Saturday, June 4, 2011

வார்த்தை வாதை வாழ்க்கை 3

ஏறக்  குறைய ஒரு மாதமாக இணையத்திலிருந்து விடுதலை.அல்லது இணையத்துக்கு என் இம்சையிலிருந்து ....இந்த இடைப் பட்ட காலங்களில் நிறைய பிரயாணமும் புத்தக வாசிப்பும் நிகழ்ந்தன.நிறைய புத்தகங்கள் வாங்கினேன்.புகழ் பெற்ற கோயில்களுக்குப் போனேன்.போய்விட்டு தெய்வம் இருப்பது எங்கே என்று தத்துவ விசாரத்தில் இறங்கினேன்.சில மன நல மருத்துவர்களைச் சந்தித்து வழக்கம் போல அவர்களது மன நலம் குறித்து சந்தேகப் பட்டேன்.நிறைய அலைந்தேன்.அழுதேன்.சிரித்தேன்.எதையும் எழுதவில்லை.எழுத முயற்சிக்கக் கூட இல்லை.மூளையின் வயரை அதன் இணைப்பிலிருந்து பிடுங்கி விட்டாற்போல் நிம்மதியாக இருந்தது.

படித்த புத்தகங்கள்

மாதொரு பாகன் -பெருமாள் முருகன்
நெடுஞ்சாலை -கண்மணி குணசேகரன்
புருஷ வதம்-பாலகுமாரன்
அன்டன் செகாவின் சிறுகதைகள் -ரா கிருஷ்ணையாவின் மொழிபெயர்ப்பு
a million mutinies-v.s.naipaul
கன்னி-பிரான்சிஸ் கிருபா
கசாக்குகள்-டால்ஸ்டாய் [மொழிபெயர்ப்பு]
இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு இரண்டாம் பகுதி
பண்டைய இந்தியா -டி கோசாம்பி

வாசிப்பில்

நான் கண்டஇந்தியா -செஸ்டர் பவுல்ஸ்
சிக்கவீர ராஜேந்திரன்-மொழிபெயர்ப்பு நாவல் கன்னடத்திலிருந்து

படித்தவை பற்றி சிறு சிறு குறிப்புகள் எழுத விருப்பம்.



             **********************************************************************************************


மாதொரு பாகன் என்றதும் மூன்றாம் பாலினர் பற்றிய புத்தகமாக இருக்கக் கூடும் என முதலில் நினைத்தேன்.இது வேறு 'கருவைக் 'கொண்ட கதை.வாரிசுக்காக பிறரால் கருவாக்கப் படுவது ஒன்றும் இந்தியாவில் புதிது இல்லை.புராணங்களில் இது பற்றிய நிறைய குறிப்பு உண்டு.ஆனால் மிகச் சமீபத்திய காலம் வரை அதுவும் தமிழகத்தில் இது நடை பெற்றிருக்கிறது என்ற தகவல் தரும் அதிர்ச்சிதான் இந்த நூலின் ஆதார சரடு.வடவருடன் ஒப்பிடுகையில் [ஏன் மலையாளிகளுடன் கூட ]நம் ஆட்கள் பாலியல் விவகாரங்களில் சற்று இறுக்கம் கூடியவர்களே.நம் இலக்கியங்களில் அரவாணிகள்,ஒரு பால் உறவு,பொது மகளிர் தவிர திருமணத்துக்குப் புறம்பான காதல், லோளிடாக்கள்போன்ற சமாச்சாரங்கள் பற்றி அதிகம் காணக் கிடைக்காது. பெருமாள் முருகனின் மொழி அற்புதமாக இருக்கிறது.நகர பாவனைகள் எதுவும்அற்ற ஒரு கிராமத்துத் தம்பதியினர் இடையே உருவாகும் நெருக்கம் கோட்டோவியத்தின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக வண்ணம் சேர்ப்பது போல நுணுக்கமாக விவரிக்கப் பட்டிருக்கிறது.குறை என நான் கருதுவது க்ளைமாக்சை நோக்கியே மொத்த கதையும் ஆரம்பத்திலிருந்தே ஒரு ராணுவ ஒழுங்குடன் நகர்வது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.நாவல் என்று இதை வகைப் படுத்த இயலாது.அதற்கான பரந்த தளம் இல்லை.சற்று நீண்ட சிறுகதைதான் இது
                                 *********************************************************************


ருஷ்ய இலக்கியத்தை அணுகுகிறவர்கள் செய்யக் கூடாத தவறு என்று நான் கருதுவது முதலிலேயே டால்ச்டாயையோ டாச்டவ்ச்கியையோ படித்துவிடுவது.[அந்தத் தவறை நான் செய்தேன்]ஒருவர் காவிய எழுத்தாளர்.ஒருவர் உணர்ச்சி எழுத்தாளர்.அதன்பிறகு செகோவ் போன்ற மென் நடையாளர்களைப் படிப்பது சற்று அலுப்பாக இருக்கக் கூடும்.இது தமிழில் ஜெயகாந்தனையும் ஜெயமோகனையும் சாருவையும் படித்து விட்டு வண்ண நிலவன் போன்றோறோரை படிக்க முயலும் போது ஏற்படும் தடுமாற்றத்தைப் போல இருக்கக் கூடும்.அவ்வாறு அலுப்பில் ஒதுக்கி வைத்திருந்த செகோவை [வேறு எதுவும் படிக்கக் கிட்டாததால்] திருப்பி படிக்கும் போது நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.என்னுள் உறைந்து போய் விட்டது என்று நான் நினைத்திருந்த ஒரு நரம்பை செகோவ் உயிரூட்டி மீட்டுவதைக் கண்டேன்.நான் படித்தது என்சிபி எச் சோவியத்து ஒன்றியம் உயிரோடு இருந்த நாட்களில் ரா கிருஷ்ணையா என்பவர் மொழி பெயர்ப்பில் வெளியிட்ட ஒரு புத்தகம்.அற்புதமான மொழிபெயப்பு .

மேற் சொன்னவர்களைப் போல செகோவ் உரத்த குரலில் பேசுவதில்லை.தனக்குத் தானே தனக்குள்ளேயே முனகிக் கொண்டிருக்கும் ஒரு கிழவனைப் போன்று மெலிய எள்ளலுடன் பாவனைகள் அற்ற தணிந்த மொழியில் மெல்ல ஏறும் விஷம் போல ஒரு குழந்தையின் விசும்பல் போல இதயத்தைப் பிசையும் கதைகள் ..தொகுப்பில் வான்கா ஆறாவது வார்டு என்ற இரண்டு கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

                 *************************************************************************
ஹிந்தி சினிமாவின் பொற்காலம் என எழுபதுகளையும் எண்பதுகளின் முற்பகுதிகளையும்நினைக்கிறேன்.குல்சார்,ஷ்யாம்பெனகல்,ரிஷிகேஷ் முகர்ஜி போன்றவர்கள் உலவிய காலகட்டம்.ஐவரி மெர்ச்சன்ட் சசி கபூர் கூட்டணி புதிய அலை சினிமாக்களை உருவாக்கிய நேரம்.அமோல் பாலகர்,தீப்தி நாவல்,நசிருதீன் ஷா ,மொஷ்மி சட்டர்ஜி,ஸ்மிதா போன்றவர்கள் நாயக நாயகிகள் என்பவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல என்பது போன்ற அணுக்கத்தை ஏற்படுத்திய காலம்.குறைந்த பட்ஜெட்டில் கலைப் படங்களுக்குரிய கூர்மையுடன் அதே சமயம் எதையும் உரக்கச் சொல்லாமல் மென்மையான கதை சொல்லலில் வெற்றி பெற்ற காலம்.இந்த அலையை உடைத்து பாடாவதி காதல் கதைகளை ஹிந்தி சினிமாவுக்கு அறிமுகப் படுத்தி நாசம் பண்ணியதில் ஏக் துஜே கேளியேவுக்கும்ஹீரோ போன்ற படங்களுக்கும் பங்கு உண்டு.இன்றையஹிந்திசினிமாதரையிலநடப்பதில்லை.சாமாநியனுக்க்கான சினிமா இல்லை அது.சினிமாவின் மிகப் பழைய அர்த்தத்தில் பயாஸ்கோப் காண்பிக்கும் வேலையைத் தான் இன்று அது செய்கிறது.

இந்தக் கால கட்டத்தில் சஞ்சீவ் குமார் நடிப்பில் குல்சாரின் இயக்கத்தில் வந்த படம் அங்கூர்.ஷேக்ஸ்பியரின் காமடி ஒப் எரர்ஸ் கதையைத் தழுவி எடுக்கப் பட்டது.இரட்டையர்கள் பற்றிய குழப்பங்கள்தான் கதையின் விதை.ஆனால் எவ்வளவு மென்மையான யதார்த்தமான காமடி!ஒப்பிடுகையில் கிரேசி மோகன் வகை தமிழ் அபத்தங்களுக்கும் இதற்கும் எவ்வளவு வேறுபாடு!ஒரு மோசமான மனநிலையில் இப்படத்தை யூ ட்யூபில் பார்த்தேன்.பேய்கள் தூங்கும் நள்ளிரவில்பித்தனைப்போலசிரித்துக்கொண்டேஇருந்தேன்.குல்சாருக்கு நன்றி!

.http://en.wikipedia.org/wiki/Angoor_(film)


                                             *********************************

ஸ்டீபன் கிங்கின் டார்க் டவர் என்ற நாவலில் அந்தி விழும் நேரம் தோளில் மாட்டிய வில்லோடு நாயகன் இருண்ட கோட்டையைத் தேடி போய்க் கொண்டே இருப்பான்.நெருங்கிய காடு கடந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை மார்பு வரை வளர்ந்த புற்கள்ஒரு பச்சைக் கடல் போல பரந்து கிடக்கும் வெளியில் புற்களை அளைந்து அளைந்து மிகத் தனிமையாய் போய்க் கொண்டிருப்பான்.அப்போது மிகப் பின்னால் இருந்து ஒரு காற்றலை கிளம்பி ஒரு நகரும் சுவர் போல புல்வெளியை பிரித்துக் கொண்டு அவனைக் கடந்து போவதை அற்புதமாக விவரித்திருப்பார் கிங்.அதை படிக்கையில் நான் ஏறக் குறைய ஒரு சடோரி போன்ற ஒரு உணர்வை நானே அந்த புல்வெளியில் தனித்து நடக்கும் நாயகன் போன்ற அத்வைதப் பிரமையை அடைந்தேன்.என் காதில் காற்று விஸ் விஸ் என்று பறக்கும் ஒலி கூட கேட்டது இந்த திபெத்தியப் புல்லாங்குழல் இசை ஏறக் குறைய அப்படி ஒரு உணர்வுக்கு என்னை இட்டுச் சென்றது









5 comments:

  1. திபெத்திய புல்லாங்குழல் அற்புதம். இந்த இடைவேளைக்கு பின் எங்களுக்கு நிறைய விருந்து காத்திருக்கிறது. சரியா? ;-))

    ReplyDelete
  2. ஒரு மாத காலம் காணாமல் போனதற்கு இது தான் காரணமா?
    இது போன்ற இடைவெளியின் தேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக உங்களைப் போன்று தீவிர படைப்பாக்க சிந்தனை கொண்டவர்களுக்கு!

    ReplyDelete
  3. //சில மன நல மருத்துவர்களைச் சந்தித்து வழக்கம் போல அவர்களது மன நலம் குறித்து சந்தேகப் பட்டேன்.// :)))))

    //மூளையின் வயரை அதன் இணைப்பிலிருந்து பிடுங்கி விட்டாற்போல் நிம்மதியாக இருந்தது.//
    ரொம்ப நல்லது! வாழ்கையில் முடியும்போதெல்லாம் இந்த நிலையில் அவசியம் இருக்க வேண்டும்.
    தீப்தியின் அமைதியான அழகு எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த நடிகையும் கூட. இவரும், ராகேஷ் ரோஷனும் நடித்த ஒரு படம், பெயர் இப்பொழுது நினைவில்லை, மிகவும் ரசித்து பார்த்திருக்கிறேன்.
    திபெத்திய புல்லாங்குழலின் இசை
    மனதை தொட்டது.

    ReplyDelete
  4. விடுமுறைகள் நல்லதே!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails