வயது வந்தவர்க்கு மட்டும் !
மேகி அத்தையைப் பற்றிச் சொல்லும் முன்பு சங்குவைப் பற்றி சொல்லவேண்டும்.ஏன் எனில் இரண்டுக்கும் தொடர்புண்டு.சங்கு என்று அழைக்கப் பட்ட சங்கு கிருஷ்ணன் .க்வார்ட்டசுக்கு வெளியே இருந்த ஒற்றை டீக் கடையை நடத்திக் கொண்டிருந்த பெண்மணியின் ஒரே மகன்.சங்குவின் அப்பாவை நான் அதிகம் பார்த்ததில்லை.அவர் ஒரு மலையாளி என்பது மட்டும் தெரியும்.அவருக்கு கேரளாவில் வேறு குடும்பம் இருந்தது.அடிக்கடி வருவதில்லை.திடீர் என்று ஒரு நாள் காலையில் ஆலங்குச்சியால் பல்விளக்கிக் கொண்டு அமர்ந்திருப்பார்.அன்று முழுக்க சங்குவின் அம்மா சிரித்துக் கொண்டே இருப்பாள்.அவளுக்கு பெரிய மார்பகங்கள் இருந்தது.சிரிக்கும் போதெல்லாம் அவை குலுங்குவதை ஆச்சர்யத்துடன் பார்ப்பேன்.
சித்தப்பாவுக்கு அதி காலையிலேயே எழும் பழக்கம் இருந்தது.காலைக் கடன்கள் எல்லாம் சற்று தொலைவில் இருந்த கண்மாய்க் கரையில்தான்.பள்ளி இல்லா நாட்களில் நானும் அவருடன் போவேன்.ஹோவென்று கிடக்கும் கண்மாயிலிருந்து வரும் அதிகாலைக் குளிர்காற்றை உணர்ந்தபடி நாயுருவிகள் பின்பக்கம் உரச குந்தியிருந்து முன்தினம் உள்ளே போனது எல்லாம் வெளிவரக் காத்திருந்தது நினைவு வருகிறது.சற்று தொலைவில் பன்றிகளும் க்ர்ர்க் க்ர்ர்க் என்று உறுமிக் கொண்டு நாங்கள் விலக காத்திருக்கும்.கண்மாயில் கழுவிக் கொண்டு மெதுவாய் நடந்து சங்குவின் டீக்கடைக்கு வந்தால் பால் கொதித்துக் கொண்டிருக்கும்.பக்கத்திலேயே புஸ் என்ற ஒலியுடன் ஒரு பெட்ரோமேக்ஸ் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும்.அந்த பிராயத்தில் அந்த விளக்கு பெரிய கலைப் பொருள் மாதிரி தெரிந்தது.அதன் ஒளியில் அத்தனையும் வேறுவிதமாய் இன்னுமொரு உலகத்திற்குள் போய் விட்டது போல் இருக்கும்.உண்மையில் அந்த பெட்ரோமேக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் உலகைப் பார்க்கும் அனுபவத்திற்காகவே அந்த காலைநேரத்தில் எழுந்து அவருடன் செல்வேன்.அன்றைய தினத்தின் முதல் காப்பி சித்தப்பாவுக்கும் இரண்டாவது எனக்கும் கிடைக்கும்.எனக்கு சற்று சர்க்கரை கூடுதலாக.நன்கு ஆற்றப் பட்டு..சங்கு அப்போது தூங்கிக் கொண்டுதானிருப்பான்.கடைக்கு உள்ளேயே ஓரமாக சுருண்டு கிடப்பான்.அவனுடனே அவர்கள் வளர்த்த சடை என்ற நாயும் காலைப் பரப்பிக் கொண்டு கிடக்கும்.பெரும்பாலும் இருவரும் கட்டிக் கொண்டுதான் கிடப்பார்கள்.
சங்கு எனது பள்ளியில்தான் நான்காம் படித்தான்.ஆனால் போஷாக்கு இல்லாமால் ஒன்றாம் வகுப்பு பையன் போலதான் இருப்பான்.பள்ளிக்கு என்னுடன்தான் வருவான்.பள்ளி சற்று தள்ளி பஸ் ஸ்டாண்ட் பக்கம் இருந்தது.க்வார்ட்டர்சின் மற்ற பசங்கள் எல்லாம் சைக்கிள் வைத்திருந்தார்கள்.சுஜா சுதா கூட.எனக்கும் சைக்கிள் வேண்டும் எனக் கேட்டு மறுக்கப் பட்டது.சித்தப்பாவுடன் சைக்கிளில் போவது எனக்கு அவமானமாகப் பட்டது.பெண்கள் கூட சைக்கிளில் போகிறார்கள்!.எனவே நான் எனது எதிர்ப்பைக் காண்பிக்கும் பொருட்டு பள்ளிக்கு நடந்தே செல்வதென முடிவு செய்தேன்.பால்யத்துக்கே உரிய தர்க்கம் அது.அதைப் பார்த்த சங்குவின் அம்மா அவனையும் என்னுடன் அனுப்பிவைத்தாள்.அவளுக்கு அந்த சமயம்தான் கூட்டம் இருக்கும்.
சங்கு வினோதமான கேரக்டர்.சிறிய உடம்பில் பெரிய தலை.அதைவிட பெரிய கண்கள்.அவனது சட்டை எப்போதுமே பாதியில் நின்றுவிடும்.டவுசர் நிறைய ஊக்குகள் இருக்கும்.ஒரு சிறிய துணிப்பையில் சிலேட்டு மட்டும் இருக்கும்.அதை ஒரு பொக்கிஷம் போல அக்குளில் இடுக்கி வைத்திருப்பான்..புத்தகமெல்லாம் கிடையாது.எப்போதும் மூக்கு ஒழுகிக் கொண்டே இருக்கும்.கர்ச்சீப் என்றால் என்னவென்றே தெரியாது,அவனது அம்மாவின் பழைய சேலையைத் துண்டுகளாக வெட்டி கையில் வைத்திருப்ப்பான்.அதை வைத்துதான் மூக்கு துடைப்பது முகம் துடைப்பது ஸ்லேட்டை துடைப்பது எல்லாம்.நான் ஒருதடவை எனது கர்ச்சீப் ஒன்றைக் கொடுத்தேன்.அன்றிலிருந்து அது அவனுக்கு கர்ணனின் கவசகுண்டலம் போல் ஆகிவிட்டது.
எங்களுடன் அவன் நாய் சடையும் வரும்.சடை குட்டிநாயும் அல்ல.பெரியநாயும் அல்ல.அதன் மூடுக்குத் தகுந்தது போல் இரண்டுவிதமாகவும் தோற்றம் கொள்ளும்.சங்குவை யாரேனும் தொந்திரவு கொடுத்தால் அதன் உடலே விறைப்பாகி வேட்டைநாய் மாதிரி ஆகிவிடும்.யாராவது சாப்பிட கொடுத்தால் அதன் சிறியவாலை விசிறி போல சுழற்றோ சுழற்றோ என்று ரொம்பநேரம் சுற்றிக் கொண்டிருக்கும்.
சங்குண்ணி எங்களுடன் சேர்ந்துகொள்ள மிக விரும்பினான்.ஆனால் க்வார்ட்டர்ஸ் பசங்கள் அவனைச் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை.நான் சிலசமயம் பரிந்துரை செய்து பார்த்தேன்.அவனை சேர்க்க வற்புறுத்தினால் என்னையும் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்றுவிட்டார்கள்.விநாயகம் ''அவங்கல்லாம் வேற''என்றது எனக்கு புரியவில்லை.க்வார்ட்டர்சில் அஞ்சுவும் நானும் மட்டுமே அவனுடன் பேசுவோம்.குழந்தைகள் சிலநேரங்களில் மிக கொடூரமாக நடந்து கொள்வார்கள்.சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அவன் வந்தால் சட்டென்று அமைதியாகிவிடுவார்கள்.அல்லது அந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்கள்.பெரியவர்கள் கூட அப்படிதான்.விநாயகத்தின் அம்மா ஒருநாள் என்னிடம் ''அவனெல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வராதே''என்று சொல்லிவிட்டாள்.
நான் மட்டும் அவனுடன் பேசிக் கொண்டிருந்ததன் காரணம் சிறுவயதிலிருந்தே எனக்கு மார்க்சிய சித்தாந்தத்தில் பரிச்சயம் இருந்தது என்று சொல்ல மிக விரும்பினாலும் உண்மை என்னவெனில் அவன் நான் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டான் என்பதே.அவனுக்கும் சடை என்ற அவனது நாய்க்கும் இருந்த உறவு விநோதமானது.இருவரும் பேசிக்கொண்டு நான் பார்த்ததே இல்லை.நாயும் மனிதனும் பேச முடியுமா என்று அபத்தமாய்க் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.ஆனாலும் இருவரும் ஒரே உடலின் இரு உறுப்புகள் போலவே நடந்து கொள்வார்கள்.அவன் விழிக்கும் அதே நேரம்தான் அதுவும் விழிக்கும்.அவன் ட்ரவுசரைக் கழற்றி சிறுநீர் கழித்தால் அதுவும் காலைத் தூக்கி ஒன்றுக்கு இருந்துவிட்டு 'அடுத்து?' என்பது போல் பார்க்கும்.அவன் கையிலிருந்து அவன் சாப்பிடுவதையே சாப்பிட்டு பள்ளி வாசல் வரை அவனுடனே வரும்.பள்ளி அனுமதித்திருந்தால் அவன் கூட மூன்றாம்வகுப்பு படித்திருக்க கூட செய்திருக்கும்.பள்ளிமுடியும் போது சரியாக வெளியே நிற்கும்.
சங்கு ஏறக்குறைய அதே போலதான் என்னுடன் நடந்து கொண்டான்.எப்போதும் என்னுடனே நான் நடந்தால் நடந்து அமர்ந்தால் அமர்ந்து சில நேரங்களில் எனக்கு தர்மசங்கடமாகக் கூட இருந்தது.நான் விளையாடும் நேரங்களில் ஓரத்தில் அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்க சடை அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.க்வார்ட்டர்ஸ் பசங்களின் வட்டத்தில் அவனையும் இழுத்துக் கொள்ள நான் எவ்வளவோ முயற்சித்தேன்.அவன் அம்மாவும் ''சங்குவையும் விளாட்டுக்கு சேத்துக்குங்க தம்பி''எனறாள் ஒருநாள்.நான் ரொம்ப யோசித்து ''நீ இப்படி கிழிஞ்ச டவுசர் போட்டுட்டு வந்தா பசங்க சேர்த்துக்க மாட்டாங்க''என்று ஒரு தீர்வு சொன்னேன்.அவன் அதை அவன் அம்மாவிடம் சொல்லியிருக்கவேண்டும்.இரண்டு நாள் கழித்து பளீரிடும் சிவப்பு நிறத்தில் சட்டையும் கிளிப் பச்சை டவுசருமாய் வந்தான்.அந்த மாதிரி நிறத்தை எல்லாம் இப்போது தடை செய்துவிட்டார்கள் போல...அவன் முகத்தில் சட்டையின் நிறம் தெரிந்தது.ஆனால் அத்திட்டம் பரிதாபகரமாக தோல்வியுற்றது.அவன் உடைகளின் நிறம் மிகுந்த கேலிக்கு ஆளாகியது.
ஆனால் அவனை அவ்வுலகத்தில் அனுமதிக்கும் சாவியை அவனே ஒருநாள் கண்டுபிடித்தான்.கிரிக்கெட் அப்போது பிரபலம் ஆகி இருக்கவில்லை.என்ஜினீயர் மட்டுமே அவ்வப்போது கரகர வானொலியில் காதுடன் திரிவார்.திடீரென்று ''விநாயகம்.கவாஸ்கர் அவுட்''என்று வலிப்பு வந்தது போல் கத்துவார்.அந்த கும்பலில் அவனுக்கு மட்டுமே கிரிக்கெட் என்பது ஒரு தின்பண்டம் அல்ல என்று தெரிந்திருந்தது.எனவே நாங்கள் விளையாடுவதெல்லாம் கோ கோ ,கபடி ,கிட்டிப்புள் ,பம்பரம் பெண்களும் வந்தால் கள்ளன் போலிஸ் போன்ற விளையாட்டுகளே.செஸ் போல அல்லாமல் அவன் விளையாடினால் உடனே முடிந்து விடுவதால் வினாயகத்தை எப்போதுமே கபடியில் சேர்த்துக் கொள்ளமாட்டோம்.ஒருதடவை கபடியில் அஞ்சுவின் பாவாடை கழன்று மல்லாந்து விழுந்ததில் இருந்து அவளையும் சேர்ப்பதில்லை.ஆண்களுக்கு அந்த காட்சி ரொம்பப் பிடித்திருந்து எனினும் வேண்டுமென்றே அவளை அடிக்கடி மல்லாக்க தள்ள முயற்சித்தது பெண்களுக்குப் புரிந்துவிட்டது.
அதுபோல ஒரு கபடி நாளில் வழக்கம்போல சங்குண்ணி வந்து ஓரத்தில் அமர்ந்தான்.வந்தவன் ட்ரவுசர் பையிலிருந்து எதுவோ எடுத்தான்.ஒரு இரட்டைக்கிளி தீப்பெட்டி.இது ஏன் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது என்றால் தீப்பட்டிகளின் மேல் ஓட்டும் படங்களைச் சேர்க்கும் ஹாபி அப்போது நிறைய பேருக்கு இருந்தது.அரிதான சில ஓட்டுப் படங்களை காசுகொடுத்து வாங்கவும் சிலர் தயாராக இருப்பார்கள்.
ஆனால் தீப்பெட்டிக்குள்ளே இருந்தது விஷயம்.சட்டென்று பக்கத்தில் இருந்த பையன் அவனிடம் நெருங்கி பார்த்தான்.இன்னும் சற்றுநேரத்தில் எல்லோருமே அவன் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவன் தீப்பெட்டிக்குள் வைத்திருந்த பொருளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.பொருள் அல்ல.உயிர்.உயிர் அல்ல .வண்டு.பொன்வண்டு.
இன்று கண்ணாடித் தொட்டிகளில் கலர் கலராய் சிறுவர்கள் மீன் வளர்ப்பதை காணும்போது நாங்கள் தீப்பெட்டிகளில் பொன்வண்டு வளர்த்ததின் நீட்சிதானோ என்று தோன்றுகிறது.குறுகிய காலத்திலேயே நாங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பொன்வண்டு வளர்க்க ஆரம்பித்தோம்.பொன்வண்டு வளர்ப்பில் கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருந்தன.முதலில் அது பறந்துவிடாமல் இருக்க அதன் சிறகை வெட்டுவது ,தீப்பெட்டிக்குள் காற்று போக துளை இடுவது.அதற்கு உணவு என்று ஒரு குழந்தை வளர்ப்புக்கு இணையான கவலைகள்.
சங்கு இப்போது பொன்வண்டு நிபுனணன் ஆகிவிட்டான்.பொன்வண்டுவைப் பிடித்து தருவதில் இருந்து எல்லாமே அவன்தான்.சிலசமயம் பள்ளிக் கூடத்தில் இருந்தும் அவனுக்கு பொன்வண்டு 'ஆர்டர் 'வந்தது.''எப்போதும் உடன் காட்டுல வண்டு புடிக்கறேன்னு கை கால்ல கீறிட்டு வராம்பா''என்று அவன் அம்மா புகார் செய்தாள்.அவன் கேட்பதாய் இல்லை.பொன்வண்டின் காரணமாக தானே அவன் எங்கள் விளையாட்டுகளில் அனுமதிக்கப் பட்டான்.ஆனால் உண்மையில் பொன்வண்டுகளின் வருகைக்குப் பிறகு எங்கள் விளையாட்டுகள் குறைந்துவிட்டன என்று நான் விநாயகம் போன்றவர்கள் வருந்தினோம்.ஆனால் பெண்களுக்கு வண்டுவளர்ப்பு ரொம்ப பிடித்திருந்தது.அவர்கள் அதற்கு பெயர்கள் கூட வைத்திருந்தார்கள்.நான் ஆரம்ப சில தினங்களிலேயே பொன்வண்டு ஒரு முட்டாள் பிராணி என்று கண்டு கொண்டேன்.அது எப்போது தீப்பெட்டியைத் திறந்து பார்த்தாலும் ஒரே மாதிரி பொன் வண்டுத்தனத்தோடு இருந்தது.அதன் கடுகுக் கண்களில் என்னை அங்கீகரிக்கும் எந்த அறிகுறியையும் அது காண்பிக்கவில்லை.ஆனால் பெண்களுக்கு அப்படித் தோன்றவில்லை.அஞ்சுவின் பொன்வண்டு பெயர் சொல்லிக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கிறது என்று சொல்லிக் கொண்டார்கள்.இப்போது அவர்கள் எங்களுடன் பேசுவதைவிட சந்குவிடமே அதிகம் பேசினார்கள்.சுதாவின் பொன்வண்டை சாவின் விளிம்பிலிருந்து அவன் என்னவோ செய்து காப்பாற்றியதில் இருந்து அவன் மதிப்பு அதிகரித்திருந்தது.அவன் சந்தோசமாய் இருந்தான்.
அன்று ஒரு வெள்ளிக் கிழமை .என்று நினைவு.வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு அவன் டீக்கடை வாசலில் நின்றேன்.டீக்கடை பெஞ்சில் அவனது மலையாள அப்பா குந்தியிருந்தார்.என்னைப் பார்த்ததும் ''வரு''என்று சிரித்தார்.''மோனே''என்று உள்ளே கூப்பிட்டார்.சங்கு உள்ளிருந்து புதுச் சட்டை கால் சராயுடன் வந்தான்.சிகப்பு பச்சை இல்லாமல் எங்களைப் போல நல்ல சட்டை.கூடவே சடையும் ஓடி வந்தது.தோளில் புதுப் பை இருந்தது.அவன் அப்பா ''எடி ..மதுரம் கொடு ஈ கொச்சுனுக்கு''''என்றார்.அவன் அம்மா உள்ளிருந்து ஒரு தாளில் சுற்றிய ஜிலேபியுடன் வந்து ''தம்பி சாப்பிடுங்க''என்றாள்.நான் அதை வாங்கலாமா என்று யோசித்தேன்.சங்குவின் அவன் அப்பாவின் முகத்தில் இருந்த ஒளி அவள் முகத்தில் இல்லை.அவள் முகம் வீங்கியிருந்தது.அவர் ''வாங்கிக்கோ''என்றார்.
நாங்கள் இருவரும் நடக்க ஆரம்பித்தோம்.சடை முன்னால் ஓடியது.''எனக்கு தம்பிப் பாப்பா பொறந்துருக்கு''என்றான் சங்கு.இதற்குள் குழந்தை பிறக்க கர்ப்பமாகவேண்டும் என அரை குறையாய் எனக்கு தெரிந்திருந்தது.ஆகவே எனக்கு குழப்பமாய் இருந்தது.''பெரிம்ம்மா வீட்டில இருக்கு''என்றான் சங்கு விளக்கமாய்..''அதான் புது ட்ரெஸ்.''என்றான்.பிறகு ''என் வண்டு முட்டை போட்டிருக்கு''என்றான்.நான் ''போடா'' என்றேன்.கோழிதான் முட்டை போடும் என்பதையே நான் சமீபத்தில் தான் அறிந்திருந்தேன்.ஒரு வண்டு எப்படி முட்டை போட முடியும்?''நிஜமாண்ணே''என்றான் அவன்.''பார்க்கறியா''என்று கால்சட்டைப் பையில் இருந்து தீப்பெட்டியை எடுத்தான்.திறந்தான்....
அடுத்த கணங்கள் தெளிவற்றவை.அல்லது அந்த சமயத்தில் அவ்விதம் தோன்றிற்று.ஆனால் பின்னால் கனவுகளில் திரும்பத் திரும்ப அபாரத் தெளிவுடன் கூர்மை பெற்று எழுந்துவந்து என்னை நெடுநாட்கள் விரட்டிக் கொண்டே இருந்தது.வழக்கமாய் அந்த சாலையில் போக்குவரத்து அதிகம் இருக்காது.சாலையும் திருப்பங்கள் அற்ற நெடியசாலைதான் என்பதால் வெகுதொலைவில் வண்டி வரும்போதே கேட்டுவிடும்.சங்கு தீப்பெட்டியை ஒரு ரகசிய அறையை திறப்பவன் போல மிக கவனமாய்த் திறந்தான்.''முட்டை பார்க்கறீயா''என்ற அவன் சிரித்த அந்த வினாடியில் உள்ளிருந்த பொன்வண்டு சட்டென்று எதிர்பாராது வெளியே பாய்ந்தது.சங்கு அதைத் துரத்திக் கொண்டு பாய்ந்ததைப் பார்த்தேன்.ஒரு பெரிய சத்தம் தட்டென்று கேட்டது.சங்குவைக் காணவில்லை .சடை தூரத்தில் போகும் ஒரு லாரியைக் குரைத்துக்கொண்டே துரத்துவதைப் பார்த்தேன்.தொலைவில் இருந்து சிலர் கத்திக் கொண்டே ஓடிவருவது பார்த்தேன்.''அய்யா ராசா''என்ற குரல் கேட்டேன்.என்னவென்று புரியாமல் குழம்பி எங்கோ ஓட எத்தனித்தேன்.கீழே கிடந்த எதன் மீதோ இடறிவிழ இருந்து கீழே பார்த்தேன்.
அது ஒரு கை.
ஒரு கை மட்டும்
கையில் தீப்பெட்டியுடன் .
சங்குவின் கை .
//பெண்களுக்கு வண்டுவளர்ப்பு ரொம்ப பிடித்திருந்தது.அவர்கள் அதற்கு பெயர்கள் கூட வைத்திருந்தார்கள்.நான் ஆரம்ப சில தினங்களிலேயே பொன்வண்டு ஒரு முட்டாள் பிராணி என்று கண்டு கொண்டேன்//
ReplyDeleteஉண்மையா... புதினம் அருமை. வாழ்த்துக்கள்
ம்ம்ம்ம் :( ... அருமை சிறுவர்களின் உலகத்தினுள் உலாத்திவிட்டு வந்ததனைப் போல இருந்தது.
ReplyDeleteமுழுதும் புனைவா?
சூப்பெர்ப்......
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
ரொம்ப ரசிச்சி படிச்சேன். நல்ல எழுத்து. அப்படியே சுழல்போல இழுத்து உள்வாங்கிக் கொள்கிறது. கொஞ்சம் எடிட் பண்ணி இருக்கலாமோ என்று தோன்றினாலும் இறுதி வரிகளின் தாக்கத்துக்கு இந்த நீளம் தேவைதான் என்றும்கூட....
ReplyDeleteசிறுவர்களின் சின்ன சின்ன நிகழ்வுகளையும்,அழகாய் வெளிப்படுத்தி,அதிர்ச்சி தந்து கதையை முடித்திருக்கிறீர்கள்.சீரானதோர் புனைவு.வாழ்த்துக்கள்
ReplyDeleteதொடர்ச்சியான கவனத்திற்கு நன்றி சரவணன்.முழுவதும் புனைவென்றோ முழுவதும் யதார்த்தம் என்றோ இந்த உலகில் இருக்கிறதா என்ன தெ கா சார்...நான் எப்போதும் எடிட் செய்வதில் கவனம் செலுத்துவேன்.உண்மையில் இரு மடங்கு இருந்ததைக் குறைத்தேன்.நாவலுக்கும் சிறுகதைக்கும் உள்ள வித்தியாசம் தகவல்கள்தான்..அந்த வகையில் கடைசி பகுதியைப் பொறுமை இன்மை காரணமாக சற்று வேகமாக கடந்துவிட்டதாகவே தோன்றுகிறது.மோகன்ஜி ஆர் வி எஸ் உங்களுக்கும் நன்றி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete