எல்லா உறவுகளிலும்
இதற்கு மேல் வராதே
என்ற அறிவிப்பில்
நான் முட்டி நிற்கிறேன்
பல நேரங்களில்
புழக் கடையோடு
நிறுத்தப் படுகிறேன் .
சில நேரங்களில்
வாசற்படி வரை
செல்வதுண்டு.
மிகச் சில சமயங்களில்
கூடம் வரை
அனுமதித்து
குடிக்க ஏதாவது தருவதுண்டு .
ஆனால் எவர் வீட்டு
அடுக்களையிலும்
நான் அனுமதிக்கப் பட்டதில்லை .
படுக்கை அறையை
சிந்திக்கவே விடுவதில்லை .
மிக எளிதாக
ஒரு தேய்ந்த சொல்லில்
கடினமாகும் பார்வையில்
சட்டென்று இறுகும் புன்னகையில்
அவசரமாகத் துண்டிக்கப் படும்
தொலைபேசியழைப்பில்
எனக்கு செய்தி உணர்த்தப்பட்டுவிடும்
சட்டென்று சாத்தப் பட்டுவிடும்
இக் கதவுகளைப்
புரிந்துகொள்ள இயலாமல்
யுகங்களாய்
நீட்டிய கையில்
துடிக்கும் இருதயத்தோடு
அங்கேயே நின்றுகொண்டிருப்பதுண்டு
ஆனால் எல்லோரும்
தங்கள் எல்லைகளை விட்டு
படி இறங்கி வெளியேறுகையில்
தவறாது என்னைத் தேடுகிறார்கள் ....
அவர்கள் என்னிடம்
எதிர்பார்ப்பது
நட்பை அல்ல,
ஒரு நாய்க்குட்டியின் விசுவாசத்தை
என்று அறிந்துகொள்ள
நான் நிறைய
அழவேண்டியிருந்தது
யாரை நம்பி நான் பொறந்தேனின் converse? நன்று.
ReplyDeleteவாழ்கை நிரந்தர வலி.
ReplyDeleteதலைப்பும், கவிதையும் நல்ல பொருத்தம்.
உங்கள் படைப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தாது போவதேயில்லை. கோடும் அப்படியே. ஒவ்வொரு முறையும், நான் சரியாக புரிந்து கொள்ளாது விட்டுவிட்ட ஆணின் உலகத்தை அது இருப்பது போலவே அறிந்து கொள்கிறேன். நன்றி
ReplyDeleteபோகன்.