Tuesday, August 31, 2010

குளிரின் ருசி

பனைகள் கூடக் கருகும்
பாலையில் முளைத்தேன்  நான்..
பால்ய நாட்களில்
பெரியகனவு
பள்ளிக்கு
கால் கொப்பளிக்காது செல்ல
ஒரு ஜோடி செருப்பு
என்பதாகவே இருந்தது
நள்ளிரவில் கூட
சூரியன் எரியும்
நகரத்தில்தான்
பணி தேடித் திரிந்தேன்..
அதன் கான்க்ரீட் ஓவன்களில்
எப்போதும் பொங்கும் வியர்வையுடன்
துடைத்து துடைத்து
எரியும் சருமத்துடன்
தீர்ந்து போன மின்சாரத்தை
அதனால்
சுழலாத மின்விசிறியை
வெறுத்துக் கொண்டே
ஏராள இரவுகளைக் கழித்தேன்..
சட்டென்று ஒருநாள்
நல்லூழ் போல்
உச்சிப் போதிலும்
மஞ்சு மிதக்கும்
இம்மலை நகரத்திற்கு மாற்ற்லாகிவிட்டேன்..
வந்த நாள் முதல்
சட்டை கூட இல்லாமல்
இரவு முழுக்க
ள்ள் ளென்று இரையும் தெருவிளக்கின் கீழே
யாமத்தின் பச்சை வாசனையை
இழுத்து இழுத்து முகர்ந்துகொண்டு
பித்தனைப்  போல்
போதை ஏறி சுற்றுபவனைப் பற்றி
கிசுகிசுத்துப் பேசுகிறது ஊர்.
எப்படிப் புரியவைப்பது
இவர்களுக்கு
இந்தக் குளிரின் ருசியை
என்று யோசிக்கிறேன்..

4 comments:

  1. ஜில்லென ஒரு கவிதை. அழகு....

    ReplyDelete
  2. கவிதை மனதை குளிர்விக்கிறது... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அழகான கவிதை........வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. யாமத்தின் பச்சை வாசனை
    ஹ்ம்ம் மணக்கிறது....

    ஊர் சொல்லிவிட்டு போகட்டும் ..நீங்கள் களித்து மகிழுங்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails