Monday, August 15, 2011

உடல் தத்துவம் 18


ஆனால் எல்லா அநீதியும் காலப் போக்கில் பழகிவிடுகிறது எனவே தோன்றுகிறது .நான் மறுநாளே செல்வியைத் தேடித் தனியாகப் போனேன்.செல்வி என்னைக் கண்டு ஆச்சர்யப் படவில்லை ''வா''என்றாள்.''நீ வருவேன்னு நினச்சேன்''
அன்று கொஞ்சம் சந்தோசமாக இருந்தது போல் இருந்தது காரணம் கேட்டதற்கு ''ஆங்.எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு. வந்த சோலியப் பார்த்துட்டு போவியா''என்று புடவையை அவிழ்க்க ஆரம்பித்தாள்
''ச்சை ...இதை கழட்டறதுக்கும் சுத்தறதுக்குமே பாதி வாழ்நாள் போகுது.சுத்தி சுத்தி வச்சிருக்கு எல்லாத்தியும் புண்ணு மாதிரி''
நான் ''செல்வி நான் உன்ன இங்கிருந்து காப்பாத்தறேன் ''என்றேன் 
அவள் கவனிக்காமல் உள்பாவாடையின் வெள்ளை முடிச்சை இழுத்துக் கொண்டிருந்தாள் '
நான் மறுபடியும் ''செல்வி உன்ன நான்...''

அவள் ''அரை  மணிதான் அடுத்த ஆளு வந்துடுவான் சீக்கிரம் வா''

நான் அவளது வெற்றுடம்பை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க ' கண்களை உற்றுப் பார்த்து 'உனக்கு என் மேல ரொம்ப பாசம் பொத்து வழியுதுன்னா நாளைக்கு வரப்ப ஒரு பாட்டில் நம்ம ஊரு நாரத்தை ஊறுகாய் வாங்கிட்டுவா ..இங்கே எல்லாம் கடுகு எண்ணெயில பண்றாய்ங்க ஆக்கங்கெட்டவங்க..வாயில வச்சால குமட்டுது .பான்சோத்.அவன் சாமானும் சுத்தமில்லை ஊறுகாயும் சுத்தமில்ல''

நான்எரிச்சலடைந்து ''நான் சொன்னதைக் கேட்டியா''
அவள் ''பொத்திட்டு சோலியப் பாரு..என்ன .. ''என்றாள் 
எனக்கு அவள் கோபம் புரியவில்லை என்று சொன்னேன் 
அவள் சட்டென்று ஆங்காரமாய்த் திரும்பி ''உன்னால சரியாய் பிடிச்சு ஒழுகாம சோலி பார்க்கத் தெரில நீ என்ன இங்கிருந்து கொண்டுபோகப் போறியா ?வெட்டிப் போட்டுடுவாங்க புரிதா?''

நான் ''என்னால முடியும் செல்வி...நீ நினைக்கிற மாதிரி பால்ப் பையனில்ல நான்''
அவள்''ஹ..உன் கண்ணுலையே தெரியுது நீ ஒரு பால்ப் பையன்னு ..இல்லாட்டா வந்த இரண்டாவது நாள் இப்படி ஒரு கேள்வி கேட்கமாட்டே''

நான் அந்தக் பதிலால் மிக ஆழமாகச் சீண்டப் பட்டேன் ஏனோ ஊரில் ராமேஸ்வரி அத்தை நினைவு வந்தது அவளது கேலிப் பார்வை ..அவள் மட்டுமல்ல அதுவரை நான் சந்தித்த பெண்கள் எல்லார் கண்களிலுமே அந்தப் பார்வையைச் சந்தித்திருக்கிறேன்.உனக்கு உலகம் தெரியாது என்பது போன்ற இரக்கப் பார்வை ..
நான் எழுந்து மிகுந்த கோபத்துடன் அவளைக் கீழே தள்ளி அவள் மேல் பாய்ந்தேன் .முரட்டுத் தனமாய் அவள் கால்களை அகட்டி ''தேவிடியா தேவிடியா''என்று கத்திய படியே அவளுக்குள் புக முயன்றேன் அவள் சிரித்து ''ஏய் முட்டாள்..எங்க வைக்கிற உன் சாமான?'என்று கத்தினாள் 

என்னால் அதிக நேரம் இயங்க முடியவில்லை மூச்சிரைக்க பின்வாங்கி விழுந்தவனை அவள் ''சொன்னேன்ல""என்பது போல் பார்த்தாள் 
எழுந்து அவசரமாக உடுத்த ஆரம்பித்தவனை எழுந்து முழன்கையைப் பிடித்துக் கொண்டு''கோபமா''என்றாள். நான் உதற சட்டென்று முகத்தைப் படித்துத் திருப்பி அவள் தொடையின் உட்பாகத்தைக் காண்பித்தாள். கரும்சிகப்பில் நீளமாய் ஒரு தீற்றல். அதே போல் எதிர்த் தொடையிலும் இருந்தது ''இங்கே பார்''என்று உள்ளன்காலைக் காண்பித்தாள்.மற்றொரு தீற்றல் உற்றுப் பார்க்க பார்க்க அவள் உடம்பில் தீற்றல்கள் தோன்றி வந்துகொண்டே இருந்தன ''சூடு போடாத இடம் முகத்திலயும் சாமானிலயும்தான் ..பிசினெஸ் போயிடுமே..தப்பிச்சுப் போக முயற்சி பண்ண ஒவ்வொரு தடவையும் மூணுநாள் ஒட்டு துணி இல்லாம சாப்பாடு தண்ணி இல்லாம ரூம்ல அடைச்சு வச்சிருந்தாங்க..அப்புறம் ஒருவாரம் தூங்கவே விடாம தொடை முழுக்க ரத்தத்தால நனையறவரை கஸ்டமரை அனுப்பி வச்சுகிட்டே இருந்தாங்க ..புரிதா''என்றாள்.

நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.அவள் உடல் முழுக்க நடுங்கிக் கொண்டே இருந்தது நான் எழுந்து அவளை அணைத்துக்கொள்ள முயல ''விடுறா பன்னி''என்றாள். .கதவை யாரோ தடதடவென்று தட்டி ''ஜல்தி .நயா  கஸ்டமர் ஆகயி'''என்றார்கள். 

அதன்பிறகு நான் அவளைச் சந்திக்க முயலவில்லை 
ஆனால் அவள் சொன்னது நினைவில் தைத்து உறுத்திக் கொண்டே இருந்தது.யோசித்துப் பார்க்க என்னைச் சந்தித்த எல்லாப் பெண்களுமே இந்த செய்தியை ஏதோ ஒருவிதத்தில் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்று தோன்றியது மேகி அத்தையிலிருந்து லீலா தாமஸ் வரை எல்லாருமே..அவர்கள் எல்லோருமே என்னை நேசித்தார்கள் ஆனால் ஒரு சிறுவனை நேசிப்பது போலதான் அது.பதிலாக வாழ்நாள் முழுவதும் நான் அவர்களுக்கு என் ஆண்மையை நிரூபிக்க முயன்றுகொண்டே இருந்தேன்.

ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டுமொரு தடவை கொல்கத்தாவுக்குப் போக நேர்ந்தது.திடீரென்று வேலை இல்லாத ஒருநாள் மாலை சொனாகச்சிற்குப் போய் செல்வியைத் தேடினால் என்னவென்று தோன்றியது.போய்ப் பார்த்தேன்.சோனாகச்சி முன்பைவிட சத்தமாக முன்பைவிட வெளிச்சமாக முன்பைவிட கூட்டமாக முன்பைவிட அழுக்காய் இருந்தது முன்பைவிட வயது குறைந்த பெண்கள் பொருந்தவே பொருந்தாத முகப் பூச்சுடன் சிகப்பாக்கிக் காண்பிக்கப் பட்டப் பிஞ்சு உதடுகளுடன் உயர்த்திக் காண்பிக்கப் பட்ட மார்புகளுடன் ''ஆசோ ஆசோ ஏய் அமிதாப் ஏய் சாருக் ஏய்ய் கமல்ஹாசன் ''என்று கையை இழுத்துக்  கொண்டிருந்தார்கள்

திண்டுக்கல்செல்வியை யாருக்கும் தெரியவில்லை ஒவ்வொரு கட்டிடமாக ஏறி ஏறி இறங்கினேன்.''செத்துப் போயிருக்கும் சார்''என்றான் ஒரு ஆள் அலட்சியமாக.''பதினஞ்சு வருஷம்னு சொல்றீங்க.''

கடைசியில் ஒரு மலையாளப் பெண் தான் சொன்னாள்'நாகர்கோயில் என்றதும் அவளுக்கு என் மேல் கொஞ்சம் பாசம் வந்திருக்கவேண்டும்.அல்லது நான் நிறையப் பணம் கொடுப்பதாகச் சொன்னது.யோசித்து 'நிறைய இங்க்லீஷ் பரயுமோ அ சேச்சி?அச்சன் டாக்டர்னு பறையும் அல்லே ?''

அவள் என்னை அந்தக் கட்டிடத்தின் பின்பக்கம் அழைத்துப் போனாள்.பாதையெங்கும் சாக்கடைகள் பொங்கி வழிந்துகொண்டிருக்க அவற்றைத் தாண்டித் தாண்டிப் போனோம்.''யாரானு அது உங்களுக்கு?ரிலேடிவோ?''
கட்டிடங்களுக்குப் பின்னால் வரிசையாக குடிசைவீடுகள் இருந்தன ..வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டில்களில் நிறைய கிழவிகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.சிலர் புகைத்துக் கொண்டிருக்க நிறைய அரவாணிகளையும் அங்கு பார்த்தேன்.அவர்கள் என்னை வெறுப்புடன் பார்த்தார்கள்.கொசுக்கள் ஒரு மேகம் போல எங்களைப் பின்தொடர்ந்துவந்தன.நான் அவற்றை அறைந்து கொண்டே அவளைப் பின்தொடர்ந்து போனேன்.மலையாளப் பெண் மூக்கைச் சுளித்துக் கொண்டே வந்தாள்.அவள் வாழும் நரகத்தைவிட கொடிய நரகம் ஒன்று இருக்கமுடியும் என நான் அதுவரை எண்ணியிருக்கவில்லை

கடைசியாய் அவளொரு குடிசையின் முன்பு நிற்பதற்குள் நான் சலித்திருந்தேன்..திரும்பிவிடலாம் என்று சொல்ல வாய் எடுக்கும் முன்பு அவள் நின்று ''போய் நோக்கு .இதானோ நீங்க தேடி வந்த ஆளுன்னு''

நான் தயக்கமாய் அவளைத் திரும்பிப் பார்க்க ''போய்நோக்கு..போ...சேச்சி அசுகத்திலானு''என்றாள்.நான் குடிசையை மூடியிருந்த சாக்குத் திரையை விலக்கி உள்ளே பார்த்தேன்.சட்டென்று ஒரு அழுகிய நாற்றம் என்னை வந்து அடைந்தது.நெடுநாளாய் மூத்திரமும் மலமும் சீழும் கலந்த நாற்றம் அது.மூக்கை கர்சீப்பால் மூடிக் கொண்டு உள்ளே பார்த்தேன்.மிகச் சிறிய அந்தக் குடிசையில் ஓரத்தில் ஒற்றை மஞ்சள் விளக்கினடியில் ஒரு கயிற்றுக் கட்டிலில் அவள் படுத்திருந்தாள்.உடம்பில் இருந்த தசைஎல்லாவற்றையும் உருக்கி யாரோ உரித்து எடுத்துவிட்டார்போல குழிவிழுந்த கண்களுடன் தலைமுடி எல்லாம் உதிர்ந்து சருமம் முழுவதும் பச்சையாய் பூசணம் போல பூத்து ஒரு குழந்தையைப் போல ஒடுங்கி யாரோ ஒருவர்.....நிச்சயம் அவள் இல்லை என்றே முதலில் நினைத்தேன்.இது யாரோ ஒரு சாகக் கிடக்கும் சீக்குக் கிழவி .

எனக்கு சட்டென்று அந்த மலையாளப் பெண் மேல் கோபம வந்தது.இவள் ஏன் இங்கு என்னைக் கூட்டிவந்தாள்?என்று எரிச்சலுடன் திரும்பும்போது தான் கட்டிலில் கிடந்த உருவம் அசைந்து ''கோன்?"'என்றது
நான் அப்படியே ஆணி அடித்தாற்போல் உறைந்தேன்.அந்தக் குரல் ?அப்படி இருக்குமா?இருக்கக் கூடுமா?
நான் திரும்பி ஒரே ஒரு நிமிடம்தான் அவள் கண்களைப் பார்த்தேன் அந்தக் கணத்தை என்னால் வாழ்வில் மறக்கவே முடியாது.அடிவயிற்றில் யாரோ திடீரென்று குத்தினார் போல வலியுடன் என் போதத்தில் ஒரு துளை விழுந்த தருணம் .அது அவள்தான்.எல்லாம் அழிந்து போயிருந்தாலும் சட் சட்டென்று கனன்றுபற்றிக் கொள்ளும் அதே அதே கண்கள்தான்.
''யாரு?""என்று மறுபடியும் அவள் கேட்க நான் சட்டென்று அந்தக் கண்கள் என்னைக் கண்டு பற்றிக் கொள்ளும் முன்பு பதறி விலகி வெளியே மூச்சிரைக்க ஓடிவந்தேன்.
வெளியில் நின்றிருந்த அந்தப் பெண் பான் பராக்கை வாயிலிருந்து துப்பிவிட்டு ''கண்டோ?இதானோ அது?"'என
நான் அவசரமாய் ''இதில்லை இதில்லை ''என்றேன் ,கைகள் நடுங்க குரல் நடுங்க கண்ணீர் வழிய ''இதில்லை இதில்லை''என்றேன் மறுபடியும் ''போவோம் போவோம்''
அந்தப் பெண் என்னை நெருங்கி ஒருகணம் உற்றுப் பார்த்தாள். ஒரு இகழ்ச்சியான சிரிப்பு மெல்ல அவள் உதடுகளில் படர்ந்தது.மீண்டுமொரு தடவை கீழே துப்பிவிட்டு ''செ...ரி....''என்றாள்.

LinkWithin

Related Posts with Thumbnails