Wednesday, December 1, 2010

உலக அழகியும் உள்ளூர்க் கிழவியும் -நந்தலாலாவை முன்வைத்து

இணையத்தில் வழக்கமாக ஏதாவது ஒரு அலை அடித்துக் கொண்டிருக்கும்.அந்த அலையில் கணினி வைத்திருக்கும் அனைத்து தமிழர்களும் குதித்துக் கருத்து சொல்லி எதிர்க் கருத்துச் சொல்லி நட்பாகி காதலாகி கோபமாகி வன்மமாகி கண்ணீர் உகுத்து காரித்த்துப்பி விஷயத்தை ஆரம்பித்தவர் தான் முதலில் என்ன சொன்னோம் என்பதையே மறந்து குழம்பி அதற்கு நேர் எதிரான கருத்தை கடைசியில் சொல்லி அதான் நான் சொன்னது என்று கோமாளியாகிவிடும் வரை இது நடக்கும்.அதற்குப் பிறகு வேறொரு அலை வர மொத்த ஜனமும் இந்தக் குதிரையை விட்டு அடுத்தக் குதிரையில் ஏற ஓட ..ஒரு ரிலே ரேஸ் போல் இது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.கணினி ஓய்வை விரும்பினாலும் பதிவர்கள் விடுவதில்லை! 


கொஞ்ச நாளாக ஆணும பெண்ணும் சேர்ந்து வாழ்வதால் கலாச்சாரத்தின் உயிருக்கு ஹானி எதுவும் வந்துவிடுமா என்று கட்சி பிரிந்து அடித்துக் கொண்டதில் இரண்டு அணிகளும் சமமான கோல் அடித்து தொடர்ச்சியாக டை ஆகித் திணறிக் கொண்டிருந்ததில் நல்லவேளையாக நந்தலாலா வந்தது.உடனேயே அதன் மீதான விமர்சன மேளா தொடங்கிவிட்டது. முதல் நாள் முதல் காட்சிக்கு முன்னாலேயே வந்து குவிந்துவிட்ட முன்னூறு விமர்சனங்களைப் படித்து மிஸ்கினே சற்று கலங்கிப் போய் இருக்கக் கூடும்.இந்த  அலையில் பெரிய பெரிய தலைகளே கலந்துகொண்டு அடிப்பது அடிவாங்குவதுமாக இருப்பது பார்த்ததும் எனக்கும் ஒரு மாதிரி குளிர்காய்ச்சல் மாதிரி வந்து விமர்சனம் எழுதலாம் என்று பார்த்தால் எங்கள் ஊருக்குப் படம் வரவில்லை.செய்திகளைப் பார்த்தால் வரும் வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.ஆகவே  நந்தலாலாவைப் பற்றிய விமர்சனங்களைப்  பற்றிய விமர்சனம் இது.

 

முடிந்த அளவு எல்லா விமர்சனங்களையும் தேடிப்  பிடித்துப் படித்ததில் இந்த விமர்சனங்களில் சில விசயங்கள் எனக்கு கலங்கலாகப் புரிந்தது.படத்தைப் பார்க்காமலே 
சஞ்சய திருஷ்டியில் நீ என்ன எடுத்துவிடுவாய் எனக்குத் தெரியாதா என்று குத்துமதிப்பாய் விமர்சனம் எழுதுபவர் ஒருவகை.பார்த்துவிட்டு எழுதுபவரை விட இவர்கள் விமர்சனம்தான் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு வகை மூலப் படத்தையே பார்த்தவர்கள்.இவர்கள் பெரும்பாலும் தமிழில் வராத எல்லாப் படத்தையும் உடனுக்குடன் திருட்டு டிவிடியிலோ டவுன்லோடோ செய்து பார்த்துவிடுவார்கள்.இரவு முழுக்க கண் சிவக்கப் பார்த்துவிட்டு வெள்ளாட்டுக்காகக் காத்திருக்கும் வேங்கை போல காத்திருப்பார்கள்.யாராவது தமிழ்ப் படக் காரர்கள் உலகத் திரைப் படம் என்று தப்பித் தவறி சொல்லிவிட்டால் போச்சு. ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து குரல்வளையைக் கடித்துவிடுவார்கள்.எந்தெந்த காட்சிகள் எங்கெங்கிருந்து எடுத்தது என்ற குறிப்புகளை சட்டைப் பையில் பிட்டுகள் எல்லாம் வைத்திருந்து எடுத்து வீசிக் கொண்டே இருப்பார்கள்.வழக்கமாய் கமல் சங்கர் அமீர் போன்றவர்கள்தான் இவர்களிடம் சிக்கிச் சின்னாபின்னம் அடைவார்கள்.சமீபமாக மிஸ்கின் அந்த வண்டியில் யாரும் அழைக்காமலே ஓடி வந்து ஏறிக் கொண்டு நானும் ரவுடிதான் என்னையும் அடிங்க என்று ஆஜர் ஆகி இருக்கிறார்.இவர்கள் எழுதிய எதிராளிக்கு கிலிஏற்படுத்தும் டெர்ரர் விமர்சனங்கள் 

இன்னும் சில விமர்சனங்கள் இருக்கின்றன.அது படத்தைப் பற்றியது போலவே இருந்தாலும் உண்மையில் அதன் கீழ் வேறு மறைமுகச் செய்திகள் இருக்கும்.தனக்குப் பிடிக்காத ஒரு நபர் படத்தைப் பாராட்டிவிட்டால் அவருக்கு சமீபத்தில் பிடிக்காமல் போன நண்பர் இதெல்லாம் ஒரு படம் சீ தூ என்று குமுறுவார். இளையராஜாவின் இசையில் அழுதுவிட்டேன் என்று இவர் சொன்னால் அதைக் கேட்டதும் எனக்கு காக்காய்வலிப்பு வந்துவிட்டது அவர் இசையால் ஆஸ்கார் பறிபோய் விட்டது என்று மற்றவர் வருந்துவார் ...இவர்கள் நடுவே நடக்கும் முகமூடிச் சண்டைகள் பற்றித் தெரியாத சில அப்பாவிகள் இவர்கள் திரைப் படத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பி வந்து கருத்துச் சொல்லி ஏமாறுவார்கள். 


இது தவிர இந்த பேட்டையில் சாரு ஜெமோ என்று இரண்டு தாதாக்கள் இருக்கிறார்கள அவர்களுக்குக் கீழே நிறைய சிஷ்ய கேடிகளும் உண்டு...இந்த சீடர்களுக்கு என்று எந்த தனி அபிப்பிராயமும் இருக்காது.தலைகள் என்ன சொல்கிறதோ அதற்குத் தலையாட்டிவைப்பார்கள்.அவர்கள் வீட்டில் கக்கூஸ் கழுவுவது என்றாலும் இவர்களுக்கு கடிதம் எழுதி அன்புள்ள ஜெமோ கக்கூஸ் கழுவுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுத அவர் 'நல்ல கேள்வி கக்கூஸ் கழுவுவது நமது கலாச்சராத்தின் ஒரு பகுதியே அது பற்றி நாராயணகுரு காந்தியுடன் ஒருமுறை அவர் ஆஸ்ரமத்தில் வைத்து விவாதித்திருக்கிறார்.அது மலபார் மானுவலில் வந்திருக்கிறது..என்ன மலையாளத்தில் இருக்கிறது .எனக்கு மட்டுமே புரியும் 'என்று பதில் எழுத சாருவின் ரசிகர்களுக்கு அவர் ''நானே கக்கூஸ் கழுவிய ஒரு விளிம்பு நிலை புரட்சியாளந்தான்..அந்த அனுபவங்களை வைத்து நான் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பார். .இதற்கே இப்படி எனில் நந்தலாலா பற்றியும் கருத்துக் கேட்காமல் எப்படி இருப்பார்கள... ஆகவே இந்த வகை விமர்சனங்கள். ஒரு வகையில் மடத்து விமர்சனங்கள் எனலாம்..மூலவரைப் படித்துவிட்டால் பரிவாரத் தேவதைகளைப் படிக்கவேண்டாம்...ஆனால் சில சமயம் மூலவர்களுக்கும் பரிவாரங்களுக்கும் தொடர்புப் பிழையாகி மாறுபட்ட விமர்சனங்களும் வந்துவிடுவதுண்டு.நானும் சாமிதான் என்று பரிவாரங்கள் தங்கள் இருப்பை நிலைநாட்டும் தருணம் அது...மூலவர்கள் பெரும்பாலும் இந்தப் புரட்சியைக் கண்டுகொள்ளாமல் புத்திசாலித்தனமாக நிஷ்டையில் ஆழ்ந்துவிடுவார்கள்... 


 


இந்த வகைகள் தவிர கணித்துச் சொல்ல முடியமால் சில சமயம் இடதாகவும் சில சமயம் வலதாகவும் எல்லார்  விமர்சனத்தையும் குறை சொல்லி எழுதப் படும் விமர்சனத்தின் மீதான விமர்சனங்கள் தனிவகை.எல்லோரையும் உதைக்கும் freekick சுதந்திரத்தை தங்களே எடுத்துக் கொண்டு அலையும் free radicals இவர்கள்.. 

கமல் அமீர் மிஸ்கின் தங்கர் பச்சான் போன்றவர்களுக்கெல்லாம் ஒரு வினோத வியாதி இருக்கிறது.இவர்கள் அனைவரும் தங்கள் படத்தின் நீளத்தைவிட அதிகமாகத் தங்கள் படத்தைப் பற்றிப் பேசுபவர்கள்..இவ்வாறு அவர்கள் பீட்டர் விட விட அதைக் கேட்கும் அறிவு ஜீவிகள் அறிவுஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள் அத்தனை பேரின் அகங்காரமும் சீண்டப் பட்டு 'அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா  நீ 'என்று கடுப்பாகி திரைப்படத்தைப் பற்றி கோடார்ட் என்னை சொல்கிறார்ணா  என்று ஆரம்பித்து யாருக்கும் புரியாமால் எழுதும் கோட்பாட்டுக் கொலைவெறி விமர்சனங்கள் ஒரு வகை. எப்போதும் இவர்கள்  'உன் பொண்டாட்டி ஒன்றும் உலக அழகி இல்லை.உள்ளூர் கிழவியே 'என்பதைத்தான் இச்பநேஞ்சல் மொழியில் சொல்வார்கள்  என்ற புரிதலோடு வாசிக்கத் தொடங்கினால் ஒருவேளை புரியக் கூடும்.இந்த விமர்சனங்களில் எந்த வகையை நீங்கள் படித்துக் கொண்டிருந்தாலும் படித்திருந்தாலும் உடனே எல்லாவற்றையும் நிறுத்தி வெறி நாய்க்  கடி ஊசி ஒன்றைப் போட்டுக் கொள்வது நல்லது

LinkWithin

Related Posts with Thumbnails