Monday, June 28, 2010

நம் கவிதை

ரொம்ப நாளைக்குப் பிறகு
அவள் மேல்
ஒரு கவிதை முயற்சிக்கிறேன்
டியர் ரா....
என்னை

நினைவு இருக்கிறதா?
உன் பார்வைமேல் படர்ந்திருக்கும் 
நாட்களின் பனியைத்
துடைத்துப் பார்த்தால்
ஒருவேளை
நான் தெரியலாம்
தூரத்தில் மங்கலாய் தனியாய்....
முகம் தெளிவற்று
வான் நோக்கி
ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டு...

நட்சத்திரங்களைப் பார்க்கையில்
எல்லாம்
உன்னை நினைக்கிறேன்
என்று சொல்லமாட்டேன்
சில நட்சத்திரங்கள்
உன்னை நினைவு படுத்துவது உண்டு
ஆனால் கவிதை எழுதும்போதெல்லாம்
உன் நினைவு நிச்சயம் வரும்
என் முதல் வாசகி நீ அல்லவா..

வேப்பம்பூக்கள் வாசனையாய்க்
காற்றில் பூக்கின்றன
உனக்கும் இது பிடிக்கும்
என்பது நினைவு வருகிறது
சோன்பப்படி வண்டியின்
மஞ்சள் வெளிச்சம்
இரவின் முனைகளை
தங்க வர்ணம் பூசிக்கொண்டே செல்கிறது
இதுவும் உனக்குப் பிடிக்கும்.
நள்ளிரவில்
திடும் என விழித்துக் கொண்டு
புழக்கடை வர
எதிர் பாராத பிரகாசமாய்
காய்ந்து கொண்டிருக்கும்
ரகசிய நிலவு வெள்ளி ..
இதுவும் உனக்குப் பிடிக்கும்.
வேறு யார் விருப்பத்திலோ
தேனருவியில்  வழியும் 
நமக்குப் பிடித்த பாடல்...

கவிதை எழுதுவதற்கான விசயங்கள்
உனக்கும் எனக்கும்
பொதுவாகவே இருந்தன

ஆனாலும் நீ
அதிகம் எழுதியதே இல்லை
எழுதிய கொஞ்சமும்
வரதட்சிணைக் கொடுமை
பற்றி கண்ணீர் விட்டது.

இப்போது கல்யாணம் ஆகிவிட்டது
அந்தக் கவலை ஒழிந்திருக்கும்

இப்போது எது பற்றி
கவிதை எழுதுகிறாய்?
சிலசமயம்
உனக்கு நேரமில்லைஎன்று
உணர்ந்து 
உன் கவிதைகளையும் சேர்த்து
நானே எழுதுகிறேன் தெரியுமோ...
உன் குழந்தைக்கு
தாலாட்டு உட்பட...

2 comments:

  1. >>இப்போது எது பற்றி
    கவிதை எழுதுகிறாய்?

    இதுவே தனிக் கவிதை.

    சிந்தித்துப் பார்த்தால் விரிசல்களுக்கிடையே தெரியும் ஒளி போல நிறைய எண்ணங்கள் விட்டு விட்டுத் தோன்றுகின்றன.
    சுவையான கவிதைகள். நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் படங்களும் மிகப் பொருத்தம்.

    ReplyDelete
  2. தாலாட்டு எழுதுதல் கொடுமை தான் ..
    கொஞ்சம் கலங்குகிறது ..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails