எனக்கு
கொல்வது பிடிக்கும்
முதன் முதலாய்
என்னை விரட்டிய
தெரு நாயை
அடித்துக் கொன்றேன்
அன்று
தெரிந்துகொண்டேன்
நாய்களுடன் விவாதிப்பது
என்றுமே பயன் தராது
என்னுடைய பயத்தை
நான்
கொல்வதன் மூலமே
வென்றேன்
எப்போதெல்லாம் பயந்தேனோ
அப்போதெல்லாம் கொன்றேன்
பிடிக்காத வாத்தியார்
பிடிக்கவில்லை என்ற பெண்
விளையாட்டில் வென்ற நண்பன்...
ஆனால்
ஒரு கோழையைப்போல்
ரகசியமாய்க் கொல்வது
எனக்குப் பிடிக்கவில்லை
வெளிப்படையாக கொல்வதற்கு
நீங்கள்
சில காரணங்களை கேட்டீர்கள்
நாடு,மொழி,மதம்
இனம்,ஜாதி சித்தாந்தம்
போன்ற முகாந்திரங்களுடன்
கொல்வதை
நீங்கள் அனுமதிக்கிறீர்கள்
என புரிந்துகொண்டேன்
ராணுவத்தில் சேர்ந்து
எதிர் நாட்டினரைக் கொன்றேன்
விருதுகள் கிடைத்தன
கடவுள் நம்பிக்கை
இல்லாவிடினும்
மதக் கலவரங்கள் செய்தேன்
ஏனெனில்
மதக் கலவரங்களில்
எல்லாம் அனுமதிக்கப் படுகின்றன
பெண்களைப் புணர்வதும்
குழந்தைகளை எரிப்பதும் கூட..
ஆண்களைக் கொல்வதை விட
பெண்களைக் கொல்வது இனிப்பானது
இன்னும் பிறக்காத சிசுக்களை
வயிற்றிலிருந்து பிடுங்கிக் கொன்றிருக்கிறேன்..
எல்லாம் கடவுளுக்காக எனில்
எதுவும் பாவமில்லை
உண்மையில் கொல்பவர்
அனைவர் கையிலும்
சொர்க்கத்தின் திறவுகோலை பார்த்தேன்
எல்லாக் கடவுள்களும்
கொலை செய்துள்ளனர்
ஆகவே
கொல்வதினால்
நானும் கடவுள் ஆகிறேன்
பின்னர்
இனக் கலவரங்களில் ஈடுபட்டேன்
மொழிப் போர்களில்..
சித்தாந்த சுத்திகரிப்புகளில்...
கொன்ற இடங்களில் எல்லாம்
என்னைப் பயந்தீர்கள்
மரியாதை செய்தீர்கள்
வலியதே எஞ்சும்
என்பது உங்களுக்கும் தெரியும்
சிலர்
என்னை
பாசிஸ்ட் என்பீர்கள்
கவலையில்லை
ஏனெனில்
எனக்குத் தெரியும்
உங்களைக் கொல்பவர்களை
மட்டுமே
நீங்கள்
உங்களை
ஆள அனுமதிப்பீர்கள் என்று...
கசக்கும் உண்மை...கவிதை வன்மை..பலே..!!
ReplyDelete-kovai sathish