Tuesday, June 15, 2010

ஜன்னலின் வெளியே

ராட்சச விசிறிகள் போல் தென்னை மரங்கள் நின்றிருந்தன.மரங்களின் கால்களில் மீன்பிடிவலைகள் காய்வதற்காக கட்டுண்டிருந்தன.வானம் மழை இறங்கிய களைப்புடன் சோகையாய் இருந்தது.நேற்றைய மழை மிச்சங்கள் செம்மண் தரையில் சிதறிக் கிடந்தன.சில காகங்கள் தங்களைக் கவனமாய்க் கழுவிக் கொண்டிருந்தன.வலைக்  கண்களில் செம்போத்து ஒன்று அபாயகரமாக ஊஞ்சலாட கருப்பு நாய் ஒன்று நின்று பார்த்து வியந்தது.மரங்கள் இடையே பருந்து ஒன்று தாழப் பறக்க பறவைகள் சலசலத்து அடங்கின.ஒரு எந்திரக் காளை போல் மோட்டார் சைக்கிள் அசையாது காத்திருந்தது.சிறு குழந்தை கற்களைத் தட்டி விளையாடிக் கொண்டிருந்தது.ஜன்னல் திரைகள் திடீர் திடீர் என அசைந்தன.காற்றில் ஒரு ஒரு காய்ச்சல் குளிர் இருந்தது.தூரத்தில் வாகனங்களின் கதறல்கள் மழுப்பலாய்க் கேட்டன.ஸ்கூட்டர் ஒன்று செம்மண் சாலையில் பாம்பு ஊர்வது போல் போனது.சிறுவன் ஒருவன் ஆழ் குரலில் சீரான லயத்தில் இருமிக் கொண்டிருந்தான்.மின்சாரம் வந்ததும் விசிறி துணுக்குற்று அசைந்தது.மரம் முறிவது போல் சத்தத்துடன் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.அதன் முதுகு முழுதும் பொம்மை வண்ணங்களில் பிளாஸ்டிக் குடங்கள் பன்றியின் முலைகள் போல் தொங்கின.இன்னும் மழை உண்டு எனறார்கள்.இன்னும் குளிர்.இன்னும் சில கவிதை முயற்சிகள்.Life can be beautiful.

2 comments:

  1. ரசித்துப் படித்தேன். மாற்றுச் சித்திரம் சேர்த்திருக்கலாமோ?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails