Thursday, December 23, 2010

சொல்வதற்கில்லை இந்தச் சொல்...

உம்பேர்டோ இகோ
பற்றிப் பேசலாம்
பாழ்நிலம் பற்றியோ
பெலினி பற்றியோ
பாலகுமாரன் பற்றியோ 
போல்ஷெவிக் புரட்சி பற்றியோ
பேசலாம்

உன் கணவர் பற்றியோ
என் மனைவி பற்றியோ
நம் குழந்தைகளின் கல்வி பற்றியோ
அவர்கள் மேல்
அதிகரித்துவரும் குற்றங்கள் பற்றியோ
நண்பர்கள் பற்றியோ
அவர்கள் எழுதும்
புத்தகங்கள் பற்றியோ
அவர்களில் சிலர் காதலிப்பது
பற்றியோ கூட பேசலாம்
மடோனா பற்றியோ
மார்கழி இசைப் பருவம் பற்றியோ
அடைப் பிரதமன் பற்றியோ
அக்கார  வடிசல் பற்றியோ கூட பேசலாம்
இரவு கரையும்வரை 
இமை கனக்கும்வரை
கைபேசி இறக்கும்வரை பேசினாலும்
எல்லாப் பேச்சுக்கும் அடியில் 
நட்சத்திரங்கள் ஒளிரா இரவில்
பழுத்துதிர்ந்த இலைகளின் படுக்கையில்
தடித்த நிழல்களின் இருளில்
உதிர வீச்சம் தேடி
புதைந்துகிடக்கும் வேங்கைபோல
உன் கண்களில் ஒளிந்து கிடக்கும் 
காமத்தையும் காதலையும் மட்டும்
நாம்
பேசவேண்டாம்தானே?

4 comments:

  1. பேசாத கண்கள் ஓராயிரம் கதைகள் (சொல்லும்) சொல்கின்றன...

    ReplyDelete
  2. (பேச மட்டும்)வேண்டாம்! .

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails