முனைகள் தெளிவற்ற
மாலைக் கதிரோடு
தெருவில் இறங்கி நடந்தேன்
இன்றோடு என் வயது
இன்னுமொன்று முடிகிறது
வருடங்களுக்கிடையில்
வித்தியாசம் ஒன்றுமில்லை
பணியிடத்தில்
களைப்பே இல்லாது
கண்சிமிட்டும் கணினிகளைப்
பார்த்து பொறாமை அடைகிறேன்
நேற்று முடிக்க வேண்டிய வேலைகள்
மோவாயில் கை ஏந்தி
எதிர் நாற்காலிகளில் அமர்ந்திருக்க
மூலையில் மடித்து
தொடரக் காத்திருக்கும் புத்தகங்கள்
ஏராளமாய் நிறைந்த அலமாரிகளில்
எட்டுக் கால் பூச்சிகள்
அயராது
எதையோ தேடுகின்றன ..
பஸ் பிடித்து
வீடு வந்து
உணவு உண்டு
நான் பாதியில் விட்ட
முப்பதாவது சிறுகதையின்
அடுத்த வரி முயற்சிப்பதற்குள்
தூக்கம் மூட
படுக்கையில் வீழ்கையில்
மங்கலாய்த் தோன்றிற்று
நேற்றும்
இதுதானே நிகழ்ந்தது ?
எதுவும் படிக்காமல்
எதுவும் எழுதாமல்
எதற்கும் சிரிக்காமல்
எதற்கும் நெகிழ்ந்து அழாமல்
எவரையும் நேசிக்காமல்
எவரோடும் முரணாமல்
மற்றுமொரு
நகல்நாளாகவே இன்றும் போயிற்று
கண்டதையே கண்டு
ReplyDeleteஉண்டதையே உண்டு
பேசியதையே பேசி.......
அருமை. என்னை போல் ஒருவன். ;-)
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteதொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....