Sunday, August 28, 2011

ஒரு கடிதம்


அண்ணாச்சி,

                          நீங்கள் எழுதும் தொடரில் ஒரு பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் இடையில் எவ்வளவு நாட்கள் இருக்கும். ஏன் இவ்வளவு தாமதம்? அரிவை அரண்ல அக்டோபர் மாசத்தோட அகத்தியர் நிக்கிறாரு. அமெரிக்க ரிஷி போன வருஷம் ஜூலை மாசத்தோட நிக்கிறாரு. அவருக்கு முன்னாடி  அடுத்த பகுதில வருவானான்னு தெரியாமலே  ரச்புத்தின் நிக்கிறாரு. ஒரு  கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் இடையில் நீண்ட இடைவெளி, போலவே உடல் தத்துவமும். கமெண்ட் ரெம்ப கம்மியா வருதேன்னு யோசிக்கறீங்களா இல்ல நாம எழுதி யாரு படிக்கப்போறான்னு நினைப்பா? சொல்லுங்க ஒவ்வொரு பதிவுக்கும் கமெண்ட் போட்டு நிரப்பிடுறேன்.
நாங்க எவ்வளவு நாள்தான் காத்திருக்கிறது.
நீங்களே ஒரு ஞாயம் சொல்லுங்க..

நட்புடன்,
ராஜகோபால்.
அன்புள்ள ராஜகோபால் 
                             இந்தக் கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப் படுவதால் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் சேர்த்தே பதில் சொல்லிவிடுகிறேன்.
 நான் துண்டு துண்டாக எழுதுகிறேன் தொடர்களை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறேன் என்பது முக்கியமாக சொல்லப் படுகிறது இதற்கு சரியான காரணம் ஒரு மிருகம் இரைக்காக காத்திருப்பதைப் போலதான் நான் ஒரு படைப்புக் கணத்திற்காக காத்திருக்கிறேன்.இரை கண் முன்னால் வரும்போது மிருகம் பசித்திருப்பதும் முக்கியம்.எல்லா சமயங்களிலும் இது இசைந்து போவதில்லை.உணர்வெழுச்சி இல்லாமல் எதையுமே நான் எழுத விரும்புவதில்லை.முடிவதில்லை.ஒரு விஷயத்துடன் ஒன்றாமல் எதையும் உங்களால் படிக்க முடியுமா?படைப்பும் அது போலவேதான் எனக்கு.என்னைத் தூண்டாத எதையும் என்னால் எழுத முடியாது.அதற்கான தொழில் நுட்பம் என்னிடம் இல்லை.௦ஆனால் கவிதைகளை என்னால் அப்படி ''செய்ய'' முடியும் .குளத்தின் மீது வீசும் ஒரு கல் தத்தித் தத்திச் செல்வது போல ஒரு வார்த்தையை மனதில் எறிந்துவிட்டு அது எழுப்புகிற அலைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.அவற்றில் சில நல்ல கவிதைகளாக ஆவதும் உண்டு.கவிதைகள் பெரும்பாலும் எனது மறை மனதிலிருந்து வருகின்றன.அதன் மீது எனக்கு பெரிய கட்டுப்பாடு எதுவும் இல்லை.கட்டுப்படுத்த விரும்புவதுமில்லை.பலசமயங்களில் அது சிறுநீர் கழிப்பதைப் போன்றதுதான்.அதை நீங்கள் செய்தே ஆகவேண்டும்.வேறு வழியில்லை.ஒப்பிட நான் நிறைய கவிதைகள் எழுதுகிறேன் எனக் கவனித்திருப்பீர்கள்.தளத்தில் எழுதுவதை விட கூகிள பஸ்சில் நிறைய எழுதுகிறேன்.அது ஏறக்குறைய a quick fuck in the closet மாதிரிதான் .அதற்கு நிறைய சக்தியும் முன்னேற்பாடும் தேவைப் படுவதில்லை.ஒருவேளை இந்த மாதிரி நொறுக்குத் தீனி நிறைய சாப்பிடுவது தான் நீண்ட விருந்துக்கான பசியை மட்டுப படுத்துகிறதோ என்னவோ?

ஆனால் கதைகளும் கட்டுரைகளும் அப்படியல்ல.அவற்றின் மீது என் முழுக் கட்டுப்பாட்டையும் முழு ஈடுபாட்டையும் விரும்புகிறேன்.நான் நுணுக்கி நுணுக்கிச் செய்ய விரும்புகிற வேலை அது.ஏறக்குறைய ஒரு ராணியை அலங்கரிப்பது போன்ற வேலை..அதை கவிதைகள் போல் இடது கையால் எழுத விரும்புவதில்லை.அவை நேரடியாக படிப்பவர் குரல்வளையை நோக்கிப் பாயவேண்டும் .குறி தப்புதல்களை இவற்றில் நான் விரும்பவில்லை ஆகவே அதற்கான உணர்வெழுச்சி வரும்வரை காத்திருக்கவே விரும்புகிறேன்.

ஆனால் இவ்விதம் எழுதுவது எனது உடல் நிலையைப் பாதிக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு விநோதமாகப் படலாம்.ஆனால் உண்மை அதுதான்.கண்ணி உடல் தத்துவத்தின் உணர்ச்சிகரமான பகுதிகளை எழுதி முடித்த பிறகு நான் சமநிலைக்கு வர நிறைய காலம் பிடித்தது .இரண்டு தடவை ஐ சி யூவில் போய் இருக்க நேர்ந்தது/மேடம் போவரியில் கதா நாயகி ஆர்சனிக் தின்பதை எழுதும்போது ப்ளாபர்ட்டுக்கு விஷம் சாப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டன என்று சொல்வார்கள்.நான் நம்புகிறேன்.ஆகவே இவற்றை தொடர்ச்சியாக அதே தீவிரத்துடன் எழுதுவது என் உடல் நிலையையும் பொறுத்தது.


அரிவை அரன் தளம் எனது ஆன்மீகத் தத்துவ ஈடுபாடுகளுக்கு என்றே தனியாக ஆரம்பிக்கப் பட்டது.அது முற்றிலும் வேறு ஒரு மனநிலை.என்னால் அதில் இயங்கும்போது எழுத்துப் பிழையில் இயங்க முடியாது.இங்கு இயங்கும்போது அங்கு.ஜெயமோகனிடம் ஒரு தடவை கேட்டது போல இலக்கியத்தையும் தத்துவத்தையும் என்னால் ஒன்றாய் இணைக்க இன்னும் முடியவில்லை 

வாழ்க்கை ஒரு வேட்டை நாயைப் போல என்னை ஆன்மீகத்தை நோக்கித் துரத்திக் கொண்டே இருக்கிறது.ஆனால் நானோ அதனிடம் புனித பிரான்சிஸ் அசிசி போல ''வருகிறேன் கடவுளே வருகிறேன் ..ஆனால் உடனடியாக அல்ல..இத்தனை சீக்கிரமாக அல்ல'என்று சால்ஜாப்புகள் சொல்லிக் கொண்டு இலக்கியம் இசை கவிதை சினிமா என்று இடைச சந்துகளில் திரிகிறேன்.வேட்டை நாய் முயலை நெருங்கிவிட்டது.ஆகவே வெகு சீக்கிரமே அங்கும் எழுதுவேன் 


LinkWithin

Related Posts with Thumbnails