Friday, December 10, 2010

நாலு பரோட்டா ஒரு புரட்சி

பூக்களைப் பற்றியும் பூவையரைப் பற்றியும்
இனி நான் கவிதை செய்யக் கூடாது
என்றார்கள் புதிதாய்ச் சேர்ந்த கட்சியில் ...

பூக்கள் மட்டுமல்ல
பூனைகள்,குழந்தைகள்
மழை,நிலா,
மேகங்கள் வானவில்கள்
என்று
புரட்சியை நமுத்துப் போகச் செய்யும்
எதையுமே
அவர்கள் விரும்பவில்லை
தீக்குச்சிகள்,எரிதழல்
கத்தி வாள்
போன்றவையோ
அதிகம் எழுதி எழுதித் தேய்க்கப் பட்டுவிட்டன
சரிதான் என்றிருந்தேன்
பாட்டாளியின் வாழ்வில்
தினசரி குறுக்கிடும் பொருள்
ஒன்றைத் தேடி அலைந்தேன்
அப்படித்தான் நான்
புனைய ஆரம்பித்தேன்
புரோட்டாவைப்  பற்றிய கவிதைகளை
பூவைத் தடுத்தவரிடம்
புரோட்டாவைப் பற்றி
சொன்னபோது புளகாங்கிதம் அடைந்தார்
பின்னர் நீங்கள் ஏன் இட்டிலியைக்
கருத்தில் கொள்ளவில்லை
என்று கேட்டார்
இட்டிலி ஒரு பூர்ஷ்வா பண்டம்
என்றேன் நான்
மேலும்
அது குஷ்பூவுடன்
சம்பந்தப் பட்டிருக்கிறது
என்றதும் புரிந்து கொண்டார் 
ஒரே இடத்துக்குப் போனாலும் 
ஒவ்வொரு புரோட்டாவும் 
ஒவ்வொரு விதமாய் இருக்கிறது 
முபாரக் கடை புரோட்டா 
முழுக் கோதுமையில் செய்தது 
உடம்புக்கு நல்லது 
சித்ரா கபே 
புரோட்டா 
வெளேரென்று அழகாய் 
இருந்தாலும் 
பாசிச மைதாவில் செய்தது 
வயிற்றைக் கெடுப்பது 
முட்டை பரோட்டா 
சோசலிசம் போல 
முட்டையும் அல்ல 
புரோட்டாவும் அல்ல 
சில்லி பரோட்டா 
சிகப்பாய் இருந்தாலும் 
அதிக விலை ஆதலால் 
முதலாளித்துவப் போலி 
புரோட்டாவுக்கு குருமாவே 
நல்ல சோடி 
சாம்பாரும் சேர்த்துக் கொள்ளலாம் 
எனினும் 
நல்ல சித்தாந்தத்தில் ஊறியவர்கள் 
அதைச் செய்ய மாட்டார்கள் 
வெங்காயச் சம்பல் அவசியம் 
சட்னி தேவையில்லை 
புரோட்டாவுக்கு முன்பு 
சாராயமும் 
பின்பு சாயாவும்
அருந்துவது நல்லது 
வயிற்றுக்குள் ஒரு 
சமத்துவம் நிலவும் 
அது தவறி  
முடிவின்றி பீச்சும் தருணங்களில் 
பின்னால் அடைக்கும் 
கார்க் போலவும் புரோட்டா பயன்படும்  
ஒரே பொருளால் 
ஆனது எனினும் 
பூரி ப்ரோலிடேரெட் உணவல்ல 
அது 
உபரி கொழுத்த  
பூர்ஷ்வாவின் உப்பிய கன்னம் 
அவன் வைப்பாட்டியின் 
வீங்கிய தனம 
புரோட்டாவோ 
பாட்டாளியின் வற்றிய வயிறு 


இதுபோல் 
புரோட்டாவைப் பற்றி 
ஒரு நூறு கவிதைகள் செய்து 
புரட்சியாளரிடம் கொடுத்தேன் 
படித்துவிட்டு 
அவர் ஆழ்ந்த சிந்தனையில் புதைந்தார் 
பிறகு பெருமூச்செறிந்து 
நீங்கள் பழையபடி 
பூ நிலா போர்வாள் என்றே 
கவி செய்யுங்கள் 
புரோட்டாவைச் சாப்பிடத்தான் முடியும் 
கவிதை செய்ய முடியாது 
என்று தெரிகிறது என்றார் 

3 comments:

  1. உங்க கவிதை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  2. மிக நன்றாக இருக்கிறது போகன்!பதின்ம புரோட்டா மிகப் பிடிக்கும். மதுரை, தெற்கே புரோட்டா தயாரிக்கப்படும் விதமே வேறு!ஆனால் வெளியூரில் வேலை, ஹோட்டல் சாப்பாடுதான் என்று பலவருடங்கள் இருந்தபோது இந்தப் புரோட்டா படுத்திய பாட்டை இப்போது நினைத்தாலும் கலக்குகிறது.மைதா மாவில் அரைவேக்காட்டில் புரோட்டா நெடுநேரம் பசிதாங்கும் என்று பாட்டாளிகளை நம்ப வைத்த கதைகள் வேறு!

    பதினேழு வருடங்களுக்கு முன் ஒரு புண்ணியவான் எனக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கிறது என்று கண்டுபிடித்ததில் புரோட்டாவை கண்ணால் பார்த்தே பல வருடங்களாகிறது.

    ReplyDelete
  3. மிக நன்றாக இருக்கிறது போகன்!பதின்ம புரோட்டா மிகப் பிடிக்கும். மதுரை, தெற்கே புரோட்டா தயாரிக்கப்படும் விதமே வேறு!ஆனால் வெளியூரில் வேலை, ஹோட்டல் சாப்பாடுதான் என்று பலவருடங்கள் இருந்தபோது இந்தப் புரோட்டா படுத்திய பாட்டை இப்போது நினைத்தாலும் கலக்குகிறது.மைதா மாவில் அரைவேக்காட்டில் புரோட்டா நெடுநேரம் பசிதாங்கும் என்று பாட்டாளிகளை நம்ப வைத்த கதைகள் வேறு!

    பதினேழு வருடங்களுக்கு முன் ஒரு புண்ணியவான் எனக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கிறது என்று கண்டுபிடித்ததில் புரோட்டாவை கண்ணால் பார்த்தே பல வருடங்களாகிறது.ஆர்பிஆர் எழுத்தை சிலாகித்தது புரோட்டா புராணத்துக்காக அல்ல! எம்டி முத்துக்குமாரசாமி ஷங்கர் ராமசுப்ரமணியன் இருவர் எழுத்தையும் எப்படி சுவாரசியமாக அனுபவித்து, தங்கள் வீட்டுக் கதையோடு பினைத்திருக்கிறார் என்பதற்காக மட்டுமே!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails