Monday, July 26, 2010

தோல்வியின் சுதந்திரம்

சட்டென்று
ஒரு சொல் வீசி
நம்
காதலை உடைத்தாய் .
என்
உதிர்ந்த புன்னகையின்
ஓரங்களைச்
சேகரிப்பது
அத்தனை எளிதாக
இல்லைதான் ..
விடாது கசியும்
ரத்தமாய்
கவிதைகள்
கொப்பளித்துக் கொண்டே இருந்தன.
நான்
முற்றிலும்
உடைந்துவிடாமல் இருக்க
இரவு பகலாய்
எழுதிக்கொண்டே இருந்தேன்
உன்
கடைசிச் சொல்லுக்கான
மறுமொழிகளை.
சட்டென்று
கவிழும்
மழை இருட்டு போல
நீ
என்மேல்
வீசிவிட்ட
அடர் தனிமையைக் கிழிக்க
என்னென்னவோ செய்தேன்
புகை வளையங்கள்
மதுக் கோப்பைகள்
சதைக் குப்பைகள் ..
காதலில் தோற்றவர்கள்
அலையும்
அத்தனை
முட்டுச் சந்துகளிலும்
நினைவற்று
விழுந்து கிடந்தேன்.

ஆனால்
திடீரென்று
ஒரு நாள்
காய்ச்சல் தீர்ந்தவன் போல
திரை விலகி
எழுந்தேன்..
இனி நான்
உனக்காய்
காலையில்
பதற்றத்துடன் எழுந்து
பஸ் நிறுத்தங்களில்
நிற்க வேண்டாம்
மாலைகளில்
உன்னைச் சந்திக்கும்
சில நிமிடங்களுக்காக
என் மொத்த நாளையும்
வடிவமைத்துக் கொள்ள வேண்டாம்
நீ சிந்தும்
ஒவ்வொரு சொல்லையும்
கவிதையாக்க  வேண்டிய
கட்டாயம்
இனி இல்லை என அறிந்தேன்.

ஒரு
பெரும் பாறை போல
என் பார்வைக் கோணம்
முழுதும்
நீயே மறைத்திருந்தாய்
என்பதை
அப்போது  உணர்ந்தேன்..

அட
உன்னைத் தவிரவும்
இவ்வுலகில்
நிறைய விசயங்கள்
இருந்திருக்கின்றன..

இப்போதெல்லாம்
மழையையும்
வானவில்லையும்
நிலவையும்
மலரையும்
உன்னுடன்
தொடர்புப் படுத்தாமலே
ரசிக்கிறேன் ....

ஒரு
கோப்பை
சூடான தேநீருடன்
காதல்
பேசாத
ஒரு புத்தகத்துடன் மட்டுமே
இம் மழைக்காலத்தை
நிம்மதியாய்க்
கடந்துவிடுவேன் நான்..

3 comments:

  1. இதென்ன சீச்சி இந்த பழம் புளிக்கும் கதையா இல்லை நிஜமான ஞானமா ?
    மழைக்காலம் கடந்து விடும் ...நீங்கள் அதை கடப்பது தான் கடினம் ..எதோ ஒரு உந்துதல் தேவையாய்தானிருக்கிறது......
    இல்லையா?

    ReplyDelete
  2. 'இரவு பகலாய்
    எழுதிக்கொண்டே இருந்தேன்
    உன்
    கடைசிச் சொல்லுக்கான
    மறுமொழிகளை'

    'ஒரு
    கோப்பை
    சூடான தேநீருடன்
    காதல்
    பேசாத
    ஒரு புத்தகத்துடன் மட்டுமே
    இம் மழைக்காலத்தை
    நிம்மதியாய்க்
    கடந்துவிடுவேன் நான்'

    இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை .அழகான கவிதை .பார்வை கோணம் முழுவதும் நீ மறைத்தாய் .பரவாயில்லை சட்டென்று தெளிந்து விட்டீர்கள் போல .வாழ்த்துகள் ,கவிதைக்கும் மழைக் காலத்தை நீங்கள் விரும்பியபடி கழிக்கவும்

    ReplyDelete
  3. நல்ல கவிதை.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails