர்ந்து வந்தாள் அவள்..
ரவிக்கை முழுதும்
வியர்வை வட்டங்களோடு
வேறொருவள் போலிருந்தாள்


ஒரே கூட்டம் எனறாள் இறைஞ்சலாய்
பின்னால் ஒருவன்
புட்டத்தை உரசிக்கொண்டே இருந்தான்
எனறாள் எரிச்சலாய் ..
எங்கே
உன் கவிதையைச் சொல் எனறாள்
அவசரமாய் 

எழுதிவைத்திருந்த
கவிதைகள் யாவும்
மூளையில் கசகசத்தன
எங்காவது ஹோட்டலுக்கு போகலாமா
என்றதற்கு மறுத்தாள்
ரிசார்ட் போவதற்கோ
கடற்கரை போவதற்கோ
காசோ காலமோ இல்லை

நிர்வாண சிற்பங்கள்
நிறைந்த கோயில்களிலோ
ஆயிரம் கண்ணுடன்
அடிக்குரலில் வன்முறையுடன்...
எல்லார் யோனிகளிலும்
அனுமதியின்றி  நுழையும்
கலாச்சார லத்திகள்..


நேரமாகிவிடும்
யாராவது பார்த்துவிடுவார்கள்..
இங்கேயே சொல்
தற்செயலாய் பார்த்த
அலுவலக சிநேகம் போல நடி எனறாள்


நடுவீதியில்
சந்தையின் சந்தடியில்
புணர்வதற்கு
நாமென்ன நாய்களா என்றேன்.
ஒரு
மத்திய வர்க்கனின்
மொண்ணை  கோபத்துடன்..

வெடித்தழுது விலகிப் போனாள் ..
என் ஒரே காதலி..
காதலிக்க
மனம் மட்டும் போதாது
என்பது
மீண்டும் ஒருமுறை
உணர்த்தப் பட
கவிதைத் தாள்களை
வீசிஎறிந்துவிட்டு
எதிர்த்திசையில் நடக்க ஆரம்பித்தேன்.

3 comments:

  1. ஸ்... ஆ... நல்ல காரமா இருக்கு.... போகன்.... சூப்பர்...

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails