Friday, December 3, 2010

பிரதி இலக்கியவியாதி ...

சினிமா விமர்சகர்களைப் பகுப்பாய்வு செய்தது போல இலக்கிய விமர்சகர்களையும் பகுப்பாய்வு செய்யமுடியுமா என்று ஒரு நண்பர் கேட்டார் .ஒரு ப்ளாக் ஆரம்பித்து உலகத் தமிழர்களுக்கு இலக்கிய சேவை அளிக்கவேண்டும் என்று அவர் கொஞ்ச நாளாய்  யோசித்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் ஒரு 'தொழில்' ஆரம்பிக்கும் முன்பு அதன் இலாப நட்டங்கள் தெரிந்துகொள்வது நல்லதல்லவா என்று ஏற்கனவே பிசினெஸ் பண்ணிக் கொண்டிருக்கும் என்னிடம் ஆலோசனை கேட்டபோது அதற்கு நமக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம்  ரொம்ப நல்லவன் போல யோசித்துக் கொண்டிருக்காமல் உடனே களத்தில் இறங்கி எங்கெல்லாம் இலக்கியம் என்று மூச்சு விடுகிறார்களோ அங்கெல்லாம் சென்று ஆராய்ச்சி செய்ததில் சில பல வரலாற்று உண்மைகள் புரிந்தன.இணையத்தில் சில இலக்கியவாதிகளும் பல 'இளகிய'வாதிகளும் மிகப் பல இலக்கிய விமர்சகர்களும் இருக்கிறார்கள்.சமையல் குறிப்பு  எழுதுபவர்கள் கணினி நுட்பங்கள் பற்றி எழுதுபவர்கள் தவிர மீதி எல்லோரும் நேரடியாகவோ உறை அணிந்து கொண்டோ இலக்கியர்களாக இலக்கிய விமர்சகர்களாக  உலா வருகிறார்கள் என அறிந்து கொண்டேன்எத்தனை வகை இலக்கியம் உண்டோ அத்தனை வகை விமர்சகர்களும் இருக்கிறார்கள் எனப் புரிந்தது.இவர்களை ஒரு கச்சைக்குள் அடக்கமுடியாது எனினும் முயற்சித்தேன் .அவனுக்கு நான் அளித்த ஆய்வு அறிக்கையின் ஒரு பகுதி இதோ.. 

விமர்சகர்களில் கோட்பாடு சார்ந்து விமர்சிப்பவர்கள் அல்லாதவர்கள் என்று இரண்டு வகை.கோட்பாட்டுப் புலிகளிலும் இடது வலது என்று இரண்டு கோஷ்டியாகப் பிரித்துக் கொள்ளலாம்.

வலது சாரிப் புலிகளின் வாசிப்பறிவு ஆச்சர்யப் படுத்துவதாக இருக்கும்.அதாவது  ஏறக்குறைய பூஜ்யமாக இருக்கும்.!கோயில் தல புராணங்களையும் கும்பாபிஷேக நோடிச்களையுமே இலக்கியமாக கருதிக் கொள்ளும் விசித்திர நோய் இவர்களுக்கு உண்டு.தங்களது அரசியலைப் பேசும் புத்தகங்களையே கூட தடவிப் பார்ப்பதோடு திருப்தி அடைந்து கிளம்பி துணிச்சலாக களத்துக்கு வந்துவிடுவார்கள்.எதிர் சாரிகளின் தளங்களுக்குப் போய் மிகத் துணிச்சலாய் மிக அபத்தமான ஒரு கருத்தை அநாயசமாகச் சொல்லிவிட்டு எல்லோரும் ஸ்தம்பித்து நிற்கும் வேளையில் வெளியேறிவிடுவார்கள்...கொஞ்சம் படித்தவர்கள் ஜெமோ போன்றவர்களின் தளத்துக்குப் போய் இன்செப்சன் முண்டக உபநிஷத்தில் காணக் கிடைக்கிறது...ஆணுறை பற்றி ஆரண்ய காண்டத்தில்  வருகிறது என்றெல்லாம் திடுக்கிடும் தகவல்களைச் சொல்லி நெளியவைப்பார்கள்...சத்து இல்லையென்றாலும் சத்தம் அதிகம் உண்டு...பெரும்பாலும் நல்ல நிலைமையில் வெளிநாட்டில் இருப்பார்கள்.எல்லா இலக்கியத்திலும் ஏதாவது 'தரிசனம்' இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.அது என்னவென்று அவர்களுக்கே தெரியாது.தெரிந்தால் ஏன் உங்களைப் படிக்கிறார்கள்?உங்களைப் பிடித்துப் போய்விட்டால் புதிய மாடல் மடிக் கணினி வரை அனுப்பி வைப்பார்கள்.

அடுத்து இடது சாரி நோக்கு விமர்சகர்கள் ..இணையத்தில் ஒவ்வொரு சந்திலும் இவர்கள் துண்டு போட்டு இடம் பிடித்து அமர்ந்திருப்பார்கள்.இவர்களுக்குள்ளேயே சின்ன இடது சின்ன வலது பெரிய வலது பெரிய இட வலது என்று உட்சாதிப் பிரிவுகள் உண்டு...சோசலிசப் பழம் தின்று புரட்சிக் கொட்டை போட்டவர்களால் கூட வித்தியாசம் கண்டு பிடிப்பது சிரமம்.முந்தையவர்கள் போல் அல்லாது இவர்களது வாசிப்பு விச்தீரம் பிரமிக்க வைக்கும்.எந்த புத்தகத்தை எடுத்துப் பேசினாலும் தலைகீழாய் ஒப்பிப்பார்கள்.புரிந்து கொள்வதும் தலைகீழாகத்தான் என்பதுதான் பிரச்சினையே...உங்கள் படைப்புகளை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து உங்கள் படைப்பில் நீங்களே அறியாத ஆதிக்கப் போக்குகளை எல்லாம் உங்களுக்கு எடுத்து எழுதுவதோடு மட்டும் நின்று விடமாட்டார்கள்.தேவைப்பட்டால் உங்கள் வீட்டுக்கே வந்து 'அன்பாக' தங்கள் விமர்சனங்களைத் தெரிவித்து விட்டுப் போவார்கள்.கடுமையான இயங்கியலுக்குச்சொந்தக்காரர்கள்.பெரும்பாலும் ஆட்டோவில்தான் இயங்குவார்கள்.சீனா மேற்குவங்கம் என்று எழுதினால் மட்டும் தயங்கியல் ஆகிவிடுவார்கள்..

கோட்பாடு சாராதவர்களில்  முதல் வகை விமர்சனங்களை பெரும்பாலும் முன்னாள் எழுத்தாளர்கள், எழுத்தாளராக விரும்பினவர்கள், எழுத விரும்பியும் வராதவர்கள், தங்கள் எழுத்தை தானே துணையில்லாது படிக்க முடியாதவர்கள் செய்கிறார்கள்.பெரும்பாலும் காண்டு விமர்சனமாகத்தான் இருக்கும்.உங்கள் படைப்பில் ஏழாவது பக்கத்தில் மூன்றாவது பத்தியில் இரண்டாவது வார்த்தையில் ஒற்று மிகுந்திருப்பதைக் காரணமாகச் சொல்லி உங்கள் முழுப் படைப்பையுமே நிராகரித்துவிடுவார்கள்.அல்லாவிடில் அவர்கள் போன பிறவியில் எழுதிய ஒரு  துணுக்கில் இருந்து சுட்டதுதான் உங்கள் ஆக்கம் என்று விக்கிலீக்ஸ் செய்யும்போது உங்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. கிகிஜிரோவைத் திருடிய மிஸ்கின் போல் திருதிருவென்று விழிப்பீர்கள். பெரும்பாலும் கையில் ஒரு அறச் சீற்ற வாளை லத்தி போல் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளமாகச் சுற்றி இலக்கியத்தை தங்களைத் தவிர வேறு யாரும் கற்பழித்துவிடாமல் காப்பாற்றுவதே இவர்கள் பணி.

இரண்டாவது குரூப் அவர்களே சொந்தமாக ஒரு பெட்டிக் கடை வைத்து இலக்கிய சப்ளை செய்பவர்கள்.பெரிய இதழ்கள் எல்லாம் கொங்கைகளே சிவலிங்கம் என்று காளிதாச இலக்கியத்துக்குப் போய்விட்டதாலும் சிற்றிதழ்கள் எல்லாம் ஆயுள்சந்தா  கட்டச் சொல்லி பயப் படுத்துவதாலும் கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் சொந்தமாக காய்ச்சுபவர்கள்..யார் என்ன எழுதினாலும் 'கிரேட்..அற்புதம் இருத்தலின் இயலாமையை  நன்கு வெளிப் படுத்தி இருக்கிறீர்கள்.'[பைல்ஸ் பற்றிய படைப்பா அது என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படுத்திவிட்டு ]அப்படியே இதோ நான் எழுதிய முன்னூறு பக்க தொடர்கதை என்று சுட்டியை அனுப்பி கருத்து கேட்பார்கள்.நீங்கள் உங்கள் 'இயலாமையின் இருத்தல்' பற்றி விளக்கிச் சொன்னாலும் 'உங்கள் கருத்துக்கு நன்றி இதோ நான் நேற்று எழுதிய நூறு பக்க காவியம் உங்கள் கருத்தை அதற்கு முந்திய நாளே எதிர்பார்க்கிறேன்' என்று புதிய சுட்டிகள் அனுப்பி பதறவைபார்கள்.

பின்னூட்டமும் ஒருவகை இலக்கிய வடிவமே என்று கருதுபவர்கள் அடுத்தவகை.இவர்கள் பெரும்பாலும் இணையத்திலேயே பல்விளக்கி முகம் கழுவி கக்கூஸ் போய் அங்கு தோன்றி அங்கேயே திரியும் இணைய உயிரிகள்.'அத்தை தின்று அங்கேயே கிடக்கும்' என்று நம்மாழ்வார் சொன்னது இவர்களைத்தான்..நீங்கள் என்ன எழுதினாலும் பகிர்வுக்கு நன்றி தெரிவிக்கும் ரொம்ப நல்லவர்கள்.எங்கு சண்டை நடந்தாலும் சமாதானம் பேசப் போகிறவர்களும் இவர்களே.புலவர்களுக்குள் சண்டை வரலாம் ஆனால் மண்டை உடையக் கூடாது என்ற தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள்.மிகுந்த ஜனநாயகப் பண்பும் எதையும் சமமாக பார்க்கும் சமரசப் பண்பாடும் இவர்களுக்கு உண்டு.'நீங்கள் எழுதியது போலவே ஒரு கதை அம்புலிமாமாவில் படித்திருக்கிறேன் அதுவும் நன்றாய் இருக்கும்.அம்புலிமாமா என் வாழ்க்கையை மாற்றிய ஒரு நூல் 'என்று பின்னூட்டம் இடும்வரை இவர்கள் நோக்கம் மீது உங்களுக்கு சந்தேகமே வராது.


அடுத்த குரூப் சற்று விளங்கிக் கொள்ள கஷ்டமானது .இந்தக் குரூப்புக்கு எதிரி முகாமைச் சேர்ந்தவர்கள் என்று லேசாக சந்தேகம் இவர்களுக்கு வந்தால் கூட போச்சு.சரமாரியான கல் எறிவார்கள்.அவை யாவும் உங்கள் மீது வீசப் படும் கற்கள் என்று நீங்கள் நினைத்து விடலாகாது.அவர்களுக்கு பிடிக்காத எழுத்தாளரைப் போல உங்கள் மீசை இருப்பதாக அவர்களுக்குத் தோன்றிவிட்டால் கூட ஓடிவந்து அங்கு எறியவேண்டிய விமர்சனங்களை எல்லாம் உங்கள் மீது எறிந்துவிட்டு ஓடிப் போய் விடுவார்கள்...நான் அவர் ஆள் இல்லை என்று கதறினாலும் எடுபடாது.அந்த பஸ்சில் ஏறு இல்லாவிடில் எங்கள் பஸ் என்று வற்புறுத்தி நீங்கள் விரும்பா விட்டால் கூட அவர்களே உங்களை ஏதாவது ஒரு பஸ்சில் ஏற்றிவிட்டு அடிப்பார்கள்..மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் இவர்களிடம்.


ஆகவே இத்தனை இடர்கள் இருக்கின்றன ..இணையத்தில் இலக்கியம் செய்வதற்கு....நீ கட்டாயம் அந்த ஆபத்தான காரியத்தைச் செய்யத்தான் வேண்டுமா என்று வேதாளம் விக்கிரமாதித்தனை கேட்டது போல் அவனிடம் கேட்டதற்கு ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அது ஒரு துன்பியல் கேள்வி என்று பதில் சொல்ல மறுத்துவிட்டான்....

LinkWithin

Related Posts with Thumbnails