Wednesday, September 29, 2010

உடல் ஊற்று

எனக்கு அது
மலநாற்றப் புனல்குழி
உனக்கு அது
வாச மலர்ப் பாண்டம்
அமிர்தம் கசியும் ஊற்று

எனக்கு அது
நஞ்சு ஊறும் நிலம் 
வெறும் நிணம்
மூடும் திரை
உனக்கு அது
உயிர் ஓவியத்தின் உடை

உடல் என்பது
உன்னை 
காற்றில் ஏற்றும் சிறகு
எனக்கு அது
கயத்தில் ஆழ்த்தும் கல்

உடல் திரவங்களின்
வெறியாட்டம் மட்டுமே
அது எனக்கு
உனக்கு அது
உணர்வுகளின் நடனம்

நான் என்றும்
மரங்களைப் பார்ப்பதே இல்லை
மரமென்றால் எனக்கு காடே
காடு மேவிய வானே
வான் தாண்டிய வெளியே
வெளி அடங்கும் சுழியே ..

உனக்கு
காடென்றால்
மரங்களின் கூட்டமல்ல
அது
உன் பெயர்  மட்டும் அறிந்த
ஒற்றை மரம்
அது வளர்க்கும் பூ
அது மறைக்கும் சூல்
அதில்
 உனக்கே உனக்காய்த் துடிக்கும்
ஓர் உயிர்

இவ்விதம் நாமிருக்க
செம்புலப் பெயல் நீர் போல்
இருவரும்
கலப்பது எவ்விதம்..

5 comments:

  1. போகன்
    செம்புலப் பெயல் நீர் போல் கலக்காத அன்புடை நெஞ்சம்..... இல்லையா?

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  2. மிக அருமை

    செம்புல பெயநீர் போல கலக்க அன்புடை நெஞ்சம் இருந்தால் மட்டும் போதாதா?. கருத்துஒற்றுமையும் இருக்கவேண்டுமா?

    எனினும் நல்ல உயிரோட்டமுள்ள கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கவிதையும் படமும் ரசிக்க முடிகிறது.

    ReplyDelete
  4. ம்ம்ம்ம்.... என்னமோ குறையுதுங்க!

    ReplyDelete
  5. இரு வேறு உலக நோக்குகள் பற்றிய கவிதை.முதலில் பட்டினத்தாரின் காதல் என்று தலைப்பு வைக்க நினைத்தேன்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails