Monday, July 12, 2010

உடல் தத்துவம் 1

Disclaimer;இந்த கதை வயதுக்கு வந்தவருக்கு மட்டுமே என்று முதலிலேயே எச்சரித்துவிடுகிறேன் ஆகவே குழந்தைகள் சிறுவர்கள்  எல்லோரும் இந்தப் பக்கத்தைப் புறக்கணித்துவிட்டு அம்புலிமாமா படிக்கும்படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்
                        ''நீங்கள் எப்போதாவது எழுத்தாளராக விரும்பியது உண்டா?சங்கரன்பிள்ளை என் டயரியைப் படித்துவிட்டு வியப்புடன் கேட்டார்.நான் பிறவி எழுத்தாளன் என்று சிரித்தேன். நான் என் மனசுக்குள் எப்போதும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.அது ஒரு வியாதி மாதிரி ஆகிவிட்டது.நான் அழுதால் கூட கொஞ்சம் கவிதையாக தான் அழுவேன்.யாரும் மணி என்ன என்று கேட்டால் கூட சற்று இலக்கிய முலாம் பூசிய நேரம்தான் அவர்களுக்கு கிடைக்கும்.
                                                        சின்ன வயதில் கல்லூரி முதல் வருடம் படிக்கையில் அய்யங்கார் பெண்ணைக் காதலிக்கையில் ஆற்றங்கரை மண்டபத்தில் நான் படித்த கச்சடாவை எல்லாம் நீட்ஷே முதல் ரமண மகரிஷி வரை அவளிடம் பிதற்றி இருக்கிறேன்.அவளும் அவர்கள் எல்லாம் யார் என்று தெரியாவிட்டாலும் வாயை  அரை இன்ச் திறந்து வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருப்பாள். ஒரு அழகான பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு நீட்ஷே  பேசின அதிமுட்டாள் நானாக மட்டும்தான் [உலக வரலாற்றிலேயே] இருப்பேன் என்பதை நீட்ஷே கூட ஒத்துக் கொள்வார்.ஆனால் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது புரிகிறது.நாகேஷ் மாதிரி இருப்பேன் அப்போது.ஆகவே எதை வைத்து அவளை இம்ப்ரெஸ் செய்வது?பிராமணப் பெண் வேறயா..குறியின் நீளம் மட்டும் போதாது அறிவின் விசாலமும் வேண்டும் என நான் நினைத்திருக்க வேண்டும்.
                                                                                                அந்த அனுபவம் எனக்கு ரொம்பப் பிடித்துப் போயோ என்னவோ இப்போதும் பதினைந்து வருடம் கழித்தும் அவள் புத்திசாலித்தனமாக சுயஜாதியிலேயே கைக்கு அடக்கமாய் ஒரு பையனை கல்யாணம் பண்ணி சென்று விட்டால் கூட  எனது எல்லா மன சம்பாசனைகளையும் அவளுடனே பண்ணிக் கொண்டிருக்கிறேன்.நேற்றுகூட அவளிடம் பேசினேன்.இந்த கெட்ட பழக்கத்தை எத்தனையோ அழிரப்பர் போட்டு அழிக்க முயன்றும் முடியவில்லை.இதைப் பற்றி பம்பாயில் [எனக்கு 'மும்பை' பிடிக்கவில்லை] ஒரு உளவியல் மருத்துவரிடம் கேட்டதற்கு ''அதை அப்படியே விட்டால் என்ன?ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு விதமாக இயங்குகிறது.சிலர் எல்லாவற்றையும் காட்சிகளாக நினைவு வைத்திருப்பார்கள்.சிலர் ஒலிகளாக.நாம் எப்போதும் உள்ளுக்குள் பேசிக்கொண்டே இருக்கிறோம்.சிலர் தன்னைத் தானே விளித்து பேசுவார்கள்.சிலர் பிறரை.இன்று காலையில் வரும்போது மனைவியுடன் ஒரு பிணக்கு. நான் மருத்துவமனைக்கு வந்து விட்டேன்.ஆனால் என் மனம் இன்னும் வரவில்லை.அவளுடன் இன்னமும் கத்திக் கொண்டிருக்கிறது.நாம் எதையும் முழுமையாகச் செய்வதில்லை.அதுதான் பிரச்சினை.ஆனால் நமக்கு பித்து பிடித்துவிடாமல் இது போன்ற கெட்ட பழக்கங்கள் தான்  காப்பாற்றுகின்றன.''

ஆற்றங்கரையில் தனியிடங்களில் மாரையோ இடுப்பையோ தடவ முயற்சிக்காமல் நீட்சே பேசிக்கொண்டிருந்ததுதான் இதன் காரணமோ..அவளை அக்கணம் அங்கேயே வைத்து முடித்திருக்க வேண்டுமோ.பிராய்ட் சொன்னதுபோல் இனப்பெருக்க இச்சை மிகவும் பலமானதாக தான் இருக்கவேண்டும்.ஒரு இரண்டு நிமிட காரியத்தைப் பண்ணாமல் விட்டது இருபது வருடம் துரத்துகிறதே.அவர் இன்னமும் சொன்னார்.''ஒவ்வொருவர் மனதிலும் நிறைய பூதங்கள் தூங்குகின்றன.ஒவ்வொன்றுக்கும் ஒரு பணி எழுதிவைத்திருக்கிறது.யாராவது தப்பித் தவறி எழுப்பிவிட்டால் அதை முடிக்கும் வரை தூங்காது''

எதற்காக இதை எல்லாம் சொல்லவந்தேன் என மறந்துவிட்டேன்.வயசாச்சோல்லியோ?இந்த மேயில் முப்பத்தி ஆறு.காலாகாலத்தில் கல்யாணம் பண்ணி இருந்தால் மூத்த பெண் சமைந்திருப்பாள் என்று அம்மா அடிக்கடி சொல்கிறாள்.கல்யாணம் பண்ணாமலே எனது பெண் ஒன்று போன வாரம் வயசுக்கு வந்தது.அழைப்பு கூட வந்தது.போகவில்லை.ஏதோ அசட்டுத்தனமான உணர்ச்சி.முருகேஸ்வரி அத்தை ''வந்துரு என்ன''என்றபோது அபத்த நாடகம் போல் இருந்தது.அவள் இப்போது சிலப்பதிகாரத்தில் சொல்லும் சவுக்கப் பூதம் போல் ஆகிவிட்டாள்.பழைய கொடி உடல் கோமளம் அல்ல.ஆனால் கண்களில் அந்த கள்ளச்சிரிப்பு மாறவே இல்லை.''வந்துரு என்ன!''

இப்படியாக என் கூடப் படித்தவர்களும் கூடப் படுத்தவர்களும் அடுத்த தலைமுறைக்கு தாவிப் போய்விட நான் மட்டும் இன்னமும் பொண்டாட்டி கை சோறு தெரியாமல் அலைகிறேன்.பதினெட்டு வயதில் தாவரவியல் இரண்டாம் ஆண்டு ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் படிக்கையில் ஓடிப் போனேன்.காரணம் முன்பு சொன்ன முருகேஸ்வரி அத்தை.ஒரே நாள் தென்னந்தோப்பில் வைத்து அரை இருட்டில் நெஞ்சு துடிக்கும் பதட்டத்தில் எதை எங்கே வைத்தேன் என்று எனக்கே தெரியாது நடந்த விசயத்தில் ...திடீர் என்று ஒரு நாள் வீட்டுக்கு வந்து 'தனக்கு நாள் நின்றுவிட்டதாக' போட்ட குண்டு.

அப்பா ஊர் பிடாகைத் தலைவர்.மாமா குஸ்தி பயில்வான்.[ஆனால் 'அதில்' ரொம்ப நோஞ்சான் என்று பிறகே தெரிந்தது]கடைசி பஸ் ஏறி நெல்லை போய் பம்பாய் எக்ஸ்பிரஸ் பிடித்து  கழிவறை அருகே அமர்ந்து இரவெல்லாம் குளிரில் நடுங்கியபடி ஒவ்வொரு போலிஸ் காரனையும் பார்த்து நடுங்கியபடியே போனேன்.கையில் மாணவர்கள் என்எஸ் எஸ் பண்ட் அம்மா நெல்புரையில் வைத்திருந்தது என்று முன்னூறு ரூபாய் வைத்திருந்தேன்.அதனால் பட்டினி எல்லாம் இல்லை.பம்பாய் ஸ்டேசனில் மொத்த பணமும் பிக்பாக்கெட் ஆகிறவரை வழியில் கிடைத்த அத்தனை சமாச்சாரமும் வாங்கித் தின்று ஆரம்ப பயம் எல்லாம் விலகியபிறகு கொஞ்சம் சந்தோசமாகவே இருந்தது.

அங்கு ஐந்து வருஷம் இருந்தேன்.ஒரு நாள் இரவில் திடீர் என்று புறப்பட்டு ஊருக்கு வந்தேன்.ஒரு மாதம் முன்பு தான் அப்பா இறந்து விட்டிருந்தார்.எதுவும் உள்ளுணர்வா என்று தெரியவில்லை.முருகேஸ்வரி 'நீ ஏன் திடீர்னு ஓடிப் போனே?''என்று பச்சைப் புள்ள மாதிரி கேட்ட போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.இதற்குள் எனக்கு பெண்களின் உலகம் லேசாகப் பிடிபட ஆரம்பித்திருந்தது.இந்த இடைவேளையில் நான் விதம்விதமான பெண்களைப் பார்த்திருந்தேன்.வெவ்வேறு இன, ரூப பெண்களுக்கு தாசனாய்,எஜமானனாய்,நண்பனாய் ,காதலனாய் ஏன் மாமாவாய் கூட இருந்து விட்டேன்.

நான் பெண்களைப் பேய் என்று சொல்லும் சித்தனும் இல்லை.அவர்களை வழிபடும் சாக்தனும் இல்லை.காமத்துக்காக மட்டுமோ அல்லது அம்மா சொல்வதுபோல் 'வயசுக் காலத்தில் மூத்திரச் சட்டி தூக்க 'என்று மட்டுமோ ஒரு பெண்ணை மணக்க சித்தமாய் இல்லை,[துரதிர்ஷ்ட வசமாக நான் ஒரு ஹோமோ இல்லை ஆதலால் எந்த ஒரு ஆணையும்]

அந்தப்  பெண்ணைப் பார்த்தால் அப்படியே அலை அடித்து இழுத்துப் போவது போல் ஆகிவிடவேண்டும் என்பது போன்ற கற்பனைகள் வைத்திருந்தேன்.இது தவிர துறவு என்ற விசயத்தின் மீது வேறு ஈர்ப்பு இருந்தது.காரணம் காசியில் நான் சந்தித்த ஒரு சாமியார்.

அவரைச் சாமியார் என்று சொல்லலாமா தெரியவில்லை.சாமியாருக்கான எந்த குறிகளும் இல்லாத சாமியார் அவர்.அவரைப் பார்த்த இடமும் காசியில் எலி போகும் இடமெல்லாம் இருக்கும் இருக்கும் கோயில்களில் ஒன்றில் அல்ல.அவரைப் பார்த்தது காசியில் ஒரு வேசியின் வீட்டில்.[காசியில் ஒரு வேசி!நன்றாக இருக்கிறதல்லவா]

அந்த வேசி சற்று பிரபலம் ஆதலால் அவளுக்காய் காத்துக் கொண்டிருக்கையில் தான் அவரைச் சந்தித்தேன்.

1 comment:

  1. ம்ம்ம்ம்ம்... இருங்க.. உங்களை நித்தியானந்தாகிட்ட சொல்றேன்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails