Thursday, June 2, 2011

கூடு வெளி


ஒரு கரிய நாளில்
அமிலத் துளி போல
திடீரென்று மேலே விழுந்து விட்ட
துரோகத்தின் துயர விஷத்தை
துளித் துளியாகப்
பருகிக் கொண்டிருந்தேன்
கவிதை ,இசை,மழலையின் குழறல்
என்று எதற்கும் செவி கொடாது
திரும்பத் திரும்ப
மரணத்தால்
நிரம்பி வழிந்து கொண்டிருந்தது
மனக் கோப்பை ...

தொலைந்த இரவுகள்
கண்களின் கீழே
கசடாய்த் தேங்க 
நம்பிக்கையின் நிறமற்ற கண்களில்
படியாது
பகல் பொழுதுகள் மடிந்தோடின..
அப்படி ஒரு பகலின்
இறுதிக் கணங்களில்தான் கவனித்தேன்.
என் ஜன்னலின் வெளியே..அதை...

ஒரு பச்சைக் குடை போல்
வெளியை எதிர்த்து
நின்றிருந்தது அது..
பூக்கும் ருதுவில்
ஒரு வேப்பமரம்...

இவ்வளவு நாளாய்
அது அங்கே
நின்றிருந்ததை
அதுவரை நான் உணர்ந்ததே இல்லை
அருகருகே ஆண்டுக் கணக்கில்
வசித்திருந்தால் கூட
எங்களுக்குள் ஒரு எளிய அறிமுகம் கூட
அதுவரை ஏன் நிகழ்ந்ததே இல்லை
என்ற வியப்புடன் 
மெதுவாய்
என் குகையில் இருந்து
ஒரு சாகப் போகிற மிருகம் போல
நடுங்கும் கால்களுடன் இறங்கி
அதன் கீழே நின்றேன்

அதன் அந்தரங்கத்தில் இருந்து
உயிர்ப்பின் ஓசை
ஒரு அலை போல
என்னை நோக்கி எழும்பிப்
பரவிக் கொண்டே இருந்தது
அப்படி ஒரு இசையை
நான் கேட்டதே இல்லை
முழுக்க முழுக்க காதலால் மட்டுமே
நிரப்பப் பட்ட இருவர்
புணரும்போது
அப்படி ஒரு இசை எழும்
என்று பின்பொருநாள்
ஒரு அறிவர் சொன்னார்.

நான் முலை நோக்கித் தாவும்
சிசு போல
அதை நோக்கி ஆர்வத்துடன் நகர்ந்தேன்


பழுப்புப் பூமியின் மேல்
ஒரு ராட்சதத் தொடை போல
தன்னை அழுத்தி நின்றிருந்த
அதன் அடிமரத்தை தொட்டேன்

என் விரல் பட்டதும்
உச்சியில் பாடிக் கொண்டிருந்த
பறவை சட்டென்று பாட்டை நிறுத்தியது
ஓடிக கொண்டிருந்த
அணில்கள் யாவும்
ஓவியம போல் உறைந்து நிற்க ,
என்றும் உயிர்ச் சக்தி குன்றாத
எறும்புகள் கூடத் தயங்கி நின்றன


ஒரு பிரபஞ்ச வெடிப்பின்
முந்திய கணம் போல
அங்கு கனத்திருந்த
மௌனத்தை உடைத்து
நான் கண்ணீர் வழிய
கரகரத்த குரலில்
''நேசிக்கிறேன்'' என்றேன்
''எல்லாவற்றையும் நேசிக்கிறேன்
எதையும் வெறுக்கவில்லை ''

என்று உரத்த குரலில் அதற்கு வாக்குறுதி அளித்தேன்


ஒரு நீண்ட நிமிடத்துக்குப் பின்பு 
பறவைகள் மீண்டும் பாடத் துவங்கின
எறும்புகள் வேகமாக நகர
அணில்கள் விடுபட்டு குதித்தோடின
இலைகள் காற்றோடு
மீண்டும் பேசத் துவங்க
மரம் ஒரு வீணை போல
மீண்டும் அதிரத் தொடங்கியது

மெல்ல அது என் விரல் வழி
என்னுள் ஏறி என்னை நிரப்பியது
பிறகு கரைத்தது
என் கூடுகள் ஒவ்வொன்றாய் வெள்ளத்தில் சரியும் கரைகள் போலக் கழன்று விழுந்தன..
.

அதன் பிறகு 
எப்போதுமே
நான் இப்பூமி மேல்
தனியனாய் உணர்ந்ததே இல்லை..

LinkWithin

Related Posts with Thumbnails