Saturday, December 18, 2010

உடல் தத்துவம் 13

இரண்டாம் நாளே விடுமுறை முடியும் முன்பே ரூபியை  அத்தை நாகர் கோயிலில் கொண்டு போய் விட்டு விட்டாள்.ரூபி யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளவில்லை.திரும்ப அவள் வருவாளா  என்பது சந்தேகம்தான் என்று விநாயகம் ஆராய்ந்து தெரிவித்தான்.ஊருக்குப் போய் வந்ததில் இருந்து அத்தை ஆளே மாறி இருந்தாள்.அவளிடம் பழைய ஒளி இல்லை.ஒரு சாம்பல் வெளிச்சம் அவளை இப்போது சூழ்ந்து விட்டிருந்தது.இப்போதெல்லாம் அவள் எப்போதும் பதற்றமாகவோ அல்லது ஆழ்ந்த சிந்தனையாகவோ இருந்தாள்..அல்லது என் அம்மாவைப் போல் ஏதாவது தீவிரமான வீட்டுவேலைகள் விடாது செய்து கொண்டிருந்தாள்.அலையும் அவள் மனதைத் தடுக்கும் முயற்சியாக அவள் அதைச் செய்து கொண்டிருந்தாள் என்று இப்போது புரிகிறது.அவளுக்கு தெரிந்த தையல் வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.விவிலிய வாசகங்கள் எழுதிய தலையணை உறைகளை எல்லாருக்கும் இலவசமாக நெய்து கொடுத்தாள்..

அப்படி  இல்லாத சமயங்களில் எல்லாம் யாருக்கோ நீள நீள கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தாள் .யாருக்கு என்று கேட்டதற்கு கடவுளுக்கு எழுதுகிறேன் என்று சொன்னால்.கடவுள் பதில் போடுவாரா என நான்  சந்தேகப் பட்டதற்கு மலைபோல் அசையாத விசுவாசம்  இருந்தால் நிச்சயம் பதில் அளிப்பார் .விசுவாசத்தால் கடலைப் புரட்டுவதும் சாத்தியமே  என்று சொன்னாள்.அப்போது அவள் கண்களில் தெரிந்த ஒளி அச்சம் அளிப்பதாக இருந்தது.அவள் சொன்னது போல் அவளது கடவுள் சில சமயம் பதில் அளிக்கவே செய்தார்.அத்தையின் கடிதங்களைப் போல் அவை நீளமான பதில்களாக இருக்கவில்லை.நீல இண்லேண்டு கடிதத்தில் அவர் பதில்கள் வரும் அன்றெல்லாம் அவள் பித்து பிடித்தது போல் இருப்பாள்..சில கடிதங்கள் அவளைசொர்க்கத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றன..சில  அவளை நரகத்தின் வெங்குழியில் ஆழ்த்தின.சில சமயம் எந்த தருணத்திலும் சிறகை உயர்த்திப் பறந்து போய் விடப் போகிறவள் போல் அவள் இருந்தாள்.மற்ற தருணங்களில் இதோ உடைந்து சுக்கு நூறாகப் போகிறேன் என்பது போல் காணப்பட்டாள்.

வெள்ளிக் கிழமைப்  பிரார்த்தனைக் கூட்டங்கள்வழக்கம் போல் நடந்தன.ஆனால் முன்பைப் போல் ஒரு சாந்தமான நிகழ்வாய் இருக்கவில்லை அது.பிரார்த்தனைகளோடு அவள் இப்போது மெலிய குரலில் சில கிறித்துவக் கீர்த்தனைகளைப் பாடவும் செய்தாள் ..அவளுடைய மனநிலைக்கேற்றார் போல் அவளது பாடல்களின் தெரிவு மாறியது.'எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே' என்ற பாடலை சில நாட்கள் மிகுந்த களிப்பான குரலிலும் சில நாட்கள் கண்ணீர் மல்கி உடைந்து நடுங்கும் குரலிலும் பாடுவாள்....அந்தப் பாடலில்  வரும் 'ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் நாயனும் எனக்கன்பான மணவாளனும்' என்ற வரியை மட்டும் தனியே இருக்கும் போது கூட குரல் தேய்ந்து அழுகையில் முடியும் வரைப் பாடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.கொஞ்சம் கொஞ்சமாக மற்ற சிறுவர்கள் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள்.ஏன் என்றதற்கு மஞ்சு ஒற்றை வரியில் 'எனக்கு அவளைப் பார்த்தாலே பயமா இருக்கு 'என்று சொல்லி விட்டாள்.''உனக்குப் பயமா இல்லையா''என்றால்.எனக்கும் பயமாகவே இருந்தது .ஆனால் அதை மீறி அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.

குழந்தைகள் மட்டுமல்ல க்வார்ட்டர்சில் இருந்த மற்றப் பெண்களும் கூட அவளை இப்போது தவிர்க்க ஆரம்பித்தார்கள்..அத்தையின் மன நிலை மட்டுமல்ல அவளது உடல் கூட வேறுவிதமாக மாற  ஆரம்பித்தது உணர முடிந்தது.சில பெண்களைப் போல் துக்கமோ களிப்போ அத்தையால் தொடாமல் பகிர்ந்து கொள்ள முடியாது..மற்ற குழந்தைகள் அவளை விரும்ப அவளது சிலீரென்ற வாஞ்சை ததும்பும் ஸ்பரிசமும் ஒரு காரணம்.பல  இரவுகளில் நான் எதேச்சையாக விழித்தபோது கூட அவள் என் நெற்றியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.அவள் சருமம் எப்போதுமே பனித்துளி போல் சிலீரென்று இருக்கும்.நம்முடைய அத்தனை பதற்றங்களும் அவளது ஒற்றைத் தொடுகையில் கரைந்துவிடுவது போல் உணர வைக்கும்.ஆனால் இப்போது அப்படி அல்ல.ஒரு நாள் தற்செயலாக அவளைத் தொட நேர்ந்த போது அவள் உடல் அனல்துண்டு போல் கொதித்துக் கொண்டிருப்பதை  உணர்ந்து திடுக்கிட்டு விலகினேன்.காய்ச்சலா  என்று என்று கேட்டதற்கு இல்லை என்று சொல்லி விடடாள்..அதிலும் சில இரவுகளில் அவள் உடலிலிருந்து உஷ்ணம் செங்கல் சூளையிலிருந்து வீசுவது போல் தாங்க முடியாது வீச ஆரம்பித்தது.பெரும்பாலும் கடவுளிடமிருந்து கடிதங்கள் வரும் நாட்களிலேயே இவ்விதம் நிகழ்ந்தது.முன்பு இருந்தது போல் இல்லாமல் அவள் உடம்பிலிருந்து இப்போது மெலிதான நாற்றமும் எழும்பி வந்தது.அப்போதெல்லாம் அவள் நள்ளிரவுகளில் எழுந்து குளித்துவிட்டு பிரார்த்தனை செய்வதையும் கண்டேன்.இப்போது அவள் என்னையா மற்றவரையோ முன்பு போல் தொடுவதில்லை.நான் தொட்டால் கூட விலகிப் போனாள்


இப்போது அவளுக்கு மற்றவர்களின் சிநேகம் குறைந்து போய் விட்டதின் இன்னொரு காரணம் மெதுவாகத்தான் எனக்குத்தெரிந்தது.ஒரு நாள் பளளி விட்டு நடந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது என்ஜினீயரை வழியில் சந்தித்தேன்.அவர் என்னிடம் ஒரு காகிதப் பொதியைக் கொடுத்து அத்தையிடம் கொடுக்கச் சொன்னார்.நான் மறுத்தேன்.அதுவரை அத்தைக்கு அவரைப் பற்றி சரியான அபிப்பிராயம் இருந்ததில்லை.அவர்எங்காவது அவளைச் சந்தித்து  அவளிடம்  பேச முயற்சிக்கும் போதெல்லாம் ஒரு அவசரப் புன்சிரிப்புடன் கடந்து போய்விடுவாள்.நான் அதை அத்தை வாங்க மாட்டாள் என்று சொன்னேன்.அவர் சிரித்து ''கொடுறே இப்ப.மாட்டேன்னு சொல்லட்டு '''என்று வற்புறுத்திக் கொடுத்தார்.நான் அதைப் பிரித்துப் பார்த்தேன்..அல்வா ஜிலேபி என்று வாழை இலையில் சுற்றிய திருநெல்வேலி லாலா இனிப்புகள் .அவர் போனதும் அப்படியே அதை வெறுப்புடன்  தூர எறிந்துவிட்டு மறந்துவிட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து அத்தை தூங்கும் முன்பு மெதுவாகக்  கேட்டாள்..''என்ஜினீயர் சார் ஏதாவது உன்கிட்டே கொடுத்தாரா பிள்ளே ?''
நான் ''ஆமா''என்றேன் தயக்கமாய்.
''சொல்லவே இல்லை?''எனறாள்.நான் பதில் பேசவில்லை.அவள் சற்று கோபமாக இருந்தது போல் இருந்தது.

அன்றிரவு சரியாகத் தூக்கமே  வரவில்லை.ஜன்னல் கம்பிகளில் வடியும் பூசணி மஞ்சள் நிலவை பார்த்துக் கொண்டே இருந்தேன்.எப்போது தூங்கினேன் என்றே தெரியாது.விழித்தபோது நிலா ஜன்னலை விட்டு மேலெழும்பிப் போய் இருந்தது.சில்லென்று சிள் வண்டின் இசை  அறையை நிறைத்திருந்தது .பக்கத்தில் அத்தையைக் காணவில்லை.ஒருவேளை பின்னால் குளிக்கிறாள் போல என்று இருந்தேன்.ஆனால் அங்கும்  வெளிச்சம் இல்லை.மெல்ல இருளுக்கு கண்ணும் காதும் கூர்ந்தன.சாம்பல் இரவு வெளிச்சத்தில் ஏசு நாதர் வானோக்கி பிதாவை இன்னமும் விளித்துக் கொண்டிருந்தார்.மின்மினிப் பூச்சி ஒன்று ஒரு ஒளித்துணுக்கு போல் மிதந்து மிதந்து அருகில் வந்தது.காற்று முழுக்க வேனையில் பூக்கும் வேப்பம்பூக்களின்  வாசம் நிரம்பித் திணற டித்தது.எனக்கு தாகம் எடுத்தது.பக்க்கத்தில் இருந்த ஈயச் செம்பில் தண்ணீர் காலியாக இருந்தது.நான் நீரில் நீந்துபவன் போல் இருட்டில் நீந்தி முன் அறைக்குப் போனேன்.அங்கு மெலிய நீல விடிவிளக்கு  ஒளியில் ஒரு வினோதமான காட்சியைக் கண்டேன்.ரூபி எப்போதும் கிடக்கும் பத்தமடைப் பாயின் மீது ஒரு வெற்று முதுகு மட்டும் தெரிந்தது.சுருள்  சுருளாக மயிருடன்  தெரிந்த முதுகாகவே இருந்தது.அது அதன் கீழே கிடந்த மற்றொரு  உடலின் மீது மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது.பக்கத்தில் குவியலாகக்  கிடக்கும் சில உடைகள்.வீடு முழுவதும் ஒரு வியர்வை நாற்றமும்  மெலிதான முனகல்களும்  நிறைந்திருந்தது.முதுகு எஞ்சிநீயருடையது .கீழே அகன்று  ஆடையின்றி, வெட்டப்படும் ஒரு தவளையின் கால்கள் போல் துடித்துக் கொண்டுக்   கிடந்த கால்கள் அத்தையுடையது ....

7 comments:

  1. உடல் தத்துவம் பற்றிய வார்த்தை தொடுப்பு மிகவும் பிரமிக்க வைக்கிறது . சிறப்பானப் பதிவு . பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  2. படித்து கொண்டுதானிருக்கிறேன் தங்களின் அத்தனை பதிவுகளையும்.. ஆனால் என்ன பின்னோடமிடுவது என்று தெரிவதில்லை...

    பெரும்பாலும் தங்களுடைய பதிவுகள் எல்லாம் ஊர் ஞாபகத்தை ஏற்ப்படுத்திவிடும்.

    ReplyDelete
  3. நன்றி பனித்துளி [இன்னும் பச்சைதானா]வெறும் பய அவர்களே[!]உங்களுக்கு குமரி என்ற நினைவு...குமரியில் எங்கு?

    ReplyDelete
  4. விறுவிறுப்பு ,விவரணைகள்!
    சிறுவன் பார்வை ....முதிர்ந்த எழுத்து ..
    WAITING FOR THE WAY ITS GONNA CONCLUDE

    ReplyDelete
  5. நல்ல பதிவு! தொடருங்கள்!

    ReplyDelete
  6. அன்புள்ள போகன் அவர்களுக்கு..

    கடந்த மாதம் ஒரு நாள் கூகிள் பஸ்ஸில் தங்களது ஒரு கவிதையை படித்தேன். அங்கிருந்த ஒரு இணைப்பின் மூலம் தான் தங்கள் தளத்திற்கு முதல் முறையாக வந்தேன். படித்தவுடனையே தங்களது எழுத்துக்கள் என்னை கட்டிப்போட்டன என்று தான் செல்ல வேண்டும். தாங்கள் எழுதிய ஒரு கவிதையில் வெட்டுமணி (வெட்டுவந்தி) என்ற இடம் வரக்கண்டேன்.. அது தான் நான் படித்த முதல் பதிவும் கூட. ப்ரோபைலில் கூட மார்த்தாண்டம் பார்த்ததாக ஞாபகம். நானும் அவ்விடம் பக்கம் தான். காப்புக்காடு அருகில் மாரயபுரம் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கு தான். பள்ளிக்காலம் முன்சிறையில். கல்லூரி நாகர்கோவிலில், இப்போது பிழைப்புக்காக கடல் தாண்டி வந்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. அத்தையை நினைத்தால் பாவமாக தான் இருக்கின்றது!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails