ஒரு
அஜாக்கிரதையான கணத்தில்
அது என்னைப் பீடித்தது
காலை நடையின் போது
பின்னாலேயே வந்துவிடும்
நாய்க்குட்டி போல பின்தொடர்ந்தது
நள்ளிரவில் நாற்சந்தியில்
பிடித்துக் கொண்ட பிசாசு போல்
என்னைத் துன்புறுத்திக் கொண்டே இருந்தது
அதன் இருப்பைப்
புறக்கணிக்க
நான் என்னென்னவோ செய்தேன்
எனக்குப்
பழககமில்லாதவற்றைக் கூட..
விடிகாலைப் பனியில் எழுந்து
மூச்சிரைக்க ஓடினேன்
குழந்தைகளுடன் விளையாடினேன்
நீள வரிசையில் நின்று
மூளை வேண்டா திரைப்படங்கள்
நிறைய பார்த்தேன்
தெருவோரம்
டீக்கடை பெஞ்சில் அமர்ந்து
அந்நியர்களோடு
வெகுநேரம் அர்த்தமற்று
பேசிக் கொண்டிருந்தேன்
வெயில் வளர்ந்து தேய்வதை
வேடிக்கை பார்த்தேன்..
ஆனாலும் அது
பின் மண்டையில்
ஒரு புழு போல
நெளிந்து கொண்டே இருப்பதை உணர்ந்தேன்
அல்லது மன வயிற்றிலிருந்து
வெளியேறத் துடிக்கும்
நிறை சிசுவாக..
ரத்தத்தில் ஊறி விட்ட விஷமாக
எலும்பு வரை
ஏறி விட்ட தொற்றாக
அது
என்னைத் துரத்திக் கொண்டேதான் இருந்தது
மருத்துவரிடம் கேட்டதற்கு
எழுதித்தான் துரத்தவேண்டும்
உன் தலைக்குள் கேட்கும் குரல்களை என்றார்.
ஏனெனில் அவை யாவும்
நீ படித்த புத்தகங்களில் இருந்து
புறப்பட்டு வந்தவை..
அவை சொற்களில் பிறந்து
சொற்களை உண்டு வாழ்பவை
சொற்களுக்கே வசப்படும் நோய் இது என்றார் ..
ஆகவே தான்
நான் எழுதுகிறேன்..
ஒரு விடுதலையாக..
ஒரு சிகிச்சையாக ....
வேறொன்றும் அல்ல .
how u get these photos?....The photos u have select for ur blogs r very much beautiful..
ReplyDeleteவியாதி குணமாகாமல் இருக்கக் கடவதாக ...
ReplyDeleteall on the net..google images is a good place to search..u have to give the right tagword though..
ReplyDelete