Wednesday, June 8, 2011

வார்த்தை வாதை வாழ்க்கை 4


கொஞ்ச நாட்கள் முன்பு ஜெயமோகன் பாலகுமாரனைப் பற்றி எழுதி இருந்தார்.. சுஜாதாவைப் பற்றியும் பாலகுமாரன் பற்றியும் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு ஒரு பெரிய பின்னூட்ட எதிர்ப்பலை எழுந்து அவர் புறவாசலை மூடும்படி ஆகிவிட்டது.உண்மையில் சாரு ,எம் ஜி ஆர் ,சிவாஜி பிரச்சினைகளில் கூட இவ்விதம் நிகழவில்லை.தளத்தின் அளவுப் பிரச்சினை என்று அவர் சொன்னாலும் நித்தியானந்தா பிரச்சினையின் போது இதை விட அதிக பின்னூட்டங்கள் வந்த நினைவு. ஒருவேளை பின்னூட்டங்களின் தொனி அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.விஷயம் சற்று உணர்ச்சி மீதுரவும் ஆகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.நானும் இது சம்பந்தமாக நடந்த சொற் சிலம்பத்தில் கலந்து கொண்டு பின்னூட்ட தேரை நிறுத்திய அபகீர்த்தி அடைந்தேன்.

இன்று நான் மனதுக்கு நெருக்கமாக உணரும் எழுத்தாளன் ஜெய மோகனே.அதுவே ஒரு காலத்தில் பால குமாரனாக இருந்தது.ஆனால் இன்றைய இலக்கிய உலகில் இதைச் சொல்வது 'நான் ஒரு தற்குறி'என்று சொல்வதற்கு சமம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.பாலகுமாரன் என்பது இன்று தீவிர இலக்கிய உலகில் சொல்லகூடாத கெட்ட வார்த்தை. யுவன் சந்திரசேகர் நாவல் ஒன்றை சாரு பாலகுமாரன் நாவல் என்று விமர்சித்தார்.அதாவது அச்சொல் ஒரு வசை.இலக்கிய வரலாறோ விமர்சனமோ எழுதுபவர்கள் எல்லாம் பாலகுமாரனைக் கவனமாகத் தவிர்த்து விடுவார்கள்.சுஜாதாவை போனால் போகிறது என்று 'நகரம்னு ஒரு சுமாரான சிறுகதை எழுதியிருக்கார்'என்பார்கள்.உண்மையில் ஜெயமோகன்தான் இவர்களைச் சற்றுப் பொருட்படுத்தி விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டார் என ஒப்புக் கொள்ளவேண்டும்.

ஆனாலும் அவரது மேலோட்டமான அங்கீகாரத்தின் கீழ் அவர் வைத்த மதிப்பீடுகள் என்னை மன உளைச்சலில் தள்ளியது.ஏன் எனில் என் இளமையின் ஒரு கணிசமான பகுதியை ஆக்கிரமித்தது அவர் எழுத்துக்கள்.அவரது வாசகிகள் பலர் அவருக்கு அப்பா என்று விளித்து கடிதம் எழுதுவார்கள்.ஆண்கள் குருவே என்பார்கள்.[இப்போது ஜெயமோகனுக்கும் இது போன்ற கடிதங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன]நான் அந்த அளவு செண்டி இல்லை எனினும் இப்போதும் அவர் பெயர் என்னுள் ஒரு நெகிழ்வை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.இந்த வழிபாட்டு உணர்வு ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப் படுவது என்று ஜெயமோகன் சொல்கிறார் இருக்கலாம்.எல்லா உணர்வுகளுமே உருவாக்கப் படுபவைதான்.புருஷவதம் பாலகுமாரனின் சிறந்த நாவல்களில் ஒன்று .பழையனூர் நீலி பற்றிய கதை ஒன்று உண்டு.முன்பு எங்கள் ஊரில் கோயில் விழாக்களில் வில் அடித்துப் பாடுவார்கள்.இப்போது அந்த இடங்களில் எல்லாம் ரிக்கார்ட் டான்ஸ் ஆடுகிறார்கள்.கேட்டால் 'கலை நிகழ்ச்சி'என்கிறார்கள்.பழையனூர் நீலி கதைப் பாடலைக் கேட்டு பயந்து இரவுகளில் தூங்காமல் இருந்ததுண்டு.சில பெண்கள் கதை கேட்கும்போதே கண்ணீர் விடுவதையும் பல்லைக் கடிப்பதையும் பார்த்திருக்கிறேன்.பொதுவாகவே ஆண்களுக்கு அடிவயிற்றில் ஒரு சங்கடமான உணர்வைக் கொடுக்கும் கதை.'அம்மன்,அருந்ததி' போன்ற படங்கள் தமிழ்நாட்டில் பெரும் வெற்றி பெற்றதிற்கு உளவியல் காரணங்கள் உண்டு.ஏறக் குறைய எல்லா பெண்களுமே இங்கு ஆண்களால் வஞ்சிக்கப் பட்டுவிட்டதான ஒரு உணர்வில் இருக்கிறார்கள்.பல சமயங்களில் அந்த உணர்வு உண்மையானதே.அவர்களுக்கு நீலி கதை பிடித்திருந்ததில் வியப்பு இல்லை.தன்னை ஏமாற்றிக் கொன்ற கணவனை பல பிறவிகள் கடந்தும் காத்திருந்து பழி தீர்த்துக் கொண்ட கதை. பாலகுமாரன் இந்த கதைப் பாடலை விரித்து அற்புதமாக எழுதி இருக்கிறார்.வழக்கமான அவரது கிளிஷேக்கள் குறைவு.அந்தக் கால செட்டிக்களின் வாழ்வு,காசி வாழ்க்கை ,நிரஞ்சர்கள் என்ற கேடி சாதுக்களின் அட்டகாசங்கள் ,யாத்திரை செய்கிறவருக்கு அன்றிருந்த சிரமங்கள் எல்லாவற்றையும் விரிவாக எழுதி இருக்கிறார்.தீவிர இலக்கிய முகமூடிகளை கழற்றி விட்டுப் படிக்க நிறைவான உணர்வைத் தரும் கதை.சினிமாவாய் எடுத்தால் பிய்த்துக் கொண்டு ஓடும்.  ********************************************************************************** எனக்குப் பிடித்த அழகான ஹிந்திப் பட ஹீரோயின்கள் என்று ஒரு வரிசை போடலாம் என விரும்புகிறேன்.நான் சற்றே பழைய ஹிந்தி படப் பாடல்களின் ரசிகன்.ஹிந்திப் பட நாயகிகள்  கவர்ந்த அளவு பழைய தமிழ்ப் படங்களின் நாயகிகள் அவ்வளவாக என்னைக் கவரவில்லை.பத்மினி சரோஜா தேவி எல்லாம் அழகிகளாகவே எனக்குப் படவில்லை.பத்மினியிடம் கொஞ்சம் ஆண்மை அம்சம் தூக்கலாக இருப்பதாகக் காணலாம்.பானுமதி ஸ்டைல்.அழகல்ல.சரோஜா தேவி அந்தக் கால ஊர்வசி,அதாவது லூசுப் பெண்.அவர் காமடி நடிகையாக போய் இருக்க வேண்டியவர்.சபாஷ் மீனா போன்ற படங்களைப் பார்த்தால் புரியும்.எல்லாம் எம் ஜி ஆர் பார்த்த பார்வை.ஆனால் இன்றைக்கு வருகிற அத்தனை தமிழ்ப் படங்களிலும் நாயகிகள் ஏன் அரைக் கிராக்குகளாகவே லூசுப் பெண்களாகவே காண்பிக்கப் படுகிறார்கள் என யாராவது உளவியல் பகுப்பாய்வு செய்து சொன்னால்  நன்றாக இருக்கும்.ஆதென கீர்த்தன ஆரம்பத்திலே கருப்பு வெள்ளைப் படங்களில் வந்த சாவித்திரியை மட்டுமே நான் கொஞ்சம் அழகென்று ஒத்துக் கொள்வேன்.அதுவும் மிஸ்ஸியம்மா போன்ற படங்களில் மட்டும்.இல்லை இவர்கள் எல்லாம் அழகென்று தம் பிடிப்பவர்களுக்கு சைரா பானுவை அறிமுகப் படுத்துகிறேன்.சாய்ராவின் கண்கள் மிக அற்புதமானவை.சற்றே சோகத்தால் தலை கவிழ்ந்த தாமரை மொக்குகள் போன்ற கண்கள் ..இந்தப் பாடல்களைப் பாருங்கள்.
     

LinkWithin

Related Posts with Thumbnails