Tuesday, June 21, 2011

வழி

முனுசாமி ட்ரான்ஸ்போர்ட்
மினி பஸ்சில் இருந்து
இறங்கி விட்டீர்களா..
அங்கிருந்து
பிரியும் வலது பக்க சாலையைத்
தவிருங்கள்
அங்கிருக்கும்
கிருஷ்ணன் குட்டியின்
டீக கடையையும்தான் 
தேயிலையில் மரத் தூள கலக்குகிறான்
இடது பக்க சாலையில்
வானம் பார்த்த பானைகளில்
தீ மூட்டி சமைக்கும்
குறவர்களைக் கடந்து வாருங்கள்
அவர்கள் வளர்க்கும்
நாயின் கண்களைப்
பார்க்காதிருங்கள்
அந்தப் பெண்களின் மார்புகளையும்தான்...

ஐந்து நிமிட பொடிநடையில்
கையில் வாளுடன்
ஆளுயர அய்யனார் வந்துவிடுவார்.
வருகிறாரா
அவர் பக்கம் போக வேண்டாம்
அவரைத் தாண்டியதும்
ஒரு பெரிய புளிய மரம் வருகிறது
காய்க்கும் பருவம்தான்
நிறைய காய்த்துதிர்ந்து கிடக்கும்
ஆனால் குத்தகைக் காரன் உண்டென அறிக
அதை ஒட்டிய
கால் தடத்தில் இறங்குங்கள்
உடை முட்கள் சற்று அதிகம்தான்
செருப்பு அணிந்திருக்கிறீர்கள் தானே?
ஆனால் பாம்புகள் கிடையாது
காயம் படாமல் அப்படியே
வந்தால் ஒரு அரளிச் செடி வரும்
செவ்வரளி ...

அதை விலக்கினால்
பாழடைந்து இடிந்த
ஒரு ஆழ்துளைக் கிணறு தெரிகிறதா
அங்குதான் வரவேண்டும்
அங்குதான் நான் இருக்கிறேன்

போன வருடம் இதே மாதத்தில்
கந்த சாமிக கோனார் பேத்தியின்
துரோகம் தாங்காமல்
குதித்து
தலை சிதறிச் செத்துப் போனதில் இருந்து...
தனியாய்..

வாருங்கள்
காத்திருக்கிறேன்..

10 comments:

  1. பக்கத்துல வந்து பார்த்ததுக்கப்புறம் தான் தெரிஞ்சுது... எங்கயோ கையப் பிடிச்சி கூட்டிட்டு போற மாதிரி கூட்டிகிட்டு வந்திட்டு பாழும் கிணத்துல தள்ளப் பார்க்கிறீங்க!!
    ரொம்ப நன்றாக இருந்தது. ;-))

    ReplyDelete
  2. இறந்தவன் சுய பச்சாதாபமில்லாத ஸ்வாரஸ்யமான மொழி பேசுகிறான் இறவாத இந்தக் கவிதை போல.

    கடைசி வரி வரைக்கும் கைப்பிடித்துக் கூட்டிவந்து கிணற்றில் தள்ளுகிறது கவிதை.

    அற்புதம் போகன்.

    ReplyDelete
  3. தமக்குள் பல கதைகளை ஒளித்துக் கொண்டிருக்கும் காட்சிப் படிமங்கள்! காத்திருத்தல் எதற்காக?

    ReplyDelete
  4. சுந்தர்ஜி நன்றி உங்கள் ப்ரோபைல் படம் ரவி சங்கர் தானே?
    ஆர் வி எஸ் என்னைப் 'பெரிசாப்'புகழறீங்க!
    யோகி காத்திருப்பது உங்களுக்காகத்தான் வாங்க பழகலாம்...)))

    ReplyDelete
  5. ஆத்தீ! கொல்லப் பார்க்குறாங்கப்பா

    ReplyDelete
  6. வருகிறேன்.....கவனமாய் !

    ReplyDelete
  7. கடைசி வரியில் பகீரென்றது.

    ReplyDelete
  8. அற்புதம்
    //தலை சிதறிச் செத்துப் போனதில் இருந்து...//
    நல்ல திருப்பம்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails